மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா

கேபிள் கலாட்டா

##~##
கேபிள் கலாட்டா

யுவராணி, மாமியாரா புரமோஷன் வாங்கிட்டாங்க! 'ஜீ தமிழ்’ல புதிதா ஒளிபரப்பாகிற 'மாமியார் தேவை’ தொடர்ல, மாமியார் 'துர்கா'வா வர்ற யுவராணிக்கு, ''சந்திக்கலாமா?’'னு ஒரு குறுஞ்செய்தியைத் தட்டிவிட்டேன். சென்னை, சாலிகிராமத்தில் உள்ள தன் வீட்டில் இந்த ரீட்டாவை வரவேற்றாங்க யுவராணி.

கேபிள் கலாட்டா

''22 வருஷமா பெரியதிரை, சின்னத்திரைனு சுழன்றுகிட்டே இருக்கேன். 'சித்தி’ மெகா தொடர் 'பிரபாவதி’ கதா பாத்திரம், இப்பவும்  ரசிகர்கள் மனசுல என்னை வெச்சுருக்கு. அதுக்கு நேர் எதிரான நல்லவ, 'துர்கா’. ஆரம்பத்தில் மாமியாரா நடிக்கணுமானு தோணுச்சுதான். ஆனா, கதையைக் கேட்டதுக்கு அப்புறம் நிச்சயமா விடக்கூடாதுனு தலையாட்டிட்டேன். தற்போதைய சூழல்ல ஒரு பெண் தனியே எதிர் கொள்ள வேண்டிய பிரச்னைகளை அலசி தீர்வு சொல்லும் கதாபாத்திரம்''னு சொன்னவங்க,

''இந்த யுவராணியை சீக்கிரமே மறுபடியும் பரபரப்பான வில்லியா பார்க்கப்போற ரீட்டா. ஜெயா டி.வி-யில விரைவில் ஒளிபரப்பாகப் போகிற 'தாய் வீடு’ தொடர்ல, எல்லாரும் திட்டித் தீர்க்கிற எதிர்மறையான கதாபாத்திரம்!''னு சிரிச்சவங்ககிட்ட, குடும்பம் பற்றிக் கேட்டேன்.

''கணவர் ரவீந்திரா, ஸ்பா அண்ட் பியூட்டி பார்லர் துறையில இருக்காங்க. ரெண்டு பசங்க. பெரியவன் விஷ்ணு, சின்னவன் நித்யன். நானும் என் மாமியாரும் பசங்களை கவனிச்சுக்குவோம். ஷூட் இருந்தா பாட்டி பசங்க, ஷூட் இல்லைனா அம்மா பசங்க!''

- அன்றும் இன்றும் மாறாத அதே அசல் புன்னகையோட விடை கொடுத்தாங்க யுவ ராணி!

மாமியார் வாழ்க!

தித்யா சேனல்ல 'ஜோக் கடி’ காமெடி நிகழ்ச்சியை தொகுத்தளிக்கிற 'வடிவேல்' பாலாஜியை, ''வாங்க சின்னத்திரை வடிவேலு!''னு வாழ்த்தி கை கொடுத்தா, மனுஷன் குஷியாயிட்டார்!

''மேடை நாடகங்கள்தான் ரீட்டா என்னோட மீடியா என்ட்ரிக்கு காரணம். அப்போ வடிவேல் சாரோட 'எட்டணா இருந்தா எட்டூரு எம்பாட்ட கேட்கும்’ பாட்டைத்தான் எல்லா நாடகங்களிலும் போட்டு நடிப்பேன். அதுல இருந்துதான் ரீட்டா இந்த பாலாஜிக்கு வடிவேல் சார் நடிப்பு சாயல் கொஞ்சம் கொஞ்சமா ஒட்டிக்கிச்சு. மதுரை தமிழ் பிச்சு உதறுறேன்னு எல்லாரும் சொல்வாங்க. ஒரு உண்மை சொல்லட்டுமா..? நான் அக்மார்க் சென்னைப் பையன். பக்கத்து வீட்டுல இருந்த மதுரைக்காரப் பாட்டிகிட்ட கத்துக்கிட்டது இந்த வைகைத் தமிழ்!''னு சிரிச்சவர்,

கேபிள் கலாட்டா

''விஜய் டி.வியில 'கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிதான் என்னோட சின்னத்திரை வாழ்க்கையோட துவக்கம். ஆதித்யா சேனல் 'இதுதான்டா சிரிப்பு’ நிகழ்ச்சி மூலம் சன் நெட்வொர்க் ஏரியாவுக்கு வந்தேன். என்னோட இந்த வளர்ச்சிக்கு மேடை நாடக நாட்களில் இருந்து என்கூட இருக்கும் நண்பர்கள் தனசேகர், நாகராஜ், லாரன்ஸும் கார ணம்!''னு நெகிழ்ந்தார் பாலாஜி!

நட்புக்கு மரியாதை!

படம்: ப.சரவணகுமார்

வாசகிகள் விமர்சனம்                                             ஒவ்வொன்றுக்கும் பரிசு:

கேபிள் கலாட்டா

150

அற்புதமான அக்கறை!

''சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'தென்றல்' தொடரில் வரும் துளசி கதாபாத்திரம், வயதுக்கு வந்துவிட்ட தோழியின் தங்கைக்கு சொல்லும் அறிவுரைகள்... அற்புதம்! 'இது கவலைக்குரிய விஷயமல்ல... பெண்களுக்கு இறைவன் ஏற்படுத்தும் சிறந்த உடற்கூறு சம்பந்தப்பட்ட இயற்கை நிகழ்வு. இதில் வெட்கப்படவோ, வேதனைப்படவோ ஏதுமில்லை. ஆனால், ஜாக்கிரதை உணர்வு ரொம்ப முக்கியம். நல்ல - கெட்ட தொடுதல்களை இனம்காண பழகிக்கொள். எப்போதும் போல் சாதாரணமாக இரு’ என்று துளசியின் மூலமாக, இளம்பெண்களுக்கு சொல்ல வேண்டிய விஷயத்தை மீடியாக்கள் சொல்வது... ஆரோக்கியமான சமூக அக்கறைக்கு சிறந்த எடுத்துக்காட்டு'' என்று பாராட்டுகளைத் தெரிவிக்கிறார் ஹைதராபாத்தில் இருந்து பி.ப.கமலாசுந்தர்.

ஒரு கோடி பரிசு!

ஏசியாநெட் மலையாள தொலைக்காட்சியில், 'நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரன்' நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதில், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சகோதரி சனூஜ் ஒரு கோடி ரூபாய் பரிசை அள்ளிச் சென்றார். கட்டட தொழிலாளியின் மனைவியும் இரு குழந்தைகளுக்கு தாயுமான சனூஜ், நிதானமாக நம்பிக்கையுடன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் பதில் சொல்லி பரிசு பெற்றது... பிரமிக்க வைத்தது. சனூஜை கேரள முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், முன்னணி நடிகர்கள் என பலரும் பாராட்டினர். அவரை எத்தனை பாராட்டினாலும் தகும்'' என்று புளகாங்கிதம் அடைகிறார் திருநெல்வேலியில் இருந்து வேலா தமிழ்மணி.

தமிழின் பக்கம் திருப்புகிறது!

விஜய் டி.வி-யில் ஞாயிறுதோறும் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ஆங்கிலம் வெகுவாக நம்முள் புகுந்தபின், தமிழ் என்பதை மறந்து கொண்டிருக்கும் நிலையில் பள்ளிக் குழந்தைகளை தமிழின் பக்கம் திரும்பச் செய்திருக்கிறது இந்நிகழ்ச்சி. பார்ப்பவர்கள் அனைவரையும் புதிய வார்த்தைகளை கற்றுக்கொள்ளத் தூண்டும் விதத்தில் உள்ளது. பெற்றோர் அவசியம் தங்கள் குழந்தைகளை இந்நிகழ்ச்சியை பார்க்க வைக்க வேண்டும்'' என்று வேண்டுகோள் வைக்கிறார் மடிப்பாக்கத்தில் இருந்து ரஜினி பாலசுப்ரமணியன்.