சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

சம்மர் ஆட்டோகிராஃப்

கோடை கொளுத்தாட்டம்!ரீடர்ஸ், ஓவியம்: முத்து,

பரிசு:

சம்மர் ஆட்டோகிராஃப்

200

##~##

நான், அக்கா, அண்ணன்... கடைசி பரீட்சை அன்று சாயந்திரமே அம்மாவை நச்சரித்து, காரைக்குடியில் இருந்து அரியக்குடியில் இருக்கும் ஆயா வீட்டில் ஆஜராகிவிடுவோம்... கோடை விடுமுறையைக் கொண்டாட! அந்தக் கிராமத்து மண்ணை மிதித்ததும்... சுருட்டி வைத்திருந்த வால் அவிழும். அப்படி ஒரு விடுமுறையில் நான் செய்த மூன்று சேட்டைகள்... படா சேட்டைகளாக மாறியது பசுமை நினைவு!

புளியமரத்தில் ஊஞ்சல் கட்ட, அத்தையின் கண்டாங்கிச் சேலையை தெரியாமல் கொண்டு வந்து, ஆட்டம் போட்டுவிட்டு சேலையைப் பார்த்தால், கிளை அறுத்ததில் கிழிந்தேவிட்டது. ''உங்க அக்கா வீட்டுப் பக்கிக இதையும் விட்டு வைக்கலையா...’ என்று அங்கலாய்த்த அத்தையை, மாமா அறைந்த அறையில், எங்கள் ஊஞ்சல் ஆசை அன்றுடன் விட்டேபோனது.

மாயாண்டி அம்பலார் வீட்டுத் தோட்டத்தில், திருட்டுத்தனமாக மாங்காய் பறிக்கப் போனோம். மாங்காயை ருசித்துக் கொண்டிருந்த வேளையில் மாயாண்டி அய்யா வர... அனைவரும் சுவர் ஏறிக் குதித்து தப்பிவிட, சிறியவளான நான் சிக்கிக்கொண்டேன். ''காரைக்குடியில இருந்து மாயாண்டி வீட்டு மாங்காய திருடுறதுக்காக வந்தியளா...?'' என்று முறுக்கு மீசையுடன் அவர் கர்ஜிக்க... எங்கள் வீட்டிலிருந்து மாமாக்கள் ஓடோடி வந்து, ''யோவ், பச்சப்புள்ளய புடிச்சு வெச்சிருக்கிறீரே...'’ என்று சண்டையிட.... ஏற்கெனவே ஆயா வீட்டுக்கும், மாயாண்டி அய்யா வீட்டுக்கும் உரசிக்கொண்டிருந்த நிலத் தகராறு, உச்சத்தை தொட்டது என் புண்ணியத்தில்.

சம்மர் ஆட்டோகிராஃப்

இதையெல்லாம்விட பெரிய அக்கப்போர்... வைக்கோல் போர்! எல்லோரும் கூட்டாஞ்சோறு சமைத்துக் கொண்டிருக்க... நான் தீப்பெட்டியில் ஒரு குச்சியை உரசி, சின்ன ஆயா (தெய்வானை ஆயா) வீட்டு வைக்கோல் போரில் விளையாட்டாகப் போட... ஊரே ஒன்று திரண்டு ஒருவழியாக தீயை அணைக்க... இப்போது நினைத்தாலும் 'திக்’! ''காளியாத்தா... இது யாருடி செஞ்ச வேலை? நீயிருந்தா அவுகள கேளுடி. எண்ணி எட்டு நாளைக்குள்ள எனக்கு கண்ணுக்குத் தெரிஞ்சாகணும்...'' என்று சின்ன ஆயா சாபம் கொடுத்ததைக் கேட்டபோது, பிஞ்சு நெஞ்சு வெடித்தேவிட்டது!

ஊருக்கு கிளம்பும் நாளில்தான் அக்கா, அண்ணனிடம் உண்மையைச் சொன்னேன். ''உன் னால ஊருக்குள்ள எத்தனை பிரச்னை? இவளை இனிமே ஆயா வீட்டுக்கு கூட்டிட்டு வரக்கூடாது!'' என்று இருவரும் தீர்மானம் போட... அடுத்த கோடை விடுமுறைக்கு முதல் ஆளாக அரியக் குடிக்கு கிளம்பி நின்றது என்னவோ நான்தான்!

- மீனா, காரைக்குடி

இந்தப் பகுதிக்கு உங்கள் அனுபவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: 'சம்மர் ஆட்டோகிராஃப்’, அவள் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2