மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி ?

கேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி ?

ரிமோட் ரீட்டா

##~##

'வேலன்டைன்ஸ் டே ஸ்பெஷல். காதல்ல சொதப்பின, குழப்பின, குட்டு வாங்கின அனுபவங்கள் ப்ளீஸ்..!’

- ஜெனிபிரியா, ஸ்ருதி, 'மொக்க' மகி மூணு பேருகிட்டேயும் கேட்டேன்!

''மாட்டிவிடறதுக்காக வர்றியே ரீட்டா!''னு முதல்ல பதுங்கினாலும், ஜாலியா பகிர்ந்துகிட்டாங்க... ஆல் ஈஸ் வெல்!

லைவ் லவ் !

''ரெண்டு வருஷத்துக்கு முன்ன, வசந்த் டி.வி-யில 'காதல் டாட் காம்’னு ஒரு லைவ் ஷோ தொகுத்து வழங்கிட்டிருந்தேன் ரீட்டா''னு ஆரம்பிச்ச ஜெனிபிரியா,

கேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி ?

''காதலர்கள் மட்டுமே கலந்துக்குற நிகழ்ச்சி அது. ஏகப்பட்ட பசங்களும் பொண்ணுங்களும் தங்களோட நிஜ காதல் ஸ்கிரிப்டை மனம் விட்டுப் பகிர்ந்துக்குவாங்க. டிப்ஸ், ஃபீலிங்ஸ், கவிதைனு அத்தனையும் கொட்டித் தீர்ப்பாங்க. 2011 வேலன்டைன்ஸ் டே. நிகழ்ச்சி ரொம்பவே ஹாட்டா போயிட்டிருந்தது. அப்போ லைவ்ல கால் பண்ணி பேசின ஒருத்தர், 'எல்லாரோட லவ் பத்தியும் கேக்குறீங்களே? நீங்க யாரையாவது லவ் பண்றீங்களா?’னு கேட்டார். நான், 'இல்லையேப்பா...’னு கேஷ§வலா பதில் சொன்னேன். அடுத்த செகண்ட் பட்டுனு 'ஐ லவ் யூ!’ சொல்லிட்டார். சட்டுனு நான் 'இதோ உங்களுக்கான பாட்டு...’னு லைனை கட் பண்ணிட்டேன். ஆனாலும், அது கலாய்ப்பு வேலை இல்ல... யாரோ காரணமாத்தான் இப்படி சொல்லியிருக்காங்கனு தோணுச்சு. மூணு நாள்ல அது யாருனு தெரிஞ்சுடுச்சு. அவர், என் பெஸ்ட் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட். 'ஸாரி, ஐ ஆம் நாட் இன்ட்ரஸ்டட்’னு சொல்லிட்டேன். இப்போ சினிமாவில் நடிச்சுட்டு இருக்குற அவரோட பேரை மட்டும் கேட்டுடாதே ரீட்டா... ப்ளீஸ்!

இத்தோட இந்த பேட்டி முடியல மகாஜனங்களா..! சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. எனக்கு போன வருஷம் கல்யாணம் ஆயிடுச்சு. அரேஞ்சுடு மேரேஜ். என் கணவர்கிட்ட 'லைவ் லவ்’ விஷயத்தை சொல்லி சிரிச்சா, 'ம்... நான் தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டேனே!’னு கிண்டலடிப்பார்.

ஹேப்பி காதலர்கள் தினம்!''

தேங்க்யூ!

காதல் பஞ்சாயத்து!

இப்போ கோயம்புத்தூர் இந்துஸ்தான் காலேஜ்ல ஃபைனல் இயர் கம்ப்யூட்டர் சயின்ஸ் ரெகுலர்ல படிச்சுட்டிருக்காங்க ஸ்ருதி.

''சொல்லப் போனா, காலேஜ் கல்ச்சுரல்ஸ் ஆர்வம்தான் 'நாதஸ்வரம்’ சீரியல் வரை என்னை கொண்டுட்டு வந்தது. போன வருஷம் ஒரு சம்பவம் நடந்தது. அந்தப் பையன் என்னோட காலேஜ்லயே ஐ.டி டிபார்ட்மென்ட். ஒருநாள், 'நீங்கதானே நாதஸ்வரம் சீரியல்ல நடிக்கிறீங்க..? எங்க வீட்ல எல்லாருமே உங்களோட ரசிகை!’னு பயங்கரமா ஐஸ் கொட்டினான். 'தேங்க்ஸ்’ சொல்லிட்டு நகரப் பார்த்தா, 'ஆட்டோகிராஃப் ப்ளீஸ்!’னு நோட் பேட் நீட்டினான். 'ஒரே காலேஜ்லதானே படிக்கிறோம்... இதெல்லாம் எதுக்கு?’னு சொல்லியும் விடவே இல்லை. கடைசியில, 'வித் லவ் ஸ்ருதி’னு உலக வழக்கப்படி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்.

அடுத்த நாள் காலேஜ் லைப்ரரியில இருந்த எங்கிட்ட வந்த அந்த பையன், 'உங்களை லவ் பண்றேன்!’னு ஒரே உருகல்ஸ். 'ஆளை விடுடா சாமீ'னு கிளாஸுக்கு வந்துட்டேன். அவனோ கிளாஸ் பசங்க சிலரை கூட்டிட்டு வர, 'நீதானே 'வித் லவ்’னு ஆட்டோகிராஃப் போட்டுக் கொடுத்திருக்கே..’னு ஆளாளுக்கு ரவுண்டப் பண்ணி பஞ்சாயத்துப் பேச ஆரம்பிச்சுட்டாங்க.

நான் மட்டும் விடுவேனா..? என் ஃப்ரெண்ட்ஸும் நானும் தத்துவம் பேசிப் பேசியே எல்லாரையும் டயர்ட் ஆக்கிட்டோம். இன்னிக்கும் காலேஜ்ல எங்களைப் பார்த்தா, அந்த கேங்க் ஜூட்!''

குட்!

கலர் கலரா காதல் !

கேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி ?

'மொக்க’ மகியோட காதல்... கலக்கல்! ''சேனல் என்ட்ரிக்கு முன்ன, சென்னை தி. நகர்ல கம்ப்யூட்டர் சென்டர்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். அங்க 'டேலி’ கோர்ஸ் படிக்க வந்தா அந்த ஏஞ்சல். காதல் பூக்குற நேரத்துல, லவ்வர் என்ன கலர் டிரெஸ்ல வர்றாங்களோ, அதே கலர் டிரெஸ்ஸை போட்டு அசத்துறது ஒரு டிரிக். சென்டர்லயே நாலு, அஞ்சு டிரெஸ் செட் வெச்சுக்கிட்டு, பஸ் ஸ்டாப்லயே அந்தப் பொண்ணு என்ன கலர் டிரெஸ் போட்டுட்டு வர்றானு பார்த்துட்டு, வேகமா சென்டருக்கு வந்து அதே கலர் டிரெஸ் போட்டுக்குவேன். திடீர்னு ஒருநாள், என் கண் முன்னாலயே, அங்க கம்ப்யூட்டர் கிளாஸுக்கு வந்துட்டு இருந்த இன்னொரு பையன்கிட்ட அந்தப் பொண்ணு 'ஐ லவ் யூ’ சொல்லிட்டா. அப்பதான் தெரிஞ்சுது... அந்த பையனுக்கு பிடிச்ச கலரை எல்லாம் அவன் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு, அந்தப் பொண்ணு இத்தனை நாளா போட்டுட்டு வந்தது.

இனி காதல்ல தோல்வியே இருக்கக்கூடாதுனு அந்த ஸ்பீட்லயே ரம்யாவை லவ் பண்ணி கல்யாணம் செஞ்சுகிட்டேன். இப்போ ஆல்வேஸ் லவ்தான் ரீட்டா!''

கலர்ஃபுல் தோல்வி!

படங்கள்: ஆ.முத்துக்குமார், எஸ்.சாய் தர்மராஜ்,
ஜெ.வேங்கடராஜ், த.ரூபேந்தர்

 ஸ்வர்ண சங்கீதம்!

கேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி ?

கர்னாடக சங்கீதப் பிரியர்களோட 'லைக்ஸ்’ வாங்கின ராஜ் டி.வி. ரியாலிட்டி ஷோ 'தனிஷ்க் ஸ்வர்ண சங்கீதம்’ தனது முதல் சீஸனை வெற்றிகரமா முடிச்சு, சீஸன் 2’ ஆரம்பிக்கப் போகுது. இந்த மாபெரும் கர்னாடக இசைப் போட்டிக்கு முதற்கட்ட தேர்வு சென்னை, திருச்சி, சேலம், கோவை, ஓசூர் போன்ற இடங்களில் நடக்க இருக்கு. சீஸன் 1-ல் நடுவர்களா இருந்த பாபநாசம் அசோக் ரமணி மற்றும் சௌமியாதான், சீஸன் 2-விலும் ஜட்ஜஸ். 'உன்னைப் போல் ஒருவன்’, 'நினைத்தாலே இனிக்கும்’ படங்களில் நடித்த அனுஜா ஐயர், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருக்காங்க. பிப்ரவரி முதல் வாரத்திலிருந்து சனி, ஞாயிறு இரவு 9.30-க்கு இனி இசை மழை ஆரம்பம்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா - காதல்ல சொதப்பினது எப்படி ?

150

இனி மங்கலம் தங்கும்!

''கண்ணைக் கசக்கும் சீரியல்கள் மலிந்துவிட்ட இந்த தொலைக்காட்சிகளுக்கு மத்தியில், மாலை நேரத்தை பக்திமயமாக்கி, இறை உணர்வைத் தூண்டும் 'பக்த விஜயம், தெய்வீகம்’ என வாரம் முழுவதும் ஆன்மிக தொடர்கள் தந்து அசத்துகிறது ஜெயா டி.வி. விளக்கேற்றும் நேரம்... இனி மங்கலம் தங்கும்'' என பரவசப்படுகிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஹிமயா.

பிள்ளைகளின் சபதமாகுமா?

''ஜீ தமிழ் சேனலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'ஒரு தாயின் சபதம்’  நிகழ்ச்சி... சூப்பர்! பெற்ற தாயை முதியோர் இல்லம் அனுப்பும் இக்காலத்தில், அனைவருமே அவசியம் பார்க்க வேண்டிய நிகழ்ச்சி. 'ஒரு தாயின் சபதம்', ஒவ்வொரு பிள்ளைகளின் சபதமாக மாறினால்... முதியோர் இல்லங்களுக்கு வேலையிருக்காது'' என்று நெகிழ்கிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆர்.ஜெயலட்சுமி.

விளம்பரங்களுக்கும் வேண்டும் சென்ஸார்!

''ரியல் எஸ்டேட் விளம்பரம் அது. 'இஎம்ஐ' என்று சொல்லப்படும் மாதாந்திர தவணையை அதிகமாகக் கட்ட தேவையில்லை என்கிற கருத்தை அதில் சொல்ல வருகிறார்கள். அதற்காக... 'கட்டாமலேயே வெச்சுக்கலாம்’ என்கிற ஒரு மகா 'தத்துவம்' சொல்லப்படுவதுதான்... வேதனையைக் கிளப்புகிறது. விளம்பரம், அனைவரையும் கவரவேண்டும் என்பதில் அக்கறை காட்டியவர்கள், அது ஆபாசத்தை விதைக்கும் வகையில் இருப்பதை ஏன் உணரவில்லை. வார்த்தைகளில் கண்ணியம் தேவை. விளம்பரங்களுக்கும் சென்ஸார் அவசியம்'' என்று ஆவேசப்படுகிறார் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த பியூலா சார்லஸ்.