Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 1

புதிய தொடர்

சட்டத்தால் யுத்தம் செய்! - 1
##~##

முத்தம்மா... இந்திய வெளியுறவுப் பணியின் (IFS)  மூத்த உறுப்பினர். சீனியாரிட்டி இருந்தும், வெளிநாட்டிலுள்ள எந்த இந்தியத் தூதரகத்திலும், அவர் தூதுவராக (Ambassador)  பணி நியமனம் செய்யப்படவில்லை. பல காலம் பொறுத்திருந்தவர், கடைசியில், அதாவது... எழுபதுகளின் கடைசியில் உச்ச நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார்.

அவருடைய அதிர்ஷ்டம், 'வாழும் சரித்திரம்' என்று தற்போதும் நடமாடிக் கொண்டிருக்கும் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அங்கம் வகித்த பெஞ்ச் முன், முத்தம்மாவின் வழக்கு விசாரணைக்கு வந்தது. அவருக்கு உரிய பதவியைத் தராமலிருப் பதற்கு மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது உச்ச நீதிமன்றம். இதற்கு, மத்திய அரசு கொடுத்த பதில் என்ன தெரியுமா?

'முத்தம்மா திருமணம் ஆகாதவர். வெளிநாட்டு தூதராக அவர் நியமிக்கப்பட்டால், அரசு விருந்தினர்களை அவர் தனியாளாக வரவேற்க முடியாது. ஆகவே, திருமணம் ஆகாத வெளியுறவுத்துறை பெண் அதிகாரிகளுக்கு, சுயேச்சையாக நிர்வாகம் செய்யும் பதவிகளை வழங்கும் கொள்கை அரசிடம் இல்லை. ஆனால், இதே விதி திருமணம் ஆகாத ஆண் அலுவலர்க்குப் பொருந்தாது’ என்பதுதான்.

இந்தப் பதிலைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் நீதிபதிகள். 'உடனடியாக முத்தம்மாவுக்கு தூதுவர் பதவியளிக்கவில்லை என்றால், மத்திய அரசின் கொள்கை விதிகள், இந்திய அரசியல் சட்டத்துக்குப் புறம்பானதாக இருக்கின்றன என்று அறிவிக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தனர்.

அடுத்த வாய்தா தேதியில் நார்வே நாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டார் முத்தம்மா.

சட்டத்தால் யுத்தம் செய்! - 1

வழக்கை முடித்து வைத்தபோது, 'மனுவைத் தள்ளுபடி செய்கிறோம். ஆனால், அவர் எழுப்பியுள்ள பிரச்னையை அல்ல’ (We are dismissing her petition. But not the problem)  என்று குறிப்பிட்டார் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்.

நந்தினி சத்பதி, ஒடிசாவின் மூத்த காங்கிரஸ் தலைவர்... 'இளம் துருக்கியர்' என்று வர்ணிக்கப்பட்டவர்... ஒடிசாவின் முதலமைச்சராகவும் இருந்தவர். அவர் எதிர்க்கட்சியில் இருக்கும்போது, ஒரு நாள் மாலை நேரத்துக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராக அவருக்கு அழைப்பைக் கொடுத்தார் காவல்துறை ஆய்வாளர் ஒருவர். 'இருட்டிய பிறகு ஒரு பெண்ணை காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு அழைப்பது தவறு...' என்று சொல்லி நந்தினி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.

'குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, குறிப்பாக பிரிவு 160-ன் கீழ் ஒரு பெண்ணை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக வரவழைக்க முடியாது. அவர்கள் வசிக்கும் இடத்துக்குச் சென்றுதான் விசாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, எக்காரணம் கொண்டும் மாலை நேரத்துக்குப் பின் ஒரு பெண்ணை காவல்நிலைய விசாரணைக்கு அழைக்கக் கூடாது’ என்று தீர்ப்பளித்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகுதான் காவல்துறைக்கே அப்படி ஒரு சட்டப்பிரிவு இருப்பது நினைவுக்கு வந்தது!

அதே காலகட்டத்தில் மதுரா என்கிற பெண், கயவர்கள் சிலரால் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்தது உச்ச நீதிமன்றம். அதற்கு அது கொடுத்த காரணமோ விசித்திரமானது... 'மதுராவின் உடம்பில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை. பலாத்காரத்தைத் தடுப்பதற்கு எதிர்ப்பு காட்டியிருந்தால் உடம்பில் காயங்கள் ஏதாவது இருந்திருக்க வேண்டும். காயங்கள் இல்லாததினால் அவர் உடலுறவுக்கு இசைந்திருப்பார் என்றே கருத வேண்டும்’ என்பதுதான் அந்தத் தீர்ப்பு!

நாடெங்கும் பெண் அமைப்புகள் கொதித்தெழுந்தன. 'முத்தம்மாவுக்கும், நந்தினி சத்பதிக்கும் நியாயத் தீர்ப்பளித்த நீதிமன்றமே! மதுராவுக்கு நீதி எங்கே?' என்று நாடெங்கும் போராட்டக் குரல்கள் ஒலித்தன. இதன் தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் தொடர்பான குற்றப்பிரிவில் சில திருத்தங்களை நாடாளுமன்றம் கொண்டு வந்தது சரித்திரம்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 1

இந்தியாவில் உயர் நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு 150 வருடங்கள் ஆகிவிட்டன. என்றாலும் பெண்கள், தங்களுடைய பிரச்னைகளுக்காக சட்டத்தை நாடியது... 1975-ம் ஆண்டுக்குப் பிறகுதான் மெள்ள ஆரம்பித்தது! அது, பெண்களுக்கான சர்வதேச ஆண்டு எனக் கொண்டாடப்பட்ட பிறகுதான், பெண்கள் பற்றிய சமூக அவலங்கள் பெருமளவில் வெளிவந்தன. சட்டத்தால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பெண்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளும் அதிகமாகின.

குடும்பத்தில் சொத்துப் பிரச்னை, மணவாழ்க்கையில் உண்டான தோல்விகள், அவர்களுடைய வேலை பிரச்னைகள், சீண்டல்கள் (Sexual harassment), பாரபட்சமான பாலியல் அணுகுமுறை (Gender Bias)  போன்ற பற்பல பிரச்னைகளுக்கு நீதிமன்றத்தை அவர்கள் நாட ஆரம்பித்தனர்.

இன்னமும்கூட இங்கே பெண்களுக்கு எதிரான கொடுமைகள் தொடரத்தானே செய்கின்றன. ஆனால், அவற்றுக்கு எதிராக அத்தனை பேருமே பொங்கி எழுந்து நீதிமன்றங்களைத் தேடி வந்துவிடுகிறார்களா என்ன? 'கணவனையும், உறவுகளையுமே எதிர்கொள்ள முடியாமல் பயந்து நடுங்கும் நாம்... சட்டத்தின் துணையைத் தேடி நீதிமன்றம் வரையெல்லாம் செல்வது என்பது சாத்தியமா?' என்கிற கேள்வியோடு தங்களைத் தாங்களே முடக்கிப் போட்டுக் கொண்டுவிடுவதுதான் இங்கே அதிகமாக இருக்கிறது!

இத்தகைய கொடும்சூழல் நிலவும் நிலையிலும், தைரியமாக கோர்ட்டின் கதவுகளைத் தட்டும் பெண்களும் இருக்கவே செய்கிறார்கள்... தங்கள் கொடுமைகளுக்கு எதிராக நியாயத் தீர்ப்புகளைப் பெற்று வெற்றி நடைபோடும் பின்னையக்காள்கள், தமிழரசிகள், அசன் பானுக்கள்... என்று பல வீரவனிதையர்கள் இங்கே கண்முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

அத்தகையோரை இத்தொடரில் சந்திக்கத் தயாராகுங்கள்... நம்பிக்கைச் சுடர் ஏந்தி நடைபோடுங்கள்...

- தொடர்வோம்

சந்துரு...

தவி, பலருக்குப் பெருமைச் சேர்க்கும். சிலர், பதவிக்கு பெருமை கூட்டுவார்கள். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு... இதில் இரண்டாவது வகையில் வருபவர். ஒடுக்கப்பட்ட மக்கள், ஒதுக்கப்பட்ட மக்கள் என்று சமூகத்தில் தங்களின் குரலை ஓங்கி ஒலிக்க இயலாத நிலையிலிருக்கும் ஆயிரக்கணக்கானோருக்கு நீதி கிடைக்க வழி செய்தவர். அவர் வழங்கிய நியாயத் தீர்ப்புகள்... பலருடைய வாழ்க்கையில் நீதியின் வெளிச்சத்தைப் பாய்ச்சி இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டியாக மாறிய தீர்ப்புகளும் உண்டு!

ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு ஒரு நீதி... என்கிற பாகுபாடுகள் கொண்ட சமுதாயத்தில், சட்டம்கூட சிலவேளைகளில் பெண்களுக்கு எதிராக திரும்பிவிடுவது உண்டு. ஆனால், தான் தீர்ப்பு சொன்ன எந்த வழக்கிலும் பெண்களுக்கு இப்படிப்பட்ட அநீதி ஏற்பட சந்துரு அனுமதித்ததே இல்லை.

'தாமதிக்கப்பட்ட நீதி... மறுக்கப்பட்ட நீதிக்கு சமம்' என்கிற உன்னத தத்துவத்தை உணர்ந்திருந்த சந்துரு, வழக்குகள் மலை போலத் தேங்குவதைத் தடுக்க, சளைக்காமல் உழைத்தார். தன் பணிக்காலத்தில் சுமார் ஒரு லட்சம் வழக்குகளை பைசல் செய்திருக்கிறார் என்பதே அதற்கு சாட்சி! ஊழல், அதிகார அகந்தை, வறட்டு ஜம்பம் என்பவையே எல்லாத் துறைகளிலும் ஆக்கிரமிப்பு செய்திருக்கும் இன்றைய சூழலில், தன் பதவியில் நேர்மையாகவும் எளிமையாகவும் சந்துரு செயல்பட்டிருப்பதே... ஓர் ஆச்சர்யம்தான்!