(சந்தேகங்களும் - தீர்வுகளும்...)புதிய தொடர்
ஃபுட்ஸ்
##~## |
புத்தம் புதிதாக சமையலில் இறங்குபவர்கள் மட்டுமல்ல... கரை கண்டவர்களும்கூட, 'சமையல், நன்றாக வர வேண்டுமே... சாப்பிடுபவர்கள் திருப்தியடைந்து, பாராட்ட வேண்டுமே...’ என்கிற அக்கறையுடன்தான் ஒவ்வொரு தடவையும் பார்த்துப் பார்த்து சமைப்போம். ஆனால், சில சமயங்களில் இது காலை வாரிவிடுவது உண்டு.
'அடடா... காரம் தூக்கலா இருக்கே?' என்பது போன்ற சங்கடங்களும்... 'ஹோட்டல்ல மட்டும் எப்படி முறுகலா, அழகா தோசை வார்த்தெடுக்கறாங்க?' என்பது போன்ற சந்தேகங்களும் அடிக்கடி எட்டிப் பார்க்கும். இதோ... உங்கள் சமையல் அற்புதமாக அமைவதற்கு உதவும் வகையில், உங்களின் சங்கடங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு விடை கொடுத்து விரட்டியடிக்கத் தயாராகிறார்கள்... நமக்கு மிகவும் பரிச்சயமான சமையல் கலை நிபுணர்கள்!
இந்த இதழில் உதவிக்கு வருபவர்... ஆதிரை வேணுகோபால்!

ஓட்டலில் சுடுவதுபோல் கல்தோசை சுடுவது எப்படி?
பச்சரிசியையும், உளுந்தையும் மூன்றுக்கு ஒன்று என்கிற விகிதத்தில் போட்டு ஒன்றாகவே 2 மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றிய பிறகு எண்ணெயை விட்டு தோசையைத் திருப்பிப் போட்டதும் லேசாக தோசையின் மீது தண்ணீர் தெளித்து, உடனே மறுபடியும் திருப்பிப் போட்டு கல்லிலிருந்து எடுத்துவிடவும்.

இட்லி 'புஸ்புஸ்’ என்று, அதேசமயம் சாஃப்ட்டாக வர என்ன செய்ய வேண்டும்?
உளுந்து அரைக்கும்போது அவ்வப்போது கொஞ்சம் கொஞ்ச மாக நீர் ஊற்றி பொங்க பொங்க அரைக்க வேண்டும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊற வைத்த வெந்தயம், 2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்த£ல்... இட்லி சூப்பராக வரும்.


ஆப்பம் மிருதுவாக வர, என்ன வழி?
புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசி தலா ஒரு ஆழாக்கு, ஒரு கைப்பிடி உளுந்து, ஒரு டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து ஊற வைத்து... அரைக்கும்போது தேங்காய் துருவல் ஒரு கப், வெந்த சாதம் ஒரு கரண்டி சேர்த்து அரைத்து சுட்டால்... ஆப்பம் சூப்பரப்பு!

சப்பாத்தி சுடுவதற்கும், தோசை சுடுவதற்கும் தனித்தனி தோசைக்கல்லை பயன்படுத்த வேண்டுமா?
ஆம்... அவ்வாறு செய்வது நல்லது. அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும்..

பூரி உப்பி வர... யோசனை கூறுங்களேன்...
மாவு பிசையும்போது கோதுமை மாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் மக்காச்சோள மாவும், அரை டேபிள்ஸ்பூன் ரவையும், அரை டீஸ்பூன் சர்க்கரையும் சேர்த்துக் கலக்கி, அந்த மாவை பூரியாக செய்தால்... உப்பலான பூரி சமர்த்தாக உங்கள் தட்டில் 'ஹாய்’ சொல்லும்.


பிள்ளைகளை பசலைக் கீரை சாப்பிட வைப்பது எப்படி?
வதக்கிய பசலைக் கீரையுடன் சிறிது பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து சப்பாத்தி மாவோடு சேர்த்துப் பிசைந்து சப்பாத்தியாக சுட்டு, சாஸ் உடன் பரிமாறினால்.. தட்டு 'சட்’டென்று காலியாகிவிடும்.

வடை மாவு சரியான பதத்தில் இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
அரைத்த மாவை கொஞ்சம் கிள்ளி, ஒரு கிண்ணத்திலுள்ள தண்ணீரில் போடவும். மாவு தண்ணீரில் மிதந்தால்... சரியான பதம். மிகவும் தண்ணீராக அரைத் திருந்தால் மாவு பிரிந்து தண்ணீரில் கலந்துவிடும். கெட்டியாக அரைத் திருந்தால்... தண்ணீரில் மூழ்கி விடும்!

தயிர் கெட்டியாக கிடைக்க, வழி என்ன?
பாலை சுண்டக் காய்ச்சுங்கள். ஆறவிடும்போது... வெதுவெதுப்பான சூட்டுக்கு வந்ததும், ஒரு துளி மோர்விட்டு, 4, 5 முறை நன்கு ஆற்றி (காபிக்கு ஆற்றுவதுபோல) மண்சட்டியில் தோய்க்க... நல்ல கெட்டித் தயிர் கிடைக்கும்.


கூட்டு நல்ல சுவையில் இருக்க என்ன செய்ய வேண்டும்?
எந்த வகை கூட்டு செய்தாலும் ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல், 2 பச்சை மிளகாய், கொஞ்சம் சீரகம் சேர்த்து அரைத்துக் கலக்கினால், கூட்டு... செம டேஸ்ட்டு!

மோர்க்குழம்பு திக்காக வர, உபாயம் சொல்லுங்கள்...
மோர்க்குழம்புக்கு அரைக்கும் பொருட்களோடு பச்சைக் கடுகு ஒரு டீஸ்பூன் சேர்த்து அரைத்து வடிகட்டி கெட்டித் தயிரில் போட்டு, சின்ன வெங்காயம் 4, பூண்டு 2 பல் இரண்டையும் சற்று கரகரப்பாக அரைத்துச் சேர்க்கவும். இதனுடன் கடுகு, மிளகு, கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து, 2 முறை நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு பாத்திரத்தில் ஊற்றி 2, 3 முறை ஆற்றவும் (காபிக்கு ஆற்றுவது போல). இப்படிச் செய்தால், மோர்க்குழம்பு திக்காக இருக்கும். அதிக நேரம் அடுப்பில் வைத்தால் நீர்த்துப் போய்விடும்.
- ஆதிரை வேணுகோபால்