ராஜாவை காப்பாற்றிய கைத்தொழில்!இ.மாலா
சுட்டீஸ்
##~## |
எல்லோரும் நல்லா இருக்கீங்களா குட்டீஸ்..? உங்க எல்லோருக்கும் ராஜா, ராணி story கேட்கப் பிடிக்கும்தானே..? அதனால இந்த வாரம் ஒரு புத்திசாலி ராணி storyயை கேக்கப் போறீங்க!
ஒரு சின்ன நாடு. ஆனா, அந்த நாட்டுல எல்லா வளமும் இருந்தது. மக்கள் honestடாவும், happyயாவும் வாழ்ந்து வந்தாங்க. இந்த நாட்டு ராஜா ரொம்ப நல்லவர், கருணை உள்ளம் கொண்டவர். எல்லா ராஜாக்களைப் போல இவரும் வில் வித்தை, வாள் வித்தை, குதிரை ஏற்றம்னு எல்லா போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர். ஆனா, 'அடுத்த நாட்டு மேல ஆசைப்பட்டோ... இல்ல தன் நாட்டோட எல்லையை விரிவுபடுத்தவோ.. அடுத்த நாட்டு மேல போர் தொடுத்து, மக்களைக் கஷ்டப்படுத்தக் கூடாது'னு கொள்கை வெச்சுருந்தார்.
அந்த நாட்டு ராணியும், ராஜாவைப் போலத்தான். கருணை உள்ளமும் நாட்டு மக்களின் நலனில் அக்கறையும் உடையவங்க. எல்லா போர்க் கலைகளையும் கற்றுத் தேர்ந்து வீரமங்கையா இருந்தாங்க.
இப்படி அன்பும், வீரமும் மிக்க ராஜா, ராணி நாட்டை ஆண்டதில் மக்களும் நிம்மதியா, சந்தோஷமா வாழ்ந்தாங்க. ஆனா, ராஜாவை குறித்து ஒரு சின்ன குறை மட்டும் ராணிக்கு உண்டு. அவர் எல்லா கலைகளிலும் சிறந்து விளங்கினாலும் 'கைத்தொழில் ஒண்ணுமே தெரியாதே'னு கவலைப்பட்டு, ராஜாவை ஏதாவது ஒரு கைத்தொழில் கற்றுக் கொள்ளும்படி சொல்லிட்டே இருந்தாங்க. ராஜாவோ, 'எனக்கு எதுக்கு கைத்தொழில்..?’னு பிடிவாதமா மறுத்துட்டே இருந்தார்.

ராணியோட birthday வந்துச்சு. 'உன் பிறந்த நாளுக்கு என்ன gift வேணும்னாலும் கேள் வாங்கித் தர்றேன்...’னு சொன்னார் ராஜா. 'நான் எதைக் கேட்டாலும் நீங்க வாங்கித் தருவீங்கனு எனக்குத் தெரியும். ஆனா, பணம் கொடுத்து வாங்குறதைவிட, உங்க கையாலேயே செய்த ஏதாவது ஒரு பொருள்தான் நான் ஆசைப்படுவது. அதுதான் என்னைப் பொறுத்தவரையில் விலைமதிக்க முடியாதது’னு அன்போட சொன்னாங்க ராணி.
இதைக் கேட்ட ராஜா, ராணியோட ஆசையைப் புரிந்து, 'சரி, உன் பிறந்தநாளை முன்னிட்டு ஏதேனும் ஒரு கைத்தொழிலை கத்துக்கறேன்’னு வாக்குறுதி கொடுத்தார். ராணிக்கு ஒரே சந்தோஷம். உடனே கைத்தறி நெசவுத் தொழிலை கத்துக்க ஏற்பாடு செய்தாங்க. ராஜாவும் மிகுந்த interestடோட கைத்தறி கத்துக்கிட்டார். அதில் அவரோட நுணுக்கத்தையும் நிபுணத்துவத்தையும் பார்த்து ராணிக்கு பெருமிதம். கொஞ்ச நாள்லயே ஒரு அழகிய மென்மையான சால்வை செய்து தன் மனைவிக்குப் பரிசளித்தார் ராஜா.
இப்படி ராஜாவும், ராணியும் மனமொத்து நாட்டை வளமா ஆட்சி செய்றதைப் பார்த்து பக்கத்து நாட்டு ராஜாவுக்கு பொறாமை. எப்படியாவது அந்த நாட்டைக் கைப்பற்றணும்னு போர் தொடுத்தான். அவசர அவசரமா போர் ஆயத்தங்கள் செய்து ராஜாவின் தலைமையில் ஒரு படை எல்லைக்குப் போய் போருக்கு ஆயத்தமானாங்க. அந்த நேரத்துல ராணி புத்திசாலித்தனமா மீதி படையை வைத்து நாட்டினுள் பாதுகாப்பையும், படைகளின் போர் திட்டத்தையும் கூறி விரைவா செயல்படுத்தினாங்க.
பக்கத்து நாட்டு ராஜா ஏற்கெனவே எல்லா ஏற்பாடுகளையும் செய்து போர் தொடுத்ததால வேகமா போர்க்களத்தில் முன்னேறினான். அவனோட போர் வேகத்தை நீண்ட நாட்களுக்குத் தாக்குப்பிடிக்க முடியாம ராஜாவும் அவரோட இருந்த சில முக்கிய வீரர்களும் காட்டுக்குள் தப்பியோடிட்டாங்க.
இனி, எளிதா நாட்டுக்குள் வந்து அரண்மனையை கையகப்படுத்திலாம்னு நினைச்சு, நாட்டுக்குள் போர் படைகளை ஏவிவிட்டான் பக்கத்து நாட்டு ராஜா. ஆனா, கிடைத்த நாட்களுக்குள் போர் படைகளின் வியூகத்தை ராணி சரியா அமைத்திருந்ததால, எதிரிநாட்டு படைகள் அதிரடி தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டியதாயிடுச்சு. நாட்டைச் சுற்றி வளைத்தும் அவர்களால உள்ளே வர முடியலை. இறுதியா படைகளில் பலரை இழந்து, போரில் தோற்று, எதிரி மன்னன் சிறை பிடிக்கப்பட்டான்.
நாட்டு மக்கள் வெற்றி சந்தோஷத்தில் ராணியைக் கொண்டாடினாங்க. ராணியோ இந்த வெற்றி தன்னாலும் தன் படைகளால் மட்டுமல்ல... போரின் துவக்கத்தில் எல்லையில் நின்று போருக்குத் தயாராகாமலே நீண்ட நாட்கள் சமாளித்த ராஜாவுக்கும் அவர் படைகளுக்கும் இந்த வெற்றி சமர்ப்பணம்னு சொன்னாங்க.

காட்டுக்குள் தப்பியோடிய ராஜாவையும், அவ ரோட முக்கியத் தளபதிகளையும் பற்றித்தான் ஒரு தகவலும் கிடைக்கல. போர் எல்லையில் இருந்து தப்பியோடிய ராஜாவும் தளபதிகளும் காட்டின் வழியா அடுத்த நாட்டின் எல்லைக்குள் சென்று மாட்டிக்கிட்டாங்க. அதனால மாறுவேடம் போட்டு அங்கேயே இருந்தாங்க. ராஜாவுக்கு தன் மனைவி மேல அதிக நம்பிக்கை, எப்படியும் போரில் வென்று நாட்டை காப்பாற்றி இருப்பாங்கனு. ஆனா, இவங்களுக்குதான் பசிக்கொடுமை தாங்கல.
அப்போ அவங்களை ஒரு ஏழை சிறுவணிகன், தன்னோட சின்னக் குடிசையில் தங்க வைத்து சாப்பாடு போட்டான். இந்த வணிகன் வேறு கடைகளில் இருந்து துணிமணிகள் வாங்கி அதை ஊர் ஊரா விற்கும் வியாபாரம் செய்பவன். அவன்கிட்ட, 'எனக்கு ஒரு கைத்தறி விசையும் நூல்கள் கொஞ்சமும் கொடுத்தா, beautiful சால்வைகள் செய்து கொடுக்கிறேன், அதை நீ விற்றால் நிறைய பணம் சம்பாதிக்கலாம்’னு ராஜா சொல்ல, சிறுவணிகனும் உடனே அதுக்கு ஏற்பாடு செய்தான். ராஜா ஒரு அழகான சால்வை நெய்து, நுணுக்கமான நெசவின் மூலம் அதில் ராணிக்கு மட்டுமே புரியும்படி தன் இருப்பிடத்தைப் பற்றியும், சிறுவணிகனைப் பற்றியும் நெய்திருந்தார். அந்த சால்வையை சிறுவணிகன்கிட்ட கொடுத்து, ''பக்கத்து நாட்டு அரண்மனைக்குச் சென்று அந்நாட்டு ராணிகிட்ட இந்த சால்வையைக் கொடு... உனக்கு நிறைய சன்மானம் கிடைக்கும்''னு சொன்னார். வணிகனும் கிளம்பினான்.
பல மாதங்களாகியும் ராஜாவைப் பற்றி தகவல் வராததால் கவலையோடு இருந்தாங்க ராணி. அப்போ வாயில்காப்போன் வந்து, அண்டை நாட்டிலிருந்து ஒரு வணிகன் சால்வை நெசவு செய்து கொண்டு வந்து ராணியிடம்தான் காட்டுவேன்னு பிடிவாதமா நிற்பதா தகவல் சொன்னான். ராணி உடனே அந்த வணிகனை உள்ளே வரச் சொல்லி சால்வையை வாங்கிப் பார்த்தாங்க. அது தன் கணவன் நெய்த சால்வைனு தெரிஞ்சுக்கிட்டவங்க, நெசவின் ஊடே தனக்குச் சொல்லப்பட்ட தகவல்களையும் தெரிஞ்சுக் கிட்டாங்க. சால்வை மிக அழகா இருப்பதாச் சொல்லி நிறைய வெகுமதிகள் கொடுத்து வணிகனை அனுப்பிட்டு, தன் முக்கிய தளபதிகளை அந்த வணிகனைப் பின் தொடர்ந்து, ராஜாவையும் பிற தளபதிகளையும் பத்திரமாக நாட்டுக்கு அழைத்து வரும்படி கட்டளை இட்டாங்க. ஒருவழியா ராஜா மீண்டும் அரண்மனை திரும்பினார்.
ராணியையும், தன் நாட்டு மக்களையும் நீண்ட நாள் கழித்துப் பார்த்த ராஜாவின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தன் பண பலத்தைவிட, படை வீரத்தைவிட, தான் கற்ற கைத்தொழில்தான் மீண்டும் தன்னை நாட்டுக்கு வரவழைத்தது என்பதை உணர்ந்து ராணிக்கு மனமார நன்றி சொன்னார். அதோடு நாட்டு மக்கள் எல்லோரும் ஏதாவது ஒரு கைத்தொழில் கத்துக்கணும்னு கட்டளையும் போட்டார். அதுக்கு அப்புறம் ராஜாவும் ராணியும் வெற்றிகரமா தங்கள் நாட்டை அரசாட்சி செஞ்சாங்க!
கதை சுவாரஸ்யமா இருந்ததுதானே குழந்தைங்களா..?!
- இன்னொரு கதை..? நாளைக்கு சொல்றேன்!
வீரத்தின் காலம்!
தமிழ்நாட்டின் வீரமங்கை, வேலுநாச்சியார். வாள் வீச்சு, அம்பு, ஈட்டி எறிதல், குதிரை, யானை ஏற்றம் என அனைத்து போர்க்கலைகளிலும் வல்லவர். இவை மட்டுமன்றி படிப்பிலும் ஆர்வம் கொண்டவர். 10 மொழிகள் அறிந்த இவர் ராமநாதபுரத்தில் பிறந்து சிவகங்கை ராஜா முத்துவடுகநாதரை மணந்து, சிவகங்கை ராணி ஆனார். சிவகங்கையின் சிறப்பைக் கேள்விப்பட்ட ஆற்காடு நவாப் முதலில் ராமநாதபுரத்தைக் கைப்பற்றி, அடுத்து சிவகங்கையை தாக்கினான். வீரம் மிக்க மன்னர் முத்துவடுகநாதர், ஆங்கிலேயர், நவாப் படைகளால் கொல்லப்பட, அழுது துடித்த வேலுநாச்சியார், அவர்களைப் பழிவாங்க சபதம் கொண்டார்.
நவாபையும், ஆங்கிலேயப் படைகளையும் வீழ்த்த ஹைதர் அலியின் உதவியை நாடினார் நாச்சியார். ராணியின் உருதுப் புலமையை கண்டு வியந்த ஹைதர் அலி, வேலுநாச்சியாரை தன் அரண்மனையிலேயே தங்கச் சொல்லி அடைக்கலம் கொடுத்தார். அங்கிருந்தபடியே தனது படைகளை பெருக்கத் தொடங்கிய நாச்சியார், போர் திட்டமிடலுக்கு பின் ஹைதர் அலி கொடுத்த ஆயுத சாதனங்களோடு ஆங்கிலேயப் படையையும் நவாபின் படையையும் தாக்கக் கிளம்பினார். சிவகங்கை அரண்மனைக்குள்ளே இருக்கும் தெய்வத்தை பெண்கள் கூட்டமாக சென்று வழிபடும் நாளில் வேலுநாச்சியாரும் அவருடைய படைப்பெண்களும் ஆயுதங்களை மறைத்து வைத்துக் கொண்டு பெண்களின் கூட்டத்தோடு உள்ளே சென்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பார்க்காத ஆங்கிலேயப் படைகள் வெட்டப்பட்டு வீழ்ந்தன. ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றிபெற்ற வேலுநாச்சியாரின் அரசாட்சி காலம்... வீரத்தின் காலம்!