Published:Updated:

பியூட்டி பிளவுஸ்கள்! - 5

ஜுவல்லரி பிளவுஸ்!உஷா ரமேஷ்ஃபேஷன்

##~##

''விதம்விதமா புடவை கட்டும் பெண்களோட ஆர்வம், அதைவிட முக்கியத்துவம் கொடுத்து வகை வகையா பிளவுஸ்கள் தேர்வு செய்வது என இன்னிக்கு வளர்ந்திருக்கு. அதுக்கு ஏற்ற தீனிக்கு நான் கியாரன்ட்டி!'' என்று சிரிக்கிறார் உஷா ரமேஷ். இவர், 'உஷா ஸ்கூல் ஆஃப் இன்னோவேட்டிவ் ஆர்ட்ஸ்’ எனும் நிறுவனத்தின் உரிமையாளர். புடவை, பிளவுஸ் வேலைப்பாடுகளில் பெரிய மாணவர் பட்டாளத்தையும், வாடிக்கையாளர் வட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கும் கிரியேட்டிவ் பெண்!

''நான் பிறந்தது கள்ளக்குறிச்சி. வளர்ந்தது விருத்தாசலம். திருமணத் துக்குப் பிறகு சென்னை பிரவேசம். என்னோட சின்ன வயசு பொழுதுபோக்கு... கை வேலைப்பாடுகள்தான். அதுவே, இப்போ நிரந்தர தொழிலாயிடுச்சு. பல மாநிலங்களோட எம்ப்ராய்டரி கட்ச், கஸ¨தி, ரபேரி, காந்தா, ஆரி வேலைப்பாடுகளையும்; துருக்கி, இத்தாலி, பங்களாதேஷ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளோட எம்ப்ராய்டரி வகைகளையும்; தஞ்சாவூர், மைசூர், மியூரல், புடவை ஓவியங்களையும்; ஃபேஷன் நகைகள், பட்டுநூல் வகைகளும் செய்ய கற்றுத் தரும் 'உஷா ஸ்கூல் ஆஃப் இன்னோ வேட்டிவ் ஆர்ட்ஸ்’, 12 வருஷத்துக்கு முன்ன குடும்பத்தினர் ஒத்துழைப்போட ஆரம்பிச்சேன். தவிர, பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமா ஆர்ட் வேலைப்பாடுகளை கத்துக் கொடுக்கிறேன்'' என்று அறிமுகம் தரும் உஷா ரமேஷ், 'அவள்’ வாசகிகளுக்கு ஜுவல்லரி பிளவுஸ் வேலைப்பாட்டை கற்றுக் கொடுக்கிறார் இங்கு!

பியூட்டி பிளவுஸ்கள்! - 5

தேவையான பொருட்கள்:    1. 'டபுள் ஸ்டோன்’ சக்ரி (Chakri) ஒரு பாக்ஸ் - புடவையின் நிறத்துக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில், 2. தங்கநிற மணி - 2 சரம், 3. கியர் ஒயர், 4. கியர் லாக், 5. ஹோல்டர், 6. ஜரிநூல், 7. ஊசி, 8. கட்டர்.

செய்முறை: படம் 1: பிளவுஸ் துணியில், அதற்கான அளவு பிளவுஸை வைத்து, கழுத்து பாகத்தைக் குறித்துக் கொள்ளவும். அரை இன்ச் அளவில் மடித்து தைப்பதற்காக (Stitch Margin)  இன்னொரு லைனை அருகில் குறித்துக் கொள்ளவும்.

படம் 2: பிளவுஸின் பின் கழுத்துப் பகுதியில் கழுத்தின் சுற்றளவுக்கு தகுந்த மாதிரி நெக்லஸ் செய்ய வேண்டும். நெக்லஸ் செய்வதற்கு தேவையான அளவைவிட, கொஞ்சம் கூடுதலாகவே ஒயரை எடுத்துக் கொள்ளவும் (இறுதியில் முடிச்சுப் போடுவதற்கு இது தேவைப்படும்). நெக்லஸை, கோக்க ஆரம்பித்த தில் இருந்தே பிளவுஸில் வைத்து தைக்கத் தேவையில்லை. பிளவுஸில் அட்டாச் பண்ணாம லேயே கையில் வைத்து அடுத்தடுத்து சொல்வது போல் கோத்துக் கொள்ளவும்.

படம் 3: முதலில் கியர் ஒயர் எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியுள்ளதுபோல முதல் முனையில் ஆரம்பிக்கும் இடத்தில் கியர் லாக் போடவும்.

படம் 4: ஹோல்டரால் அந்த முடிச்சை அழுத்திக் கொள்ளவும்.

படம் 5: முடிச்சுப் போட்ட ஒயரில் ஒரு சக்ரியைக் கோக்கவும். அதைத் தொடர்ந்து 2 மணிகளையும், பிறகு ஒரு சக்ரியையும் சேர்த்துக் கோக்கவும்.

படம் 6: இதற்கு அடுத்தாற்போல் டபுள் ஸ்டோனை கோக்கவும்.

படம் 7: மீண்டும் ஒரு சக்ரி, 2 மணி, அடுத்து ஒரு சக்ரி, அதற்கு அடுத்தாற்போல் ஒரு டபுள் ஸ்டோன் என வரிசைப்படி கோத்துக் கொள்ளவும்.

பியூட்டி பிளவுஸ்கள்! - 5

படம் 8: இதேபோல் வரிசைப்படி முழு நெக்லஸையும் கோத்து முடித்தவுடன் கியர் லாக் போட்டு அழுத்தி லாக் செய்யவும்.

பியூட்டி பிளவுஸ்கள்! - 5

படம் 9: இந்த நெக்லஸை கழுத்தின் மேல்பக்கம் (இடது பக்கத்தில் இருந்து ஆரம்பிக்கவும்) தோள் பக்கத்தில் வைத்து, ஊசியில் ஜரி நூல் அல்லது மெஷின் நூல் கோத்து, பிளவுஸின் அடிப்பகுதியில் குத்தி மேலே எடுத்து தைத்துக் கொள்ளவும். நெக்லஸ் நகராமலிருக்க, எம்ப்ராய்டரி ஃபிரேமில் துணியை ஃபிக்ஸ் செய்துகொள்ளலாம்.

படம் 10: நெக்லஸில் கோத்துள்ள டபுள் ஸ்டோனின் அடியில் உள்ள ஹோலில், நூல் கோத்து பிளவுஸோடு சேர்த்து தைக்கவும். அப்போதுதான் நெக்லஸ் ஸ்டோன்கள் நகராமல் இருக்கும், எடையும் இழுக்காமல் இருக்கும். அதேபோல் டபுள் ஸ்டோனின் இரு பக்கமும் (கீழ், மேல்) தைத்தால்தான் ஸ்டோன் விழாமலிருக்கும்.

படம் 11: பிளவுஸின் முதுகுப் பகுதியில் அள்ளித் தெளித்தாற்போல் டபுள் ஸ்டோன், சக்ரியை அவரவர் விருப்பப்படி தைத்துக் கொள்ளலாம். இதேபோல் கைப்பகுதியிலும் செய்து கொள்லாம். ஜுவல்லரி பிளவுஸ் ரெடி!

இந்த பிளவுஸை அணியும்போது, முதுகுப்பகுதியிலும் நெக்லஸ் போட்ட மாதிரி இருக்கும். ஏற்கெனவே தைத்து முடித்துவிட்ட பிளவுஸிலும் இதைச் செய்யலாம். ஒரு பிளவுஸில் தைத்திருப்பதை, அப்படியே எடுத்து வேறு பிளவுஸிலும் அட்டாச் செய்யலாம்.

டிப்ஸ்: வாஷிங்மெஷினில் துவைக்கக் கூடாது. ஷாம்பு வாஷ்தான் ஜுவல்லரி பிளவுஸுக்கு மிகவும் பாதுகாப்பானது. அதோடு, அதிக நாட்கள் நிறம் மாறாமல் இருக்கும். சக்ரி, மணி, ஸ்டோன் நல்ல தரத்துடன் இருப்பது அவசியம்.

- தைப்போம்...

- வே.கிருஷ்ணவேணி

படங்கள்: எம்.உசேன் மாடல்: அபர்ணா