ரீடர்ஸ்

ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150 ஓவியங்கள்: ஹரன்
சாமிக்கெல்லாம் ஏ.சி!
கோயிலுக்குச் சென்றிருந்தோம். அக்னி நட்சத்திரம் என்பதால், மாலை 7 மணிக்கும் உஷ்ணம் தணியவில்லை. மூலவர் சந்நிதியில் பிரார்த்தனை முடித்து, வெளியேறுவதற்குள் வியர்வையில் நனைந்துவிட்டோம். வெளிப் பிராகாரத்துக்கு வந்து மின்விசிறிக்குக் கீழே அமர்ந்தபோது, 'அப்பாடா' என்றிருந்தது. என் மகள் சிவாத்மிகா மட்டும் சோகமாக என்னிடம் வந்து, ''நம்மளால கொஞ்சம் நேரம்கூட உள்ள நிக்க முடியல. ஆனா, சாமி எப்பவும் அந்த குட்டி ரூமுக்குள்ளயேதான் இருக்கு. பாவமில்லம்மா..?’' என்று கேட்க, அவளுடைய பூ மனதை ரசித்துக் கொண்டிருந்த வேளையில், வந்தான் என் மகன் தியானேஷ். ''கவலைப்படாத... நான் பெரியவனானதும் பெரிய கலெக்டராகி எல்லா கோயில் சாமிக்கும் ஏ.சி போட்டுக் கொடுக்குறேன்!'' என்று சமாதானம் சொல்ல, அனைவருக்கும் சிரிப்பு!
- உமா ஜெகதீசன், திருச்சி
அடிப்பிரதட்சணமும்... அக்கா கல்யாணமும்!
அம்மன் கோயிலில் தரிசனம் முடித்து பிராகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்தோம். அப்போது ஓர் இளம்பெண் அடிப்பிரதட்சணம் செய்து கொண்டிருந்தாள். அதைப் பார்த்த என் மகன், ''அந்த அக்கா ஏன் இப்படி நடக்கிறாங்க?'' என்றான். ''அந்தப் பெண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு சாமிகிட்ட வேண்டிக்கிட்டு நடக்குறாங்க...'' என்றேன். உடனே அந்த பெண் அருகே ஓடிய அவன், ''அக்கா கவலைப்படாதீங்க... நான் உங்களை கல்யாணம் கட்டிக்கிறேன்!'' என்று சொல்ல, அந்தப் பெண்ணும் மற்றவர்களும் அவன் குறும்புப் பேச்சை ரசித்துச் சிரித்தனர்!
- ஆர்.கௌரி, வேலூர்
##~## |
'பாட்டி... எனக்கும் வயசாயிடுச்சு!’
என் மூன்று வயதுப் பேரனுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் எனக்குச் சோர்வாகிவிடவே, ''பாட்டிக்கு வயசாயிடுச்சுடா... நீ போய் பொம்மையை எடுத்துட்டு வந்து விளையாடு'' என்று சொன்னேன். உடனே அவன், ''எனக்கும் வயசாயிடுச்சு. வேணும்னா அம்மாவை கேட்டுப் பாருங்க... நான் பிக் பாய் ஆயிட்டேன்னு அம்மா, அடிக்கடி சொல்லிட்டிருக்காங்க'' என்றதோடு, அதை நிரூபிப்பதற்காக தன் அம்மாவையும் சத்தம்போட்டு அவன் அழைக்க, அன்று மாலை வீட்டுக்கு வந்தவர்களுக்கெல்லாம், அதுதான் அன்றைய ஸ்பெஷல் ஜோக்!
- டி.டி.வசந்தா, அம்பத்தூர்