சக்சஸ்
##~## |
'இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் தமிழக மாணவர்கள் சாதனை...'
- கடந்த சில ஆண்டுகளாக இப்படி வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி, நம்மவர்களில் பலரிடமும் நன்னம்பிக்கையை விதைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பணியில், தமிழக அரசின் சார்பில் சென்னையில் இயங்கிவரும் 'அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம்' சிறப்பாக பங்காற்றி வருவது... பாராட்டுக்குரியது! சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில்கூட... இங்கே படித்த 49 மாணவர்கள் தேர்ச்சிபெற்று அசத்தியுள்ளனர்!
வெற்றிக்கனியை சுவைத்த மாணவர்களுடன், மையத்தின் தாளாளர் இறையன்பு ஐ.ஏ.எஸ், ஒரு கொண்டாட்ட தருணத்தில் இருந்தவேளையில், நாமும் இணைந்தோம். அதற்கு நடுவே பேசிய பயிற்சி மைய முதல்வர் பிரேம் கலாராணி, ''இந்த வெற்றிக்குக் காரணம், எங்கள் மாணவர்களின் உழைப்பு. அதற்கு பக்கபலமாக ஆசிரியர்கள் நிற்க, நாங்கள் மாணவர்களின் தேவைகளை அரசிடம் இருந்து பெற்றுத்தந்தோம். துறை சார்ந்த நிபுணர்களை வரவழைத்துக் கருத்துரைகள் வழங்கினோம். இங்கு பயிற்சிபெறும் மாணவர்களுக்கு வேண்டிய அனைத்து புத்தகங்களையும், செய்தித்தாள்களையும் இங்குள்ள நூலகத்தில் கொடுத்துவருவதோடு, ஏதாவது புத்தகம் வேண்டுமென்றாலும் உடனுக்குடன் தருவித்தும் கொடுத்தோம். மாணவர்களின் இணைய தேவைக்காக 40 கணினிகளுடன் கூடிய புதிய ஆய்வுக்கூடத்தையும் உருவாக்கியுள்ளோம்.

இப்படி எல்லா வகையிலும் தனியார் மையங்களைவிட சிறப்பாக செயல்படும் அரசின் இந்தப் பயிற்சி மையத்தைப் பற்றிய தகவல், மக்களிடம் இன்னமும் முழுமையாகச் சென்றடையாமல் இருப்பது வருத்தமே. விரைவில் அதற்கான முயற்சிகளையும் எடுப்போம். ஐ.ஏ.எஸ். லட்சியத்துடன் இருக்கும் ஏழை, எளிய மாணவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்'' என்று வேண்டுகோள் விடுத்தவர், இந்தப் பயிற்சி மையத்தில் சேர விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளையும் கூறினார்.

''மூன்று பிரிவுகளாக பிரித்து மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறோம். முதல் பிரிவு, பிரிலிமினரி வகுப்புகள். இதற்கு ஒவ்வொரு ஆண்டும் 200 மாணவர்களைத் தேர்வு செய்கிறோம். இதில் முழுநேரமாக இங்கேயே தங்கி படிப்பவர்களும், பகுதி நேரமாக வந்து படித்துச் செல்பவர்களும் இருக்கிறார்கள். அடுத்ததாக, மெயின் தேர்வு வகுப்புகள். இதற்கும் 200 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து, அவர்களுக்கு தேர்வுகள், கலந்தாய்வுகள் என பல்வேறு பயிற்சிகளைக் கொடுத்து வருகிறோம். மூன்றாவதாக, நேர்முகத்தேர்வு வகுப்புகள். இதற்கு வேறு மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் உட்பட எந்த மாணவர்கள் வந்தாலும் அவர்களை அனுமதித்து பயிற்சியளிக்கிறோம்.

இந்த மாணவர்களை தேர்வு செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்தில் அறிவிப்பை வெளியிட்டு, அக்டோபர் மாதத்தில் நுழைவுத் தேர்வு நடத்துவோம். இதில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒவ்வொரு பிரிவிலும் 100 இடங்களும், மற்ற பிரிவினருக்கு 100 இடங்களும் வழங்குகிறோம். மாணவர்கள் இங்கேயே இலவசமாக தங்கி குறைந்த கட்டணத்தில் உணவும் பயிற்சியும் பெறுவார்கள். பிரிலிமினரி தேர்வு பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ஊக்கத் தொகையாக 3,000 ரூபாய் மூன்று மாதங்களுக்கு வழங்குகிறோம். இதைத்தவிர, இந்த மாணவர்கள் புதுடெல்லியில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள போக்குவரத்து செலவுக்காக 2,000 ரூபாயும் வழங்குகிறோம். அங்கு தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் இலவசமாகத் தங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்கிறோம்'' என்று விவரங்களை அடுக்கினார் பிரேம் கலாராணி!
இந்த மையத்தில் படித்து, சமீபத்தில்வெளியான ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பெற்றிருக்கும் டாக்டர் டி.பிரபு சங்கர், ''எனக்கு சொந்த ஊர் மதுரை. அங்கே மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து, சண்டிகரில் எம்.டி. படித்தேன். இப்போது சென்னை, கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு ஹெல்த்சிட்டி மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். ஆனாலும், சிவில் சர்வீஸ் தேர்வுதான் என் லட்சியமாக இருந்தது. இப்போது, இந்திய அளவில் 7-ம் இடத்தைப் பிடித்து அதைச் சாதித்திருப்பது... சந்தோஷமாக இருக்கிறது. அதற்கான அடித்தளம், இந்தப் பயிற்சி மையம் தந்ததுதான். மிகச்சிறப்பான பயிற்சியையும் வசதிகளையும் தரும் இந்த மையத்தைப் பயன்படுத்தி பலரும் வெற்றிபெற வேண்டும்'' என்று அழைப்பு வைத்தார்!
புறப்படுங்கள்... இளம்நம்பிக்கைகளே!
- சா.வடிவரசு, பொன்.விமலா படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
வீல் சேரிலிருந்தபடியே வெற்றி!
தமிழகத்தில் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்ற வெற்றியாளர்களில் சிலர் பேசுகிறார்கள்...
ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெற்றிருக்கும் உமாமகேஸ்வரி, ''எனக்குள் உலக விஷயங்களை உட்புகுத்தியவர் என் அப்பா. சாதாரண தேங்காய் வியாபாரியாக இருந்து ஒவ்வொரு அணுவிலும் ஜெயிக்கிற வித்தையை சொல்லிக் கொடுத்தவர். செய்தித்தாள் எனக்கு வேதநூல். என் சிறுவயதிலிருந்தே நெல்சன் மண்டேலா, பில் கிளின்டன் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதி அவர்களிடமிருந்து பதில் கடிதத்தைப் பெற்றிருக்கிறேன். சமூகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உள்ளுணர்வு, இரண்டு வருட கடின உழைப்பு... இவையே என் வெற்றியின் ரகசியம்!'' என்கிறார் புன்னகையுடன்.

''நடுத்தர குடும்பத்தில் பிறந்து பல சவால்களை சந்தித்த பின்பே இன்று ஐ.பி.எஸ். ஆக தேர்வாகிவுள்ளேன். கிராமப் பஞ்சாயத்துகளை சீரமைப்பது, ஊழல் இல்லாத அரசாங்கம் உருவாக முனைவது, பெண்களுக்கு எதிரான குடும்ப மற்றும் சமூக வன்கொடுமைகளிலிருந்து அவர்களை காப்பாற்றும் சட்ட நுணுக்கங்களை பெண்களிடம் கொண்டு சேர்ப்பது முதலானவை எனது அடுத்த இலக்காக இருக்கும்'' என வீரியக் குரல் எழுப்பும் லோகநாயகி திவ்யா, சாலை விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். அதிலும், நேர்முகத் தேர்வுக்கு நான்கு நாட்களே எஞ்சி இருக்கும் நேரத்தில், இப்படி ஒரு விபத்து நிகழ்ந்துவிட... வீல் சேரில் உட்காந்தவாறு டெல்லிக்குச் சென்று நேர்முகத் தேர்வைச் சந்தித்து இருக்கிறார்.
மகிழ்ச்சி பொங்க பேசும் சுடர்விழி, ''சொந்த ஊர் காஞ்சிபுரம். ப்ளஸ் டூ-வுக்கு மேல் கல்லூரிக்கு சென்று படிக்க வாய்ப்பில்லாமல் அஞ்சல் வழியில்தான் பி.எஸ்.சி, கணிதம் படித்தேன். படிப்பு முடிந்ததுமே திருமணம். பின்பு கையில் குழந்தை. ஆனாலும் சிறுவயதில் உள்ளுக்குள் ஊறிய ஐ.ஏ.எஸ். கனவு, குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை ஐ.ஏ.எஸ். படித்தே ஆகவேண்டும் என்கிற உந்துதல் ஏற்படவே... ஒன்றரை வயது குழந்தையுடன் பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். விடாமல் படித்தேன், விடாப்பிடியாகப் படித்தேன். இப்போது ஐ.பி.எஸ். என்ற நிலைக்கு வந்து விட்டேன்!' என்றார்.
இந்த மூவருமே புவியியல் மற்றும் தமிழ் இலக்கியத்தை விருப்பப் பாடமாக எடுத்துள்ளனர். மனித நேயம் ஐ.ஏ.எஸ் அகாடமி மற்றும் திருமங்கலத்திலுள்ள மணிகண்டன் ஐ.ஏ.எஸ் அகாடமி இவைதான் இவர்களது பயிற்சிப் பட்டறைகள்.
தொடர்புக்கு: அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், 163/1, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை (கிரீன்வேஸ் ரோடு), ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028. தொலைபேசி: 044-24621475, 24621909. வலைதளம்: www.civilservicecoaching.com