Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 7

நீதிபதி கே.சந்துருஅவேர்னஸ்

சட்டத்தால் யுத்தம் செய்! - 7

இந்தத் தொடர் உங்கள் நம்பிக்கை சுடர்

ன்று, தமிழ்நாட்டின் மக்கள்தொகை... 7 கோடியே 21 லட்சம். புழக்கத்தில் உள்ள செல்பேசி... 7 கோடியே 18 லட்சத்துக்கும் மேல். இப்படி பெரும்பான்மை மக்களின் வாழ்க்கையுடன் இணைபிரியா நண்பனாகிவிட்ட செல்பேசி, நீதிமன்றத்துக்குள் வர தடை போடப் பட்டிருக்கிறது.

##~##

தமிழகத்தில், சமீபத்தில் அரசு ஊழியர் ஒருவர், நீதிமன்ற நடவடிக்கைகளை செல்போனில் பதிவு செய்ததற்காக அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட, தடாலென்று நீதிபதிகளின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு தப்பினார். இதையடுத்து, அரசு ஊழியர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறை விதிகள் பற்றி தமிழக அரசு, ஓர் ஆணையையே வெளியிட்டிருக்கிறது!

இத்தகைய சூழலில்... ஏற்கெனவே அவமதிப்பு வழக்கு ஒன்றுக்காக, நீதிமன்றத்துக்குள் நடமாடிய ஒரு பெண் அதிகாரி... அங்கே செல்பேசியைப் பயன்படுத்தி, நீதிமன்றத்தை அவமதித்ததாக மீண்டும் ஒரு அவமதிப்பு வழக்கில் சிக்கி... நிலைகுலைந்து போனார். ஆனாலும், சுதாரித்துக் கொண்டவர், அப்படி வழக்கு தொடர்ந்தவர் மீதும், அந்த அம்பைத் திருப்பிவிட்டு, அவரை நிலைகுலைய வைத்து, கடைசியில் சிக்கலிலிருந்து மீண்டது... சுவாரசியமானதொரு அனுபவப் பாடம்!

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 4-ம் எண் நீதிமன்றத்தில், அன்றைய தினம் ஆஜராகியிருந்தார்.... சிவகங்கை கோட்டாட்சியர் துர்கா மூர்த்தி. பட்டியலிலிருந்த வழக்குகளைக் கூப்பிட்டுவிட்டு, அன்று போடப்பட்டிருந்த வழக்குகளைத் தள்ளி வைத்து, தனது சேம்பருக்கு சென்றுவிட்டார் நீதிபதி.

இந்த இடைவெளியில் இருக்கையில் அமர்ந்திருந்த துர்காவுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து செல்பேசியில் அழைப்பு. அலுவல் ரீதியாக நீதிமன்றத்துக்குள் இருக்கும் விவரத்தை தெரிவித்து, செல்பேசியை அணைத்துவிட்டார். முன்வரிசையில் சீருடை இல்லாமல் அமர்ந்திருந்த வழக்கறிஞர் ஒருவர், இதைப் புகைப்படமெடுத்தார். இதைப் பார்த்துவிட்ட துர்கா கேள்வி எழுப்ப... இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. நீதிமன்றத்துக்கு வெளியே வந்து. அதை மேலும் தெடர்ந்தனர். 'செல்பேசியை நீதிமன்றத்தில் உபயோகிப்பது அவமதிப்பு செயல் என்பது தெரியாதா? அங்கே உள்ள அறிவிப்பை பார்க்கவில்லையா?’ என்றார் வழக்கறிஞர்.

'நான் ஒரு ஆர்.டி.ஓ. நீதிமன்ற விதிமுறைகள் எனக்கும் தெரியும். அவசரமாக கலெக்டர் அலுவலகத் திலிருந்து வந்த அழைப்புக்கு, நீதிமன்றத்தில் இருப்பதைச் சொல்லி, செல்பேசியை துண்டித்துவிட்டேன்' என்று பதில் தந்த துர்கா, தன்னை அனுமதியின்றி புகைப்படம் எடுத்த வழக்கறிஞர், அதே செல்பேசியை நீதிமன்றத்தில் உபயோகப்படுத்தியது மட்டும், விதிகளை மீறுவதாகாதா... தன்னை மட்டும் குற்றம்சாட்டுவது நியாயமா... என்று கண்டித்தார்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 7

இதையடுத்து சில தினங்களில் ஒரு நாள்... சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடம் இருந்து நோட்டீஸ் வந்தது. கோர்ட்டை அவமதித்தது மற்றும் அவரது நடவடிக்கைகள் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது போன்ற காரணங்களுக்காக துர்கா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்போவதாக வழக்கறிஞர் கூறியிருந்தார். பதிலனுப்பிய துர்கா, 'நான் நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. நான் செல்பேசியை பயன்படுத்தியது நீதிமன்ற அவமதிப்பு என்றால்... என்னை செல்பேசியில் புகைப்படமெடுத்த வழக்கறிஞரும் அதே அவமதிப்பு குற்றத்துக்குள்ளாவார்' என்று பதிலனுப்பினார்.

நீதிமன்றத்துக்கு புகார் கடிதமொன்றை அனுப்பி, துர்கா மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்த வழக்கறிஞர், துர்கா தன்னை கெட்ட வார்த்தைகளால் திட்டி, மிரட்டியதாக அதே தினத்தில் ஒத்தக்கடை காவல் நிலையத்தில் கிரிமினல் புகாரும் கொடுத்தார். இவ்விரு வேண்டுகோள்களும் நிறைவேற்றப்படாததால்... அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் ஆஜராகும்படி துர்காவுக்கு உத்தரவிடப்பட்டது. அவரும் அதன்படி ஆஜரானவர், தனது தரப்பை எழுத்து மூலமாக தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், அவமதிப்பு மனுவை தள்ளுபடி செய்தது. கூடவே, அந்த வழக்கறிஞர் செல்பேசியை நீதிமன்றத்தில் பயன்படுத்தி துர்காவை புகைப்படமெடுத்ததையும் கண்டித்தது. நீதிமன்றத்தில் செல்பேசியை உபயோகப்படுத்துவது எப்படி வக்கீல்களுக்கு மிகவும் தேவைப்படும் செயல் என்றும், செல்பேசியை உபயோகப்படுத்தி பேசுவதன் மூலம் நீதி    மன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தாலன்றி, மற்ற காரியங்களுக்கு செல்பேசியை பயன்படுத்துவதைக் குற்ற   மாகக் கருத முடியாது என்றும் தீர்ப்பளித்தது நீதிமன்றம்.

நிம்மதி பெருமூச்சோடு புறப்பட்டார் துர்கா!

- தொடர்வோம்...

படம்: ரமேஷ் கந்தசாமி

''நேர்மை தோற்காது!''

துர்கா, இப்போது ஈரோடு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர். அவரிடம் அந்த செல்பேசி வழக்கு பற்றி பேசிக்கொண்டிருந்தபோது... ''குரூப் ஒன் தேர்வெழுதி, சிவகங்கை ஆர்.டி.ஓ-வாக பதவி ஏற்றேன். நேர்மை மட்டுமே என்னுடைய ஒரே பார்வையாக இருந்தது. அப்போது மானாமதுரையில் செங்குளம் கிராமத்தில் சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிக்கு விசிட் செய்து, முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்து, அங்கேயே 16 லட்ச ரூபாயை அபராதமாக விதித்தேன். அங்கிருந்த லாரி, பொக்லைன் வண்டி ஆகியவற்றை பறிமுதல் செய்தேன்.

குவாரியின் உரிமையாளர் ஆந்திராவைச் சேர்ந்த சீனிவாச ரெட்டி. குவாரியின் புரோக்கர் சுகுமாரன், என்னுடைய பி.ஏ மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும் எனக்கு 9 லட்ச ரூபாய் வரை லஞ்சம் கொடுக்க பலமுறை முயற்சித்தார். அது எதுவும் பலிக்காது என்பதை புரிந்துகொண்டு, மாற்றுவழி தேடி நீதிமன்றம் சென்றார். ஒரு வாரம் கழித்து வந்து என்னைப் பார்த்த குவாரி புரோக்கர், '7,500 ரூபாய் ஃபைன் கட்டிவிட்டு வண்டிகளை எடுத்துப் போகச் சொல்லி நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பு கொடுத்திருக்கிறது’ என்று வாய்மொழியாக சொன்னார். 'கோர்ட்டில் இருந்து எந்த உத்தரவும் எனக்கு வரவில்லை. அப்படி தீர்ப்பு வந்திருந்தாலும் குவாரி உரிமையாளரை வந்து அபராதத்தைக் கட்டச் சொல்லுங்கள்!’ என்று கண்டித்து அனுப்பினேன்.

இதற்கிடையில் எனக்கு கொலை மிரட்டல், என்னுடைய அலுவலக ஊழியர்களுக்கு மிரட்டல்.    நான் எதற்கும் அஞ்சவில்லை. நீதிமன்ற உத்தரவுப்படி வண்டியை விடாததால், குவாரியை சேர்ந்தவர்கள் அவமதிப்பு வழக்கு போட்டார்கள். அதற்காகத்தான் மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானேன். நான் கூண்டில் ஏறி நின்றதும், என்னை உற்றுப் பார்த்த நீதிபதி, 'பணியில் சேர்ந்து எவ்வளவு நாள்           ஆகிறது?' என்றார். 'மூன்று மாதம்’ என்றேன்.       சிரித்தவர், 'உடனே அனைத்தையும் மாற்றிவிட   முடியாது... நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை மதிக்க வேண்டும்' என்று கண்டித்துவிட்டு, 'வண்டியை எடுத்துச் செல்லலாம்' என்று அவர்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில்தான், 'கோர்ட் வளாகத்தில் செல்போன் பேசி, மீண்டும் கோர்ட்டை அவமதிப்பு செய்துவிட்டீர்கள்’ என்று குற்றம் சுமத்தி, என்னை சிக்க வைக்கப் பார்த்தார். நீதிபதி சந்துரு தீர்ப்பால் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு, நேர்மை எந்த இடத்திலும் தோற்காது என்ற உறுதியான நம்பிக்கையோடு தற்போது சிவகங்கையில் இருந்து மாறுதலாகி, ஈரோட்டில் நிமிர்ந்த நடையோடு நேர்மை குணத்தோடு பயணித்து வருகிறேன்!'' என்று தெம்பாகச் சொன்னார்!

- வீ.கே.ரமேஷ்