Published:Updated:

பியூட்டி பிளவுஸ்கள்! - 2

ஃபேஷன் வசந்தா ராஜகோபால்

##~##

பெண்களைப் பொறுத்தவரை, புடவை  எப்படியோ... ஆனால், பிளவுஸ் என்பதுதான் முக்கியம். அதற்காக அவர்கள் மெனக்கெடும் அழகே அழகு! அணிந்து கொள்ள வாகாக... புத்தம்புது டிசைன்களோடு... புதுமையான ஸ்டைலோடு... எனத் தேடித் தேடிக் களைத்தாலும், சரியானதை தேர்ந்தெடுக்காமல் ஓயமாட்டார்கள்!

பிளவுஸை தேர்ந்தெடுப்பவர்களாக இருந்தாலும் சரி... இதையே ஒரு தொழிலாக மேற்கொள்பவர்களாக இருந்தாலும் சரி... உங்கள் அத்தனை பேருக்குமே வழிகாட்டத்தான்... 'பியூட்டி பிளவுஸ்கள்!'

இதோ... உங்களுக்கு வழிகாட்ட தயாராகிறார் சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே இருக்கும் 'ஆத்ரேயா டிசைன்' உரிமையாளர் வசந்தா ராஜகோபாலன்.

பியூட்டி பிளவுஸ்கள்! - 2

''எங்களோட ஒரே நோக்கம் எல்லாத் தரப்பினரும் அவங்கவங்க எதிர்பார்க்கற டிசைன்களை அடை யணும்கிறதுதான். 1993-ம் வருஷத்துல என்னோட கணவர் ராஜகோபாலன் துணையோடு சின்ன பட்ஜெட்ல ஆரம்பிச்சதுதான் இந்த 'ஆத்ரேயா'! இப்போ பல பேரோட பேராதரவால முப்பதுக்கும் மேற்பட்ட ஆட்களுக்கு வேலை கொடுக்கற அளவுக்கு வளர்ந்திருக்கு. இதைவிட வேற என்ன வேணும்?'' என்று பெருமையோடு சொல்லும் வசந்தாவின் சொந்த ஊர் திருச்சி.

''சென்னையிலதான் வாக்கப்பட்டேன். திருமணம் ஆகி இங்க வந்த பிறகுதான் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். ஏதாவது ஒரு விஷயத்துல முழுமையா ஈடுபடலாம்னு யோசிச்சப்பதான்... பெண்களுக்கு முழுக்க முழுக்க பிடித்தமான வகையில, முழு ஃபிட்னஸ் கொடுக்கக்கூடிய வகையிலான பிளவுஸ் அவ்வளவா கிடைக்கறதில்லைங்கற விஷயம் என் மனசுல பட்டுச்சு. இதையே கையில எடுத்தா என்னனு தோணுச்சு. அப்படி உருவானதுதான் இந்த ஆத்ரேயா.

பியூட்டி பிளவுஸ்கள்! - 2

ஆரம்பத்துல, இரண்டு தையல்காரர்களை வெச்சு, ஒவ்வொரு வாடிக்கையாளர்கிட்டயும் என்ன சைஸ் வேணும்கிறதை முதல்ல குறிச்சுக்கிட்டோம். 32, 34, 36 இப்படி சில முக்கியமான அளவுகள மட்டும் கையில எடுத்துட்டு... ரெடிமேட் பிளவுஸ் செய்ய ஆரம்பிச்சோம்... நல்ல வரவேற்பு! அது அப்படியே படிப்படியா வளர்ந்துதான்... இந்த இடத்துக்கு வந்திருக்கோம்!'' என்று சொல்லும் வசந்தா, ''சாதாரணமா ஒரு பிளவுஸுக்கு 150 ரூபாய் வாங்குறோம். லைனிங்கா இருந்தா... 300 ரூபாய் வித் லைனிங் கிளாத்தோட. இது பேஸிக். டிசைனர் பிளவுஸ்னா... டிசைன்களுக்கு தகுந்தபடி விலை மாறுபடும்'' என்றவர்,  வாசகிகள் கற்றுக் கொள்வதற்காக பிளவுஸ் டிசைன் ஒன்றை பரபரவென தன் ஆட்களின் மூலமாக அசத்தலாகச் செய்து காட்டினார்.

தேவையான பொருட்கள்: ஆயில் பேப்பர் (டிரேஸ் பேப்பர்), பிளவுஸ் துணி,  மண்ணெண்ணெய், சில்க் காட்டன் நூல் மற்றும் சிவப்பு கலர் நூல், ஜமிக்கி (சீக்குவன்ஸ்), கோல்ட் கலர் ஜர்தோஸி கோரா (ஸ்பிரிங் டைப்), ஆரி ஒர்க் ஊசி, சாக் பவுடர் (டிரேசிங் பவுடர்).

செய்முறை: பிளவுஸ் துணியை விரித்து வைத்து கழுத்து மற்றும் கை டிசைன்களுக்கான அவுட் லைன்களை மார்க்கர் கொண்டு வரைந்து கொள்ளவும் (படம் - 1). துணியில் அவுட் லைன் செய்த அளவுக்கு ஏற்ப, டிரேஸ் பேப்பரில் விருப்பமான ஏதாவது ஒரு  டிசைனை வரைந்து கொண்டு, அதை அப்படியே பிளவுஸ் கிளாத்தில் அவுட் லைன் வரைந்திருக்கும் பாகத்தில் வைக்கவும். பிறகு, சாக் பவுடரில் மண்ணெண்ணெயை சிறிதளவு ஊற்றி கலந்து, தடிமனான காட்டன் நூலை (பம்பரக் கயிறு போன்றது) இந்தக் கலவையில் நனைத்து எடுத்து, டிரேஸ் பேப்பர் மீது வைத்து தேய்க்கவும் (படம் - 2). இப்போது டிசைன் அப்படியே துணி மீது அழகாகப் படிந்திருக்கும் (படம் - 3).

பியூட்டி பிளவுஸ்கள்! - 2

அடுத்து, சில்க் காட்டன் நூலைக் கொண்டு அவுட்லைன் டிசைன்களின் அனைத்து பார்டர்களையும் கோத்துக் கொள்ளவும் (படம் - 4).

பிறகு... படம் 5-ல் காட்டியுள்ளது போல, சில்க் காட்டன் நூலைக்கொண்டு டிசைன்களை கோக்கவும். படம் 6-ல் உள்ளது போல் டிசைனுக்குத் தகுந்தாற்போல் கோல்ட் கலர் ஜர்தோஸி கோராவை (ஸ்பிரிங் டைப்) கட் செய்து கொள்ளவும். அதை ஆரி ஒர்க் ஊசியை கொண்டு படத்தில் காட்டியுள்ளது போல கோக்கவும்.

அடுத்து ஜமிக்கிகளையும் இடையிடையே உங்களுக்கு விருப்பமான விதத்தில் மாற்றிக்கூட கோத்துக் கொள்ளலாம் (படம் - 7).

இறுதியாக படத்தில் காட்டியுள்ளதுபோல கலர் ஸ்டோன்களை இடையில் வைத்து கோத்து முடிக்கவும் (படம் - 8).

பியூட்டி பிளவுஸ்கள்! - 2

தேவையென்றால் சில்வர் ப்ளஸ் கோல்ட் கலர் ஸ்பிரிங் டைப் ஜர்தோஷி கோராவையும் இந்த டிசைனைச் சுற்றி கோக்கலாம் (படம் 9). இப்போது பாருங்கள்... அனைவரையும் அசத்தும் அழகான ஒரு டிசைன் ரெடி!

இதே போல் பின் கழுத்துப் பகுதி (படம் 10) மற்றும் கை பார்டர் உள்ள இடங்களில் வரிசையாக இந்த டிசைன்களை மேலே சொன்னதுபோல் கோக்கவும்.

 - தைப்போம்...
- வே.கிருஷ்ணவேணி, படங்கள்: எம்.உசேன்
மாடல்: தீப்தி பிரசன்னா