ஸ்டெப்ஸ்
##~## |
'வீட்டுல சும்மாதான் இருக்கோம்... ஏதாச்சும் செய்யலாமே?’ என்று கிளம்பிய சிறு சிந்தனைப் பொறி, ஒரு சின்ன சமையல் வகுப்பில் பிரவேசிக்க வைத்து, இன்றைக்கு 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்' எனும் நிகழ்ச்சி ஏற்பாட்டுத் துறையில் பூரணமாகி நிற்கும் பூர்ணிமாவின் வார்த்தைகள், சாதிக்க நினைக்கும் பெண்களுக்கான வைட்டமின் டானிக்!
கல்யாணம் துவங்கி, கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் வரை 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ பொறுப்பில்தான் இன்று ஒப்படைக்கப்படுகிறது. இத்துறை அவ்வளவாக அறிமுகமாகாத 13 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலேயே இதில் கால்பதித்து, ஆண்களுக்கே சவாலான இத்துறையில் வெற்றியைக் கைப்பற்றி, தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் 'விர்கோ ஈவென்ட்ஸ்’ உரிமையாளர் பூர்ணிமா.
''குழந்தைங்க வளர்ந்ததுக்கு அப்புறம், ஏதாச்சும் பண்ணலாம்னு யோசிச்ச ஆயிரமாயிரம் இல்லத் தரசிகளில் ஒருத்தியாதான் நானும் இருந்தேன். சிறுதொழில் முனைவோருக்கான வகுப்பும், அழகுக் கலையில் டிப்ளமாவும் முடிச்சுருந்த நான், இந்திரா நகர் லேடீஸ் கிளப்ல சேர்ந்தேன். அங்க எல்லா வேலைகளையும் துறுதுறுனு செஞ்ச ஆர்வம், கிளப் நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்புகள் என்கிட்ட வந்துச்சு. பெண்களுக்கான விஷயம் ஏதாச்சும் பண்ணணும்னு யோசிச்சு, சமையல் வகுப்பு ஆரம்பிச்சேன். நல்ல வரவேற்பு கிடைக்கவே, ஏப்ரல், மே மாதத்துல குழந்தைகளுக்கான சம்மர் கிளாஸ் நடத்தினேன். அடுத்ததா... கீ-போர்ட், பரதநாட்டியம், வெஸ்டர்ன் டான்ஸ், ஆர்ட் அண்ட் கிராஃப்ட், கராத்தேனு நிறைய வகுப்புகள் அடங்கிய 'ஹாபி சென்டர்’ ஆரம்பிச்சேன்.

ஏதோ ஒண்ணு ஆரம்பிச்சாச்சு, அப்பாடானு உட்காராம... புதுசா வேற என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிட்டே இருந்தாதான், வளர்ந்துட்டே இருக்க முடியும். அப்படி அடுத்ததா ஆரம்பிச்சது, லேடீஸ் ஃபிட்னஸ் சென்டர். இதுல ஒரு சின்ன பிஸினஸ் ட்ரிக் பண்ணி, அதோட சேர்ந்த மாதிரி பியூட்டி பார்லரும் ஆரம்பிச்சேன். எதிர்பார்த்த மாதிரியே... ஃபிட்னஸ் சென்டருக்கு வந்தவங்க பலரும், பியூட்டி பார்லருக்கும் கஸ்டமர் ஆனாங்க. லேடீஸ் கிளப் மாதிரி ஒரு கிளப்பை, அசோக் நகர்ல ஆரம்பிச்சேன். இங்கதான் 'விர்கோ ஈவன்ட்ஸ்’ங்கற என்னோட நிறுவனத்துக்கான நுனிக்கயிறை பிடிச்சேன்.

கிளப்ல... பெண்கள் தினம், சமையல் போட்டி, கோலப் போட்டி, ஸ்போர்ட்ஸ் டேனு நிறைய நிகழ்ச்சிகள் செய்தேன். இதில் உச்சகட்டமா 'அசோக் நகர் ஸ்பெஷல் விமன்’ போட்டியை ஐந்து வருடங்களா தொடர்ந்து நடத்தினதுல கிடைச்ச அனுபவம், 'இதை சென்னை முழுவதும் கவர் பண்ற மாதிரி 'மிஸஸ் சென்னை’னு ஏன் நடத்தக் கூடாது?’னு யோசிக்க வெச்சுது. கிளப் மூலமா அறிமுகமான லதா கிருஷ்ணனை பார்ட்னரா சேர்த்துக் கிட்டேன். 'விர்கோ ஈவன்ட்ஸ்’ தன்னோட முதல் நிகழ்ச்சியான 'மிஸஸ் சென்னை’யை வெற்றிகரமா நடத்தி முடிச்சுது. வெற்றிப் படிக்கட்டுகளில் தொடர்ந்தது பயணம். இதுவரை 12 முறை 'மிஸஸ் சென்னை’யும், ஒரு முறை 'மிஸ் அண்ட் மிஸஸ் சென்னை’யும் நடத்தியிருக்கேன். வீட்டு விசேஷங்கள், கார்ப்பரேட் ஃபங்ஷன்கள்னு எப்பவும் பிஸி'' என்று பெருமிதத்தோடு சொல்லும் பூர்ணிமா,
''ஏதாச்சும் பண்ணலாமே..?னு யோசிச்சிட்டுஇருக்கிற பெண்கள், உங்க சூழலையும் திறமையையும் பொறுத்து நம்பிக்கையோட ஒரு விஷயத்தை எடுத்துப் பண்ணுங்க. அதில் கால் ஊன்றிய பிறகு, அதோட தொடர்புடைய மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பிங்க. தொடர்ந்து உழைப்பைக் கொடுங்க. ஒரு கட்டத்தில் வெற்றி உங்களை வாரி அணைச்சுக்கும்!'' என்று வழிகாட்டுகிறார்!
- இந்துலேகா.சி படம்: பொன்.காசிராஜன்