Published:Updated:

இதோ எந்தன் தெய்வம்! - 5

மதங்களைக் கடந்த மரித்தி! கரு.முத்துஆன்மிகம்

##~##

சிலர் தேங்காய் உடைத்தோ... அல்லது ஊதுவத்தி கொளுத்தவோ செய்து, பிறகு கற்பூரம் ஏற்றி வணங்குகிறார்கள்; வேறு சிலரோ... மெழுகுவத்தி கொளுத்தி வைத்துவிட்டு மண்டியிட்டு அமர்ந்து ஜெபம் செய்கிறார்கள்; இன்னும் சிலர்... மண்டியிட்டு அமர்ந்து நமாஸ் செய்கிறார்கள். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு தகுந்தபடி வணங்கிச் செல்லும் சர்வமதத் தாயாக விளங்கிவருகிறாள்... அன்னை மரித்தியம்மன்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மூன்றாவது கிலோ மீட்டரில் இருக்கிறது நெடும்பலம். இதன் எல்லையில், கள்ளிக்குடி கிராமத்தின் துவக்கத்தில் இருக்கிறது இந்த மரித்தியம்மன் ஆலயம். இப்போது இது கிழக்கு கடற்கரைச் சாலை. நிமிடத்துக்கு நிமிடம் வாகனங்கள் பறக்கின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட வாகனங்கள் இங்கே நிறுத்தப்பட்டு, மக்கள் இறங்கி மரித்தியம்மனை வணங்கிவிட்டுத்தான் புறப்படுகிறார்கள். வழிச்செல்வோரை விழியென காக்கும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறாள் இந்த மரித்தியம்மன்!

ஒரு கல்லறை, அதன் மீது பூக்கள் தூவப்பட்டிருக்க, அதன் மண்டபத்தில் வேளாங்கண்ணி மாதாவின் சொரூபம் இருக்கிறது. முகப்பில் சிலுவை அடையாளம், கூடவே மாதா கோயிலின் மணி. இதைத்தான் 'மரித்தியம்மாள் கல்லறை கோயில்' என்று அழைக்கிறார்கள் பக்தர்கள்!

இதோ எந்தன் தெய்வம்! - 5

கோயிலின் நிர்வாகக் குழு உறுப்பினர்களில் மூத்தவரான சேசுதாஸ், ''இது கல்லறைதான். ராமநாதபுரத்தைச் சேர்ந்த மரியாள் என்கிற ஒன்பது வயது சிறுமியின் கல்லறை. அந்தச் சிறுமியின் அருள் ஆற்றலால் ஈர்க்கப்பட்ட பக்தர்களால் கோயிலாக மாறியிருக்கிறது!'' என்று முன்னுரை கொடுத்துவிட்டு, சிறுமி தெய்வமான கதையைத் தொடர்ந்தார்.

''சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. அப்போது ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதி கிறிஸ்தவர்கள், வேளாங்கண்ணிக்கு வழிபட கால்நடையாகத்தான் வருவார்கள். வழியில் சத்திரம் சாவடிகளில் தங்கி இளைப்பாறி நாள் கணக்காக நடந்துவந்து மாதாவை தரிசித்துப் போவார்கள். இந்தப் பாதை வெறும் வண்டித்தடமாக மட்டுமே இருந்தது. அப்படி பாதயாத்திரை

இதோ எந்தன் தெய்வம்! - 5

வந்த மரியாளின் தாய், தந்தையர் வேளாங்கண்ணி மாதாவை தரிசித்து ஊர் திரும்பும் வழியில், மரியாளுக்கு வைசூரி (அம்மை) கண்டுவிட்டது. என்றாலும், அவளை  பக்குவமாக அழைத்துக்கொண்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நெடும்பலத்தில் உள்ள சத்திரத்தில் இரவு தங்கியபோது, நோயின் கொடுமை அதிகமாகி, சிறுமி மரியாள் குளிர்ந்து போனாள். எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத அந்த காலகட்டத்தில், தெரியாத ஊரில் அறியாத மனிதர்களுக்கு மத்தியில் சிறுமியின் உடலை என்ன செய்வது என்றே தெரியாமல் அலறி தவித்தனர் பெற்றோர். ''மாதாவே... உங்களைக் காண வந்த எங்களுக்கு இப்படிப்பட்ட சோதனையை கொடுத்துவிட்டீர்களே...'' என்று இறைஞ்சினர்.

மன்றாடலுக்கு மனம் இறங்கிய மாதா, தன்னிடம் கலந்துவிட்ட மரியாளுக்கு புனிதம் செய்விக்க, மரியாள் தெய்வத்தில் கலந்தாள். இந்த ஊரில் பெரும் நிலச்சுவான்தாரரான என்.ஆர்.எஸ்.சாமியப்ப முதலியாரின் கனவில் வந்த மரியாள், தன் பெற்றோர் தன்னை இழந்து தவிப்பதை உணர்த்திவிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தரும்படி கேட்டிருக்கிறாள். அதனை செய்து கொடுத்தால், உயர் நீதிமன்றத்தில் நடக்கும் ஒரு வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும் என்றும் உத்தரவாதம் கொடுத்திருக்கிறாள். அந்த இரவில் தன் காரியக்காரரை அழைத்துக்கொண்டு சத்திரத்துக்கு வந்து பார்த்தால், அவருக்கு உணர்த்திய காட்சிகள் அங்கே உண்மையாக நடந்திருக்கிறது. தன் இடத்தில் இந்த பெண்ணை அடக்கம் செய்யவும், பெற்றோர் பத்திரமாக ஊர் திரும்பவும் ஏற்பாடுகளை செய்து தர காரியக்காரரிடம் சொல்லிவிட்டு, வழக்குக்காக சென்னை சென்றுவிட்டார் முதலியார்.

இங்கே, மரியாள் அடக்கம் செய்யப்பட... பெற்றோர் ராமநாதபுரம் அனுப்பி வைக்கப்பட்டனர். அதேசமயம், சென்னையில் பலநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த வழக்கு... அன்றைய தினம் முதலியாருக்கு சாதகமாக முடிந்தது. ஊர் திரும்பியவர், பலரிடமும் இதைச் சொல்ல, மரியாள் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு மரியாதை வந்தது. மண் குவியல் மீது நடப்பட்டிருந்த சிலுவைக் குச்சியை அடையாளமாக வைத்து, ஊர்க்காரர்கள் பூப்போட்டு வணங்க, அவர்களுக்கும் நல்லது நடந்திருக்கிறது.

ஒரு கட்டத்தில், அந்த வண்டிப்பாதை... சாலையாக மாற்றப்பட்டபோது அதை டெண்டர் எடுத்த காண்ட்ராக்டர் இந்த இடத்தில் வந்து அமர்ந்தார். அவருக்கு தன்னை உணர்த்திஇருக்கிறாள் மரியாள். அற்புதம் உணர்ந்த அவர், இங்கே சிறிய கல்லறை கட்டடத்தைக் கட்டினார். ஊர்க்காரர்கள் வணங்க, வழிப்போக்கர்களும் வணங்க, எல்லோருக்குமே நல்லது நடக்க ஆரம்பித்தது. இதுதான் மரியாள் கல்லறை, கோயிலாக மாறிய வரலாறு!'' என்று விவரித்து முடித்தார் சேசுதாஸ்.

இதோ எந்தன் தெய்வம்! - 5

எல்லா தரப்பு மக்களும் வணங்க ஆரம்பிக்க... அங்கே மரியாள், சாதாரண மக்களின் வழக்கப்படி அம்மனாக ஆனாள். மரியாளோடு அம்மன் சேர்ந்து மரியாளம்மன் என்று பெயர் மருவிப்போனது. நாளடைவில் அதுவும் மருவி இப்போது மரித்தியம்மன் என்ற பெயரில் அருளாட்சி செய்கிறாள். தங்கள் மதத்தை சேர்ந்த ஒரு சிறுமி தெய்வமாக அருள் செய்வதை உணர்ந்த திருத்துறைப்பூண்டி கிறிஸ்தவ நாடார்கள், கல்லறையை கோயிலாக மாற்றியிருக்கிறார்கள். தற்போது பெரிய மண்டபமும் கட்டப்பட்டிருக்கிறது. வழிப்போக்கர்களுக்கு இது இளைப்பாறும் இடமாகவும் ஆகியிருக்கிறது. மரியாளம்மனை வணங்கிவிட்டு மரம் நிழலில் தங்கி கட்டுச்சோறை சாப்பிட்டு, இளைப்பாறி கிளம்புகிறார்கள்.

''எதுவும் வாங்கி வரவேண்டியதில்லை, எந்த முறைகளையும் கடைபிடித்து வணங்க வேண்டியதில்லை. பூசாரி, அர்ச்சகர், மதகுருமார் என்று தெய்வத்துக்கும் பக்தர்களுக்கும் இடையிலும் யாருமில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த கல்லறைக் கோயிலுக்கு கதவுகளோ பூட்டோ கூட கிடையாது. இது மக்களின் கடவுள். எந்நேரமானாலும்... யார் வேண்டுமானாலும் வரலாம். இஷ்டப்படி வணங்கலாம். சுற்றிலும் உள்ள கிராமத்தினர் இங்கு வந்து மொட்டையடிக்கிறார்கள், காது குத்துகிறார்கள், கிடாவெட்டி பொங்கல் வைக்கிறார்கள். இப்படி மரித்தியம்மனை எல்லா மதத்தினரும் குலதெய்வமாகவே கும்பிடுகிறார்கள்!'' என்கிறார் கல்லறை கோயிலில் இருக்கும் அந்தோணி.

மத எல்லைகளை கடந்து, மனங்களை ஈர்த்திருக்கும் மரியாள்... உண்மையிலேயே ஒப்பற்ற சக்திதான்!

- தெய்வங்கள் பேசும்...

படங்கள்: கே.குணசீலன்

வழிகாட்டி

திருத்துறைப்பூண்டி நகரிலிருந்து மூன்றாவது கிலோ மீட்டரில் பைபாஸ் சாலையில் இருக்கிறது கல்லறை கோயில். பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து பேருந்துகளும் இந்த வழியாகத்தான் செல்லும். கள்ளிக்குடி நிறுத்தத்தில் இறங்க வேண்டும். பூக்களோ, மெழுகுவத்தியோ, தேங்காயோ... எதுவாக இருந்தாலும் திருத்துறைப்பூண்டியிலேயே வாங்கிக்கொள்ள வேண்டும். கோயில் வாசலில் கடைகள் எதுவும் இருக்காது. தொலைபேசி கிடையாது. சென்னையில் இருந்து தெற்கே ராமேஸ்வரம் யாத்திரை போகிறவர்கள், நாகப்பட்டினம் வழியாக செல்லும் இந்த கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்றால், மேலும் பல கோயில்களைத் தரிசிக்க முடியும்.