Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 6

நீதிபதி கே.சந்துரு அவேர்னஸ்

சட்டத்தால் யுத்தம் செய்! - 6

'பொன்னு அடுப்பு வச்சு

##~##
பொங்க வச்சேன் சாதங்கறி
பொங்கி வெளியே வந்தா
பொகை போவச் சன்னலுண்டு
பொங்கி வெளியே வந்தா
புருசனில்லா பாவியென்பார்
ஆக்க அடுப்புமுண்டு
அனலும் போவ சன்னலுண்டு
ஆக்கி வெளியே வந்தா
அரசனில்லாப் பாவியென்பார்'

- ஓர் இளம்விதவையின் புலம்பலாக, இப்படி போகிறது நாடோடிப் பாடல் ஒன்று.

நமது நாட்டில் கணவனை இழந்த பெண்களுக்கு 'விதவை'கள் என்று பெயர் சூட்டி, நாமிழைத்த கொடுமைகளுக்கு பஞ்சமேதுமில்லை. அவையெல்லாம் ஏதோ கடந்த சில நூற்றாண்டுகளில் ஏற்பட்டவையல்ல. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன.

'கொய்ம் மழித்தலையடு கைம்மையுறக்
கலங்கிய கழிகல மகடூப்போல'

- மழிக்கப்பட்ட மொட்டைத் தலையுடன் இருந்த பெண்களின் நிலையை புறநானூற்றில் ஆவுர் மூலங்கிழார் இப்படி பாடுகிறார்.

'கணவனை இழந்த பெண், எவ்வளவு வேண்டுமானாலும் விரதம் இருக்கலாம். ஆனால், அவள் எக்காலத்திலும் மற்றொரு ஆணின் பெயரைச் சொல்லக் கூடாது...’

சட்டத்தால் யுத்தம் செய்! - 6

'ஒரு பெண் இறந்து போன கணவனுக்கு விசுவாசமாக இருக்கவில்லையென்றால், அடுத்த பிறவியில் பாவியின் கருப்பையில் தோன்றுவாள்.'

- விதவைகள் என்ன செய்யலாம்/செய்யக்கூடாது என்று இப்படி எல்லாம் பட்டியலிடுகிறது மனு சாஸ்திரம்!

19-ம் நூற்றாண்டிலேயே பண்டித ஈஸ்வர் சந்திர வித்யா சாகர், வீரேசலிங்கம் பந்துலு, நீதிபதி மஹாதேவ் கோவிந்த ரானடே, தயானந்த சரஸ்வதி... என்று பல சமூக சீர்திருத்தவாதிகள் விதவைகளுக்காக குரல் கொடுத்தனர்.

1976-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, மேற்கொள்ளப்பட்ட அரசியல் சட்டத் திருத்தத்தில், 'பெண் களின் கௌரவத்துக்கு எதிரான தரக்குறைவான நடைமுறைகளை முற்றிலும் துறக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், 21-ம் நூற்றாண்டு வந்த பின்னும் விதவைகளைப் பற்றிய கண்ணோட்டம் மாறவில்லை என்பது, இந்த வழக்கு மூலம் நமக்கு நிரூபணம் ஆகிறது.

ஆர்.மாலதி... 1977-ம் வருடம் காவல் துறையில் முதல் பிரிவு பெண் காவலராக நியமிக்கப்பட்டார். தலைமைக் காவலர், உதவி ஆய்வாளர் என்று பதவி உயர்வுகளும் பெற்றார். ஜூன் 2005-ல் அவருக்கு நீண்ட மருத்துவ விடுப்பு தேவைப்பட்டது. துறையின் விதிகளின்படி, மருத்துவக்குழுவின் பரிசோதனை முடிக்கப்பட்டு, ஆறுமாத விடுப்பு வழங்கப்பட்டது.

அது முடிந்தும் அவரால் பணியில் சேர முடியவில்லை. கணவர் கடுமையான இதயநோய் வாய்ப்பட்டு, வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், மேலும் விடுப்பு வழங்க விண்ணப்பித்தார். இடையில், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்தும் போனார். கணவரை இழந்து விதவையானதால், அதற்கு உரித்தான சமய சடங்குகள் கருதி மாலதிக்கு வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கணவரின் மறைவு குறித்து காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிந்தாலும், அவர் பதவியிலிருந்து 'விட்டோடி’ (Deserter) என்று அறிவிக்கப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

காவல்துறை தலைவருக்கு (DGP), அவர் அனுப்பிய சீராய்வு மனுவில் தனது கணவர் இதய நோயினால் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்குப் பிறகு இறந்துவிட்டதாலும், தான் சார்ந்த பிராமண சமூகத்தில் விதவையான பெண் கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் சம்பிரதாயத்தால் தனக்கு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டதாலும் வேலைக்கு வராத இக்கட்டான நெருக்கடியை விளக்கியிருந்தார். ஆனால், இந்த விளக்கத்துக்குள் எல்லாம் போகாமல், இயந்திரகதியில் செயல்பட்ட காவல் துறை தலைமையகம், பதவி நீக்க தண்டனையை 'கட்டாய ஓய்வு' என்று மட்டும் மாற்றி, மாலதி சம்பந்தப்பட்ட கோப்புகளை முடித்துக் கொண்டது.

கணவனையும் இழந்து, வேலையையும் இழந்த மாலதி, மனம் தளராமல் உயர் நீதிமன்றக் கதவுகளைத் தட்டினார். பணிநீக்கம் சம்பந்தமான கோப்புகளை வரவழைத்து பரிசீலித்த நீதிமன்றம், விசாரணைக்கு உரிய தேதிகளில் அவர் ஆஜராகாமல் இருந்தார் என்று குற்றம்சாட்டிய காவல்துறை, அவர் வராமலிருந்ததற்கான காரணத்தை குறிப்பிடாதது மட்டுமல்லாமல், கணவரது உடல்நிலை பற்றி அவர் அனுப்பிய கடிதத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாததையும் சுட்டிக் காட்டியது. விதவையான மாலதிக்கு விதிக்கப்பட்ட சமயக் கட்டுப்பாடுகள் பற்றி தனது அறியாமையை காட்டிக்கொண்ட அதிகாரிகள், அதே சமயம் துக்கம் விசாரிக்க நேரில் சென்ற பின்பும் அவரை 'விட்டோடி’ என்று எப்படி அறிவித்தனர் என்ற கேள்வியையும் உயர் நீதிமன்றம் கேட்டது.

'பெண்களுக்கெதிரான மடமைகளை விட்டொழிக்க வேண்டும்' என்று அரசியல் சட்டத்தின் அடிப்படை கடமைகளில் வரையறுக்கப்பட்டாலும், சமூகம் இன்னும் மாறவில்லையே என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்திய நீதிமன்றம், விதவைகளுக்கு சமூகத்தில் இழைக்கப்படும் கொடுமை சரித்திரத்தை தனது தீர்ப்பில் பதிவு செய்தது.

மாலதி வேலைக்கு வராதது குற்றமென்று கருதினாலும், ஒவ்வொரு குற்றத்துக்கும் உரிய தண்டனையை மட்டுமே வழங்க வேண்டுமேயன்றி, பொருத்தமற்ற முறையில் அதிகபட்ச தண்டனையை அளித்த காவல் துறை தலைமையகத்துக்குக் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், மீண்டும் பணித்தொடர்ச்சியுடன் மாலதிக்கு வேலையையும் பெற்றுத் தந்தது.

கணவனை இழந்த பின்பும், குடும்பத்தைக் காப்பாற்ற துணிவுடன் போராடிய மாலதி, பெண்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரம்!

- தொடர்வோம்...

படங்கள்: எம்.உசேன், ரா.மூகாம்பிகை

''தெய்வம் இருக்கறதை புரிஞ்சுக்கிட்டேன்!''

கணவரை இழந்து, பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் போலீஸ் உதவி ஆய்வாளர்மாலதியை மடிப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 6

''முப்பது வருஷமா போலீஸ் பணி அனுபவம் உள்ளவ நான். கணவர் இறந்தப்போ, அவரோட இழப்பு ஒரு பக்கம் என்னை வதைக்க, இன்னொரு பக்கம் நான் பார்த்துட்டு இருந்த வேலை பறிபோன கொடுமையை ஜீரணிக்கவே முடியல. அந்த நேரத்துல என் பசங்க சொன்ன ஆறுதலும் தைரியமும்தான் நீதிமன்றம்வரை கூட்டிட்டு போச்சு. அப்போதும் பலவழிகள்ல எனக்கு இடையூறு வந்துட்டுதான் இருந்தது. எல்லாத்தையும் எதிர்த்து நீதிமன்றத்தின் படிக்கட்டுக்களில் ஏறி போராடினேன். அந்த தெய்வம் இருக்கு என்ற நம்பிக்கையை நீதிபதி சந்துரு சார் கொடுத்த தீர்ப்புலதான் உணர்ந்தேன்.

'எந்தப் பிரச்னைனாலும் மனசு உடைஞ்சு வீட்டுல உட்காரக் கூடாது, நீதி கேட்டு போராடினா நிச்சயம் ஒருநாள் கிடைக்கும்’னு பாடம் கற்றுக்கொடுத்த அந்தத் தீர்ப்பு, எனக்கு மட்டுமான தீர்ப்பு இல்ல... 'பெண்’ என்பதனால பாதிக்கப்படுற ஒவ்வொரு பொண்ணுக்கும், போராட தெம்பு தரும் நம்பிக்கையோட புது அத்தியாயம்!'' என்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார்!

- சா.வடிவரசு