தீயா வேலை செய்றாங்க அகிலா!ரிமோட் ரீட்டாஸ்க்ரீன்ஸ்
##~## |
விஜய் டி.வி 'சரவணன் - மீனாட்சி’ சீரியல்ல 'சௌந்தர்யா’ கேரக்டர்ல வர்ற ரம்யா, திடீர்னு சாஃப்ட்வேர் துறையில் வேலை கிடைச்சு லண்டன் போயிடுறதா கதை நகருது. ''என்னாச்சு ரம்யா..?''னு உடனே அவங்களுக்கு போன் போட்டேன். மாலை, கப் காபியோட அவங்க வீட்டில் என் முன்னாடி உட்கார்ந்த ரம்யா, ''சீரியல்ஸ் அப்டேட்ல... ரீட்டா ரொம்பவே ஷார்ப்!''னு பாராட்டோட பேச்சைத் தொடங்கினாங்க.
''இந்த சீரியல்ல... சரவணன், மீனாட்சி கேரக்டர்களைப்போல தமிழ், சௌந்தர்யா கேரக்டர்களும் ஹிட். ஆனா, இப்போ கதைப்படி ஒரு சின்ன பிரேக். சீக்கிரமே வந்துடுவேன் ரீட்டா!''னு தகவல் சொன்னவங்க,
''2005-ல விஜய் டிவி-யில 'இது ஒரு காதல் கதை’ சீரியல்தான் சின்னத்திரை அறிமுகம். அந்த தொடர்ல பாவாடை - தாவணியில், கிராமத்துப் பொண்ணா நடிச்சேன். நல்ல ரீச். அடுத்ததா குட்டீஸ் முதல் பெரியவங்க வரை பிடிச்சவளாகிப் போனா, இந்த ரம்யா! சீரியல்ல என் இயர் ரிங்க்ஸ், காஸ்ட்யூம்ஸுக்கு எல்லாம் நிறைய பெண்கள் ரசிகைகள் தெரியுமா..? சன் டிவி 'மகாபாரதம்’, 'முத்தாரம்’ சீரியல்களிலும் நல்ல ஸ்கோர் ரீட்டா!''னு சொன்னவங்ககிட்ட,
''திருமணம் முடிஞ்ச பின்னும் ரெகுலர் காலேஜ், கூடவே பிஸியான நடிப்பு... எப்பூடி?''னு கேட்டா, காதல் கணவர் சங்கர் சத்தியமூர்த்தியை கை காட்டுறாங்க.
''இளங்கலை சோஷியாலஜி முடிச்சு, இப்போ எம்.ஏ, பப்ளிக் அட்மினிஸ்ட்ரேஷன் படிச்சுட்டிருக்கேன். சங்கரோட அன்பும் புரிதலும்தான் படிப்பு, நடிப்பு, குடும்பம்னு எல்லாத்துலயும் என்னை பேலன்ஸ் பண்ண வைக்குது. அவர் போட்டோகிராபர். உறவினர் ஒருவர் மூலமா அவர் நட்பு கிடைச்சு, காதலர்களாகி, ரெண்டு வருஷத்துக்கு முன்ன திருமணம் முடிஞ்சுது. அவர் எனக்கு கிடைச்ச கிஃப்ட்!''னு பெருமிதத்தோட சொன்ன ரம்யா, சீக்கிரமே சினிமாவிலும்.
''பாலுமகேந்திரா சார் படம் உட்பட ரெண்டு, மூணு படங்கள்ல நல்ல ரோல் கிடைச்சுருக்கு. பட பூஜைக்கு மறக்காம வந்துடணும்!''னு அழைப்போடு விடை தந்தாங்க ரம்யா!
தமிழைப் பார்த்துக்கோங்க!

ஐ லவ் மீடியா!
சன் டி.வி. 'தென்றல்’ சீரியலில் நியூ என்ட்ரி ஆகியிருக்காங்க அகிலா. ''விகடன் டெலிவிஸ்டாஸ் நிறுவனம் தயாரிக்கிற தொடர்களில் தொடர்ந்து நடிச்சுட்டே இருக்கேன் ரீட்டா. 'கோலங்கள்’, 'திருமதி செல்வம்’ வரிசையில் இப்போ 'தென்ற’லிலும் நான்! அந்த 'ரோஜா’ கேரக்டர், ஆரம்பத்தில் சாதுவான பெண்ணா தெரிவா. போகப் போக பாரு!''னு ட்விஸ்ட் வெச்ச அகிலா, சன் டி.வி. 'உதிரிப் பூக்கள்’, ஜெயா டி.வி. 'பக்த விஜயம்’னு பிஸி.
''மீடியா துறையைப் பொறுத்தவரைக்கும், நமக்கு கிடைக்கிற நேரத்தைப் பயன்படுத்தி, தொடர்ந்து சாதிப்பதற்கான வியூகத்தோடவே இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். ஷூட் இல்லாத நாட்களிலும் மீடியா சார்ந்த வேலைகளைதான் செய்துட்டு இருப்பேன். ஷாப்பிங், சினிமா போகணும்னு எனக்கு தோணினதே இல்லை. சின்ன பிரேக் கிடைச்சாலும் 80, 70-களின் பாடல் கேட்பது, அதோட மேக்கிங்கை கவனிச்சுப் பார்க்கறதுனு கழிப்பேன். இப்படி மீடியாவில் அர்ப்பணிப்போட இருக்கிறதாலதான், 9 வருஷமா சின்னத்திரையில் ஓரிடத்தை தொடர்ந்து தக்க வெச்சுட்டு வர்றேன்னு தோணுது!''னு நம்பிக்கையோட சொன்னவங்க, ஈவன்ட் ஷோக்களிலும் பிஸி.
''சின்ன வயதிலிருந்தே கிரியேட்டிவ் வேலைகள்ல ஆர்வமா இருப்பேன். அந்த ஆர்வம்தான், 'ஐடியா செல்லர்’ என்கிற பெயரில் மீடியா சர்வீஸ் கம்பெனி தொடங்க காரணம். சன் டி.வி-யில் டைரக்டரா இருந்த பிரதாப் சார் பங்களிப் போட சினிமா, கார்ப்பரேட் நிறுவன ஈவன்ட்னு நிறைய நடத்திட்டிருக்கோம். திரைப்பட நட்சத்திரங்கள் பங்குபெற்ற 20 - 20 கிரிக்கெட் மேட்ச், பிளாக் அண்ட் வொயிட் கால நட்சத்திரங்கள் கலந்துகிட்ட ஸ்பெஷல் ஷோ... என தொடர்ந்து நிகழ்த்தியிருக்கோம். அந்த வரிசையில் பின்னணி பாடகர் டி.எம்.எஸ். சார் நினைவாக 'டி.எம்.எஸ். அஞ்சலி’ என்கிற பெயரில் பழமையை கொண்டாடும் புதுமையான நிகழ்ச்சி ஒன்றை விரைவில் நடத்தும் வேலையும் நடந்துக்கிட்டிருக்கு!''
- சின்ஸியரா பேசினாங்க அகிலா.
தீயா வேலை செய்றாங்க அகிலா!

'கை பாம்’!
''சினிமா, சீரியல்ல புரொடக்ஷன் சீஃப்பா வேலை பார்க்கிற அப்பாகூட ஒரு தடவை ஷூட்டிங் பார்க்கப் போனேன். எனக்கும் நடிக்க ஆசை வந்துடுச்சு. வீட்டு மாடியில் குடியிருந்த சுரேஷ் அண்ணா, அசிஸ்டன்ட் டைரக்டரா வேலை பார்த்துக்கிட்டிருந்தாங்க. அவங்ககிட்ட என் ஆசையைச் சொன்னேன். விஜய் டி.வி. '7 சி’ சீரியலுக்கான ஆடிஷன் நடந்துட்டு இருக்க, அங்க என்னை அழைச்சுட்டுப் போனாங்க. 'ரௌடி மாதிரி நடிச்சுக்காட்டு’னு சொன்னாங்க... செய்தேன். கொஞ்ச நாள் கழிச்சு, நான் செலக்ட் ஆயிட்டதா சொன்னாங்க. என் சந்தோஷத்துக்கு அளவே இல்லை ரீட்டா அக்கா!'' - தான் 'கை பாம்’ ரோலுக்கு தேர்வான கதையை அத்தனை உற்சாகமா சொன்னார், மணிகண்டன்.
''அக்கா, ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க அடிக்கிற லூட்டிக்கு அளவே கிடையாது. சமீபத்துல ஒரு முறை ஏ.ஆர். கார்டன்ல ஷூட். அப்போ நான், மின்னல், கிருமி, பொட்டலம், இன்னும் சில பசங்க சேர்ந்து பெஞ்ச்சை உடைச்சுட்டோம். அதேபோல, டேக் ரெடியாகுற நேரத்துல ஓடிப்போய் ஒளிஞ்சுக்குவோம். ஷூட்டிங் ஸ்பாட்ல இருக்குற பாரதி, கதிர், பிரதாப், நாராயணன், சுரேஷ் இவங்க எல்லாம்தான் வழி நடத்தி, நடிக்க வைப்பாங்க. ஆனா, யாருமே எங்க சேட்டைக்கு கோபப்பட மாட்டாங்க. விஜய், அஜித் மாதிரி பெரிய நடிகனா வரணும். இல்லைனா... சச்சின் போல கிரிக்கெட்டரா வரணும்!''னு கனவு சொல்ற மணிகண்டன் படிக்கறது... ஒன்பதாம் வகுப்பு.
''அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, நான்னு அழகான குடும்பம். தினமும் ரெண்டு வார்த்தை திட்டினாதான் அப்பாவுக்கு பொழுதுபோகும், திட்டு வாங்கினாதான் எங்களுக்கு பொழுதுபோகும்!'' - கலகலனு சிரிக்கிறார் மணிகண்டன்.
மிட் டேர்ம் வரப்போகுது மணிகண்டா..!
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
வாசகிகள் விமர்சனம். ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
எல்லா தந்தைகளும் அப்படியா?
''ஜீ டி.வி-யில் சனி, ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது 'ஒரு தாயின் சபதம்’. மனைவி - குழந்தைகளை விட்டுவிட்டு தந்தை ஓடிவிட்டதாகவோ... அல்லது இறந்து விட்டதாகவோ காண்பிக்கிறார்கள். பிறகு, தாய்தான் அந்த குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். இந்நிகழ்ச்சி ஒரேமாதிரியான விதத்திலேயே இருக்கிறது. இதைப் பார்க்கும் பத்து, பன்னிரெண்டு வயது குழந்தைகள் மத்தியில் 'தந்தை’ என்கிற உறவு மீது தவறான அபிப்பிராயமே ஏற்படும். இது, என்போன்ற தாய்மாரின் மனதில் வெறுப்பை ஏற்படுத்துகிறது. எல்லா தந்தைகளும் அப்படி அல்ல என்கிற ஒரு சொற்றொடரையும் சேர்த்து ஒளிபரப்புவார்களா?'' என்று ஆதங்கத்துடன் கேட்கிறார் திருச்சி, தீரன் நகரில் இருந்து சுசீலா இளங்கோ.
அடிக்கடி ஒளிபரப்புங்கள்!
''பொதிகை டி.வி-யில் ஒளிபரப்பான 'ஹலோ உங்களுடன்’ நிகழ்ச்சியில் கல்வியியல் வல்லுநர் கே.ஆர்.மாலதி எந்தெந்த படிப்புகளில் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பதை தெளிவாகக் கூறினார். அத்துடன் உபயோகமான குறுகியகால பயிற்சிகள் பற்றியும் விளக்கினார். நல்ல பயனுள்ள இதுபோன்ற நிகழ்ச்சிகளை அடிக்கடி ஒளிபரப்பினால் எல்லோருக்கும் பயன்படும்'' என்று ஆலோசனை சொல்கிறார் கிருஷ்ணகிரியில் இருந்து ஜெயலட்சுமி வசந்தராசன்.
தடம்புரளாதீர்!
''விஜய் டி.வி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தடம் புரண்டு செல்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. முறையாக கர்னாடக சங்கீதம் கற்று, இனிமையாக பாடுபவர்களின் குரலை உடைத்து, நெரித்து 'இப்படிப் பாடு, அப்படிப் பாடு’ என்று சொல்லி இரண்டுங்கெட்டானாக ஆக்கி, அவர்களின் எதிர்காலத்தையே பாழடிக்கிறார்களோ என்று தோன்றுகிறது. தொகுப்பாளர்களின் இம்சை... சகிக்கவில்லை! 'சொப்பனசுந்தரி, கும்முனு இருக்கு, உம்முனு இருக்கு' என்றெல்லாம் கமென்ட் கொடுத்து, நிகழ்ச்சியை அருவருக்கச் செய்கிறார்கள்'' என்று சாடுகிறார் கோவையில் இருந்து என்.ரங்கநாயகி.