Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 2

நீதிபதி கே.சந்துரு அவேர்னஸ்

சட்டத்தால் யுத்தம் செய்! - 2

இந்தத் தொடர்... உங்களின் நம்பிக்கை சுடர்...

##~##

ராய்ச்சி மணி அடித்து, தனது கன்றை தேரோட்டிக் கொன்ற இளவரசன் மீது புகார் கொடுத்து, நீதிகேட்ட பசுவுக்கு நியாயத் தீர்ப்பளித்தவன் மனுநீதிச் சோழ மன்னன். அவனுக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் சிலை வைத்துக் கொண்டாடும் இந்நாட்டில், 'நீதிமன்றத்துக்கு ஏன் போனாய்?’ என்று கேட்டு, ஒரு பெண்ணை தொடர்ந்து பழிவாங்கிய அதிகாரியை சும்மாவிட முடியுமா என்ன?

அதுதான் அசின்பானுவின் கதை!

அசின்பானுவின் கணவர் மதுரை மாநகராட்சியில் இடைநிலை ஊழியர். மாநகராட்சிக்கு சொந்தமான குடியிருப்பில்தான் இவர்களின் குடும்பம். கணவர் திடீர் மரணம் அடைந்ததை அடுத்து, அசின்பானுவுக்கு 'பூங்கா ஊழியர்’ என்கிற கடைநிலைப் பணியை கருணை அடிப்படையில் வழங்கி இருந்தது மாநகராட்சி. தொடர்ந்து அதே குடியிருப்பில் வசித்துவந்த அசின்பானுவை, திடீரென காலி செய்யக் கூறியது மாநகராட்சி. சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை வாங்கினார் அசின்பானு.

'மாநகராட்சியையே எதிர்த்து கோர்ட்டுக்குப் போகிறாயா?’ என்று கொதித்த நிர்வாகத் தரப்பு, அதிரடியாக அவரை தற்காலிக பணி நீக்கம் செய்தது. அதைத் தொடர்ந்து பத்து குற்றச்சாட்டுகள் அடங்கிய குறிப்பாணையையும் அவருக்கு வழங்கினார்கள். அதில் விசித்திரம் என்னவென்றால், மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் கோர்ட்டுக்கு சென்றது... இதன் காரணமாக ஆணையரின் அதிகாரத்தையே கேள்விக்கு உட்படுத்தியதும் தவறு என்று குற்றம்சாட்டி இருந்தார்கள்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 2

இம்முறை அசின்பானு சென்னைக்கு அலைய வேண்டிய சிரமம் ஏதும் இருக்கவில்லை. தென்மாவட்ட மக்களுக்காக (25 வருட முயற்சியினால் - 24/7/2004 அன்று) உயர் நீதிமன்றத்தின்  மதுரைக் கிளை திறக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம், மாநகராட்சி ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சி சார் பில் ஆஜரான வழக்கறிஞரால் சரியான சமாதானம் அளிக்க முடியவில்லை.

'அசின்பானுவின் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை என்பது - இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் உரிமையை பறிப்பதற்கு ஒப்பானது. தனது உரிமையை நிலைநாட்ட எந்த உள்ளாட்சி ஊழியரும் நீதிமன்றம் செல்லலாம். அதற்கு அவர் யாரிடமும் முன் அனுமதி பெறத் தேவையில்லை. அப்படி நீதிமன்றத்துக்கு செல்லும் ஊழியரை அச்சுறுத்தும்விதமாக மாநகராட்சி எடுத்துள்ள நடவடிக்கை, நீதி பெறுவதை தடுக்கும் போக்கு ஆகும். நீதிமன்றத்தை அவமதித்ததாக ஆணையருக்கு தண்டனை வழங்க (கோர்ட் அவமதிப்பு) சட்டத்தில் (Contempt of courts act, 1971)  இடமுண்டு' என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநகராட்சி ஆணையர் மீது தனிப்பட்ட அவமதிப்பு நடவடிக்கை தவிர்க்கப்பட்டாலும், ஒரு கடைநிலை ஊழியருக்கு அநாவசியமாக மிரட்டல் விடுத்தது... மீண்டும் நீதிமன்றத்தை நாட நிர்ப்பந்தித்து பொருள் விரயம் செய்யத் தூண்டியது ஆகியவற்றுக்காக ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

சட்டத்தால் யுத்தம் செய்! - 2

வழக்கமாக உயர் அதிகாரிகள் மீது அபராதம் விதித்தால், அதை அவர்கள் கட்டத் தயங்குவர். மனு போட்டவரையே மறுபடியும் மிரட்டத் துவங்குவர். அதனால் மனு மீது இறுதித் தீர்ப்பு வழங்கிய பிறகும், அபராதத் தொகை செலுத்தினார்களா என்று கண்டுபிடிக்க மூன்று வாரங்களுக்கு பிறகு மீண்டும் அவ்வழக்கு பட்டியலிடப்பட்டது. 'மாநகராட்சி, அபராதத் தொகையை கொடுக்க முற்பட்டாலும்... அசின்பானு அதை வாங்க மறுத்துவிட்டார்!’ என்று மாநகராட்சி வழக்கறிஞர் கூறினார். அசின்பானுவுக்கான காசோலையையும் அவர் கோர்ட்டில் சமர்ப்பித்தார். கோர்ட் மீண்டும் அசின்பானுவை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. குழந்தைகளுடன் நேரில் ஆஜரான அசின்பானுவின் முகத்தில் அச்சரேகைகள். அபராதத் தொகையை வாங்கினால், மறுபடியும் தனக்கு பிரச்னைகள் வரும் என்று அவர் பயந்தார்.

''இந்த அபராதத் தொகை, வழக்கில் வெற்றி பெற்றவருக்கு கொடுக்கப்படும் நஷ்டஈடு. அப்படி அபராதம் விதித்தால்தான் அதிகாரிகளுக்கு இது புரியும். குடிமக்களுக்கு, அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகள் தெரியவரும்'' என்று அசின்பானுவுக்கு எடுத்து சொன்ன கோர்ட்,

''வரவிருக்கும் ரம்ஜான் பண்டிகைக்கு உங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பும் வாங்க இந்தப் பணம் உதவியாக இருக்கும்!'' என்றும் சொன்னதை அடுத்து, அந்தக் காசோலையை அவர் பெற்றுக்கொண்டார்.

உயர் நீதிமன்றத்தின் கொத்தளத்தின் மீது பறந்து கொண்டிருந்த மூவர்ண தேசியக் கொடி இன்னும் கம்பீரமாக காற்றில் அசைந்தது!

- தொடர்வோம்...

படங்கள்: எம்.உசேன், பா.காளிமுத்து

அசின்பானு என்ன சொல்கிறார்?!

''சட்டமும், நீதியும் இல்லைனா, இன்னிக்கு நான் உயிரோடு இருக்கறதே சந்தேகம்தான்'' என்று இப்போதுகூட அந்த நேரத்து அதிர்ச்சியை வார்த்தைகளில் கோக்கிறார் அசின்பானு.

'நான் கேஸ் போட்டதால ஆத்திரமடைஞ்ச அதிகாரிங்க, என்னை வேலையில இருந்து 6 மாசம் சஸ்பெண்ட் செய்தாங்க. ஏற்கெனவே சம்பளம் குறைவு. சஸ்பெண்ட் காரணமா பாதிச் சம்பளம்கூட கிடைக்காததால தவிச்சுப் போனேன். பிரசவத்துக்கு வந்திருந்த பச்சை உடம்புக்காரியான என் பொண்ணுக்கு சத்தான சாப்பாடுகூட கொடுக்க முடியல. அந்தக் காலகட்டத்துல நான் பட்ட கஷ்டங்களை வெறும் வார்த்தைகள்ளால சொல்ல முடியாது. அனுபவிச்சாதான் அந்த வலி புரியும்.

சஸ்பெண்டுக்கு காரணமா 10 குற்றச்சாட்டுக்களை சொல்லியிருந்தாங்க. அதில் முதல் குற்றச்சாட்டு, 'மாநகராட்சிக்கு எதிராக வழக்குப் போட்டது தவறு’ என்பதுதான். இதுதொடர்பா மீண்டும் வழக்குத் தொடர்ந்தேன். என் மீது எடுக்கப்பட்ட சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு கோர்ட் தடை விதிச்சதால, மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப் பட்டேன்.

ஆனா, மாநகராட்சிக்கு எதிரா வழக்குத் தொடர்ந்தவனு கடுமையா பழி வாங்கினாங்க. மாநகராட்சியின் கடைநிலை ஊழியரா இருந்த என்னை, மாநகராட்சி எல்லைக்கு வெளியே இருக்கும் குப்பை கொட்டும் இடத்துக்கு மாத்தினாங்க. அங்க வந்து குப்பை கொட்டிச் செல்லும் லாரிகளை பரிசோதிச்சு, முத்திரை வைக்க வேண்டிய வேலை அது. பெண்களே வேலை பார்க்காத இடம் மட்டுமல்ல, அந்த ஏரியால பெண்கள் நடமாட்டமே இருக்காது. மாநகராட்சி சாக்கடை சுத்திகரிப்பு நிலையமும் பக்கத்துலேயே இருந்ததால, என் உடல் நிலை மோசமாச்சு. 'தயவுசெய்து என்னை மாநகராட்சி அலுவலகத்துக்கே மாத்திடுங்க’னு கெஞ்சினேன். இரக்கமே இல்லாம கோச்சடைக்கும் புதூருக்கும் மாத்தினாங்க. 3 வருஷம் இந்தக் கொடுமைகளை சகிச்சுக்கிட்ட நான், ஒரு கட்டத்தில் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை நாடினேன்.

வழக்கறிஞர் சுவாமிநாதன் மூலமா நான் தாக்கல் செய்த அந்த வழக்கை விசாரித்தவர் நீதியரசர் சந்துரு அய்யா. அலுவலகத்திலேயே பணி கொடுக்குமாறு அவர் உத்தரவிட்டதோடு, எனக்கு கடும் மனஉளைச்சலை கொடுத்த மாநகராட்சி கமிஷனருக்கு 5 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். அந்த அபராதத் தொகையை எனக்கு இழப்பீடா வழங்கவும் உத்தரவிட்டிருந்தார். அந்த பணத்தை வாங்கினா மறுபடியும் பழி வாங்குவாங்களோனு பயந்துதான் பணமே வேண்டாம்னு நீதிபதிக்குக் கடிதம் எழுதினேன். உடனே நீதிபதி அய்யா, வழக்கறிஞர் மூலமா என்னை வரவழைச்சு விஷயத்தைப் புரிய வெச்சார். 'இப்படி உத்தரவிட்டாதான் உங்களைப் போல வேறு எந்தப் பெண்ணும் நாளைக்கு பாதிக்கப்படாம இருப்பாங்க’னு சொன்னார்.

அதிலிருந்து இன்று வரை எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. என் வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைச்சதும், சட்டத்தின் மீது என் குடும்பத்துக்கு பெரிய நம்பிக்கை வந்துடுச்சு. பி.எஸ்சி படிச்சிருந்த என் மகள்... திருமணம், குழந்தை என்றான பிறகும்கூட சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்து படிச்சு முடிச்சுட்டா. அதுக்கு காரணமே... என் வழக்குல கிடைச்ச நியாயத் தீர்ப்புதான்! இப்போ அவள் வழக்கறிஞர் மட்டுமல்ல, குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அரசு அதிகாரியாவும் இருக்கா!'' என்று கண்களில் பெருமை தேக்கியபடி சொன்னார் அசின்பானு!

- கே.கே.மகேஷ்