சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

எளிதாக சமாளிக்க சூப்பர் சூத்திரங்கள் ஐடியா

சினிமா டிக்கெட் விலை ஏறினால், சினிமாவுக்குப் போகாமல் தவிர்த்துவிடலாம்; தங்கம் விலை எகிறினால், நகை வாங்காமல் கையைக் கட்டிக் கொண்டுவிடலாம். ஆனால்... அரிசி, பருப்பு, காய்கறி இப்படி உணவுப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டினால், சாப்பிடாமலா இருக்க முடியும்?!

இதோ, திரும்பிய பக்கமெல்லாம் 'பீன்ஸ் 100 ரூபாயாமே... சின்ன வெங்காயம் 150 ரூபாயைத் தாண்டிடுச்சாமே.... எப்படித்தான் சாப்பிடறது?' என்பதே பேச்சாக இருக்கிறது.

விண்ணை முட்டி, அதையும் தாண்டி போய்க் கொண்டிருக்கும் இந்த விலைவாசியைக் கண்டு அதிர்பவர்கள் ஒருபக்கம் என்றால், சாமர்த்தியமாக எதிர்கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். என்ன... இந்த சமாளிப்பு பார்ட்டிகளின் சதவிகிதம் மிகமிகக் குறைவு! மற்றபடி புலம்பித் தீர்ப்பவர்கள்தான் இங்கே அதிகம். அவர்களுக்காகவே விலைவாசி உயர்வை எதிர்கொண்டு, உணவு விஷயத்தைச் சமாளிக்க என்னென்ன மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்பதைப் பற்றி இங்கு விரிவாகப் பேசுகிறார்... சென்னை, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் மருத்துவ உணவியல் துறை விரிவுரையாளர் குந்தலா ரவி.

''எந்த விலை உயர்ந்தாலும், உணவுப் பொருள் விலை உயர்வு அளவுக்கு பிரச்னைகள் வெடிப்பதில்லை. காரணம்... அது நம்முடைய வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று என்பதுதான். அதனால்தான், பணக்காரர்களாக இருந்தாலும்கூட, அரிசி, பருப்பு, காய்கறி என்று விலை உயரும்போது அதிர ஆரம்பித்துவிடுகிறார்கள். அப்படியிருக்க... நடுத்தர மற்றும் ஏழைகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். விலைவாசி உயர்வு என்பது ஒரு பிரச்னைதான். ஆனால், அதற்காக அதிர்ந்து போய் உட்கார்ந்துவிடவா முடியும். அதேபோல என்ன விலையாக இருந்தாலும் வாங்கித்தான் சாப்பிட முடியுமா? அதனால், உணவு பற்றிய சில புரிதல்களை நாம் ஏற்படுத்திக்கொண்டால், குறைந்தபட்சம் விலைவாசி உயர்வினால் நம் உடலில் உயரும் ரத்த அழுத்தத்தையாவது கட்டுப்படுத்தி வைக்கலாமே!'' என்று சொல்லி சிரித்த குந்தலா, விலைவாசியை எளிதாக சமாளிப்பதற்கான சூத்திரங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்.

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

''நாம் உட்கொள்ளும் உணவு தானியம், பருப்பு, காய்கறி, பழம் மற்றும் பால் பொருட்கள் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து வகை உணவுப் பொருட்களிலும் வகைக்கு ஒன்று கட்டாயம் நம் உணவில் இருக்க வேண்டியது அவசியம். அதில் சரியான தேர்வையும், விலைவாசிக்குத் தகுந்த விகிதாச்சாரத்தையும் கடைபிடித்தால், விலையேற்றத்தின் பிடியில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளலாம்!

தயங்காமல் தேர்வு செய்யுங்கள் தானியங்களை!

நாம் உட்கொள்ளும் உணவில் மேலே சொன்ன ஐந்து வகை உணவுப் பொருட்களில் இருந்தும் ஓர் உணவுப் பொருள் இருந்தால் போதுமே ஒழிய, இந்தப் பொருளைத்தான் உட்கொள்ளவேண்டும் என்று எந்தவித கட்டாயமும் இல்லை. அந்த வகையில் தானிய வகைகளைப் பொறுத்தவரை, அரிசிதான் பிரதானம் என்பதில்லை. இன்று அரிசி விலை கிடுகிடுவெனச் செல்வதற்குக் காரணம், மக்கள் அனைவரும் அதை மட்டுமே நாடுவதால்தான். ஏன் குறைந்த விலையில் கிடைக்கும் மற்ற தானிய வகை உணவுப் பொருட்களையும் பயன்படுத்தினால் என்ன? சொல்லப் போனால், அவற்றில் அரிசியைக் காட்டிலும் அதிக சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக, நார்ச்சத்து நிறைந்த தானியங்களும் இங்கே இருக்கின்றன. இதையெல்லாம் புரிந்துகொண்டு... கம்பு, கேழ்வரகு, சோளம், கோதுமை போன்ற மற்ற தானியங்களையும் உணவாக்கப் பழக வேண்டும்.

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

சிறப்பு தரும் சீஸனல் காய்கறிகள்!

காய்கறிகளைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட காய்கறிகளையே வாங்காமல், அந்த வகையில் உள்ள வேறு ரக காய்களில் விலை குறைந்தவற்றை தேர்வு செய்யலாம். உதாரணமாக, பீன்ஸ் வாங்க மார்க்கெட்டுக்கு செல்லும்போது அதன் விலை ஏகத்துக்கும் இருந்தால், அதைத் தவிர்த்து, அதே ரக காய்கறிகளான அவரைக்காய், கொத்தவரங்காய் போன்றவற்றை தேர்வு செய்து வாங்கலாம். ஆனால், மக்களோ, 'அவ்வளவு விலையா..?’ என்று மலைத்தாலும்... அதே காயைப் பிடிவாதமாக வாங்கி, அதன் விலை மேலும் உயரவே வழிசெய்கிறார்கள். பொதுவாக, காய்கறிகளைக் குறிப்பிட்ட நாட்களில் அதிக வரத்துள்ள சீஸனல் காய்கறிகளாகப் பார்த்து வாங்கினால், விலை குறைவாக இருக்கும். மண்ணுக்கு மேல் விளைபவை, மண்ணுக்கு கீழ் விளைபவை, நீர்ச்சத்து மிகுந்தவை மற்றும் மற்ற காய்கறிகள்... இந்த நான்கு பிரதான காய்கறி வகைகளில், ஒரே வகையில் பல காய்களை தேர்வு செய்வதைவிட, ஒவ்வொன்றிலும் ஒரு காயாக தேர்வு செய்து வாங்குவதும் நல்லது.

பெரிய வெங்காயம் போதுமே!

வெங்காயத்தைப் பொறுத்தவரையில் அதிகமானோர் சின்ன வெங்காயத்தையே அதிக விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த வெங்காயத்தில் உள்ள அதே நார்ச்சத்துதான் பெரிய வெங்காயத்திலும் இருக்கிறது. இரண்டு ரக வெங்காயத்துக்கும் உள்ள ஒரே வேறுபாடு, சுவை மாறுபாடு மட்டுமே. அப்படியிருக்க, சுவை முக்கியமில்லை, குறைந்த செலவில் தரமான உணவு இருந்தாலே போதும் என்று நினைப்பவர்கள் பெரிய வெங்காயத்தைத் தேர்வு செய்து வாங்கலாம்.

கொய்யாவைவிட உயர்ந்ததில்லை ஆப்பிள்!

பழவகைகளில் அமெரிக்க ஆப்பிள், ஆஸ்திரேலிய ஆப்பிள், நியூசிலாந்து திராட்சை என்று வெளிநாட்டு பழவகைகளில் அதிக சத்துக்கள் இருப்பதாக பலரும் நினைக்கின்றோம். உண்மையில், உள்ளூர் தோட்டங்களில் விளையும் வாழை, சப்போட்டா, கொய்யா, பப்பாளிப் பழங்களிலேயே அதிக சத்துகள் நிரம்பியுள்ளன. எனவே, கிலோ 150 ரூபாய், 175 ரூபாய் என மலையளவு விற்கும் ஆப்பிளைவிட, கிலோ 20 ரூபாய் விற்கும் கொய்யா சிறந்தது என்பதை புரிந்து, நம்மூர்ப் பழங்களாக அதிகம் வாங்கப் பழகுங்கள், குறைந்த செலவில் அதிக ஆரோக்கியம் பெறுங்கள். அதிலும், அன்றைய நிலவரப்படி எந்தப் பழத்தின் விலை குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்து வாங்குவதும் சிறந்தது.

பால் பொருட்கள் அவசியமா?

பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை, இவை அனைத்துமே அதிக விலை கொண்டவைதான். காரணம், இதில் மற்ற உணவுப் பொருட்களைவிட அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன என்று மக்கள் மத்தியில் உருவான ஒரு மாயைதான். பாலில் மட்டுமல்ல, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்களிலும் பாலில் உள்ள சத்துக்கள் இருக்கின்றன. உதாரணமாக, கால்சியத்துக்காக பாலைச் சாப்பிடச் சொல்வார்கள். ஆனால், கேழ்வரகு கஞ்சி குடித்தாலே, நம் உடலுக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

பாலைப் பொறுத்தவரை சிக்கனமாகப் பயன்படுத்திப் பழக வேண்டும். உதாரணமாக ஒரு லிட்டர் பாலில் தண்ணீர் கலந்து டீ, காபி போட்டுக் குடிப்பதைக் காட்டிலும், அரை லிட்டர் பாலில் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சி, கொஞ்சமாகக் குடிக்கலாம். இதில் பணம் மிச்சமாவதோடு, அதிக சத்தும் கிடைக்கும். தயிர் பாக்கெட்களை அதிக விலை கொடுத்து கடையில் வாங்காமல், வீட்டிலேயே தயிர் தயாரிக்கலாம்.

பாலில் சத்துமாவு சேர்த்துக் காய்ச்சுபவர்கள், அந்த மாவை கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே தயாரிப்பது நலம். சத்துமாவில் இரண்டு தானிய வகைகள் மற்றும் இரண்டு பருப்பு வகைகள் சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக, தானிய வகையில் கேழ்வரகு மற்றும் புழுங்கலரிசியும், பருப்பு வகையில் பாசிப்பருப்பு மற்றும் பொட்டுக்கடலையையும் சேர்த்து, சுலபமாக நாமே வீட்டில் தயாரிக்கலாம்'' என்று விரிவாக விளக்கிய குந்தலா,

''இன்றைய விலைவாசி உயர்வைக் கண்டு அஞ்சாமல் சுலபமாக எதிர்கொள்ள மாற்று ஏற்பாடுகளும், மறுமுறை பயன்படுத்தும் தந்திரமும் போதுமானது. இப்படியெல்லாம் 'மாத்தி யோசி'த்து, அதையெல்லாம் செயல்படுத்தினாலே... விலைவாசி உயர்வை சுமையாக கருத்தாமல், சவாலாக எதிர்கொள்ளலாம்'' என்று சொன்னார்.

- சா.வடிவரசு, படங்கள்: ரா.மூகாம்பிகை

 விலைவாசி உயர்வைச் சமாளிக்கும் சில வழிமுறைகள்!

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

தானியம், பருப்பு, காய்கறி, பழம் மற்றும் பால் சம்பந்தப்பட்ட உணவு வகை பொருட்களில் ஒவ்வொரு வகையிலும் விலை குறைந்த ஒன்றாக தேர்வு செய்து வாங்கலாம்.

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

ஒரே பொருளை அதிக விலை கொடுத்து வாங்குவதைவிட, அதே தொகைக்கு, பலவகை உணவுப் பொருட்களை வாங்கலாம்.

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

 பீர்க்கங்காய் உள்ளிட்ட பொருட்களின் தோல்களை சட்னி செய்தும் பயன்படுத்தலாம். இதேபோல் முள்ளங்கியில் உள்ள கீரையை சாம்பார், ரசம் போன்றவற்றுக்கு பயன்படுத்தலாம். மீதமாகும் பால் மற்றும் மோரைக் கொண்டு மோர்க்குழம்பு செய்யலாம். இதேபோல் மற்ற பொருட்களையும் வீணடிக்காமல், வெறென்ன மாற்று வழிகளில் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் பயன்படுத்தலாம்.

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

 அரிதாகவும், விலை அதிகமாகவும் இருக்கும் காய்கறிகளை விலை குறையும்வரை தவிர்க்கலாம்.  

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

 குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை அதிகமாக வாங்கி, கூட்டு, பொரியல் என பலவிதங்களில் பயன்படுத்தலாம்.  

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

ஒரே ஒரு காயை மட்டும் கொண்டு சமைப்பதைவிட, கலவையாக காய்கறிகளைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, உருளைக்கிழங்கு பட்டர் பீன்ஸ் வறுவல், முட்டைகோஸ் கேரட் பொரியல், முருங்கைக்காய் மாங்காய் சாம்பார் என்று செய்யலாம்.

தக்காளிக்கு பதிலாக!

தக்காளி பிரச்னைதான், சமையலில் பெரும்பிரச்னையாக வடிவெடுத்து நிற்கிறது பலருக்கும். ''இந்தத் தக்காளி, கிலோ 60 ரூபாயாம்ல... அது இல்லாம சாம்பார், ரசம் இதெல்லாம் வைக்க முடியாதே?'' என்று கவலையில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.

இதைப்பற்றி பேசும் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் கிருஷ்ணமூர்த்தி, ''புளிப்புத் தன்மைக்காவே தக்காளி பயன்படுத்துகிறோம். வாங்க முடியாத விலையில் இருக்கும்போது, இரண்டு தக்காளி போடவேண்டிய இடத்தில் ஒன்று போட்டுவிட்டு, புளி அல்லது எலுமிச்சையையும் பயன்படுத்தி ஈடுசெய்யலாம்'' என்று சொன்னவர்,

விண்ணை முட்டும் விலைவாசி... கவலை வேண்டாம் ‘மாத்தி யோசி’!

''இன்றைக்கு பலரும் வீட்டுத்தோட்டம் பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இதை உடனடியாக வீடுகளில் அமல் செய்து கீரைகள், தக்காளி, கேரட், கத்திரிக்காய், முள்ளங்கி என்று விளைவித்து பயன்படுத்தலாமே!'' என்று ஆலோனையும் சொன்னார்.

கைகொடுக்கும் இயற்கை!

''விலைவாசி உயர்வுக்கு, இயற்கை உணவுகள் மூலமாகவே தீர்வைக் காண முடியும்'' என்கிறார்... சென்னையைச் சேர்ந்த 'இயற்கை பிரியன்' இரத்தின சக்திவேல். இவர், இயற்கை உணவுகள் பற்றிய நூல்களையும் எழுதியிருக்கிறார்.

''காய்கறிகளின் விலை எந்தளவுக்கு உயர்ந்தாலும், இயற்கை உணவு வகைகள் இருக்கும்வரை கவலையே வேண்டியதில்லை. 15 அல்லது 20 ரூபாயை வைத்தே ஒருவேளை உணவை சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் சாப்பிட முடியும். உணவைப் பொறுத்தவரையில் சமைத்துதான் சாப்பிட வேண்டும் என்பது கிடையாது. அப்படியேகூட சாப்பிடலாம். உதரணமாக, 2 தேங்காய் பத்தை, 2 பேரீட்சை, 50 கிராம் அளவில் ஏதாவதொரு முளைகட்டிய தானியம் இதை மட்டுமே சாப்பிட்டு, காலை உணவை முடித்துக் கொள்ளலாம். வெள்ளரிக்காய், கேரட், வாழைப்பழம், கொய்யாப்பழம் என எது மலிவாகக் கிடைக்கிறதோ, அதில் ஏதாவதொன்றை வாங்கி கூடவே சாப்பிடலாம்.

காலை, மதியம், மாலை மற்றும் இரவு என நான்கு வேளைகளுக்குமே இப்படி இயற்கை உணவுகளை வகைப்படுத்தி உண்ண முடியும். அதிலும், இயற்கை வகை உணவுகள் பற்றி இன்றைக்கு பரவலாகவே பேசப்படுகின்றது. இதையெல்லாம் மக்கள் பயன்படுத்திக் கொண்டால்... சுலபமாகவும், ஆரோக்கியமாகவும் உட்கொண்டு விலைவாசியை சுலபமாக எதிர்கொள்ளமுடியும்'' என்று தன் பங்குக்கு தெம்பு ஊட்டினார்.