Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 8

சத்துணவிலும் புகுந்த சாதி... பொங்கி எழுந்த போதுமல்லி!நீதிபதி கே.சந்துரு அவேர்னஸ்

##~##

 இந்தத் தொடர் உங்கள் நம்பிக்கை சுடர்

'இப்போதுள்ள நிலையில், பெற்றோர் விருப்பப்படி அவர்தம் குழந்தைகள் தனித்தனியாகச் சாப்பிடட்டும். ஆனால், எதிர்காலத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரே வரிசையில் அமர்ந்து உண்ண வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்' என்று தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் பி.வரதராஜுலு நாயுடுவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார், மகாத்மா காந்தி.

அப்போது... சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யர் நடத்திவந்த தமிழ் குருகுலப் பள்ளியில், மாணவர்களுக்கு சாதி அடிப்படையில் சாப்பாடு பரிமாறுவது நடந்து வந்தது. குருகுலம், தனியார் அமைப்புதான். என்றாலும், அதற்கு காங்கிரஸ் கட்சி நிதியுதவி அளித்திருந்தது. அதனால், அக்கட்சியைச் சேர்ந்த ஈ.வே.ரா பெரியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு போன்றோர், உணவு அளிக்கும்போது நடக்கும் சாதிபாகுபாட்டைக் கண்டித்தனர். 'குருகுலத்தார் இந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்றால், கட்சி அளிக்கும் நிதியுதவியை நிறுத்த வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும், இந்த விஷயத்தில் கட்சியில் கருத்தொற்றுமை ஏற்படாததால், பெரியார் மற்றும் வரதராஜுலு இருவரும் கட்சியை விட்டே விலகினர்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 8

இந்தியா சுதந்திரமடைந்து, தனக்கே ஓர் அரசியல் சட்டத்தை ஏற்படுத்தி, அதில் 17-வது பிரிவில் 'தீண்டாமை’யை எவ்வடிவத்திலும் பின்பற்றுவதற்குத் தடை' என்று விதிக்கப்பட்ட போதும்... தனிச்சேரிகள்; காலணிகளுடன் நடக்க தடை; டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை; ஊருக்கும் சேரிக்கும் இடையே ஒரு தடுப்புச் சுவர் என்று தீண்டாமை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறது. இந்நிலையில், ஏதோ ஒரு ரூபத்தில் தீண்டாமை தொடர்வதற்கு, அரசாங்கத்தின் உத்தரவே, துணைபோனால்...?

எம்.ஜி.ஆர். முதல்வர் பதவியில் இருந்தபோது... பள்ளிக் குழந்தைகளுக்கு சத்துணவு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசு, உள்ளாட்சி மற்றும் அரசின் நிதி உதவிபெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்ட சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் உதவியாளர் என்று மூன்று பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதற்காக தேர்ந்தெடுக்கப்படுபவர், சத்துணவு மையம் இருக்கும் கிராமத்திலிருந்து 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்க வேண்டும் என்கிற நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

தமிழகமெங்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பதவிகள் இதற்காக உருவாக்கப்பட்டாலும், தலித்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்படவில்லை. 'சத்துணவு மையத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்கவேண்டும்' என்கிற விதியை வைத்தே... தலித் மக்கள் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது. அதாவது, தலித் காலனிகள் ஊருக்கு வெளியே தூரத்தில் தள்ளி இருப்பதே... அவர்கள் வேலை நியமன தேர்விலிருந்து ஒதுக்கப்படுவதற்கு காரணமாகிப் போனது. அங்கன்வாடி மைய உதவியாளர்கள் நியமனத்திலும் இதே கதைதான்.

சட்டத்தால் யுத்தம் செய்! - 8

ஆனால், இந்த நவீன தீண்டாமைக்கு எதிராக கொதித்தெழுந்து களம் புகுந்தார்... ஒரு பெண். அவர், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போதுமல்லி. 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி மைய பணியிடங்கள் நிரப்புகையில் சமூகநீதி பின்பற்றப்படவில்லை. இடஒதுக்கீடு முறை இந்தப் பணிகளுக்கும் அமல்படுத்தப்பட வேண்டும்' என்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், வ.வே.சு அய்யர் ஏற்படுத்திய தமிழ் குருகுலம் பற்றிய சர்ச்சைகளை எடுத்துக்கூறியதோடு... 'இடஒதுக்கீட்டின்படி ஒரு தலித் பெண்மணிக்கு வேலையளிப்பது, வெறும் பொருளாதார அதிகாரம் வழங்கும் செயல் மட்டுமல்ல... சமுதாயத்தில் தலித்துகள் பற்றி இருக்கும் ஒருமுக நிலையை மாற்றுவதற்கும் இது உதவும். தலித் சமையலர் ஒருவர் சமைக்கும் உணவை உண்ணும் குழந்தைகள், தலித் மக்கள் மீது கடைபிடிக்கப்படும் தீண்டாமை வழக்கத்திலிருந்து எதிர்காலத்தில் விடுபடுவதற்கு உதவும்' என்றும் கூறியது.

'ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வசிக்க வேண்டும்' என்கிற மத்திய அரசின் சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றத் தேவையில்லை. தமிழகத்தில் கட்டாயமாக இடஒதுக்கீடு சுழற்சி முறையைப் பின்பற்ற வேண்டும்' என்று ஏப்ரல் 19, 2010 அன்று கொடுத்த தீர்ப்பில் நீதிமன்றம் உறுதிபடுத்தியது. அன்றைய முதல்வர் கருணாநிதி, உடனே இத்தீர்ப்பை அமல்படுத்தி, ஜூலை 6, 2010 அன்று சமூக நலத்துறை சார்பாக அரசாணை வெளியிட்டார். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் தலித் பெண்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உருவானது. இதற்கு முழுமுதற் காரணமே... ஒரு 'போராளி'யாக குரல் கொடுத்த போதுமல்லி! ஆனாலும், அவருக்கு இன்னமும் அந்த வேலை கிடைக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்!

தமிழகத்தைப் பின்பற்றி உ.பி. முதல்வர் மாயாவதி தன் மாநிலத்தில் வெளியிட்ட அரசாணை, ஆதிக்க சக்திகளின் பலத்த எதிர்ப்பினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்தியபிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில், சத்துணவு மையங்களில் தலித் சமையலர்கள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை அம்பலப்படுத்தியது. ஆனால், தமிழகத்தில் சமூக நீதிக்கான புரிதல் அதிகமிருப்பதால் போதுமல்லி பெற்ற தீர்ப்பு மிகப் பெரும் சமுதாயப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஆறுதல்!

- தொடர்வோம்...

படம்: கே.குணசீலன்

''தொடர்ந்து போராடுவேன்!''

திருவாரூர் மாவட்டம், கட்டக்குடி கிராமத்தில், சின்னஞ்சிறு குடிசையில் கணவர் தர்மராஜ் மற்றும் இரு குழந்தைகளுடன் வசிக்கிறார், போதுமல்லி.

''பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். கணவருக்கு கால் ஊனம். சரியான வருமானம் இல்லாததால, வறுமை வாட்டியெடுக்குது. என் மாமியாரும் விவசாய கூலி வேலைக்கு போய்தான் எங்களைக் காப்பாத்துறாங்க. அங்கன்வாடி பணியாளர் வேலை கிடைச்சா, ஓரளவுக்காவது நிம்மதியா வாழலாமேனுதான், 6 வருசமா முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். 2009-ம் வருசம் அங்கன்வாடி பணியாளர் நியமனத்தின்போது, இடஒதுக்கீடு அடிப்படையில் வேலை கொடுத்திருக்கணும். ஆனா தாழ்த்தப்பட்டோருக்கான பணியிடத்தை, பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுத்துட்டாங்க. உடனடியா, வழக்கு தொடர முடிவு பண்ணினேன்.

'இதெல்லாம் அரசாங்கம் சம்பந்தப்பட்டது. உன்னால எதுவும் பண்ண முடியாது. கோர்ட்டுக்கு போறது எல்லாம் சாதாரண காரியமில்ல’னு எங்க ஆளுங்களே நம்பிக்கை இல்லாம பேசினாங்க. ஆனாலும் நான் உறுதியா இருந்து, வழக்கு போட்டேன். 'இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்'னு நீதிபதி சந்துரு உத்தரவு போட்டார். இது மிகப்பெரிய வெற்றினு, தமிழ்நாடு முழுக்க உள்ள ஒட்டுமொத்த தாழ்த்தப்பட சமூகத்தினரும் மகிழ்ச்சி அடைஞ்சாங்க. எனக்கு வேலை தர சொல்லி, முதல்வர் அலுவலகத்தில் இருந்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கடிதமும் வந்துச்சு. ஆனாலும் உள்ளூர் அதிகாரிகள், இதுவரைக்கும் வேலை கொடுக்கல. சந்துரு அய்யா நியாயமா தீர்ப்பு வழங்கியும், அதோட பலன் இன்னமும் கிடைக்காமலே இருக்கு.

மறுபடியும் நீதிமன்றத்துக்கு போகப் போறேன். என்னுடைய சட்டப் போராட்டம் தொடர்ந்துக்கிட்டேதான் இருக்கும். எங்க ஊர்ல ஒரு அங்கன்வாடி பணியாளர் இடம் காலியா இருக்கு. அதுக்குதான் இப்ப முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்''

- இன்னும் கூடுதல் தெம்போடு பேசினார் போதுமல்லி.

- கு.ராமகிருஷ்ணன்