Published:Updated:

அவள் சினிமாஸ் - பரதேசி

ஸ்க்ரீன்ஸ்

அவள் சினிமாஸ் - பரதேசி
##~##

'சாலூர்' கிராமத்தில் பாட்டியுடன் வசிக்கிறான் ராசா (அதர்வா). ஊரில் தண்டோரா போடுவதுதான் அவனுடைய வேலை. ஊரார் அவனுக்கு வைத்திருக்கும் பெயர்... 'ஒட்டுப் பொறுக்கி'. சதுரவட்ட ஹேர்ஸ்டைல், கோணி டிரெஸ், காதில் வளையம்... இதுதான் அவனுடைய பிரதான அடையாளங்கள். எப்போது பார்த் தாலும் அவனைக் கிண்டல் செய்துகொண்டே இருக்கும் அங்கம்மாவுக்கும் (வேதிகா), அவனுக்கும் காதல்.

இதற்கிடையில் ஊருக்குள் நுழையும் கங்காணி (ஜெர்ரி), பஞ்சத்தில் அடிபட்டுக் கிடக்கும் மக்களிடம், 'டீ எஸ்டேட்ல வேலை. மாசமானா சம்பளம். தங்கறதுக்கு வீடு. வேலை பார்த்து சம்பாதிக்கிற பணத்த வெச்சு, ஊர்ல கழனினு வாங்கிப் போடு' என்று ஆசை காட்டி, ஊரில் பாதிக்கும் மேற்பட்டவர்களை அழைத்துப் போகிறான். பசுமையான தேயிலை தோட்டத்துக்குள் கால் அடி எடுத்து வைத்த முதல் நாளே கொடுமைகள் ஆரம்பமாகி விடுகின்றன.

'ஒரு வருட ஒப்பந்த நாள் வரை வேலை செய்துவிட்டு, கூலியை வாங்கிக் கொண்டு ஊர்பக்கம் ஓடிவிட வேண்டியதுதான்' என்கிற நினைப்போடு அனைவரும் உழைத்துக் களைக்க... வருட இறுதியில் ஏதேதோ காரணம் சொல்லி மொத்த பணத்தையும் பிடித்துக் கொள்வதோடு.. 'மேற் கொண்டும் கடன் இருக்கிறது. உழைத்துக் கழித்துவிட்டு ஊர்ப் போய்ச் சேருங்கள்' என்று தேயிலைக் காட்டிலேயே தொடர்ந்து அடிமைப் படுத்தப்படுகிறார்கள். தினம் தினம் அடி, உதை என்று, சித்ரவதை... பாலியல் தாக்குதல்கள்... என கரைகின்றன நாட்கள்.

அந்த அடிமைகள்... கடனை அடைத்து ஊர் திரும்பினார்களா... ஊரிலேயே தங்கிவிட்ட அங்கம்மா - ராசா காதல் ஜோடி ஒன்றுசேர்ந்ததா?

அவள் சினிமாஸ் - பரதேசி

ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்தபோது நடந்த சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'ரெட் டீ' எனும் ஆங்கில நாவல், 'எரியும் பனிக்காடு' என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. கல்லையும் கரைத்துவிடும் இந்த நாவல்தான், 'பரதேசி' படத்தின் மூலக்கரு. நாஞ்சில் நாடனின் 'இடலாக்குடி ராசா' கதையில் வரும் நாயகனின் இன்ஸ்பி ரேஷனையும் கலந்து கொடுத்திருக்கிறார் பாலா.

சென்னை, ஐநாக்ஸ் தியேட்டரில் 'பரதேசி'யைப் பார்த்தனர் கல்லூரி மாணவிகளான ஹரிணி, சுகுணா, சுகன்யா, லோகேஸ்வரி, நீலிமா, ஜனனி, துர்கா. அதே கையோடு... சுடச்சுட அவர்கள் தந்த விமர்சனம் இதோ...

நீலிமா: ''பாலா படம்... எப்பவுமே வித்தியாசம்தான். அதை இந்தப் படத்திலும் நிரூபித்துள்ளார். நம் முன்னோர்கள், வெள்ளைக்காரர்களால் எப்படியெல்லாம் கொத்தடிமைகளாக நடத்தப்பட் டிருக்கிறார்கள் என்பதை உருக்கமாகக் காட்டியிருக்கிறார். ஜி.வி பிரகாஷின் பின்னணி இசையும் சேர்ந்துகொள்ள... பல காட்சிகள், ஸீட் நுனிக்கு வரவழைக்கின்றன... சமயங்களில் கண்ணீரை பொங்க வைக்கின்றன. ஏன் பாலா சார்... படம் நன் றாக போய்க்கொண்டு இருக்கும்போதே... திடீரென a film by bala என்று கார்டு போட்டு, 'என்ன அதற்குள்ளாக படத்தை முடித்துவிட்டார்' என்று பேச வைத்துவிட்டீர்களே!''

பஞ்ச்: நானும் மூன்று மணி நேரம் 'பரதேசி'யாகிப் போனேன்.

லோகேஸ்வரி: ''அதர்வாவின் பாட்டியாக வந்திருக்கும் கச்சம்மாள், கலக்கல் தேர்வு. கிராமப்புறங்களில் இவரைப் போன்ற பாட்டிகள், தள்ளாத வயதிலும் யார் உழைப்பையும் எதிர்பார்க்காமல் தன்னம்பிக்கையோடு இன்றும் வாழ்கிறார்கள். காமெடி, நக்கல் போன்றவை இத்தகைய பாட்டிகளுக்கு கை வந்த கலை. அவர்களின் பிரதி நிதியாகவே நடமாடுகிறார் கச்சம்மாள்.  வேதிகாவுடன் காதல் வந்ததும், கனவு  கண்டு புலம்பும் அதர்வாவிடம், ’எனக்குக்கூட நீங்க ரெண்டு பேரும் பிச்சை எடுக்குற மாதிரி கனவு வந்துச்சு’ என்று பாட்டி சொல்கிற காட்சியில் தியேட்டரே அதிர்கிறது.''

பஞ்ச்: கதாபாத்திரங்கள், தேயிலை தோட்டம் என அனைத்தும் கண் முன்னே நிஜமாக வந்து போகின்றன செழியனின் கேமரா புண்ணியத்தில்.

அவள் சினிமாஸ் - பரதேசி

சுகுணா: ''டீ எஸ்டேட்டில் வேலை செய்யும் அங்கம்மாவின் தோழி கருத்தகன்னி மீது, வெள்ளைக்கார முதலாளிக்கு ஒரு கண். அவள் மீது கை வைக்கும்போது, அவனைத் தாக்கித் தப்பிக்கிறாள். பிறகு, அவனாலேயே அவள் சூறையாடப்படுவது கொடுமையிலும் கொடுமை. யாருடைய ஆதரவும் இல்லாததால், வயிற்றுப் பிழைப்புக்காக இங்கு வந்து அடிமை வேலை செய்யும் பெண்களுக்கு பேராட ஜீவன் வேண்டுமே? இயேசு கிறிஸ்துவின் விசுவாசியாக வரும் சிவசங்கர், 'என் அப்பா (இயேசு) குணமாக்குவார்' என்று சொல்ல, 'உங்கப்பாவும் டாக்டரா..?' என்று மோகன் கேட்பதை எந்த விதத்தில் சேர்க்க?! 'செங்காடே...’, 'செந்நீர்தானா..!', 'அவத்த பையா' பாடல்களில் வைரமுத்து நம்மை உருக்குகிறார்.''

பஞ்ச்: ஏன் வெளியூர் வெள்ளைப் புள்ளைங்கள கறுப்பு சாயம் பூசி நடிக்க வைக்கிறீங்க? நம்ம ஊர் புள்ளைங்கள நேரடியா நடிக்க வைக்கலாமே பாலா?!

ஜனனி: ''இனி காலையில் எழுந்ததும் டீ குடிக்கும்போது, இந்தத் தேயிலைத் தோட்ட அடிமைத் தொழிலாளிகள் நம் கண்முன்னே நிச்சயம் நடமாடுவார்கள். சொந்த ஊரைவிட்டு டீ எஸ்டேட்டுக்கு மூட்டை முடிச்சுகளோடு செல்லும் மக்களைப் பார்க்கும்போது... இன்றைய இலங்கை தமிழ் மக்கள் நிழலாடுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதர்வா - வேதிகா இருவருக்கும் காதல் வருவதற்கு, 'சப்'பென்று ஒரு காரணத்தை வைத்திருக்கிறீர்களே... எத்தனை எத்தனையோ பிரமாத வழிகள் உண்டே பாலா சார்?''

பஞ்ச்: 'சாப்பாட்டுகே வழியில்ல' ஆனா... உடம்ப மட்டும் எப்படி கொழுகொழுனு வெச்சுருக்க முடியுது அதர்வா?

சுகன்யா: ''ஊரை, உறவுகளை உதறிவிட்டு... கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து, ஃபாதர் வீசி எறியும் ரொட்டித் துண்டுகளை பொறுக்கித் தின்று... என்று அந்த மக்கள் படும் கஷ்டங்கள் கண்முன்னே விரியும்போது... முதலாளித்துவ வர்க்கத்தின் மீது தீராத ஆத்திரம் பொங்குகிறது. ஆனால், சில இடங்களில்... 'இப்படி எல்லாமுமா நடக்கும்?' என்று யோசிக்கவும் வைக்கிறது. 'ஒட்டுப் பொறுக்கி'யின் பெரியப்பா இறந்துபோக... அதை அவனிடமிருந்து மறைத்து, கல்யாணம் முடித்து, விருந்து சாப்பிடுவதெல்லாம் ஏற்றுக் கொள்கிற மாதிரியே இல்லை.''

பஞ்ச்: இந்த புதிய ஓவியம்... ஒரு கறுப்பு காவியம்!

ஹரிணி வெங்கடராமன்: ''அதர்வா கேரக்டர்... சான்ஸே இல்லை. 'நியாயமாரே' என்று கூவியபடி தண்டோராவுடன் அறிமுகம் ஆவது, வேதிகாவுடனான ரொமான்ஸ், பாட்டியிடம் ஓயாமல் வாங்கும் திட்டு... கொடுத்த வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்.''

பஞ்ச்: இந்தப் 'பரதேசி'களால்... நிஜ 'பரதேசி'களின் (வெள்ளையர்கள்) தோல் உரிகிறது!

துர்கா: ''வெள்ளைக்கார துரையாக வருபவர், 'இந்த வெட்டிப் பயல்களுக்காக காந்தி ஏன் போராடுகிறார்?' என்று கேட்க... வெள்ளைக்காரப் பெண்மணி ஒருவரே கொதித்தெழுந்து... காந்தியின் போராட்டம், தியாகம் பற்றி சொல்லுமிடம் அருமை.''

பஞ்ச்: கோட் சூட் போட்டால்தானா... 'பரதேசி' அதர்வாவும் அழகே!

அவள் சினிமாஸ் - பரதேசி

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: ரா.மூகாம்பிகை