மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பிஸினஸ் கேள்வி - பதில்

பிஸினஸ் கேள்வி - பதில்

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்!

##~##

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பகத்தின் திட்ட இயக்குநர் ராமசாமி தேசாய் பதிலளிக்கிறார்...

''எனக்கு சுயதொழில் செய்ய ஆர்வம் உள்ளது. பேப்பர் கவர், சணல் பொருட்கள் உற்பத்தி போன்ற தொழில்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். அதற்கு முறையான பயிற்சி தரும் தரமான நிறுவனத்தை அடையாளம் காட்டுங்களேன்...''

- எஸ்.பேராட்சி, திருநெல்வேலி

''பேப்பர் கவர், சணல் பொருட்கள் போன்ற சிறிய தொழில்களைச் செய்ய உங்கள் ஊரில் உள்ள ஐ.ஓ.பி வங்கியின் கிராமிய சுயதொழில் பயிற்சி நிறுவனத்தை அணுகலாம். விலாசம்: கி 63, முதல் தளம், ஐந்தாவது கிராஸ் தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி-11. இயக்குநர் நம்பிராஜனின் கைபேசி எண் - 94434 18444.

பிஸினஸ் கேள்வி - பதில்

மேலும் சணலில் தேர்ந்த பயிற்சி பெற, சென்னை அல்லது கோவையில் உள்ள 'நேஷனல் ஜூட் போர்டு' (National Jute Board) அலுவலகத்தை அணுகவும். உங்கள் ஊருக்கே வந்து இலவச பயிற்சி அளிப்பார்கள். இதற்கு, தையல் தெரிந்த 25 - 30 பேர் ஒரு குழுவாக இணைந்து அணுக வேண்டும். பயிற்சி, இலவசம். அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பொறுப்பை உங்கள் குழு பொறுப்பேற்க வேண்டும். இப்பயிற்சியின் சிறப்பு அம்சம், சணல் பொருட்கள் செய்ய மட்டும் கற்றுக்கொடுக்காமல், அதைத் தொழிலாகத் தொடங்க மூலப்பொருள் சணல் மற்றும் மற்ற உபகரணப் பொருட் கள் எங்கு கிடைக்கும், எங்கு விற்பனை செய்யலாம் என்ற       அனைத்து உதவிகளையும் செய்வார்கள். இந்த அமைப்பினர், தமிழ்நாடு மட்டுமல்லாது... ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கின்றனர்.

முகவரி: நேஷனல் ஜூட் போர்டு, 25, கோடம்பாக்கம் ஹைரோடு, நுங்கம்பாக்கம், சென்னை-34. தொலைபேசி: 044-2822 4967, 2822 4463.

தங்க நகை ஏற்றுமதி... தகவல் தேவை !

''தங்க நகை ஏற்றுமதி வியாபாரம் செய்ய விரும்புகிறேன். சிங்கப்பூரில் உள்ள என் நண்பரை என்னுடைய வர்த்தகப் பிரதிநிதியாக நியமனம் செய்து, தங்க நகைகள் ஏற்றுமதி செய்ய விரும்புகிறேன். இதற்காக நான் இந்தியாவிலும், சிங்கப்பூரிலும் எந்தெந்த அமைப்பு களை அணுகி விவரங்கள் பெற வேண்டும்? மேலும்... 'துபாய், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள், மறு ஏற்றுமதிக்கு ஏற்ற நாடுகள்' என்று கூறப்படுவது எந்த அளவுக்கு உண்மை?''

- கே.கௌசல்யா, கோவை

''தங்க நகைகள் ஏற்றுமதி செய்ய முதலில் நீங்கள் ஐ.இ.சி. (Import Export Code) நம்பரை பெற வேண்டும். இது, இப்போது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு நிறுவனத்தை நிறுவுங்கள். அதன் பெயரில் வங்கியில் கணக்கு ஆரம்பியுங்கள். அந்த விவரங்களைச் சமர்ப்பித்து ஏற்றுமதி, இறக்குமதி பதிவு சான்று அளிக்கும் நிறுவனத்தில் 250 ரூபாய் கட்டி ஐ.இ.சி. சான்றிதழைப் பெறலாம். இது ஏற்றுமதி, இறக்குமதி தொழில்களுக்கு பொதுவான சான்றிதழ். நீங்கள் தங்க நகைகளை ஏற்றுமதி செய்ய உள்ளதால், 'ஜிஜெஇபிசி' (GJEPC) எனப்படும் ஜெம்ஸ் அண்டு ஜுவல்லரி எக்ஸ்போர்ட் புரமோஷன் கவுன்சிலை அணுகி (ஆங்கூர் பிளாசா, 3-வது ஃப்ளோர், 52, ஜி.என்.செட்டி தெரு, தி.நகர், சென்னை-17. தொலைபேசி எண்: 044-2815 5180), எல்லா உதவிகளையும் பெறலாம்.

பதிவுபெற்ற ஏற்றுமதியாளர், மற்ற நாட்டில் உள்ள பதிவு பெற்ற இறக்குமதியாளர்களுக்கு மட்டும்தான் ஏற்றுமதி செய்ய முடியும். எனவே, உங்கள் பிரதிநிதியாக சிங்கப்பூரில் நீங்கள் நியமிக்க உள்ளவர், சிங்கப்பூரில் உள்ள அலுவலகத்தில் இறக்குமதியாளராக பதிவு செய்து, உங்கள் நகைகளை அவர் வாங்கி விற்கலாம். அல்லது இறக்குமதி பதிவு பெற்ற நிறுவனத்தின் ஆர்டர்களைப் பெற்று, நீங்கள் அவர்களுக்கு நேரடியாகவே அனுப்பலாம்.

சிங்கப்பூர், துபாய் மற்றும் ஹாங்காங் ஆகிய மூன்று நாடுகளும் மறு ஏற்றுமதி செய்யும் நாடுகள்தான்... உலகின் ஏற்றுமதியில் முக்கிய நிலையில் உள்ள நாடுகளும்கூட. இவர்கள் ஒரு நாட்டில் இருந்து ஒரு பொருளை இறக்குமதி செய்து, அப்படியே வேறு பகுதிக்கோ அல்லது வேறு நாட்டுக்கோ ஏற்றுமதி செய்வார்கள். பல நாட்டு இறக்குமதியாளர்கள் எந்த நாட்டில் எந்த பொருள் கிடைக்கும் எனத் தெரியாதபோது, இந்நாட்டு ஏற்றுமதியாளர்களை அணுகுவார்கள். இவர்கள் மற்ற நாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்து மறு ஏற்றுமதி செய்வார்கள். நீங்கள் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏற்றுமதி செய்யும் தங்க நகைகள், மறுபடியும் சென்னைக்கே இறக்குமதியாகலாம். சிங்கப்பூர் டிசைன் என்ற பெயரில் இங்கே விற்கலாம்.

தங்க நகைகளை ஏற்றுமதி செய்வதில் உள்ள சிறப்பு சலுகைகளையும் அறிந்து கொள்ளுங்கள். மற்ற பொருட்களை 'கார்கோ’வில் அல்லது பார்சலில்தான் அனுப்ப வேண்டும். சாம்பிள்களை மட்டும் உடன் எடுத்துச் செல்லலாம். தங்க நகைகளைப் பொறுத்தவரை, முழு ஆர்டரையும் உங்களுடனேயே விமானத்தில் எடுத்துச் செல்லலாம். இதற்கு ஏர்போர்ட்டில் முறைப்படி ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விற்பனை முடிந்த பின் 'ஜிஜெஇபிசி' அமைப்பிடம் அதைப் பற்றி முறையாகத் தெரிவிக்க வேண்டும்.''

பாடல் கலையால் சாதிக்க என்ன வழி?

பிஸினஸ் கேள்வி - பதில்

''நான், தமிழில் பக்திப் பாடல்கள், கல்யாண, வளைகாப்புப் பாடல்கள் எழுதி மெட்டுப் போட்டு, எங்கள் குடும்ப விழாக்களில் பாடுவேன். என் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லாத சூழலில், இந்த பாடல் கலையை வைத்து ஏதாவது சாதிக்க வழி காட்டுவீர்களா?''

- மதுரை வாசகி

''பாட்டெழுதி மெட்டமைத்துப் பாடுவது எல்லோருக்கும் கை வந்துவிடாது. உங்களுடைய இந்த சிறப்பு அம்சத்தையே பிரதானமாக நினைத்து, பாஸிட்டிவ் சிந்தனையை வளர்க்க ஆரம்பியுங்கள். 'வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை' என்ற நெகட்டிவ் எண்ணத்தை இன்றுடன் விடுங்கள். இப்போது உங்களுக்குத் தேவை தன்னம்பிக்கை, முன்னேறத் துடிக்கும் துடிப்பு. இன்று மிகப்பெரிய இசை அமைப்பாளராக உள்ள இசைஞானி இளையராஜா  ஒரு குழுவாக வெளியிடங்களில் பாடிப் பாடி தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்தான். ஓட்டலில் வேலை செய்து கொண்டே பாட்டுப் பாடியவர்தான்... ஒளவையாராக நடித்து அன்றே மிகப் பெரிய தொகையை வருமானமாக   பெற்ற கே.பி.சுந்தராம்பாள். இதுபோல் நீங்களும் வெற்றிபெற உங்கள் பாடல்களை இசையுடன் ரெக்கார்ட் செய்து படத் தயாரிப்பாளர்களுக்கு அனுப்புங்கள். மேலும் தயாரிப்பாளர்கள் சங்கத்தையும் அணுகி வாய்ப்புக் கேளுங்கள். இசை அமைப்பாளர்களுக்கு உங்கள் குறுந்தகடுகளை அனுப்புங்கள். என்றாவது, யாராவது திடீர் என உங்களை அழைக்கலாம்.

நீங்கள் இதை ஒரு தொழிலாகவும் மாற்றலாம். சொந்தமாக ஒரு பாடல் குழு அமைக்கலாம். அதற்குத் தேவையான உபகரணங்கள், வாத்தியக் கருவிகளை வாங்கி ஓர் ஆர்கெஸ்ட்ரா ஆரம்பிக்கலாம். சொந்த பாடல் அல்லாது, சினிமா பாடல், பக்தி பாடல்களைப் பாடலாம். பக்க வாத்தியம் வாசிப்பவர்களைக் கண்டறிந்து அவர்களையும் உங்களோடு சேர்த்துக் கொள்ள லாம். நல்ல வருமானம் உள்ள தொழில் இது. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.''