சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

பிஸினஸ் கேள்வி-பதில்

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்! ஹெல்ப் லைன்

பிஸினஸ் கேள்வி-பதில்

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது.  இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்...

##~##

''கைத்தறி தொழிலில் எனக்கு இருக்கும் ஆர்வமும், தமிழகத்தில் அப்புடவைகளுக்கு உள்ள வரவேற்பும் அந்தத் தொழிலில் களமிறங்க நம்பிக்கை கொடுக்கிறது. இதற்கான பயிற்சிக்கு யாரை அணுகுவது?!''

- த.பதாகை, கே.மங்கலம்

''இந்தியாவில் விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்களே அதிகம். அதற்கு அடுத்த நேரடித் தொழில், கைத்தறி. 80 முதல் 90 லட்சம் பேர் இத்தொழில் ஈடுபட்டுள்ளனர். நவீன துணி வகைகளால் சிலகாலம் நலிவடைந்த இந்தத் துறை... மத்திய, மாநில அரசுகளின் சீரிய முயற்சியாலும், தரத்தாலும் இன்று மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து லாபகரமாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தொழில், அங்கீகரிக்கப்பட்ட பல கூட்டுறவு சங்கங்களாக அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்படுவதுதான், கைத்தறியின் வளர்ச்சிக்கு முக்கியமாக கைகொடுத்துள்ளது. இதன் மூலம் மிகக்குறைந்த வட்டியில் கடன் உதவி போன்றவற்றை அரசுகள் செய்து தருகின்றன.

உங்களுக்கு ஓர் ஊக்கமான செய்தி... தமிழகத்தில் பல வருடங்களாக நஷ்டத்தில் இயங்கி வந்த 1,164 பிரதம கூட்டுறவு சங்கங்களில், 908 சங்கங்கள் இந்த ஆண்டு லாப கணக்கைக் காட்டி உள்ளன. நஷ்டத் தில் இருந்த கைத்தறித்துறை இரண்டாண்டில் 17.2 கோடி ரூபாய் லாபம் ஈட்டி உள்ளது. இதைச் சார்ந்த பஞ்சு ஆலைகள், நூல் ஆலைகள், காஞ்சிபுரத்தில் உள்ள சரிகை ஆலைகள் என எல்லா நிறுவனங்களும் லாபக் கணக்கைக் காட்டியுள்ளன.

பிஸினஸ் கேள்வி-பதில்

தமிழகத்தில் மட்டும் 4.22 லட்சம் பேர் இத்தொழிலை செய்து வருகின்றனர். மத்திய அரசு தமிழகத்தில் மட்டும் 22 இடங்களை கைத்தறி தலங்களாகக் கண்டறிந்து, அங்குள்ளவர்களுக்கு தேவையான எந்திர தளவாடங்கள் போன்றவற்றைக் கொடுத்துள்ளது. தமிழகத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் உற்பத்தியும், 600 கோடிக்கு மேல் ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. குறிப்பாக... சேலம், ஆரணி, காஞ்சிபுரம், கரூர், சென்னிமலை, திருபுவனம் போன்ற இடங்கள் கைத்தறிக்கு மிகவும் பிரசித்தி பெற்று, கைத்தறியில் புடவை, பட்டுப் புடவை, வேட்டி, துண்டு, ஜமுக்காளம், மெத்தை விரிப்பு, தலையணை போன்ற பலதரப்பட்ட நல்ல தரமான துணிகளை உற்பத்தி செய்கின்றன. இந்த இடங்களில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன.

சரி, இத்தனை சிறப்பான தொழில் வாய்ப்புள்ள கைத்தறித் தொழிலுக்கான பயிற்சியைப் பார்ப்போம். மத்திய அரசு கைத்தறியின் வளர்ச்சிக்காக பல புதுமைகளை உள்ளடக்கிய 3 ஆண்டு பட்டயப் படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தக் கல்லூரிகள் இந்தியாவில் வாரணாசி (உத்தரப்பிரதேசம்), சேலம் (தமிழ்நாடு), கவுகாத்தி (அசாம்), ஜோத்பூர் (ராஜஸ்தான்), பர்கார் (ஒடிசா) என்ற 5 இடங்களில் செயல்படுகின்றன. இதில் சேலத்தில் உள்ள கல்லூரியில் 3 ஆண்டு பட்டயப் படிப்பில் சேர தகுதி... பத்தாம் வகுப்பு தேர்ச்சி. 75 இடங்கள் கொண்ட இந்தக் கல்லூரியில் 25 இடங்கள் தமிழக மாணவர்களுக்கு, 50 இடங்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் பாண்டிச்சேரி மாணவர்கள் சேர்ந்து படிக்கலாம். இந்த படிப்பின்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 400 ரூபாய், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு 450 ரூபாய், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு 500 ரூபாய் வீதம் உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

குறுகிய கால பயிற்சிகளை அளிக்க சென்னை, காஞ்சிபுரம், சேலம் ஆகிய மூன்று இடங்களில் கைத்தறி நெசவாளர் பயிற்சி மையங்களை அமைத்துள்ளது மத்திய அரசு. சென்னையில் உள்ள பயிற்சி மையத்தில் வடிவமைப்பு, சாயம் ஏற்றுதல், நெய்தல், நவீன தறியில் வேலை செய்வது என்ற பலதரப்பட்ட பயிற்சிகளை அளிக்கின்றனர். மூன்று மாத கட்டணப் பயிற்சி இது. ஒரு மாதத்துக்கு கட்டணம் 1,000 ரூபாய் மட்டுமே.

விவரங்களுக்கு: இயக்குநர், டெக்ஸ்டைல்ஸ் வீவர்ஸ் சர்வீஸ் சென்டர், C1/B, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை - 90. தொலைபேசி எண்: 044 - 24918655, 24917964, 24461951

சேலத்தில் இயங்கும் பயிற்சி மையத்தில் 2 அல்லது 3 மாதம் பயிற்சிகளைப் பெறலாம். இதற்கு கட்டணம் மாதம் ஒன்றுக்கு 600 ரூபாய். இதே மையத்தின் சார்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு மூலம் இலவச பயிற்சி அளிக்கும் திட்டமும் உள்ளது. இதில் 20 பேர் கொண்ட குழுவுக்கு பயிற்சி அளிப்பார்கள். பயிற்சி பெற விரும்பும் குழுக்கள், பயிற்சிக்கான இடத்தை ஏற்பாடு செய்துதர வேண்டும். தொண்டு நிறுவனங்களும் இதைச் செயல்படுத்தலாம். 30 நாட்கள் பயிற்சியும் உண்டு. இதில் வடிவமைப்பு, சாயம் ஏற்றுதல், நெய்தல், நூல் சுற்றுதல், மாவு போடுதல், தறிப் பயிற்சி என பல பயிற்சிகள் அளிப்பார்கள். நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

விவரங்களுக்கு: இயக்குநர், கைத்தறி நெசவாளர் பயிற்சி மையம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி (Indian Institute of Handloom Technology), தில்லை நகர், சேலம். தொலைபேசி எண்: 0427-2295323, 2295623. காஞ்சிபுரம் பயிற்சி மையத்தை 044-27222730 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சிறப்பான விற்பனையையும் நல்ல லாபத்தையும் அளிக்கும் கைத்தறி தொழிலில் உரிய பயிற்சி பெற்று தைரியமாக களமிறங்கலாம். 'கோ-ஆப்டெக்ஸ்’ உங்களுக்கு உதவுவார்கள், வெற்றி பெற வாழ்த்துக்கள்!''

வெற்றிக் கோட்டை தொடுவதற்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி... 'வாருங்கள்... வழிகாட்டுகிறோம்’ கேள்வி  பதில் பகுதி, அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  600 002