மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

“ஷூட்டிங் பார்க்க போனேன்... சீரியல் ஹீரோயின் ஆனேன்!”ரிமோட் ரீட்டாஸ்க்ரீன்ஸ்

##~##

''சன் டி.வி-யில் புதுசா ஒளிபரப்பாகத் தொடங்கியிருக்கிற 'தேவதை’ மெகா சீரியலில், 'பூரணி’ கேரக்டர்ல வர்ற ஹீரோயின் பொண்ணு... சீரியலோட தலைப்புக்குப் பொருத்தமா சர்வ லட்சணத்தோட தேவதை கணக்கா இருக்காடி!''

- பாட்டியோட பாராட்டை அப்படியே கொண்டுபோய் சுபத்ராகிட்ட சேர்த்தேன்.

''சின்னத்திரை ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போன பொண்ணு நான். ஏகப்பட்ட விளம்பரப் படங்கள், தொகுப்பாளினினு கடந்து இப்போ சீரியல் ஹீரோயினும் ஆயாச்சு. அதுவும் இந்த 'தேவதை’ ஆரம்பிச்ச ரெண்டு வாரத்திலேயே கொள்ளை கொள்ளையாய் பாராட்டுங்க குவியுது. அதுக்கு சீரியல் டைரக்டர், தயாரிப் பாளர் உள்ளிட்ட டீமுக்குத்தான் நன்றி சொல்ல ணும். ஜெயா டி.வி-யில் ஒளிபரப்பாகிற 'காலை மலர்’, 'திரும்பிப் பார்க்கிறேன்’ ரெண்டு நிகழ்ச்சிகளும்தான் எனக்கு நல்ல பிளாட்ஃபார்ம். விஜய் டி.வி-யில ஒளிபரப்பாகிற '7 சி’ சீரியல் கயல்விழி கேரக்டரும் நல்ல ரீச். இன்னும் நிறைய உழைக்கணும் ரீட்டா!''

- சின்னச் சின்ன சிரிப்புக்கு இடையில் பேசினார் சுபத்ரா.

''நான் தெக்கத்தி பொண்ணு ரீட்டா. திருவாரூர் பக்கத்துல இருக்கிற திருத்துறைப்பூண்டிதான் சொந்த ஊர். ப்ளஸ் டூ படிக்கும்போதே திருமணம் முடிஞ்சுடுச்சு. சொந்த மாமாவுக்கே கல்யாணம் பண்ணி வெச்சாங்க. குடும்பத்தோட இப்போ சென்னைவாசியாகிட்டோம். அவர் கார்மென்ட் தொழிலில் இருக்கார். கணவர் தரும் முழு சுதந்திரமும், அன்பும்தான் இப்போ இந்த பேட்டி கொடுக்குற அளவுக்கு கொண்டு வந்திருக்கு. கல்யாணமாயிட்டாலும், இப்போ ஓபன் யுனிவர்ஸிட்டியில் எம்.எஸ்சி., சைக்காலஜி படிச்சுட்டிருக்கேன்.''

''தேவதை சீரியல்ல உண்மையான காதலர்களை, பல தடைகளை எதிர்கொண்டு சேர்த்து வைக்கிறீங்களே... நிஜத்திலும் செய்வீங்களா...?''னு கேட்டா,

''அய்யய்...யோ... ஆளைவிடு ரீட்டா!''னு கும்பிடு போட்டாங்க சுபத்ரா!

 கேபிள் கலாட்டா!

கலக்கிட்டிருக்கார் 'ரோபோ’ சங்கர்!

''சேனல்ல காமெடியனா வலம் வந்துக்கிட்டிருந்த என்னை, கேம் ஷோ, டான்ஸ்னு நீயும்கூட எதிர்பார்த்திருக்க மாட்டியே ரீட்டா!''

- விஜய் டி.வியில் '60 நொடி... ஆர் யூ ரெடி’ த்ரில் கேம் ஷோ, 'ஜோடி சீஸன் 6’ நிகழ்ச்சியில் டான்ஸர்னு செம ஆட்டம் போட்டுட்டிருக்கார் 'ரோபோ’ சங்கர்.

''ஜோடி சீஸனை பார்த்துட்டு நிறைய பேர், 'இவ்ளோ நல்லா டான்ஸ் ஆடுவீங்களா?’னு ஆச்சர்யமா கேட்குறாங்க. என்னோட பார்ட்னர் சந்தியாவும் அதுக்குக் காரணம். '60 நொடி... ஆர் யூ ரெடி’ நிகழ்ச்சி செம த்ரில் ஷோ. பார்க்க ஜாலியா இருக்கும். ஆனா, விளையாடுறவங்களுக்கு ஹெவி பிரஷர். மிமிக்ரி ஆர்ட்டிஸ்டா சின்னத்திரைக்குள்ள வந்த எனக்கு, இன்னிக்கு காமெடியன், டான்ஸர், கேம் ஷோன்னு திரையில் இடம் கொடுத்த விஜய் டி.வி-க்கு நன்றி சொல்லணும்.

அடுத்து, விஜய் சேனல்ல 'காமெடியில் கலக்குவது எப்படி’னு புதிய நிகழ்ச்சி ஒண்ணு ஒளிபரப்பாக இருக்கு. அதோட ஆங்கர்... 'ரோபோ’ சங்கர். 'கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சி மூலமா ஒரு காமெடியான வந்து, இன்னிக்கு அதேபோல ஒரு காமெடி ஷோ ஆங்கரிங் செய்யப்போறது சந்தோஷமா இருக்கு ரீட்டா!'' என்னும் சங்கர், சினிமாவிலும் படுபிஸி.

''ஆமாம்... 'சின்னஞ்சிறிய வண்ணப் பறவை', 'இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, 'கப்பல்’னு சில படங்கள்ல நடிச்சுட்டிருக்கேன் ரீட்டா. 20 வருஷத்துல மிமிக்ரி, காமெடி ஆர்ட்டிஸ்டா 13,000 மேடைகள், 33 நாடுகள்னு சுத்தி வந்திருக்கேன். பின்னாடி திரும்பி பார்க்குறதைவிட... முன்னாடி பார்த்து இன்னும் ஓடிட்டே இருக்கணும்னு தோணுது!''

- சீரியஸா பேசினார் காமெடி 'ரோபோ’.

 கேபிள் கலாட்டா!

''வில்லியா இருக்கப் பிடிச்சிருக்கு!''

சின்னத்திரையோட ஃபேவரைட் வில்லி, வந்தனா. சன்.டி.வி... 'வம்சம்’, ஜீ தமிழ்... 'மாமியார் தேவை’ ரெண்டு சீரியல்களிலும் சகலகலா வில்லியா கலக்கிட்டிருக்காங்க.

''சீரியலுக்கு வந்த 14 வருஷங்கள்ல, பெரும்பாலான தொடர்கள் திமிர், ஆணவம்னு நெகட்டிவ் ரோல்தான் ரீட்டா. தொடர்ந்து தாய்க்குலங்கள்கிட்ட திட்டு வாங்கிட்டே இருக்கேன். ஆனா, அதுதான் எனக்குப் பிடிச்சுருக்கு. என்னைக் கேட்டா, சாந்தமான கேரக்டர்களைவிட, வில்லி ரோல்கள்தான் இப்போவெல்லாம் ஹிட். தவிர, ஹீரோயினைவிட வில்லியோட காஸ்ட்யூம்ஸ்தான் சீரியல்கள்ல ஹிட். அதனால நானும் காஸ்ட்யூம்ஸ், அக்ஸஸரீஸ்களுக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிறேன்''னு புருவங்களை உயர்த்தினாங்க கில்லி வில்லி வந்தனா.

''பத்தாவது பரீட்சை லீவில் நடிக்க வந்த நான், ராதிகா மேடத்தோட முதல் தெலுங்கு சீரியல் 'இதி கத காது’ (இது கதை அல்ல) சீரியல்ல அறிமுகமானேன். அதிலும் நிரோஷா மேடத்தை பழிவாங்கும் நெகட்டிவ் கேரக்டர். ஆனா... நிஜத்தில் வந்தனா ரொம்ப நல்லவ. சமையல், வீட்டுப் பராமரிப்புனு எல்லாம் பார்த்துப் பார்த்து பண்ற ஹோம்லி பொண்ணு. வேணும்னா என் காதல் கணவர் மைக்கேல் தங்கதுரைகிட்ட கேட்டுப்பார்... சர்டிஃபிகேட் கொடுப்பார்!''னு சொன்னவங்க,

''விஜய் டி.வி-யில ஒளிபரப்பான 'பாய்ஸ் வெர்ஸஸ் கேர்ள்ஸ்’ நிகழ்ச்சி மூலம் நட்பு கிடைச்சு, காதலாகி, கல்யாணம் பண்ணிக்கிட்டவங்க நாங்க. ரெண்டு பேருமே மீடியாவில் இருக்கறதால எங்களோட வேலைகளை நல்ல புரிதலோட பகிர்ந்துகிட்டு வாழ்க்கையை அழகாக்குறோம். மைக்கேல் இப்போ 'நளனும் நந்தினியும்’ படத்தில் ஹீரோவா நடிச்சிட்டிருக்கார்!''னு சந்தோஷமா செய்தி சொன்னாங்க வந்தனா!

அட, ஹீரோ பொண்டாட்டி!

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வாசகிகள் விமர்சனம்                                                 ஒவ்வொன்றுக்கும் பரிசு:

 கேபிள் கலாட்டா!

150

புண்ணிய காரியம்!

''சத்யம் டி.வி-யில் 'மயக்கமா... கலக்கமா?’ எனும் நிகழ்ச்சியை சமீபத்தில் பார்த்தேன். கணவர் ஒதுக்கிவிட்ட நிலையில், ஆதரவற்ற குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி வருவதோடு, அனாதைப் பிணங்களை எரிக்கும் புண்ணிய காரியத்தையும் செய்து வரும் ஆனந்தி அம்மாளின் பேட்டி... நெகிழ வைத்தது! இத்தகைய எளியோரின் பேட்டிகளை ஒளிபரப்பும் அந்த டி.வி-யின் பணி... பாராட்டுக்குரியது'' என்று உருகுகிறார் திருச்சியில் இருந்து சங்கீதா கணேசன்.

பரவட்டும் பாஸிட்டிவ் எண்ணங்கள்!

''பொதிகை டி.வி-யில் தினமும் காலை 8 மணி செய்திகளுக்குப் பிறகு, கர்ப்பப்பை - கருத்தரித்தல் - கரு பாதுகாப்பு என கர்ப்பப்பை தொடர்பான பல செய்திகளை தெளிவாகத் தருகிறார், டாக்டர் ஜெயம் கண்ணன். இதன் தொடர்ச்சியாக... மனவளக்கலை டாக்டர் பத்மஜா... ஐந்தே நிமிடத்தில் நம் மனதை உழுது, பழுது பார்த்து, பாஸிட்டிவான எண்ணங்களைப் பதிவு செய்கிறார். இவையிரண்டுமே... பெண்கள் பார்க்க வேண்டிய முக்கியமான நிகழ்ச்சிகள்'' என்று பரிந்துரைக்கிறார்... சென்னை, மயிலாப்பூரில் இருந்து லலிதா வெங்கடரமணன்.

அருமையான யுக்தி!

''அது... மசாலா ஓட்ஸ் விளம்பரம். அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் மனைவியை அடிக்கடி எழுப்பி, 'மறவாமல் மசாலா ஓட்ஸ் செய்து தருவாயா?' என்று கேட்கிறான் கணவன். காலையில் எழுந்து பார்த்தால்... மசாலா ஓட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் கணவன். 'என்னை எழுப்பக் கூடாதா?' என்று மனைவி கேட்க... 'நீ அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாய்... இந்தா உனக்கும் சேர்த்து ஒரு கப் மசாலா ஓட்ஸ் செய்திருக் கிறேன்’ என்கிறான் கணவன். விற்பனைக்கான நல்ல யுக்தி'' என்று பாராட்டுகிறார்... சென்னை, சேத்துப்பட்டில் இருந்து சந்திரமதி பெரியநாயகம்.