நீதிபதி கே.சந்துரு

##~## |
இந்தத் தொடர்... உங்களின் நம்பிக்கை சுடர்...
''சாமிகளில் ஆண் சாமி, பெண் சாமி என்று இருக்கிறது. ஆனால், சாமிக்கு ஆண் பூசாரிகள் மட்டும்தான் பூசைபோட வேண்டுமா?''
- பூசைபோடும் உரிமையைத் தனக்கு மறுத்த உற்றார், ஊர் மக்கள் மற்றும் சமூகத்தின் முன்பாக இப்படியரு கேள்வியை வைத்து போராடிய ஒரு பெண் பூசாரியின் கதையைப் பார்ப்போமா!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலூகாவில் உள்ள குக்கிராமம் நல்லுதேவன்பட்டி. அங்கே இருக்கும் துர்க்கை அம்மன் கோயிலின் பூசாரி பின்ன தேவர். தொடர்ந்து தங்கள் குடும்ப பொறுப்பில் இருக்கும் அந்தக் கோயிலில் பூசை செய்து வந்த பின்ன தேவர், 2004-ம் ஆண்டில் நோயால் பாதிக்கப்படவே, 'இனிமே சாமிக்கு நீதான் தினமும் பூசை போடணும்’ என்று தன் ஒரே மகளான பின்னையக்காளிடம் சொன்னார். சிறுவயதிலிருந்தே அப்பாவோடு பூசைபோடச் சென்றதால், எல்லாச் சடங்குகளையும் கற்றிருந்தார் பின்னையக்காள். 2006-ம் வருடம் நவம்பர் மாதம் பின்ன தேவர் காலமாக... அதன் பிறகுதான் பிரச்னை ஆரம்பமானது.
பின்ன தேவரின் சகோதரர் குருநாதனின் மகன்கள், 'பூசாரி ஆணாத்தான் இருக்கணும்’ என்றதோடு, தங்களின் குடும்பத்துக்கும் அந்தக் கோயிலுக்கு பூசாரி ஆக உரிமை இருப்பதால், ஆண் வாரிசுகளாகிய தாங்கள் மட்டுமே பூசை செய்யலாம், பின்ன தேவருக்கு ஆண் வாரிசு இல்லாததால் அந்த உரிமை தங்களுக்கே சேர வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார். உசிலம்பட்டி முன்சீப் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார் பின்னையக்காள்.

சிவில் வழக்கு நடைமுறையில் இருக்கும்போதே... 'ஒரு பொம்பள எப்படி பூசாரியா இருக்கலாம்?’ என்று பங்காளிகள் கிளப்பிய பிரச்னையால்... ஊரே இரண்டுபட்டது. உசிலம்பட்டி தாசில்தார் தலையிடும் அளவுக்கு பிரச்னை பெரிதானது. 2007-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கூட்டம் நடத்திய ஊர் நாட்டாமைகள், '89 சதவிகிதம் ஊர் மக்கள் பின்னையக்காளின் சித்தப்பா மகனை பூசாரியாக இருக்க அங்கீகரித்துள்ளனர். வருகபட்டி, நல்லுதேவன்பட்டி, போத்தாம்பாடி ஆகிய மூன்று ஊராட்சிகளில் உள்ள புத்தூர்நாலுக்கரை வகையறாக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முடிவு இது' என்று தாசில்தாரிடம் தெரிவித்தனர்.
ஊரில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டால், அதில் தலையிடும் உரிமை வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Criminal Procedure Code) தாசில்தார், ஆர்.டி.ஓ, மாவட்ட ஆட்சியாளர் ஆகிய அதிகாரிகள், குற்றவியல் செயல் நடுவர்களாக (Executive Magistrate) அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தீர்ப்பு சொல்லும் அதிகாரம் அவர்களுக்குக் கிடையாது. ஊர் அமைதியை நிலைநாட்டும் அவர்கள், பிரச்னையை எழுப்பும் நபரிடமோ அல்லது அக்குழுவினரிடமோ சிவில் நீதிமன்றங்களுக்குச் சென்று தீர்வு காண அறிவுறுத்த வேண்டும்.
நல்லுதேவன்பட்டிக்கு அமைதியை நிலைநாட்டப்போன உசிலம்பட்டி தாசில்தாரே ஒரு பெண். ஆனாலும், விசித்திரமான ஒரு காரியத்தைச் செய்தார் அவர். ஊர் நாட்டாமைகள் கொடுத்த முடிவை அங்கீகரித்து, பின்னையக்காளிடமிருந்து சாமிக்கு பூசைபோடும் உரிமையை பறித்து, அவரின் ஒன்றுவிட்ட சகோதரரிடம் ஒப்படைத்தார். கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்த பின்னை யக்காள், தாசில்தாரின் பாரபட்சமான உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
அதை விசாரித்த நீதிமன்றம், தாசில்தாரின் நடவடிக்கையில் பல தவறுகளைச் சுட்டிக்காட்டியது. ''குற்றவியல் செயல்நடுவர் தனது அதிகாரத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை. பிரச்னை செய்த சித்தப்பா மகன்களை சிவில் நீதிமன்றத்துக்குச் சென்று தங்களின் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள உத்தரவிட்டு, பின்னையக்காள் ஏற்கெனவே அனுபவித்த பூசாரி உரிமையைத் தொடர அனுமதித்திருக்க வேண்டும். அதையும் மீறி யாராவது கலகம் விளைவித்தால், அவர்களை கைது செய்ய மட்டுமே உத்தரவிட்டிருக்க வேண்டும்'' என்றும் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.
எதிர்மனு தாக்கல் செய்த பெண் தாசில்தார், 'பெண்ணான பின்னையக்காள் பூசாரியாக இருக்க முடியாது' என்று குறிப்பிட்டிருந்ததுதான் வேடிக்கை! ஆகவே, ஒரு பெண் பூசாரியாக இருக்க முடியுமா என்ற கேள்விக்கும் உயர் நீதிமன்றம் பதிலளித்தது. ''கோயிலில் உள்ள 'அம்மன்’ ஒரு பெண் தெய்வம். பெண் தெய்வத்துக்கு, பெண் பூசை செய்ய முடியாது என்று எந்த சாஸ்திரத்திலும் கூறப்படவில்லை. வேதகாலத்திலும், வேதங்களைக் கற்று வேத விற்பன்னர்களாக பெண்கள் இருந்துள்ளனர். முற்காலத்தில் பெண்கள் பூஜை செய்யும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். பெண்களை வீட்டினுள் பூட்டி அவர்களது உரிமையை மறுப்பது விசித்திரம்'' என்று சாடிய நீதிமன்றம்,
''நாட்டின் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டுமானால்... இரண்டு கால்களாலும் (ஆண் பெண்) நடக்க வேண்டுமென்றும், கடவுளின் இருப்பிடங்களை பாலியல் பாகுபாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும்'' என்றும் வலியுறுத்தியது.
அரசியல் சட்டத்தில், பெண்கள் மீது விதிக்கப்படும் பாகுபாட்டை தடைசெய்யும் 15-ம் பிரிவை சுட்டிக்காட்டியதோடு, அரசியல் சட்டத்தில் 51 ஏ பிரிவில் உள்ள (ஈ) என்கிற உட்பிரிவை அடிக்கோடிட்டும் நினைவுபடுத்தியது நீதிமன்றம். அந்த பிரிவின்படி பெண்களுக்கெதிரான எந்தவித மடமைத்தனத்தையும் புறக்கணிப்பது அடிப்படை கடமையாக்கப்பட்டுள்ளது!
தாசில்தாரின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. பெரும் படையினருடன் சென்ற காவல்துறை அதிகாரிகள், துர்க்கையம்மன் கோயில் சாவியை பின்னையக்காளிடம் ஒப்படைத்தனர்.

'பெண் பூசாரிக்கு தடையில்லை' என்கிற செய்தி... தேசிய செய்தியானது. அன்றைய முதல்வர் சட்டப்பேரவையில், ''சமூக சீர்திருத்த அடிப்படையில் அளித்த முற்போக்கான தீர்ப்பு. இதை அரசு வரவேற்கிறது'' என்று அறிவித்தார். ஆணாதிக்க நடவடிக்கையை தைரியமாக எதிர்கொண்ட பின்னையக்காள், அவ்வழக்குக்குப் பிறகு அகில இந்தியாவும் மெச்சும் ஒரு நபரானார்.
ஆனால், அதற்குப் பிறகும் நடந்ததுதான் சோகக்கதை. தான் தொடர்ந்த சிவில் வழக்கிலும், உசிலம்பட்டி நீதிமன்றத்தில் பின்னையக்காள் வெற்றிபெற்று தனது உரிமையை நிலைநாட்டினாலும், விடாக்கண்டர்களாகிய அவருடைய பங்காளிகள், அவ்வழக்குக்கு எதிராக மேல் முறையீடு தாக்கல் செய்து, அவரை அம்மனுக்கு பூஜை செய்யவிடாமல் இன்று வரை தடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகமோ கவலையின்றி ஆழ்ந்த நித்திரையிலிருக்கிறது!
தொடர்வோம்...
படங்கள்: எம்.உசேன், பா.காளிமுத்து
''ஆத்தா சொன்ன தீர்ப்பு!''
திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும் இருக்கும் பின்னையக்காள், தற்போதும் நல்லுதேவன்பட்டியில் வசித்து வருகிறார். அவரைச் சந்தித்தபோது... ''அந்தக் கோயில் எங்களோட தனிப்பட்ட சொத்து. அதனாலதான், ஆத்தா அனு மதியோட கோர்ட்டுக்குப் போனேன். நீதிபதி சந்துரு அய்யாகிட்ட இந்த வழக்கு வந்தப்போ, உலகப் பெண்கள் எல்லாரும் பாராட்டுற மாதிரி அந்தத் தீர்ப்பைச் சொன்னாரு. 'அம்மன் கோயில்ல பெண்கள் பூசை செய்யக்கூடாதுனு சொல்றது விநோதமா இருக்குது. கடவுளுக்கு முன்ன ஆண், பெண் வேறுபாடு பார்க்கக் கூடாது'னு சொன்னாரு. அந்த ஆத்தாவே நேர்ல வந்து தீர்ப்பு சொன்ன மாதிரி இருந்துச்சி!
தீர்ப்புக்குப் பிறகு, நான் பூசை வைக்க ஆரம்பிச்சேன். கீழ்கோர்ட்டுலேயும் சாதகமாவே தீர்ப்பு வந்துச்சு. ஆனா, மறுபடியும் அவங்க தரப்புல மேல்முறையீடு பண்ணியிருக்காங்க. தீர்ப்பு வர்ற வரைக்கும் பழைய உத்தரவைத்தான் அமல்படுத்தணும். ஆனா... என்னைய கோயிலுக்குப் போகவிடாம தடுத்துட்டாங்க. அதிகாரிங்களும் அவங்க பக்கமே நிக்கறாங்க. மறுபடியும் நியாயம் ஜெயிக்கட்டும்னு காத்துட்டு இருக்கேன்!'' என்று வருத்தம் பொங்கச் சொன்னார்!
- கே.கே.மகேஷ்