சிம்பிள் ப்ளஸ் கிராண்ட்!உஷா ரமேஷ்ஃபேஷன்
##~## |
'ஆரி வேலைப்பாடு, விதம்விதமான தையல்கள், நெக்லஸ் கோப்பது என்பது போன்ற வேலைகள் எல்லாம் தெரியாது; அதற்கெல்லாம் நேரமும் இல்லை. ஆனால், எளிமையான, அதேசமயம் கிராண்டான பிளவுஸ் டிசைன் ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும்’ என்பவர்களுக்கானது... மோட்டிஃப் பிளவுஸ் (Motif Blouse). இந்த டிசைன் செய்ய குறைந்தபட்ச நேரமே போதும் என்பதுடன், ஏற்கெனவே தைத்து முடித்துவிட்ட பிளவுஸிலும் இதைச் செய்துகொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு!'' எனும் உஷா ரமேஷ், அதற்கான செய்முறையை விளக்கினார்.
தேவையான பொருட்கள்: எம்ப்ராய்டரி ஃபிரேம், ஜரிநூல், ஊசி, ரெடிமேட் மோட்டிஃப் (ஃபேன்ஸி ஸ்டோர்களில் பல நிறங்களில், வகைகளில் கிடைக்கும். எளிதில் நிறம் மங்காத மோட்டிஃப் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். சைஸைப் பொறுத்து விலை மாறுபடும். இங்கே கழுத்துக்கு தேர்ந்தெடுத்திருக்கும் பூ மோட்டிஃப் ஒவ்வொன்றும் 30 ரூபாய், கைக்குத் தேர்ந்தெடுத்திருக்கும் மாங்காய் மோட்டிஃப் ஒன்றின் விலை 50 ரூபாய்).

படம் - 1: பிளவுஸ் துணியில் கழுத்து அளவு குறித்துக் கொள்ளவும். 1/2'' அளவில் (ஸ்டிச் மார்ஜின்) விட்டு, இன்னொரு லைன் வரைந்துகொள்ளவும்.
படம் - 2: தோள்பட்டை அளவை முதலில் குறித்துக்கொள்ளவும். அதன் பிறகு எம்ப்ராய்டரி ஃபிரேமில் இந்த குறிக்கப்பட்ட அளவை வைத்து, மோட்டிஃப் தைக்க வேண்டிய இடங்களை அடையாளமிட்டுக் கொள்ளவும்.
படம் - 3: ஊசியில் ஜரி நூல் கோத்து, மார்க் செய்துள்ள இடத்தில் மோட்டிஃப் வைத்து, சுற்றி தைக்கவும். தையல் வெளியில் தெரியாதபடி இருக்க வேண்டியது அவசியம்.
படம் - 4: மோட்டிஃப்... நெருக்கமாகவோ, தள்ளியோ தேவையான இடைவெளியில் தைக்கலாம். மார்க் செய்யப்பட்ட இடங்களில் எல்லாம் மோட்டிஃப் வைத்து தைத்தபின், அது பிளவுஸின் பின்னங்கழுத்தில் மாலை போல் தோன்றும். (ஆரி தையல் தெரிந்தவர்கள் இதைச் சுற்றி ஆரி தையல் போட்டுக் கொள்ளலாம். அதேபோல சங்கிலித் தையலும் போடலாம். அது நம் கற்பனை வளத்தைப் பொறுத்தது.)
படம் - 5: கைப்பகுதிக்கு வேறு மோட்டிஃப் டிசைனைத் தேர்ந்தெடுக்கலாம். கழுத்துப் பகுதிக்கு கொடுத்திருக்கும் அதே ஸ்டோன், நிறத்தினாலான மோட்டிஃப்பையே, கைப்பகுதிக்கும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது நினைவிருக்கட்டும். இங்கு கழுத்துப் பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூ மோட்டிஃப், கைப்பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாங்காய் மோட்டிஃப் இரண்டும் ஒன்றுபோல் இருப்பதைக் கவனியுங்கள். கைப்பகுதி பார்டரின் நடு இடத்தில் மார்க் செய்து, மோட்டிஃப் டிசைனின் மேற்பகுதியை மட்டும் துணியோடு சேர்த்து தைக்கவும்.

படம் - 6: கைக்கான மோட்டிஃப்பை தைத்து முடித்தவுடன், மாங்காய் டிசைனின் கீழ்ப்பகுதியை துணியோடு சேர்த்து தைக்காமல், ஃப்ரீ ஆக விடவும். இது டிரெண்டியாக இருக்கும். அனைத்து தையல் வேலைகளும் முடிந்தபின், பிளவுஸை ரிவர்ஸில் அயர்ன் செய்யவும். இப்போது அழகான மோட்டிஃப் டிசைன் பிளவுஸ் உங்கள் கைகளில்!
டிப்ஸ்: மோட்டிஃப் டிசைனை பிளவுஸ் மட்டுமின்றி புடவையின் பார்டர், சுடிதார், குர்தி, குட்டீஸ்களின் பாவாடையிலும் செய்யலாம். மோட்டிஃப் டிசைன் செய்த உடைகளை வாஷிங்மெஷினில் துவைக்கக் கூடாது.
- வே.கிருஷ்ணவேணி படங்கள்: எம்.உசேன் மாடல்: சரண்யா