சுட்டீஸ்
ஸ்பெஷல் 1
Published:Updated:

குறைபாடுகளுக்கு ‘குட் பை’!

குறைபாடுகளுக்கு ‘குட் பை’!

##~##

தொட்டிலுக்கு மேல் கட்டி வைக்கும் வண்ண கிலுகிலுப்பை, அழுத்தினால் சத்தம் வரும் 'பீப்பீ’ பொம்மை, மேளம் அடிக்கும் யானை பொம்மை, கைதட்டி கொஞ்சி அழைக்கும் அம்மா... இப்படியான ஒலி, ஒளி விளையாட்டுகள் குழந்தையின் மகிழ்ச்சிக்கானவை மட்டுமல்ல... அதன் சீரான வளர்ச்சியை அறிவதற்கான ஜன்னலும்கூட!

ஆனால், ''இப்படியான எந்த சமிக்ஞைகளும், உங்கள் குழந்தையைத் திரும்பிப் பார்க்க வைக்கவில்லை என்றால், அது 'மிகவும் கவனிக்க' வேண்டிய விஷயம்'' என்று அழுத்தம் கொடுத்துச் சொல்கிறார்... சென்னை, சேத்துப்பட்டு, மேத்தா குழந்தைகள் நல மருத்துவமனையின் மருத்துவர் எஸ்.எழிலரசி.

''குழந்தையிடம்... கைத்தட்டியோ, அருகில் வரச்சொல்லி அழைத்து சைகை செய்தோ காட்டும்போது, குழந்தையும் பதிலுக்கு உங்களிடம் சமிக்ஞை (ஷிவீரீஸீணீறீ) செய்ய வேண்டும். அப்படி செய்யாமலிருந்தால்... அந்தக் குழந்தைக்கு ஏதாவது குறைபாடுகள் தென்படலாம். காது கேளாமை, வாய் பேசாமை, பார்வைக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு, ரத்த சோகை இது மாதிரியான நோய்கள் வருவதற்கான அறிகுறிகளை, சமிக்ஞை அற்று இருக்கும் குழந்தையின் நடவடிக்கையிலேயே சந்தேகித்து, மருத்துவரிடம் சென்று, பரிசோதித்து, சிகிச்சை மூலமாக குணம் பெறலாம்'' என்று சொல்லும் எழிலரசி, சிறு வயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிவதற்கான வழிமுறைகள் பற்றியெல்லாம் விரிவாக பேசினார்.

''பிறந்தவுடன், செயற்கை சுவாசம் கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு குறைபாடுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் நிறைய உள்ளது. குழந்தை பிறந்த ஆறு வாரங்களில் வெளிச்சம் பார்த்தவுடன் அதற்கு கண் கூசவேண்டும். திடீரென ஏற்படும் அசைவுகளுக்கு கண்களைச் சிமிட்ட வேண்டும். பொம்மைகளுடன் விளையாடும்போது தூரத்தில் உள்ள பொம்மைகளை தாவிப் பிடிக்காமல் அருகில் உள்ள பொம்மைகளைத் தாவிப் பிடித்தால், பார்வைக் குறைபாடு இருக்கலாம்.

குறைபாடுகளுக்கு ‘குட் பை’!

குழந்தையுடன் பேசும்போது குழந்தை வாய் திறந்து பதில் சொல்லாவிட்டாலும், கண் அசைத்து பதில் சொல்லும். கை தட்டும் போதோ அல்லது திடீரென ஒலி ஏற்படும் போதோ குழந்தையின் உடலில் அதிர்வு இருக்கும். மெல்லிய ஓசைக்கு குழந்தை திரும்பி பார்க்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். இப்படிச் செய்யாவிட்டால் காது கேளாமை வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

குழந்தை மூன்று மாதத்தில் ஆ, ஊ மாதிரியான ஒலிகளை எழுப்பும். இதை 'கூயிங்’ (சிஷீஷீவீஸீரீ) என்பார்கள். ஆறு மாதத்துக்குள் 'மா, கா' என்றும், எட்டு முதல் பத்து மாதத்துக்குள் 'தா, தா' என்றும் ஒலி எழுப்பும். ஒரு வயதிலிருந்து நான்கு வயதுக்குள் குழந்தை பேச ஆரம்பித்து விடும். இதுபோன்ற  அறிகுறிகள் தெரியவில்லை என்றால், பேச்சுக் குறைபாடு இருக்கலாம்.

குழந்தையினுடைய தலையின் அளவு வழக்கத்தை விட மிக சிறியதாகவோ சற்று பெரியதாகவோ இருக்குமெனில், மூளை வளர்ச்சிக் குறைபாடு இருக்கக்கூடும். அதிலும் மிகமிக சிறியதாக இருக்கும்பட்சத்தில் மூளை வளர்ச்சி குறைபாடு இருப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். தலை நிற்பதில் தாமதம், சிரிக்காமல் இருப்பது, கவிழ்வதில் தாமதம், சாதாரண செயல்பாடுகளில் ஈடுபாடில்லாமல் இருப்பது... இவையெல்லாம் மன வளர்ச்சியின்மைக்கான அறிகுறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.

ஆண் குழந்தை சிறுநீர் கழிக்கும்போது, சிறுநீரானது 'ஆர்க்' போல தூரமாக விழவேண்டும். பெண் குழந்தை தாராளமாகவும் வலி இல்லாமலும் சிறுநீர் கழிக்க வேண்டும். தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் வீக்கம் உள்ளதா என பார்க்க வேண்டும். சிறுநீர் கழிப்பதில் மாறுபாடு... வீக்கம் என்றிருந்தால், சிறுநீரகக் கோளாறின் அறிகுறியாகக்கூட இருக்கலாம். இரும்புச் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ரத்தசோகை ஏற்படலாம். குழந்தை வெளிறிய நிறத்துடன் இருக்கும். தகுந்த மருத்துவரை அணுகி ரத்தசோகையை நிவர்த்தி செய்து கொள்ளலாம்'' என்ற டாக்டர்,

குறைபாடுகளுக்கு ‘குட் பை’!

''கர்ப்ப காலத்தில் தாய்க்குப் போடப்படும் ஊசிகளை தவறாமல் போடுவதுடன் சத்தான உணவு முறையைக் கையாள்வதும் தேவையான ஒன்று. குழந்தைக்கு சத்தான உணவைக் கொடுப்பதுடன் சரியான நேரத்தில் தடுப்பூசியும் போட வேண்டும். இதற்கு குழந்தை நல மருத்துவரை மட்டுமே அணுக வேண்டும். ஒருவேளை குறைபாடுகள் கண்டறியப்பட்டால் அதை குணப்படுத்தும் மருத்துவ முறைகளும் சாத்தியமே'' என்று நம்பிக்கை அளித்தார்.

தொடர்ந்தவர், ''இரண்டு மாதக் குழந்தையோடு வந்தார் அதன் தாய். நான்கு கிலோ எடையில் அது கொழுகொழு என்றிருந்தது. ஆனால், ஓயாமல் அழுதபடி இருந்தது. 'குழந்தைக்கு பேதி' என்று சொன்னார் அந்தத் தாய். குழந்தையின் வயிற்றில் வீக்கம் இருந்ததைக் கவனித்த நான், 'ஸ்கேன் எடுக்க வேண்டும்’ என்றேன். 'பேதிக்கு ஸ்கேனா..? நாங்க யோசிச்சு சொல்றோம்’ என்று சென்றுவிட்டனர். மறுநாள், பேதி நின்றும் வயிற்று வலி தீரவில்லை என மீண்டும் குழந்தையுடன் வந்தனர். பரிசோதித்துப் பார்த்ததில், சந்தேகித்தது மாதிரியே குழந்தைக்கு சிறுநீரக அடைப்பு. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தோம். இப்போது பூரண குணமாகி எல்.கே.ஜி படிக்கிறது அந்தக் குழந்தை.

எனவே நோய், குறைபாடு என்றால் பயம் தேவையில்லை, தாமதப்படுத்தாத சிகிச்சையே முக்கியம். நோய்களைக் கண்டறியும் முதற்கட்ட பரிசோதனை கருவியாக, உங்கள் குழந்தைகளின் சமிக்ஞைகளையே கவனிக்கப் பழகுங்கள்!'' என்று அறிவுறுத்தினார் டாக்டர்.

ஒரு தாயால் மட்டுமே குழந்தையின் சமிக்ஞைகளை முழுமையாக உணர முடியும். செல்லக் குட்டியின் 'சிக்னல்’களை கண்காணியுங்கள், குறைபாடுகளுக்கு 'குட் பை' சொல்லுங்கள்!

- பொன்.விமலா

படம்: ரா.மூகாம்பிகை