இ.மாலா
##~## |
கதை கேட்க ரெடியா குழந்தைங்களா..?!
அமிர்தா, நர்மதா என்று ரெண்டு sisters இருந்தாங்க. அமிர்தாதான் மூத்தவ. ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க. எல்லா விஷயத்துலயும் 'நான்தான் first’’னு நடக்கற சண்டைதான் அவங்களுக்குள்ள அதிகம். இந்த சண்டைக்கு தீர்ப்பு சொல்லி சமாதானப்படுத்துறது அப்பா - அம்மா ரெண்டு பேருக்குமே பெரிய சவால்!
ஒரு நாள் காலையில breakfast சாப்பிட டேபிள்ல உட்கார்ந்தாங்க. அங்க கொஞ்சம் உயரமா ஒரு புது பிஸ்கட் டப்பா இருந்துச்சு. அந்த டப்பாவின் இந்தப் பக்கம் அமிர்தாவும், அந்தப் பக்கம் நர்மதாவும் உட்கார்ந்து சாப்பிட்டுட்டு இருந்தாங்க. திடீர்னு அமிர்தா, ''நமி, இந்த பிஸ்கட் டப்பால பார்த்தியா... உள்ளே கிஃப்ட் இருக்காம். நான் பார்க்கப் போறேன்!''னு உற்சாகமா சொன்னா. அந்தப் பக்கம் இருந்த நர்மதா, ''ஆமாக்கா.... உள்ளே ஒரு gift coupon இருக்காம். அதுல நம்ம பெயர் எழுதி அனுப்பினா, American diamond ல நம்ம பெயரை பதிச்சு 'கிஃப்ட்’டா அனுப்புவாங்களாம்!''னு சொன்னா.
''ஓ... அப்படியா? சூப்பர்! நான்தான் கிஃப்ட்டை பத்தி முதல்ல பார்த்தேன். அதனால என் பேரைத்தான் எழுதி அனுப்பு வேன்!''னு அமிர்தா சொன்னா. ''இல்ல... முடியாது. அமெரிக்கன் டைமண்ட் பதிக்கறதைப் பத்தி நான்தான் முதல்ல படிச்சேன். அதனால என் பேரைத்தான் எழுதி அனுப்பணும்!''னு நர்மதா சொன்னா.

''அதெல்லாம் முடியாது. இதுக்கு 100 ரூபாய் entry fees வேற கட்டணும். என்கிட்டதான் பணம் இருக்கு. கிஃப்ட் பத்தி நான்தான் முதல்ல பார்த்ததால, என் பேரைத்தான் எழுதுவேன்!''னு சொல்லி அந்த கிஃப்ட் கூப்பனை 'வெடுக்’குனு பிடுங்கிட்டுப் போயிட்டா அமிர்தா. ''அக்காவா இருக்கறதால எப்பவும் மிரட்டி ஏமாத்திட்டே இருக்கறா'’னு சத்தம்போட்டு சொல்லி அழுதவ... 'உங்கள் பெயர் அமெரிக்கன் டைமண்ட்ல ஜொலிக்கும்’னு அந்த பாக்ஸ்ல போட்டிருந்ததை திரும்பத் திரும்ப ஏக்கமா பார்த்துட்டே இருந்தா நர்மதா.
பதினஞ்சு நாட்கள் ஆகியிருக்கும். அமிர்தா பெயருக்கு ஒரு post வந்துச்சு. நர்மதாவுக்கும் ஆர்வமாயிடுச்சு. உள்ளுக்குள்ள கடுப்பு இருந்தாலும்... 'அமெரிக்கன் டைமண்ட்ல அமிர்தாவோட பேர் இருக்கும்'னு நினைச்சு... அதைப் பார்க்க ஆசைப்பட்டா. அமிர்தா போஸ்ட்டை வாங்கிட்டு, தன் ரூமுக்கு போக... பின்னாடியே நர்மதாவும் போனா. ஆனா, அதைப் பார்க்க ஆர்வம் இல்லாத மாதிரி கொஞ்சம் தள்ளி உட்கார்ந்தா.
அமிர்தா பொறுமையா கிஃப்ட் பேக்கை பிரிச்சு உற்சாகமா, ''நர்மதா... ரொம்ப அழகா இருக்கு. 'உங்கள் பெயர் அமெரிக்கன் டைமண்ட்ல ஜொலிக்கும்’னு சொன்னது உண்மைதான். சூப்பரா இருக்கு!''னு சொன்னா. ஆனா, அதைக் காட்டல. நர்மதாவும் 'எங்கே காட்டு, நானும் பார்க்கறேன்!’னு சொல்லல. அமைதியா, கொஞ்சம் எரிச்சலோட அமிர்தாவோட சந்தோஷத்தைப் பார்த்துட்டு உட்கார்ந்துட்டே இருந்தா.
தன்னுடைய உள்ளங்கைக்குள் வெச்சு அப்படியும் இப்படியும் அந்த கிப்ட்டை கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மறுபடியும் உள்ளே வெச்சு மூடிட்டு, 'உங்கள் பெயர் அமெரிக்கன் டைமண்ட்டில்...’னு சந்தோஷமா சொல்லி, நர்மதா தலையில செல்லமா ஒரு தட்டு தட்டிட்டு வெளியே போயிட்டா அமிர்தா.
கொஞ்ச நேரம் அப்படியே உட்கார்ந்து, அந்த கிஃப்ட் பேக்கை பார்த்துட்டு இருந்த நர்மதாவால ஆர்வத்தை அடக்க முடியல. எழுந்து டிரெஸ்ஸிங் டேபிள்ல இருந்த கவரை எடுத்துப் பார்த்தவ... அப்படியே சர்ப்ரைஸ் ஆயிட்டா. 'நர்மதா’ங்கற பெயர், அமெரிக்கன் டைமண்ட்ல ஜொலிச்சுட்டு இருந்துச்சு! சந்தோஷமும், அழுகையும் வந்துடுச்சு. 'சே... நாமதான் அவசரப்பட்டு அக்காவ திட்டிட்டோம். எனக்குத்தான் 'பொங்கல் பரிசு’ கொடுத்திருக்கா. போய் நன்றி சொல்வோம்...’னு தேடிப் போனா.
இதையெல்லாம் ஒளிஞ்சு பார்த் துட்டு இருந்த அமிர்தாவுக்கும் நர்மதா முகத்தில தெரிஞ்ச சந்தோஷம் திருப்தியா இருந்துச்சு. அதற்கு அப்புறம் ரெண்டு பேரும் எல்லாத்துக்கும் 'நான்தான் first, நீதான் first’னு சண்டை போட்டுக்கறதில்லை. விட்டுக்கொடுத்து புரிஞ்சு நடக்க ஆரம்பிச்சாங்க.happyயாவும் இருந்தாங்க.

நமக்குனு ஒரு பொருள் வாங்கறதை விட, மத்தவங்களுக்குக் கொடுக்கும் போதுதான் ரொம்ப சந்தோஷம் கிடைக்கும். அதனாலதான் விழாக்கள் வரும்போது நம்மைச் சுற்றி இருக்கறவங்களுக்கு, நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு... sweet, gift எல்லாம் கொடுத்து மத்தவங்களைச் சந்தோஷப்படுத்தி நாமும் சந்தோஷப்படறோம்!
குட்டீஸ், இது பண்டிகை சீஸன். உங்களுக்கும் கிஃப்ட் வந்துச்சா? நீங்க மத்த ஏழைக் குழந்தைகளுக்கு கிஃப்ட் கொடுத்தீங்களா? கொடுக்க முடியலைனாலும் பரவாயில்ல... சந்தோஷமா எல்லோருக்கும் வாழ்த்து சொல்லுங்க!
மறந்துடாதீங்க... மத்தவங்கள மகிழ்விச்சு நாம மகிழணும்!
- இன்னொரு கதை..? நாளைக்கு சொல்றேன்!