ஸ்டெப்ஸ்
##~## |
''ஒருமுறை சொந்த வேலை விஷயமா கணவர் வெளியூர் போயிருந்தப்போ, 'தாமரை விநாயகர்’ சிற்பம் வேணும்னு கேட்டு ஆள் வந்தாங்க. அவர் ஊர்ல இல்லைங்கிற விஷயத்தை சொல்லி, அவங்கள திருப்பி அனுப்ப மனசு வரல. அப்போ 75 பர்சன்ட் வேலை முடிஞ்சு இருந்த விநாயகர் சிற்பத்தை கையில எடுத்து, முதன் முதலா என் கையால 'ஃபினிஷிங் டச்' செய்து, வந்திருந்த கஸ்டமர்கிட்ட கொடுத்தேன். இன்னிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்ரிக்கானு என் கைவண்ணத்துல உருவான மரச் சிற்பங்கள் போயிட்டிருக்கு!''
- உற்சாகம் பொங்கப் பேசுகிறார், சகுந்தலா நடராஜன்.
கிருஷ்ணர் குழலிசையில் மயங்கும் பறவைகள், ராஜகணேஷ், கண்கள் மூடிய புத்தர், கீதை உபதேச பேனல், வீணை சரஸ்வதி... இப்படி திரும்பும் திசையெல்லாம் கண்களை குளிரச் செய்கிற மரச் சிற்பங்களுக்கு நடுவே அமர்ந்து பேச்சைத் தொடர்ந்தார், சகுந்தலா.
''கள்ளக்குறிச்சி... பிறந்த ஊரும், புகுந்த ஊரும் இதுதான். இங்கேயே மூணு தலைமுறைக்கும் மேல இந்த தொழிலை செய்துட்டு வருது எங்க குடும்பம். கணவர், நான், ரெண்டு குழந்தைங்க, என் கணவரின் தம்பி குடும்பம் எல்லாரும் கூட்டுக் குடும்பமாத்தான் இருக்கோம். எல்லாருமே மரச்சிற்ப தொழிலை கவனிச்சுக்கிறோம். முந்தைய தலைமுறைகளில் எல்லாம் ஆண்கள் பிரதானமாக செய்து வந்த இந்த சிற்பத் தொழிலை, இப்போ வீட்டுப் பெண்களும் ஆர்வமா முன்னெடுத்துச் செய்றது பெருமையா இருக்கு. பத்துக்கும் மேலான பெண்கள், இங்க சிற்ப வடிவமைப்பு வேலையில் ஆர்வமா ஈடுபட்டிருக்காங்க'' என்றவர்,


''என்னோட அப்பா செதுக்கின ரசனைத் தேர், புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் சிற்பம்கிட்ட எல்லாம் சின்ன வயசுல தினம் தினம் பேசி விளையாடியிருக்கேன். மரச்சிற்பங்களுக்கு எல்லாம் உயிர் இல்லைங்கிறதே தெரியாத பருவம் அது. அப்பவே உள்ளுக்குள் பாதிப்பை ஏற்படுத்தினது இந்தக் கலைத்தொழில். அதெல்லாம் அப்படியே முடிஞ்சுடாம திருமணத்துக்குப் பிறகு, சிற்பங்களை வடிவமைக்கவும் கத்துக்கிட்டு இன்னிக்கு தொடர்றது சந்தோஷமா இருக்கு!''

- நிறைவான சந்தோஷம் பரவுகிறது சகுந்தலாவின் முகத்தில்.
''விவசாய உற்பத்தியோ, தொழில் வளமோ பெரிதா கைகொடுக்காத எங்க பகுதிக்கு சிற்ப வடிவமைப்புத் தொழில் பயனுள்ள ஒண்ணா இருக்கு. இந்த பகுதியில கல்வராயன் மலை ஒண்ணுதான் சுற்றுலாத் தலம். அதை பார்வையிட வர்ற பயணிகள், இந்தப் பகுதியில சிற்பங்கள் வடிவமைக்கறத வந்து ரசிக்கிறப்போ, எங்களுக்கு பெருமையா இருக்கும். இன்னொரு பக்கம், கொஞ்ச கொஞ்சமா விலகி போய்க்கிட்டிருக்கிற பண்பாட்டு விஷயங்கள்ல ஒரு அங்கமா மரச்சிற்பங்களும் சேர்ற நிலை உண்டாகியிருக்கிறது வருத்தமா இருக்கு.
நம்முடைய கலாசாரம், பண்பாடுகளுக்கு வெளிநாட்டுக்காரங்க கொடுக்குற முக்கியத்துவத்தை நாம கொடுக்கத் தவறிக்கிட்டிருக்கோமோனு தோணுது. அதனாலதான் இந்தக் கலையோட பெருமையையும் சிறப்பை யும் சொல்லிச் சொல்லியே எங்க குழந்தை களை வளர்க்கிறோம், அவங்களுக்கும் இப்போ இருந்தே சின்னச் சின்ன பயிற்சிகள் கொடுக் கிறோம். டாக்டர், இன்ஜீனியர், வக்கீல் என்பதை எல்லாம்விட, புகழ்பெற்ற சிற்பியா எங்க குழந்தைகள் உருவாறதுதான் எங்க ளுக்கு சந்தோஷமா இருக்கும்'' எனும் சகுந்தலா, பெண்களை ஒரு குழுவாக இணைத்து, சிற்ப வேலைகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
இவருடைய சிற்பக் கூடத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக வேலை பார்க்கும் சின்னபொண்ணு, ''15 வருஷத்துக்கு முன், கணவர் சொல்லிக்காம வீட்டை விட்டுப் போயிட்டார். இதுவரைக்கும் எந்தத் தகவலும் இல்ல. என் பசங்க ரெண்டு பேரும் இப்போ பள்ளிக்கூடம் போயிட்டு

இருக்காங்க. நான் பள்ளிக்கூடம் பக்கம் எல்லாம் போனதில்ல. சிற்பக் கூடத்துல நாம வேலை கத்துக்க முடியுமானு தயக்கத்தோடதான் வேலைக்கு வந்தேன். போகப் போக இதுல எனக்கு ஏற்பட்ட ஆர்வமே, என் விரல்களுக்கு வேலையை கத்துக்கொடுத்துடுச்சு. இப்போ சின்னச் சின்ன பூக்கள் தொடங்கி, வாஸ்து கணேஷ் வரைக்கும் செதுக்க கத்துக்கிட்டேன். இந்த வேலை மூலம்தான் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன். இங்க என்னைப்போல பல பெண்கள் வேலை செய்றாங்க. இந்த அழகான மரச் சிற்பங்கள்தான் எங்களுக்கு எல்லாம் அமைதியான வாழ்க்கையைக் கொடுத்திருக்கு!'' என்று நன்றியுடன் சொன்னவர், சிற்பத்தைச் செதுக்கும் வேலையைத் தொடர்ந்தார்!
உளியோசையோடு... வளைக்கரங்களின் இசையையும் சேர்ந்தே ஒலித்ததை ரசித்தபடி புறப்பட்டோம்!
- ம.மோகன் படங்கள்: தே.சிலம்பரசன்