Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 3

நீதிபதி கே.சந்துரு அவேர்னஸ்

இந்தத் தொடர்... உங்களின் நம்பிக்கை சுடர்...

##~##

'காதலுக்குக் கண்ணில்லை’ என்பார்கள். ஆனால், உண்மையில் காவல்துறையில் இருக்கிற சிலருக்குத்தான் கண்ணும் இருப்பதில்லை, கண்ணியமும் இருப்பதில்லை பல சமயங்களில்!

'சென்னை, மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளிடம் போலீஸ் அத்துமீறல், பணம் பறிப்பு’ என்று வரும் செய்திகள் ஒருபுறம்... பொது இடங்கள் மற்றும் பூங்காக்களுக்கு வரும் காதலர்களிடம் கடுமை காட்டும் காவலர்கள், பல சமயம் கலாசார காவலர்களாக மாறிவிட்டார்கள் என்று வரும் தகவல்கள் இன்னொருபுறம்.

ஓரிரு மாதங்களுக்கு முன், மெரினா கடற்கரையில், ஒரு போலீஸ்காரர், கலாசாரம் காக்கும் காவலனாக மாறி, தன் அதிகாரத்தை கொஞ்சம் பலத்துடன் காட்டியதால் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள், வழக்கறி ஞர்கள் என்பதால், இந்த நடவடிக்கை சாத்தியமானது. இதுவே சாமான்யர்களாக இருந்திருந்தால்..?

சட்டத்தால் யுத்தம் செய்! - 3

காவலர்கள் பொது இடங்களில் 'கலாசார காவலர்’களாக வலம் வருவதோடு, தனி அறைக்குள் இருந்த திருமணமான தம்பதியை விபசாரத் தடை சட்டத்தில் கைது செய்து... அந்தத் தம்பதிகள் பார்த்து வந்த அரசாங்க வேலைகளுக்கும் வேட்டு வைக்க முயன்ற கதைதான்  உமாதேவி - கிருஷ்ணன் தம்பதியின் சோகக் கதை.

உமாதேவி, தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியத்தில் அங்கன்வாடி ஊழியர். சம்பவம் நடந்தபோது அவருக்கு வயது 35. ஓரளவு வசதியுள்ள குடும்பத்தில் பிறந்திருந்தாலும்... ஏனோ அதுவரையில் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதேபகுதியில் உள்ள துவக்கப்பள்ளி தலைமைஆசிரியர் 51 வயது கிருஷ்ணன். தன்னுடைய 45-வது வயதில் மனைவியை இழந்தவர். மகன் வெளிநாட்டில் இருந்தார். மகள் திருமணமாகி கணவர் வீட்டுக்குப் போய்விட்டார். ஒண்டிக்கட்டையாக தடுமாறிக் கொண்டிருந்த கிருஷ்ணன் மீது பரிவு கொண்ட உமாதேவி, அவரை மணம் முடிக்க நினைத்தார். 2006-ம் ஆண்டு மே மாதத்தில் தன் உறவினர்கள் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். அதே ஆண்டின் ஜூலை மாதம், திருவையாறு நகரிலிருக்கும் பதிவாளர் அலுவலகத்தில் திருமணப் பதிவும் செய்யப்பட்டது.

பிறகு ஒரு நாள் கும்பகோணம், சுவாமிமலை, தஞ்சாவூர் என்று பல கோயில்களுக்கு இந்தத் தம்பதி பயணம் மேற்கொண்டபோதுதான், கனவிலும் நினைத்துப் பார்த்திராத அந்த அதிர்ச்சி, காவல்துறை வாயிலாக அவர்களைத் தாக்கியது. தரிசனத்துக்கு இடையே ஓய்வெடுப்பதற்காக தஞ்சாவூரில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் தங்கினர். அங்கே எடுபிடி வேலை செய்யும் ஒருவன், காவல்துறைக்கு ஆள்காட்டியாகவும் வேலை பார்த்து வந்திருக்கிறான். அவன் கொடுத்த தகவலின் பேரில்... தஞ்சாவூர், அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வசந்தா, விபசார ஒழிப்பு படையுடன் பறந்து சென்று உமாதேவி - கிருஷ்ணன் தம்பதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிமன்ற நடுவரும், 'என் கடன் ரிமாண்ட் செய்து கிடப்பதே' என்கிற நோக்கில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

உமாதேவிக்கு, திருச்சி பெண்கள் சிறையில் 7 நாட்கள் சிறைவாசம். கிருஷ்ணனுக்கு தஞ்சாவூர் சப்-ஜெயிலில் 5 நாட்கள் சிறைவாசம். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதற்கிடையே... அத்தம்பதியின் படங்கள், 'விபசாரக் குற்றத்தில் கைதானவர்கள்' என்று கடமை தவறாத போலீஸாரின் புண்ணியத்தில் பத்திரிகைகளில் வெளியானது. அந்தத் தம்பதி வேலை பார்க்கும் துறைகளின் அதிகாரிகளுக்கும், தகவல் தந்து தனது கடமையை செய்வனே செய்தது காவல்துறை. இதன் அடிப்படை யில், இருவருமே தத்தமது துறை அதிகாரிகளால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். வேலை பார்க்கும் இடம் துவங்கி, வீடு, குடும்பம், ஊர்... என்று எல்லா இடங்களிலும் தம்பதிக்கு பெருத்த அவமானம்!

சட்டத்தால் யுத்தம் செய்! - 3

அடுத்தடுத்து அசிங்கப்படுத்தப்பட்டாலும்... உமாதேவி சளைக்கவில்லை. தான் குற்றமற்றவள் என்பதை ஊருக்கும், உலகுக்கும் நிரூபிக்க நினைத்தவர்... உயர் நீதிமன்றத்தை (மதுரை கிளை) நாடினார். இதையடுத்து, இருவரின் பணியிடை நீக்க உத்தரவுகளுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. வழக்கு குறித்து வாதத்தை எடுத்துவைக்க அரசுக்கும்... ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு காவல்துறைக்கும் தாக்கீதுகள் அனுப்பப்பட்டன. தங்களுடைய பதில் மனுவில், தஞ்சாவூர் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ப்பு திட்ட அலுவலர் கூறியிருந்த வாதம், அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. 'உமாதேவி திருமணம் ஆகாதவர், அவர் வேறு ஓர் ஆணுடன் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் என்பதால், விபசார தடைச் சட்டத்தில் சிறை வைக்கப்பட்டவர். அதனால்தான் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்' என்று தன்னுடைய நட வடிக்கையை நியாயப்படுத்த முயற்சித்திருந்தார்.

'அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம், உயர் அதிகாரிகளுக்கு இருந்தாலும் இயந்திரத்தனமாக பயன்படுத்தக் கூடாது' என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தனது தீர்ப்புகளில் அடிக்கோடிட்டுச் சொல்லியிருக்கிறது. ஆனால், அதை மதிப்பவர்கள்தான் குறைவாக இருக்கிறார்கள்.

கணவன் - மனைவியை விபசாரத் தடுப்பு சட்டத்தில் கைது செய்த காவல்துறைக்கு கடும்கண்டனங்களை தெரிவித்த உயர் நீதிமன்றம், பணியிடை நீக்கம் செய்த அரசு உயர் அதிகாரிகள் இருவரையும் கண்டித்தது. தம்பதியை முழுச்சம்பளத்துடன் மீண்டும் வேலையில் அமர்த்தவும் உத்தரவிட்டது. உமாதேவிக்கும், அவருடைய கணவருக்கும் சமூகத்தில் ஏற்பட்ட களங்கத்தை வேறு எவ்வழியிலும் துடைக்க முடியாமைக்கு உயர் நீதிமன்றம் தனது வருத்தத்தையும் பதிவு செய்தது.

இந்த நவீன 'கற்புக்காவலர்'களின் அதீத கடமையுணர்வை எதிர்த்துப் போராடி வென்ற உமாதேவியின் துணிச்சல்... நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதானே!

- தொடர்வோம்...

படங்கள்: எம்.உசேன், ஆர்.அருண்பாண்டியன்

 ''நிச்சயம் ஜெயிக்கலாம்!''

ஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை, ராஜபாளையம் தெருவில் உள்ள வீட்டில் தங்களின் ஐந்து வயது மகன் புகழரசுவோடு மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறனர் உமாதேவி - கிருஷ்ணன் தம்பதி.

''நீதிபதி சந்துரு சாரோட தீர்ப்புனாலதான் இன்னிக்கு தலைநிமிர்ந்து வாழ்றோம்!'' என நெகிழ்ந்த உமாதேவி, கடந்தகால நினைவுகளுக்குள் சென்றார்.

''அந்த நாளை இப்ப நெனச்சாலும் மனசெல்லாம் கொந்தளிக்குது. விபசார வழக்குல எங்களை கைது செய்த போலீஸ், எங்களை எதுவுமே பேச விடாததோட, செல்போனையும் வாங்கி வெச்சுக்கிட்டாங்க. மறுநாள் எல்லா பத்திரிகைகள்லயும் போட்டோவோட செய்தி வந்து, அவமானத்தால நிலைகுலைஞ்சு போனோம். 'இனி எப்படி வெளியில தலைகாட்டப் போறோம்'னு சுக்குநூறா மனசு உடைஞ்சுடுச்சு. ஜாமீன்ல வெளியில வந்த நாங்க... 'தற்கொலை பண்ணிக்கலாமா'னுகூட யோசிச்சோம். 'அப்படி செஞ்சா, நம்ம மேல உள்ள கறையைத் துடைக்க முடியாமலே போயிடும்... சட்டரீதியா போராடி, வாழ்ந்து காட்டினாதான், கௌரவத்தை மீட்டெடுக்க முடியும்'னு முடிவெடுத்தோம்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 3

நீதிபதி சந்துரு சாரோட தீர்ப்பு வெளியாகி, அது பத்திரிகைகள்ல வந்த அன்னிக்கு எங்களுக்கு ஏகப்பட்ட வாழ்த்துக்கள்... பாராட்டுக்கள். 'உறுதியா இருந்து சாதிச்சுக் காட்டிட்டீங்க'னு நண்பர்கள், சொந்தக்காரங்க எல்லாரும் சொன்னாங்க. எங்களை விட்டு தள்ளிப் போயிருந்தவங்க எல்லாம்கூட, மறுடியும் இணக்கமானாங்க. தீர்ப்புக்கு பிறகுதான் கல்யாணம், காதுகுத்து, கிரகப்பிரவேசம்னு நாலு விசேஷங்களுக்கு போகவே ஆரம்பிச்சோம். வழக்கு நடந்துக்கிட்டு இருந்ததால நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாதி சம்பளம், இன்கிரிமென்ட் எல்லாமே, மறுபடியும் கிடைச்சுடுச்சு!'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்ன உமாதேவி,

''வீண் பழி சுமத்தப்பட்டவங்க, தைரியத்தோட சட்டத்தை துணையா சேர்த்துக்கிட்டா... நிச்சயம் ஜெயிக்கலாம்கறதுக்கு நாங்களே சிறந்த எடுத்துக்காட்டு'' என்றார் பெருமையுடன்.

- கு.ராமகிருஷ்ணன்