பதற்றம் தவிருங்கள்... முதலுதவி தாருங்கள்!
##~## |
தவழ ஆரம்பிக்கும் பருவத்திலிருந்து, பள்ளி செல்லத் துவங்கும் வரையான பருவம் வரை குழந்தைகளைக் கண்காணிப்பது சிரமமான காரியம். எப்போது எதைக் கொட்டும், எதை கவிழ்க்கும் என்று எந்த நேரத்திலும் விழிப்புடன் இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக... வாய், மூக்கு, காது, கண் என்று ஏதாவது பொருட்களை நுழைத்துக் கொண்டு, நம்மை உயிர் பதற வைப்பது... கஷ்டத்திலும் கஷ்டம்!
அதுபோன்ற சமயங்களில் அளிக்க வேண்டிய முதலுதவி மற்றும் அடுத்தக் கட்ட சிகிச்சைகள் பற்றி இரண்டு மருத்துவ நிபுணர்கள் இங்கே பேசுகிறார்கள். முதலில் பேசுகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த மனநல மருத்துவர் தியாகராஜன்.
தொண்டையில் சிக்கினால்!

''பொதுவாக, கையில் கிடைக்கும் சிறிய பொருட்களை குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்வார்கள். எனவே, எப்போதும் அவர்கள் கையில் எந்தப் பொருளும் கிடைக்காதவாறு கவனமாக இருக்க வேண்டும். அதையும் மீறி சில சமயங்களில் பட்டன், மாத்திரை, பல்பம் (எழுதுகுச்சி) போன்ற சிறிய பொருட்களை குழந்தை விளையாட்டாக வாயில் போட்டுக் குதப்பும். அப்போது தவறுதலாக உள்ளே சென்றுவிட்டால், உணவுக் குழலுக்கும் மூச்சுக் குழலுக்கும் நடுவில் உள்ள தொண்டைக்குழி என்று சொல்லக் கூடிய குரல்வளையில் சிக்கிக் கொண்டு குழந்தை விழி பிதுங்கிப் போய் மூச்சுவிட சிரமப்படும். அழுதுகொண்டே விநோத சத்தத்துடன் இருமி, தும்மி என அதை வெளிக்கொண்டு வர முயற்சி செய்யும்.
பெரியவர்கள் பதற்றம் அடை யாமல், நடந்ததை யூகித்துப் புரிந்து கொண்டு, முதலுதவி செய்ய வேண்டும். குழந்தையை மடியில் குப்புறப் போட்டு, அதன் தலை மட்டும் சற்று கீழாக இருக்கும்படி வைத்து, முதுகில் இரண்டு, மூன்று முறை ஓங்கித் தட்டினால்... தொண்டையில் சிக்கிய பொருள் மிகச்சுலபமாக வெளியே வந்து விழுந்து விடும். ஆனால், பதற்றத்தில் 'குய்யோ முறையோ' என்று கத்தி முதலுதவியை தாமதப்படுத்தி டாக்டரைத் தேடி ஓடுவதற்குள், சமயங்களில் மரணமும் சம்பவிக்கக் கூடும் ஜாக்கிரதை'' என்று எச்சரித்ததோடு,

''சந்தர்ப்பவசமாக சிக்கிய பொருள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தாத வகையில் தொண்டையில் அடைத்திருக்குமானால், மூச்சு விடுவதில் குழந்தைக்கு அதிக சிரமம் இல்லாதபட்சத்தில், நாமாக 'முதலுதவி’ என்கிற பெயரில் புதிய சிக்கலை ஏற்படுத்தாமல், டாக்டரிடம் அழைத்துச் செல்வதே புத்திசாலித்தனம்'' என்று தெளிவுபடுத்தினார்.
காதில் கவனம்!
அடுத்து, நம்மிடம் பேசியது... சென்னையின் பிரபல காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் குமரேசன்.
''காது, மூக்கு, தொண்டை இவற்றில் பொருட்களை உள்ளே நுழைப்பதற்கான முதல் சாய்ஸ்... காதுதான். ஏனென்றால், குழந்தையை குளிப்பாட்டி முடித்தபின்பு முதலில் காதைதான் சுத்தம் செய்வார்கள். அந்த குறுகுறுப்புக்கு உந்தப்பட்டு, எதற்கெடுத்தாலும் குழந்தைகள் காதிலேயே கையை வைத்துக் கொண்டிருக்கும். அதனால்தான், எந்தப் பொருட்கள் கைகளில் கிடைத்தாலும் உடனே காதில் போட்டுக் கொள்வார்கள்.
காதில் போட்டுக் கொள்ளும் பொருட்களில் இரும்பு, பிளாஸ்டிக், மணி போன்றவை ஒரு வகை. மற்றொரு வகை, தண்ணீரில் நனைந்தால் பெரிதாகக் கூடிய பாப்கார்ன், பஞ்சு போன்றவை. குழந்தைகளின் காதுகளில் வெளிப்பொருட்களோ, பூச்சிகளோ சென்றுவிட்டால், முதலில் நாம் செய்வது தண்ணீர் ஊற்றுவது. இது தவறான விஷயம். எந்தப் பொருளாக இருந்தாலும், எண்ணெயை ஊற்றலாம். பூச்சிகளாக இருந்தால் மிதந்து வெளிவந்துவிடும். குச்சி போன்ற பொருட்கள் ஏதேனும் இருந்தால்... நீங்களாக எதையும் செய்யாதீர்கள். டாக்டரிடம் அழைத்துச் செல்லுங்கள். நீங்களாக முயற்சிக்கும்போது, அது இன்னும்கூட உள்ளே சென்றுவிட வாய்ப்பிருக்கிறது.

மூக்கு பத்திரம்!
எப்பொழுதும் குழந்தைகள் மூக்கில் ஏதாவது ஒரு துளையில்தான் பொருட்களை நுழைத்துக் கொள்வார்கள். பயத்தின் காரணமாக அதைப் பற்றி வெளியில் சொல்ல மாட்டார்கள். நாமாகத்தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும். மூக்கிலிருந்து வித்தியாசமான வாசனை, மூக்கையே சொரிந்து கொண்டிருப்பது போன்றவற்றை வைத்து கண்டறியலாம். மூக்கில் ஏதாவது வெளிபொருள் இருக்கும்பட்சத்தில்... மூக்குப் பொடி மாதிரியான பொருட்களைப் பயன்படுத்தி தும்ம வைக்கக் கூடாது. தும்மும்போது பொருள் வெளியில் வந்துவிட்டால் பரவாயில்லை. மாறாக, மூச்சுக் குழலில் மாட்டிக் கொண்டால்... உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

இன்னும் சில குழந்தைகள் பெட்ரோல், மண்ணெண்ணெய் போன்றவற்றையும், டாய்லெட் கிளீனிங் திரவங்களையும் குடித்துவிட வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோலிய திரவங்களைக் குடித்தால், உடனடியாக நிமோனியா பாதிப்பும், டாய்லெட் கிளீனரை குடித்தால் 'ஸ்டெனோசிஸ்' பாதிப்பும் ஏற்படும். மூச்சுக் குழலும், உணவுக்குழலும் சுருங்கி, அடுத்தக் கட்டமாக ஓட்டைகள் விழுந்துவிடும். எனவே, சிறிதும் தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது'' என்று சொன்னார் மருத்துவர் குமரேசன்.
பொதுவாக குழந்தைகள் விஷயத்தில், 'கோல் எடுத்த குழந்தை குருடு’ என்றொரு பழமொழி உண்டு. இதன் பொருளை உணர்ந்து, பெரியவர்கள்தான் குழந்தைகள் விஷயத்தில் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்... வீண் பதற்றம் தவிர்த்து!
- வே. கிருஷ்ணவேணி
படங்கள்: ப.சரவணகுமார்
மாடல்: சாய் சூர்யா
சாம்பார் ஜாக்கிரதை!
அடுப்பிலிருந்து அப்போதுதான் இறக்கி வைத்த சாம்பார், ரசம், வெந்நீர் என்று ஏதாவதொன்றில் குழந்தைகள் கை, கால்களைவிட்டு... வெந்துபோய் புண்கள் சுமப்பது அடிக்கடி நடக்கும். சற்றும் தயங்காமல் குழாயைத் திறந்துவிட்டு, அதிக நேரம் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். 'காயத்தில் தண்ணீர் பட்டால் சீழ் பிடித்துக் கொள்ளும்' என்று சொல்லப்படுவது தவறான கருத்து. தோசை மாவு இருக்குமானால், அதை சுத்தமான கைகளால் எடுத்துக் காயத்தின் மீது தாராளமாகத் தடவலாம். பிறகு, டாக்டரிடம் அழைத்துச் செல்லலாம்.
கண்களைக் காப்பாற்றுங்கள்!
குழந்தையின் கண்களில் தூசு விழுந்தால், கண்களைக் கசக்க அனுமதிக்கக் கூடாது. கசக்கினால், கருவிழிப் படலத்தில் சிராய்ப்பு உண்டாகி, கண்ணில் வெள்ளையாக புரை விழுந்து விகார தோற்றம் மற்றும் பார்வை இழப்புகூட ஏற்படலாம். தூசு விழுந்தால், சிறு குழந்தைகளாக இருக்கும்பட்சத்தில் முடிந்தளவு சமாதானப்படுத்தி ஜாக்கிரதையாக நல்ல நீரில் கண்களை கழுவ வேண்டும். கொஞ்சம் விவரம் புரியும் வயதிலிருக்கும் குழந்தைகள் என்றால், அகலமான பாத்திரத்தில் நல்ல நீரை வைத்து, முகத்தை நீரில் மூழ்கச் செய்து கண்களை மூடித் திறக்கச் செய்யலாம். அதன் பிறகும் கண்கள் சிவந்திருந்து, குழந்தை அழுது கொண்டேயிருந்தால் மட்டும் கண் டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டவும்.
இரும்புப் பிசிறு, சிறுகுச்சி, ஊசி போன்றவை கண்ணில் குத்திவிட்டால், பார்வையே பறிபோகக்கூடிய ஆபத்து இருக்கிறது. எனவே, இமைகளை மூடச்செய்து, மெல்லிய சுத்தமான துணியை சின்னதாக மடித்து, கண்ணின் மேல் வைத்து அழுத்தாமல் கட்டுக்கட்டி உடனடியாக கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.