Published:Updated:

கதை கேளு... கதை கேளு..!

இ.மாலா

##~##

எதுக்கெடுத்தாலும் 'என்னால முடியாது’, 'எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது’னு negative எண்ணங்களோட இருக்கவங்களுக்காகவே இந்தக் கதை. என்ன குட்டீஸ்... ரெடியா!

மருத்துவமனை ஐ.சி.யூ வார்டு. அந்த அறைக்குள்ளே ரெண்டு நோயாளிகள் இருந்தாங்க. ஒருத்தருக்கு கேன்சர். ஆபத்தான கட்டத்துல சிகிச்சை எடுத்துட்டு இருந்தார். இன்னொருத்தர்... விபத்துல அடிபட்டு, ஆபத்தான கட்டத்துல coma stage ல இருந்தார். இந்த ரெண்டு பேர் கட்டில்களுக்கு நடுவில் ஒரு தடுப்பு. அதனால ஒருத்தரை ஒருத்தர் பார்க்க முடியாது.

கேன்சர் நோயாளி, ''அந்தப் பக்கம் யாரை சேர்த்து இருக்காங்க, அவருக்கு என்ன ஆச்சு, என்ன சிகிச்சை கொடுத்துக்கிட்டு இருக்காங்க?'’னு நர்ஸ்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டார். விபத்துல அடிபட்டவருடைய மனைவியும், குழந்தையும் தினமும் அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில் நின்னு அழறது... கேன்சர் நோயாளிக்குக் கேட்கும்போது, ரொம்ப வருத்தப்பட்டார். தனக்கு யாரும் இல்லைனாலும், பக்கத்து பெட்ல அட்மிட் ஆகியிருக்கிறவர், அவரோட குடும்பத்துக்காகவாச்சும் சீக்கிரம் குணம் அடையணும்னு வேண்டிக்கிட்டார்.

எல்லா மருத்துவமனைகள்லயும் பார்வை யாளர்கள் நேரம் மாலைதானே... அதனால பகல் நேரங்கள்ல எல்லாம் தன் படுக்கையில் இருந்தபடியே, பக்கத்து படுக்கையில் இருப்பவரை நண்பரா நினைச்சு, அவர்கிட்டே பேச ஆரம்பிச்சார் கேன்சர் நோயாளி. கோமா நிலையில இருக்கறவருக்கு, நாம பேசுறது கேட்காதுனு தெரிஞ்சும்கூட... தன்னோட life, friends, உலகத்து விஷயங்கள்னு ஏதாவது ஒண்ணை சத்தமா சொல்லிட்டே இருப்பார். ஒரு கட்டத்துல கோமா நோயாளிக்கு நினைவு திரும்புறதும்... பிறகு, போறதுமா இருந்துச்சு.

கதை கேளு... கதை கேளு..!

''அந்த ஜன்னல் வழியே பார்த்தா... அந்தப் பக்கம் அழகான புல்வெளி, தூரத்திலே மலைச்சரிவு, மேக ஊர்வலம்... பார்க்கப் பார்க்க எவ்வளவு அழகா இருக்குது'’னு தினமும் கோமா நோயாளிக்கு ரசனையோடு சொல்லுவார் கேன்சர் நோயாளி. ஜன்னல் பக்கத்துல இருக்கிற பூவரச மரத்தைப் பற்றியும் சொல்லுவார். பூவரச மரம் இலைகள் துளிர்த்ததும், மொட்டு விடுவதையும் சொன்னவர், ''மரம் முழுவதும் மஞ்சள் பூ மலர்ந்து பார்க்கும்போது, நீயும் என்கூட அதை ரசிக்கணும். நீ வருவே... உன்னாலே முடியும்... நான் உனக்காக காத்திருப்பேன்!''னு திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருந்தார்.

நாள் முழுக்க இவரோட பேச்சுக் குரலைக் கேட்டுக் கேட்டு மருத்துவ அதிசயமே நடந்துடுச்சு. கொஞ்சம் கொஞ்சமா கோமா நிலையில்இருந்து அவர் மீண்டுட்டார். நினைவு தெரிஞ்சதும்... தன்கிட்ட தினமும் பேசிக்கிட்டிருந்த பக்கத்து படுக்கை நோயாளியைப் பார்க்கணும்னு விரும்பினார். சின்ன தயக்கத்துக்கு அப்புறம் அங்கிருந்த நர்ஸ், அவர் இறந்துட்டதா சொன்னாங்க. தனக்கு படுக்கையில் இருந்தபடியே நல்ல நண்பனா இருந்து ஆறுதல் வார்த்தைகளையும் உற்சாகமான விஷயங்களையும் பேசினவரை பார்க்க முடியலையேனு வருத்தப்பட்டவருக்கு, அழுகை வந்திடுச்சு.

அவர் தினமும் ரசிச்சு சொன்ன இயற்கை காட்சிகளையாவது பார்க்கலாம்னு வீல்சேர்ல அந்தப் பக்கம் போனார். ஜன்னல் வழியே வெளியே பார்த்தா... ஒரே கட்டடங்கள்தான். வயலோ, மலையோ, பூவரசம் மரத்தையோ காணோம். அதிர்ச்சியோட, ''ஏன் எங்கிட்ட தினமும் ஜன்னலுக்கு அந்தப் பக்கம் இயற்கை காட்சிகள் தெரியுதுனு அவர் பொய்யா சொல்லிட்டே இருந்தார்?''னு nurse கிட்ட கேட்டார்.

''அப்படி உங்ககிட்டே தொடர்ந்து நல்ல விஷயங்களையும், positive எண்ணங்களையும் சொல்லிட்டு இருந்ததால, மருத்துவ சிகிச்சையோடு இந்தப் பேச்சுத் துணையும்தான் நீங்க சீக்கிரமாகவே குணமாக உதவியா இருந்தது''னு சொன்ன நர்ஸ்,

''உங்களுக்கு இன்னொரு அதிர்ச்சியான தகவலும் இருக்கு''னு சொன்னார். அவர் புரியாமல் நர்ஸை நிமிர்ந்து பார்க்க, ''இறந்துபோன அந்த கேன்சர் நோயாளிக்குப் பார்வைத்திறனும் கிடையாது. மரணப்படுக்கையிலும் மற்றவருக்கு தன்னால் இயன்ற உதவியைச் செய்யணும்னு நினைச்சார். தன்னுடைய தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளை வெச்சே, உலகத்தை மீண்டும் நீங்க பார்க்கற மாதிரி செய்துட்டார். அவருக்கு மனசார நன்றி சொல்லுங்க!''னு நர்ஸ் சொல்ல,

முகம் பார்க்காத, இனி பார்க்கவே முடியாத பக்கத்துப் படுக்கை நண்பர் மேல அவ்வளவு மரியாதையும் அன்பும் அவருக்கு ஏற்பட்டுச்சு!

என்ன குட்டீஸ்... ஆச்சர்யமா இருக்கா? உற்சாகமான, தன்னம்பிக்கை நிறைந்த வார்த்தைகள்... உங்களை மட்டுமல்ல... உங்களைச் சுற்றி இருக்கறவங்களையும் சந்தோஷப்படுத்தும், ஜெயிக்க வைக்கும். அதனால, பி பாஸிட்டிவ்... ஆல்வேஸ்!

- இன்னொரு கதை..?

நாளைக்கு சொல்றேன்!