Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 5

நீதிபதி கே.சந்துரு அவேர்னஸ்

சட்டத்தால் யுத்தம் செய்! - 5
##~##

இந்தத் தொடர் உங்களின் நம்பிக்கை சுடர்...

 'சர்க்கா சலா சலா கே... லேங்கே ஸ்வராஜ்ய லேங்கே’ என்று சுதந்திரப் போராட்ட காலத்தில் கோஷமிட்டுச் சென்றனர் சுதந்திரப் போராட்ட வீரர்கள். 'கதர் நூற்போமானால், நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும்’ என்பதுதான் இதற்குப்  பொருள். அப்படியெல்லாம் பாடுபட்டு நமக்கு கிடைத்த சுதந்திரத்துக்குப் பின் இங்கே நடந்தவைதான் வேதனை. எந்த கதர், சுதந்திர வேட்கையின் அடையாளமாக திகழ்ந்ததோ, எந்த கதரை அணிந்து அந்நிய துணிகளைப் புறக்கணித்தார்களோ... இன்று அந்த கதரும், அதன் பின்னர் இருந்த சுதந்திர தாகமும் அலட்சியப்படுத்தப்படுகிறது.

யாருமே அக்கறை எடுத்துக்கொள்ளாத இந்த விஷயத்தைக் கையில் எடுத்த கஸ்தூரி, அப்படி அலட்சியம் செய்தவர்களை, நீதியின் கரம் கொண்டு தண்டித்த கதை... ஆராதிக்கத்தக்கதுதானே!

இன்றைக்கு 98 வயதைக் கடந்து வாழும் சரித்திரமாகத் திகழும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், கதர் ஆடைகள் (வெள்ளைச் சட்டை - வேட்டி), காலில் ரப்பர் செருப்பு என்றுதான் இருப்பார். ஒரு நாள், சென்னை கிரிக்கெட் கிளப்புக்கு, இரவு உணவு அருந்த அவரை அழைத்துச் சென்றார் நண்பர் ஒருவர். ஆனால், கிருஷ்ணய்யரை உள்ளே விட மறுத்துவிட்டார் காவலாளி. மேற்கத்திய உடை (பேன்ட், ஷர்ட், ஷூ) அணிந்து வந்தால் மட்டுமே அங்கே அனுமதி என்பதுதான் காரணம்.  வந்திருப்பவர், உச்ச நீதிமன்ற நீதிபதி என்று நண்பர் வாதம் செய்தபோதும்... கிளப்பின் விதிமுறைகளைக் காட்டி, 'அனுமதிக்க முடியாது’ என்று தீர்மானமாகக் கூறிவிட்டார். இந்த சச்சரவை ரசிக்காத கிருஷ்ணய்யர், விருந்தினர் புத்தகத்தை கொண்டு வரச் சொல்லி, அதில் கீழ்க்கண்டவாறு பதிவு செய்துவிட்டு, அங்கிருந்து வெளியேறினார்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 5

'இரவு உணவருந்தும் வேட்கையில் இங்கே வந்தபோது, காவலாளியால் தடுக்கப்பட்டேன். நான் போட்டிருக்கும் உடை, கிரிக்கெட் கிளப்பின் கலாசாரத்துக்கு ஒவ்வாதது, மேற்கத்திய உடைகளை அணிய வேண்டுமென்பதுதான் இங்கே விதி. அய்யகோ, ஸ்வராஜ்யம் கிடைத்தாலும்... அந்த சுதந்திரம் இந்த கிளப்பின் வாசற்படியோடு நின்றுவிட்டது. இரவு உணவு உண்ணாமலே திரும்புகிறேன்... ஆனால், ஒரு கௌரவமான இந்தியனாக!’

- வி.ஆர்.கிருஷ்ணய்யர்

சுதந்திரமடைந்த பிறகும் நம்மை விட்டு அகலாத அடிமை புத்தியைத்தான் இச்சம்பவம் படம்பிடித்துக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில், 76-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தில், இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படைக் கடமைகள் (Fundamental Duties)  வரையறுக்கப்பட்டன. 'விடுதலைக்கான தேசியப் போராட்டத்தின் உன்னத லட்சியங்களை ஒவ்வொரு குடிமகனும் மதித்து, அவற்றைப் பின்பற்ற வேண்டும்' என்றும் அதில் கட்டளையிடப்பட்டுள்ளது.

'கிரிக்கெட் கிளப்' எனும் தனியார் அமைப்பு, அடிப்படைக் கடமைகளை மீறி செயல்படுவது இருக்கட்டும். அரசாங்கத்தின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனம் ஒன்றே இப்படி செயல்பட்டதை என்னவென்று சொல்ல?! அடிப்படைக் கடமையை நிறைவேற்றிய  காரணத்துக்காவே, அந்த நிறுவனத்தால் பந்தாடப்பட்ட கஸ்தூரி, அந்த நிறுவனத்துக்கே பாடம் புகட்டினார்.

இந்திய தேசிய விமானநிலையங்களின் ஆணையம், 85-ம் ஆண்டு, உருவாக்கப்பட்ட பின், அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் (National Airports Authority Of India) கீழ் விமான நிலையங்கள் கொண்டு வரப்பட்டன. இதன் சென்னை அலுவலகத்தில் மூத்த உதவியாளராக பணியாற்றிவர்தான் கஸ்தூரி. குழந்தைப் பருவத்திலிருந்தே காந்தியடிகளின் வாழ்க்கை மற்றும் கோட்பாடுகளால் கவரப்பட்டவர்.... வாழ்நாள் முழுவதும் கதர் மற்றும் கைத்தறி ஆடைகளையே அணிய விரதம் பூண்டவர்.

ஆணையம், 94-ம் ஆண்டு, ஊழியர்களுக்கு சீருடை கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தது. அவர்கள் அளித்த சீருடைகள், செயற்கை பட்டு அல்லது பாலியஸ்டரால் தயாரிக்கப்பட்டவை என்பதால், அவற்றை வாங்க மறுத்துவிட்டார் கஸ்தூரி. அலுவலகத்திலிருந்து உரிய சீருடையைப் பெற்று, அவற்றை அணிந்து பணியில் ஆஜராக வேண்டும் என்று 96-ம் ஆண்டில் கட்டளையிட்டனர் உயர் அதிகாரிகள். சீருடையை பாலியஸ்டர் அல்லது செயற்கை பட்டு போன்ற துணிகளில்தான் அணிய வேண்டுமென்று விதியேதுமில்லை என்பதால், கதர் அல்லது கைத்தறித் துணியால் சீருடை தயாரித்து அணிந்து வர அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். பதில் வராததால், தொடர்ந்து கதராடையை அணிந்து அலுவலகம் வந்தார். 99-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 'அலுவலகத்திலிருந்து பாலியஸ்டர் சீருடையைப் பெற்று, அதை அணிந்து வரவேண்டும். மறுக்கும்பட்சத்தில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்தது அலுவலகம். அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, 5-11-2008 அன்று கஸ்தூரிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

சட்டத்தால் யுத்தம் செய்! - 5

காந்திஜி நடத்திய அந்நிய துணிகளைப் புறக்கணிக்கும் போராட்டத்தைப் பற்றி அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டது நீதிமன்றம்.

'ராட்டையால் கதர்நூல் நூற்று, கதர் துணியை நெய்து அணிந்து கொண்டோமென்றால் உள் நாட் டில் வேலை வாய்ப்புகள் பெருகும். இங்கிருந்து பருத்தியை வாங்கிச் சென்று, லங்காஷையர் (இங்கி லாந்து) ஜவுளி ஆலைகளில் நெய்து துணி களாக்கி, இந்திய சந்தைகளில் மறுபடியும் பிரிட்டிஷ் கொண்டு வந்து விற்கும் துணிகளை புறக்கணித்தால்... அவர்களுக்கு நஷ்டமேற்படும். ஆகவே, ஒவ்வொரு   இந்தியனும் கதராடையை அணிய உறுதி மொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்த காந்தி, தான் நடத்தி வந்த 'ஹரிஜன்’ பத்திரிகையிலும் கதரை வலியுறுத்திக் கட்டுரைகளை எழுதினார்.

ஒரு சமயம், பீஹாரிலிருந்து இரண்டு தேசியவாதிகள் காந்திக்கு கடிதம் எழுதினர். அதில், பண்டித ஜவஹர்லால் நேரு, 'இந்தியா சுதந்திரமடைந்து, முழுமையான தொழில் மையமாக மாறும் வரை... கதர் துணிகள் அணிவது தொடரும்' என்று ஒரு கூட்டத்தில் குறிப்பிட்டதாகவும், அதைப்பற்றி காந்தியடிகளின் கருத்தை அறிய விரும்புவதாகவும் எழுதியிருந்தனர். அதற்கு ஹரிஜன் ஏடு மூலமாக பதில் கூறிய காந்தியடிகள், 'இந்தியா தொழில்மயமடைந்தாலும் காதி அணிவது தொடரும்' என்று குறிப்பிட்டார்.

அப்படிப்பட்ட காதியின் மகிமை தெரியாத பொதுத்துறை நிறுவன நிர்வாக இயக்குநர், பழிவாங்கும் போக்கில் கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க முனைவதை நீதிமன்றம் கண்டித்தது. பொதுத்துறை நிறுவனமே அரசியல் சட்டத்தில் விதிக்கப்பட்ட அடிப்படை கடமைகளை மீறுவதைக் குறிப்பிட்ட நீதிமன்றம், கஸ்தூரி மீது விடுத்த ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தது. நிர்வாகத்தின் அத்துமீறல்களை 'உடை சர்வாதிகாரம்' (Sartorial despotism) என்றும் குறிப்பிட்டது. கஸ்தூரியின் தேசிய உணர்வை மதிக்காத நிர்வாகத்துக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை நாளிதழ்கள் முக்கியச் செய்தியாக வெளியிட்டன.அதைப் பார்த்துவிட்டு... கொச்சியிலிருந்து கடிதமெழுதிய வி.ஆர்.கிருஷ்ணய்யர், 'தேசபக்தி சொட்டும் தீர்ப்பு' என்று பாராட்டினார்.

அதிகார மீறலுக்கும் அடக்குமுறைக்கும் எதிராக கதராடை அணிந்து, தனது துணிச்சலை வெளிப்படுத்திய கஸ்தூரியைப் பாராட்டுவது நம் கடமை!

- தொடர்வோம்...

படம்: எம்.உசேன்