மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

குறுகுறு துறுதுறு!ரிமோட் ரீட்டாஸ்க்ரீன்ஸ்

##~##

ன் டி.வி-யில் ஒளிபரப்பாகிற விகடன் டெலிவிஸ்டாஸின் 'தெய்வ மகள்’ சீரியல்ல, ஹீரோயினோட தங்கையா 'தாரணி’ கேரக்டர்ல வந்து, உங்களையெல்லாம் அசத்துற ஷப்னம் பொண்ணு, நேரிலும் செம குறுகுறு, துறுதுறு!

''நேத்து ஃப்ரெண்ட்ஸ்கூட ஷாப்பிங் போனப்போ, 'உன்னை மாதிரியேதாம்மா என் பொண்ணும். எந்நேரமும் எங்கள வம்புக்கு இழுத்துக்கிட்டே இருப்பா!’னு சொல்லி ஒரு ஆன்ட்டி என் கன்னத்தோட கன்னம் ஒட்டி அன்போட அணைச்சுக்கிட்டாங்க. அடுத்த ஷெட்யூல் ஷூட் போறப்போ இதை டைரக்டர் குமரன் சார்கிட்ட மறக்காம சொல்லணும்!''

- அப்படி ஒரு குஷி ஷப்னம் முகத்தில்.

 கேபிள் கலாட்டா!

''சன் டி.வி 'கல்லூரிக் காலம்’ சீரியல்தான் என்னோட சின்னத்திரை என்ட்ரி ரீட்டா. அப்போ பத்தாவது படிச்சுட்டிருந்தேன். அடுத்து வசந்த் டி.வி 'டாப் ஸ்டார் சிங்கர் ஜூனியர்’ நிகழ்ச்சி ஆங்கரா தாவினேன். தொடர்ந்து விஜய் டி.வி 'மீரா’, கலைஞர் டி.வி 'உறவுக்கு கை கொடுப்போம்’, கே.டி.வி 'ஆல் இன் ஆல் அலமேலு’, ஜீ தமிழ் சேனல் 'மை நேம் இஸ் மங்கம்மா’, சன் டி.வி 'முத்தாரம்’, 'மருதாணி’, 'தெய்வ மகள்’னு பரபரப்பா போயிட்டிருக்கு''னு சந்தோஷமா சொன்னவங்களுக்கு, ஒரு வருத்தமும் இருக்கு. அது...

''ஷூட்டிங் ஷெட்யூல்களுக்கு நடுவுல என் ஃப்ரெண்ட்ஸை ரொம்பவே மிஸ் பண்றேன். சென்னை, எம்.ஜி.ஆர் யுனிவர்ஸிட்டியில் ரெண்டாம் வருஷம் பி.டெக் படிச்சுட்டிருக்கிற பொண்ணு நான். 'ஏய் ஷப்னா... அடுத்த வாரம் ஒரு ஜாலி அவுட்டிங்’னு தோழிங்க ஸ்கெட்ச் போடுவாங்க. அன்னிக்குனு பார்த்து ஷூட் வந்துடும். மறுநாள் முகத்தை தூக்கி வெச்சுப்பாளுங்க. அவங்களை கூல் பண்றதுக்குள்ள நான் டரியல் ஆகிடுவேன். இட்ஸ் ஆல் இன் த கேம்!''னு சொல்ற ஷப்னத்தோட குடும்பம், அம்மா, அப்பா, தம்பினு குட்டிக் குடும்பம்.

''எது கேட்டாலும் வாங்கிக் கொடுக்கும் பாசப் பெற்றோர். தம்பி ஆஷிக், பயங்கர வாலு. ஒருமுறை அவன் ஸ்கூல்ல ஒரு நிகழ்ச்சிக்கு என்னை விருந்தினரா வரக் கேட்டிருந்தாங்க. அன்னிக்கு வீட்டுக்கு வந்தவன், 'உன்னைப் போய் எங்க ஸ்கூல்ல கூப்பிட்டாங்களே... இனிமே ஸ்கூல் பக்கமே போகமாட்டேன்!’னு என்னை ஓட்டி எடுத்துட்டான். வீட்டுல எல்லாரும் சேர்ந்து என் சீரியல்களை ஆர்வமா பார்த்துட்டு இருக்கப்போ... ஸ்கிரீன்ல என்னைப் பார்த்ததும், 'ப்ப்ப்பா... யார்டா இந்தப் பொண்ணு? இவ்ளோ மேக்கப்... பேய் மாதிரி!’னு 'என்கேபிகே' பட ஸ்டைல்ல சொல்லி கடுப்பேத்துறதுல சாருக்கு ஈடில்லா மகிழ்ச்சி. அவன்கூட சண்டை போடுறதுல எனக்கு அளவில்லா சந்தோஷம்!''

- குறும்பா சிரிச்சாங்க ஷப்னம்.

 கேபிள் கலாட்டா!

''சென்னை, எத்திராஜ் காலேஜ்ல பி.பி.ஏ கோர்ஸுக்கு விண்ணப்பம் வாங்கப் போயிருந்தப்போ, தவறுதலா விஸ்காம் விண்ணப்பம் கையில் கிடைச்சுடுச்சு. சரி, இதையே முயற்சிப்போமேனு விண்ணப்பிச்சேன். கிளாஸ் டாப்பரா வந்து, கோர்ஸை முடிச்சேன்!''

- ஃப்ரெண்ட்லி அண்ட் பப்ளி பொண்ணு பிரியங்கா, சன் டி.வி, 'சூரிய வணக்கம்’ நிகழ்ச்சி தொகுப்பாளர்கள்ல ஒருத்தர்.

''விஸ்காம் முடிச்ச கையோட ஜீ தமிழ் சேனல்ல 'அழகிய பெண்ணே’, 'இசை அன்பிளக்டு’ நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைச்சுது. அந்த நேரம் மா.கா.பா ஆனந்த்தோட நட்பு கிடைக்க, விஜய் டி.வி-யில 'சினிமா... காரம்... காபி’ நிகழ்ச்சிக்கு மாறினேன். அந்த வாய்ப்புதான் 'சூரிய வணக்கம்’ நிகழ்ச்சிக்கு பாலமா அமைஞ்சுது. இந்த நிகழ்ச்சியில நிறைய பிரபலங்களை பேட்டி எடுக்கற த்ரில்லே தனி ரீட்டா.

சமீபத்துல 'குட்டிப்புலி’ புரமோ ஈவன்ட்ல பார்த்த சசிகுமார் சார், எங்க டீம்தான் தொகுத்து வழங்க இருக்கோம்னு தெரிஞ்சவொடன, 'அப்போ நிகழ்ச்சியை ஜாலியா கொண்டு போயிடுவாங்க!’னு பாராட்டிச் சொன்னப்போ, சந்தோஷமா இருந்துச்சு.''

- சமர்த்தா பேசினாங்க பிரியங்கா!

விஜய் டி.வி 'ஆபீஸ்’ சீரியல்ல ஹீரோவா வர்ற கார்த்திக், இப்போ பலருக்கும் டியர்.

''என்ன கார்த்திக்... எங்கயோ போயிட்டீங்க?!''னு கை கொடுத்தா,

''ஹாய் ரீட்டா! 'கனா காணும் காலங்கள்’ ஷூட் அப்போ மீட் பண்ணினது. வொர்க் எல்லாம் எப்படி போகுது?'' விசாரிப்போட பேசத் தொடங்கினார்.

''நானே எதிர்பார்க்கல ரீட்டா. ரெண்டு வருஷத்துக்கு முன் 'கனா காணும் காலங்கள்’ சீரியல்ல 22 பசங்கள்ல ஒருத்தனா ஸ்க்ரீன்ல முகம் காட்டினேன். இவ்ளோ சீக்கிரமாவே இன்னிக்கு ஹீரோ. 'நல்லா பண்ற’னு நிறைய பாராட்டுகள். என்னைத் தேர்ந்தெடுத்த விஜய் டி.வி. ரமணன் சாருக்குதான் நன்றி சொல்லணும்''னு சொல்ற கார்த்திக், சினிமா குடும்பத்துப் பையன்தான்.

 கேபிள் கலாட்டா!

''அப்பா சினிமாவில் 35 வருஷத்துக்கும் மேல புரொடக்ஷன் துறையில் வேலை பார்த்துக்கிட்டு இருக்காங்க. அதுதான் சின்ன வயசுல இருந்தே மீடியா மேல எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்திச்சு. ஸ்கூல் முடிச்ச கையோட அனிமேஷன் கோர்ஸ் சேர்ந்தேன். 2 வருஷம்தான் போச்சு... கடைசி செமஸ்டர் இன்னும் முடிக்கவே இல்லை. ராதிகா மேடத்தோட பிரதர் மோகன் ராதா சார்கிட்ட புரொடக்ஷன் துறையில அசிஸ்டன்ட்டா வேலைக்குச் சேர்ந்து, மீடியா பாடம் படிச்சேன். அந்த அனுபவத்தோட விஜய் டி.வி-யில புரொடக்ஷன் துறையில சேர்ந்த எனக்கு... எதிர்பாராத சான்ஸ்தான் சீரியல் ஆக்டர். இப்போ சினிமா வாய்ப்பும் வரத் தொடங்கிடுச்சு!''னு அளவா சிரிச்ச கார்த்திக்,

''சீரியலுக்கு அழகான கலர் கிடைக்க காரணமான எங்க டைரக்டர் பிரம்மா ஜி தேவ் சாருக்கு, டீமே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கோம்''னு ஃபீல் ஆனவர்கிட்ட,

''சரி சரி... சீரியல்ல சூப்பரா ரொமான்ஸ் பண்றீங்களே..? ரியல் லைஃப்ல ஏதாச்சும் லவ் டிராக் ஓடுதோ..?''னு கேட்டா, கண்கள் சுருங்கச் சிரிக்கிறார்.

''கண்டுபிடிச்சுட்டியே ரீட்டா! அது ஓர் அழகான காதல் கதை. இப்ப சொன்னா நான் மாட்டிப்பேன். கொஞ்ச நாள் ஆகட்டும். ரீட்டாவை கூப்பிட்டு டூயட் பேட்டி கொடுக்குறேன்!''னு எஸ்கேப் ஆனார் கார்த்திக்!

ஓ... ஹோ...!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வாசகிகள் விமர்சனம்                                                                     ஒவ்வொன்றுக்கும் பரிசு:

 கேபிள் கலாட்டா!

150

சரக்கு காட்சி அவசியமா?

''விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'ஆபீஸ்' தொடரில், ஒரு பெண் (காதலி) சரக்கு அடித்துவிட்டு, தன் காதலனிடம், 'டேய், உன்னை ரொம்ப பிடிச்சிருக்குடா... என்னை கூட்டிக்கிட்டு போயிடுடா' என்று உளறுகிறார்... அதை அந்தக் காதலன் ரசிக்கிறார். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும், இதுபோன்ற காட்சிகள் எல்லாம் அவசியமா?'' என்று ஆவேசப்படுகிறார் வடபழனியில் இருந்து ஜி.குப்புசுவாமி.

அண்ணாச்சி வார்த்தைகள் அருமை!

''சன் டி.வி-யில் கடந்த சில வாரங்களுக்கு முன் 'குட்டிச் சுட்டீஸ்'  நிகழ்ச்சியில் ஒரு சிறுவன், 'என்கவுன்ட்டரில் போட்டு தள்ளிடுவேன்' என்று நிகழ்ச்சியை நடத்தும் இமான் அண்ணாச்சியிடம் பேசியதைக் கேட்டு அதிர்ந்தே போனேன். அருகில் இருந்த சிறுமி, 'பெரியவர்களை அப்படியெல்லாம் பேசக்கூடாது' என்று சொன்னது ஆறுதலாக இருந்தது. நிகழ்ச்சி நிறைவுற்றபோது, ''சின்னக் குழந்தைகள் எது பேசினாலும் அழகுதான். ஆனால், தகாத வார்த்தைகள் பேசும்போது... திருத்த வேண்டும். நல்லது, கெட்டதை எடுத்துச் சொன்னால்தான், எதிர்காலத்தில் நல்லதொரு பிரஜையாக திகழ்வார்கள்'' என்று அண்ணாச்சி சொன்னது, அந்தக் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்ல... அனைத்து பெற்றோரும் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று'' என்று வேண்டுகோள் விடுக்கிறார் அஸ்தினாபுரத்தில் இருந்து கலாவதி.

நல்லதொரு விளம்பரம்!

''அது ஒரு சத்து பான விளம்பரம். அதில்... 'என் மகன், தானாகவே என்னை எப்போது தோற்கடித்த நினைக்கிறானோ அப்போதுதான் அவனுக்கு ஜெயிக்கிற பழக்கம் வரும். என்னை எப்போது அவன் தோற்கடிக்கிறானோ அன்று எனக்கு வெற்றி கிடைத்த மாதிரி. எந்த ஒரு பழக்க வழக்கமும் ஒரே நாளில் வந்துவிடாது. வேண்டுமென்றே விட்டுக் கொடுப்பதாலும், ஒரு பாடமாக சொல்லித் தருவதாலும் வந்துவிடாது' என்று சொல்கிறார். விளம்பரமாக இருந்தாலும், அந்த வார்த்தைகள் உற்சாகப்படுத்துவதாகவும் சிந்திக்க வைப்பதாகவும் இருப்பது சிறப்பு'' என்று பெருமிதப்படுகிறார் திருநின்றவூரில் இருந்து காயத்ரி வெங்கடேஸ்வரன்.