Published:Updated:

கதை கேளு... கதை கேளு..!

அல்சேஷன் டாக்...அப்பாவோட ஷாக் !

இ.மாலா

##~##

இந்த முறை 'dogs’ கதை... ரெடியா பசங்களா..?!

அது அழகான காலனி. அதுலதான் இருந்துச்சு ரவியோட வீடு. பெரும்பாலான வீடுகள்ல காவலுக்கும், செல்லத்துக்கும் பலவிதமான dogs இருந்துச்சு. தன் வீட்டுலயும் ஒரு நாய்க்குட்டி வளர்க்க ஆசைப்பட்டான் ரவி. குறிப்பா, பக்கத்து வீட்டுல இருந்த alsatian dog, இவனைப் பார்த்து வாலாட்டும்போதெல் லாம், நாய் வளர்க்கணும்கிற ஏக்கம் ரவிக்கு அதிகமாகும். அப்பா, அம்மாகிட்ட தனக்கு ஒரு bug dog வாங்கித் தரச் சொல்லி கேட்டுட்டே இருந்தாலும், அந்த அல்சேஷன் மேல ரொம்பப் பிரியமா இருந்தான் ரவி. அந்த நாயும் இவனைப் பார்த்தாலே உற்சாகமா குலைக்க ஆரம்பிச்சுடும். அதோட விளையாடிட்டுதான் தினமும் ஸ்கூலுக்குப் போவான் ரவி.

இப்படியே பல நாட்கள் போக, ஒருநாள் ரவி ஸ்கூல் விட்டு நடந்து வரும்போது, ஒரு நாய்க்குட்டி bikeல அடிபட்டு, கால்ல ரத்தம் வர ரோட்டுல கிடந்துச்சு. ரவிக்கு அதைப் பார்க்க பாவமா இருந்துச்சு. வீட்டுக்கு தூக்கிட்டு வந்து, அம்மா, அப்பாகிட்ட, ''நான் இந்த நாய்க்குட்டியை வளர்க்கட்டுமா..?''னு ஆசையா கேட்டான். அவங்களும் ok சொல்லிட்டாங்க.

பக்கத்துல இருக்கிற veterinary doctor கிட்டே நாய்க்குட்டியைக் கூட்டிட்டுப் போய், மருந்து போட்டுட்டு வந்த ரவி, அதுக்கு 'ரோமி’னு பேர் வெச்சான். அதுவும் ரவிகிட்ட ரொம்ப பாசமா இருந்துச்சு. தினமும் செல்ல நாய்க்குட்டியோட ஆசை தீர விளையாடினான். இதை எல்லாம் பக்கத்து வீட்டு அல்சேஷன் பார்த்திட்டே இருந்துச்சு. 'ரோமி’யைப் பார்க்கும்போதெல்லாம் சத்தமா குலைக்க ஆரம்பிச்சுது. ரவி, இங்கிருந்தே, ''சத்தம் போடாதே... இதுவும் உன் friend'னு சொல்லிட்டு இருப்பான்.

அன்னிக்கு ரவி school விட்டு வந்தப்போ, எப்பவும் போல ரோமி ஓடிவந்து அவன் காலைச் சுத்தி விளையாட வரல. 'ரோமி ரோமி’னு இவன் கூப்பிட்டும் அதைக் காணோம். இவன் குரலைக் கேட்டு அம்மாதான் வந்தாங்க. ''உள்ளே வா ரவி'’னு சொன்னாங்க. ''ரோமி எங்கேம்மா?'னு ரவி கேட்டான். ''நீ முதல்ல உள்ளே வா, சொல்றேன்''னு சொன்னாங்க. உள்ளே போனதும் அவன் பக்கத்துல உட்கார்ந்து, அவனோட கைய எடுத்து தன் கையில் வெச்சாங்க அம்மா. என்னமோ நடந்திருக்குனு யூகிச்ச ரவி, ''ரோமிக்கு என்னாச்சும்மா?''னு கேட்டான். ''பக்கத்து வீட்டு அல்சேஷன், ரோமிய கடிச்சு போட்டுடுச்சு. காப்பாத்த முடியல. செத்துப் போயிருச்சு. நீ பார்த்தா ரொம்ப அழுவேனு நாங்க அப்பவே புதைச்சுட்டோம்''னு அம்மா சொன்னாங்க. shock ஆன ரவியோட அழுகை நிக்க ரொம்ப நேரமாச்சு.

கதை கேளு... கதை கேளு..!

மறுநாள் காலையில எழுந்து வாசலுக்கு வந்தான் ரவி. குலைச்சுட்டே வாலை ஆட்டிட்டு வர்ற ரோமி அங்க இல்ல. ரோமி இருந்த இடத்தைப் பார்த்ததும்... மறுபடியும் அழ ஆரம்பிச்சான். அதேசமயம், பக்கத்து வீட்டு அல்சேஷன், எப்பவும்போல குலைக்க ஆரம்பிச்சது. வெறுப்போடு அதைப் பார்த்தான். அந்த வார கடைசியில school leave ல பெரிய பெரிய கல்லா எடுத்து pocketல வைச்சிருந்தான். காலையிலேயே எழுந்து பக்கத்து வீட்டு

compound சுவர்கிட்ட மறைஞ்சு நின்னுட்டுஇருந்தான். ஒரு பெரிய கல்லை எடுத்து அந்த அல்சேஷனை அடிக்கக் குறி பார்த்தான். இதைப் பார்த்த ரவியோட அப்பா ஓடி வர... கையிலிருந்த கல்லை கீழே போட்டுட்டு, ஒண்ணும் நடக்காதது மாதிரி இருந்தான். அப்பாவும் ரவிகிட்டே ஒண்ணும் கேட்கல. ஆனா, அன்னிக்கு ரவியையும், அவங்கம்மாவையும் officeக்கு கூட்டிட்டுப் போனார். 'ஏன் நம்மையும் கூட்டிட்டுப் போறார்?'னு அவனுக்குள்ள கேள்வி குடாய்ஞ்சுது. அங்கே போன பிறகு, ஆபீஸோட பின்புறம் இவனைப் போகச் சொன்னார். அங்க ஆச்சர்யம் காத்துட்டு இருந்துச்சு.

பக்கத்து வீட்டு அல்சேஷன் அங்கே கட்டிக் கிடந்துச்சு. அப்பாவும் அவனருகில் வந்தார். கையில பெரிய கல்லை கொடுத்தார். ''நீ இந்த நாயை அடிச்சு கொல்லணும்னுதானே காலையில நினைச்சே? ''இதோ, நான் permission கொடுக்கறேன். உன் செல்ல நாய்க்குட்டியை கொன்ன இதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு''னு சொன்னார். அம்மாவும், ரவி என்ன செய்யப் போறான்னு பார்த்துட்டு இருந்தாங்க. அந்த அல்சேஷனும் ரவியைப் பார்த்தவுடன் வாலை ஆட்டிட்டு குலைச்சுட்டு இருந்துச்சு.

அப்பாவோட எல்லா செயலுக்கும் ஓரளவு அர்த்தம் புரியும் ரவிக்கு. இப்ப என்னாவாகஇருக்கும்னு யோசிச்சான். நம்ம என்னென்ன தப்பு செய்தோம்னு யோசிச்சுப் பார்த்தான். ஒரு நாள் அம்மா ஆசையா வளர்த்த கிளி மேல, இவன் வீசின cricket பந்து பட்டு இறந்து போனது ஞாபகத்துக்கு வந்துச்சு. அம்மா அன்னிக்கு அழுததும் நினைவுக்கு வந்துச்சு. அதேபோல அப்பா ஆசையா வெச்சிருந்த, தாத்தா கொடுத்த ‘wall clock -ஐ வீட்டுக்குள்ளே பந்து விளையாடி உடைச்சது ஞாபகத்துக்கு வந்துச்சு. 'இப்படி அப்பா, அம்மாவுக்கு பிடிச்ச விஷயத்தை நாம இல்லாம ஆக்கிட்டாலும்... நம்ம மேல் உள்ள பிரியத்தால திட்டிட்டு மன்னிச்சு விட்டுட்டாங்க. பழிக்குப்பழினு இருக்கக் கூடாதுனுதான் அப்பா இப்படி பண்ணியிருப்பாங்க’னு நினைச்சான்.

இப்ப அல்சேஷனைப் பார்த்தான். அப்போதும் அது இவனைப் பார்த்து ஆசையா வாலை ஆட்டுச்சு. கல்லுக்குப் பக்கத்துலயே biscuit pocket இருந்துச்சு. ரவி மெதுவா போய் பிஸ்கெட் பாக்கெட்டை எடுத்து அல்சேஷனுக்குப் போட்டான். அம்மாவும் அப்பாவும் சந்தோஷமாயிட்டாங்க.

அதனால குட்டீஸ்... மத்தவங்க தவறுகளை மன்னிக்க கத்துக்கோங்க... வாழ்க்கை இனிமையா இருக்கும்!

- இன்னொரு கதை..?

நாளைக்கு சொல்றேன்!

புளூ கிராஸ் வளர்ந்த கதை!

விலங்குகள் மீது அன்பு செலுத்தவும். அதற்கு பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகள் செய்யவும் 1897-ம் ஆண்டு லண்டனில் 'அவர் டம்ப் ஃப்ரெண்ட்ஸ் லீக்' (Our Dumb Friends League) என்ற அமைப்பு உருவானது. பின்னர், உலகப்போரில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு உதவி செய்ய 1912-ம் ஆண்டு 'புளூ கிராஸ் ஃபண்ட்' (Blue Cross Fund)என்று பெயரிட்டு நிதி திரட்ட ஆரம்பித்தார்கள். இதுவே, 1950-ம் ஆண்டு 'தி புளூ கிராஸ்' என்று மாற்றப்பட்டு செயல்பட்டது. பின்னர், 2011-ம் ஆண்டு 'தி' என்கிற வார்த்தையும் நீக்கப்பட்டுவிட, 'புளூ கிராஸ்' (Blue Cross)என்பது இன்று வரையிலும் நிலைத்துவிட்டது.

இந்தியாவில் 1959-ம் ஆண்டு கேப்டன் சுந்தரம் என்பவரால், 'புளூ கிராஸ் ஆஃப் இண்டியா'  அமைப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. விலங்குகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான இந்த அமைப்பு, இந்தியாவில் உள்ள பெரிய அமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. சென்னையிலிருக்கும் இதன் மையத்தில் மருத்துவ உதவி, தங்கும் வசதி மற்றும் ஆம்புலன்ஸ் சேவையும் உண்டு.

கடந்த ஜனவரி 14 அன்று, 'புளூ கிராஸ்' அமைப்பு, மாணவர் குழுவோடு இணைந்து 'ஸ்பீக்' (Speak)என்கிற பெயரில் பறவைகளுக்கான இல்லத்தை சென்னையில் முதன் முதலாக துவக்கியுள்ளது.