ஸ்டோன் வொர்க் பிளவுஸ்வசந்தா ராஜகோபாலன் ஃபேஷன்
##~## |
''என்னதான் எம்ப் ராய்டரி, ஆரி வொர்க் என பல வகையான டிசைன்கள் பிளவுஸ்களில் மின்னினாலும், ஸ்டோன் வேலைப்பாடுகள் கொண்ட பிளவுஸ் டிசைன்கள் மீது, பெண்களுக்கு அலாதி விருப்பம். அதிலும் புடவையின் நிறத்துக்கு மேட்சான நிறங்களில் கற்கள் மின்னினால், தனி ஈர்ப்புதான். கூடவே... ஸ்டோன் வொர்க் பிளவுஸில் அழகு, ஆடம்பரம் இரண்டுக்கும் கியாரன்ட்டி!'' என்று அழகாக சொல்லும் 'ஆத்ரேயா பிளவுசஸ்’-ன் உரிமையாளர் வசந்தா ராஜகோபாலன், பிளவுஸில் ஆரி பேஸ்டு ஸ்டோன் வொர்க் செய்வதற்கான வழிமுறைகளை, செய்முறையோடு இங்கே விளக்குகிறார்.
தேவையான பொருட்கள்: பிளெய்ன் பிளவுஸ் துணி (முதலில் பிளவுஸ் துணியை கட் செய்யக் கூடாது. அளவுகளை மட்டுமே வரைந்து கொள்ள வேண்டும்), பச்சை நிறம் மற்றும் சில்க் காட்டன் நூல், வெள்ளை நிற பிளெய்ன் பிக் ஸ்டோன் மற்றும் பச்சை நிற ஸ்டோன் (ஃபேஷன் ஜுவல்லரி ஷாப்களில் கிடைக்கும்), பச்சை நிற திலகம் ஸ்டோன்ஸ், கோல்ட் கலர் ஸ்டோன் அட்டாச்டு செயின், வெள்ளை நிற செயின் ஸ்டோன்ஸ், ஃபேப்ரிக் க்ளூ, டிரேஸ் பேப்பர், டிரேஸ் பவுடர், ஆரி ஒர்க் ஊசி.
செய்முறை (கடந்த இதழில் சொன்னது போல ஒரு கப்பில் தேவையான அளவு டிரேசிங் பவுடரைக் கொட்டி, அதில் மண்ணெண் ணெயை சிறிதளவு ஊற்றி கலக்கி, வெள்ளை நிற நூல் கொண்டு நனைத்து, தயாராக வைத்துக் கொள்ளவும். இது பிளவுஸில் வரையப்படும் டிசைன்களை அச்செடுக்க உதவும்):

படம் 1: பிளவுஸின் பின் பக்க கழுத்துக்கான அளவின்படி கட்டிங் செய்வதற்கான அவுட் லைனை, துணியில் வரைந்து கொண்டு, ஆரி வொர்க் ஊசியினால் பின்பக்க கழுத்துக்கான அவுட் லைனை சில்க் காட்டன் நூல் கொண்டு தைத்துக் கொள்ளவும்.
படம் 2: பிறகு, டிரேஸ் பேப்பரில் பிளவுஸில் பதிக்கும்படியான டிசைன்களை வரைந்து கொள்ளவும். இந்த டிரேஸ் பேப்பரில் வரைந்துள்ள டிசைனை, மண்ணெண்ணெய் கலவையில் நனைத்த நூலை வைத்து பிளவுஸின் மீது தேய்க்கவும்.
படம் 3: பிளவுஸின் டிசைனுக்கு தகுந்தாற்போல் இந்த டிசைன்களை சுற்றியுள்ள பகுதிகளிலும் டிசைன்களை டிரேஸ் செய்யவும்.
படம் 4: இப்போது படத்தில் காட்டியுள்ளது போல், டிரேஸ் எடுத்த அச்சு பிளவுஸில் மிக அழகாக பதிந்திருக்கும்.
படம் 5: ஐந்து நிமிடம் கழித்து, டிரேஸ் மூலமாக பதிவான டிசைனுக்கு நடுவில் வெள்ளை பிக் ஸ்டோனை தைத்துக் கொள்ளவும்.
படம் 6: இந்த வெள்ளை ஸ்டோனை சுற்றி கோல்ட் நிற மணியைக் கோத்துக் தைக்கவும்.

படம் 7: பிறகு, மணியைச் சுற்றி செயின் ஸ்டோனை, கோத்துக் கொள்ளவும். கோல்ட் நிற மணி மற்றும் செயின் ஸ்டோனை இரண்டு சுற்றுகளாக கோத்துக் கொள்ளவும். இதேபோல் நாம் தைக்கும் டிசைனின் அளவைப் பொறுத்து இரண்டுக்கும் மேற்பட்ட சுற்றுகளில் இந்த கோல்ட் நிற மணி மற்றும் செயின் ஸ்டோன்களை கோத்துக் கொள்ளலாம் (செயின் ஸ்டோன்கள், கடைகளில் பலவித நிறங்களில் ரெடிமேடாக கிடைக்கின்றன).
படம் 8: கோல்ட் மணி மற்றும் செயின் ஸ்டோனை சுற்றி, கற்கள் பதிப்பதற்கான கோல்ட் நிற ஸ்டோன் அட்டாச்டு செயினை ஒரு சுற்று தைத்துக் கொள்ளவும்.
படம் 9: கோல்ட் நிற ஸ்டோன் அட்டாச்டு செயினின் ஸ்டோன் பதிக்கும் இடத்தில் ஃபேப்ரிக் க்ளூவை தடவிக் கொள்ளவும்.
படம் 10: வெள்ளை நிற ஸ்டோன்களை க்ளூ தடவிய இடத்தில் ஒட்டிக் கொள்ளவும்.
படம் 11: இந்த கற்கள் கொண்ட டிசைன்கள் அனைத்தையும் தைத்து முடித்த பிறகு, ஆரி ஊசியைக் கொண்டு சில்க் காட்டன் நூலால் டிரேஸ் பதிவாகி இருக்கும் இடத்தில் நிரப்பி, தைத்துக் கொள்ளவும்.

படம் 12: இந்த சில்க் காட்டன் நூல் டிசைனை சுற்றி, பச்சை நிற காட்டன் நூலைக் கொண்டு பார்டர்களை தைத்துக் கொள்ளவும் (இந்த அவுட் லைன் பார்டரை, பிளவுஸின் நிறத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கவும்).
படம் 13: பெரிய பூவுக்கான டிசைனை முடித்த பிறகு, அருகில் இருக்கும் குட்டிக் குட்டி டிசைன்களை தைத்துக் கொள்ளவும். முதலில் படத்தில் காட்டியுள்ளது போல் திலகம் ஸ்டோன் களை டிரேஸின் இடையில் வைத்து தைத்துக் கொள்ளவும் (இந்த திலகம் ஸ்டோன்களும் வெவ்வேறு நிறங்களில் கடைகளில் கிடைக்கும்).
படம் 14: இந்த இரு திலகம் ஸ்டோன்களை தைத்த பிறகு, படத்தில் காட்டியுள்ளது போல் நடுவில் கோல்ட் நிற, வெள்ளை ஸ்டோன் அட்டாச்டு செயினின் ஒரு துண்டை மட்டும் வைத்து தைத்துக் கொண்டு, அதற்கு நடுவில் ஸ்டோன்களை பேப்ரிக் க்ளூ கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.
படம் 15: படத்தில் காட்டியுள்ளவாறு அருகில் உள்ள சின்ன சின்ன பூக்களையும் அழகாக தைத்து கொள்ளவும். இந்த டிசைனுக்கு இடையில் பச்சை நிற ஸ்டோனையும் வைத்து தைத்துக் கொள்ளவும்.
படம் 16: இந்த ஸ்டோன்கள் பதிக்கப்பட்ட இடங்களுக்கு இடையில் சில்க் காட்டன் நூலைக் கொண்டு தைத்துக் கொள்ளவும்.
படம் 17: இதேபோல், பச்சை நிற காட்டன் நூல் மற்றும் சில்க் காட்டன் நூலை கொண்டு இடையில் இருக்கும் இடங்களில் தைத்து முடிக்கவும். இறுதியில் ஸ்டோன் செயினை பின் கழுத்துக்கான சுற்றுக்கு வைத்து தைத்து முடிக்கவும். மேற்சொன்ன வழிமுறைகளின்படி, இதே டிசைன்களை கைகளின் பார்டர்களிலும் வைத்து தைத்துக் கொள்ளலாம். இதற்குப் பிறகு, ஏற் கெனவே வரையப்பட்ட அளவுக்கு ஏற்ப கட்டிங் செய்து, பிளவுஸை தைத்துக் கொள்ளவும்.
இப்போது அழகான ஆரி வொர்க் பேஸ்டு ஸ்டோன் டிசைன் உங்கள் பிளவுஸில் மின்னும்.
இந்த ஸ்டோன் டிசைன் செய்யப்பட்ட பிளவுஸை, டிரைவாஷ் மட்டுமே செய்வது நல்லது. கைகளால் துவைக்கும்போது கற்கள் விழுந்துவிடலாம். இந்த வேலைப்பாடு பொதுவாக பிளைன் பிளவுஸ்களில் செய்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இதை நம் ரசனைக்கு ஏற்ப புடவைகளிலும் கூட செய்யலாம்.
- வே.கிருஷ்ணவேணி
படங்கள்: எம்.உசேன் மாடல்: சித்ரா