Published:Updated:

சட்டத்தால் யுத்தம் செய்! - 9

நீதிபதி கே.சந்துரு அவேர்னஸ்இந்தத் தொடர் உங்கள் நம்பிக்கை சுடர்

சட்டத்தால் யுத்தம் செய்! - 9

காவல்துறை என்பது, சட்டத்தால் மக்கள் உரிமைகளைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட ஒரு வேலி. அந்த வேலியே, பயிரை மேய்ந்தால்..? அதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்திய அபலை காளித்தாயின் கண்ணீர்க் கதை இது!

காளித்தாய், கணவன் மாரிச்சாமி இருவரும் கூலி வேலை செய்து ஜீவனம் நடத்துபவர்கள். நெல்லை மாவட்டம், நெல்கட்டும்செவல்  கிராமத்தில்

##~##
வசித்தனர். திடீரென மாரிச்சாமியுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த ராமர் மற்றும் முருகையா ஆகியோரை 16.9.1998 அன்று கைது செய்து, சங்கரன்கோவில்  காவல் நிலையத்துக்குக் காலை 9.30 மணிக்கு அழைத்துச் சென்றார்... காவல் ஆய்வாளர். எழுத்தர் அறையில் அவர்களை தங்க வைத்தவர்கள், காவல் நிலைய பதிவேடுகளில் இதைப் பற்றி எந்தக் குறிப்பையும் பதியவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு, கழிப்பறைக்கு சென்ற மாரிச்சாமி திரும்பி வரவில்லை. வெளியே சென்ற ஆய்வாளர் பகல் 12 மணிக்கு வந்தபோது, 'மாரிச்சாமி கழிப்பறையில் இறந்து கிடக்கிறான். லுங்கியில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்துவிட்டான்' என்று கூறினார் ரைட்டர்.

காவல் நிலைய சாவு என்பதால், விதிகளின்படி விசாரணை நடத்திய நெல்லை வருவாய் கோட்டாட்சியர், 'காவலர்கள் கடிந்து கொண்டதனால் மனமுடைந்து மாரிச்சாமி தற்கொலை செய்து கொண்டார்' என்பதாக கொடுத்த அறிக்கை, அரசுக்கு அனுப்பப்பட்டது.

நிலைகுலைந்து போன காளித்தாய், கணவனின் மரணத்துக்கு நியாயம் வேண்டி சென்னை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதமொன்றை எழுதினார். அதை ஒரு ரிட் மனுவாக பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டார் தலைமை நீதிபதி. தேசிய மனித உரிமை கமிஷனுக்கும் புகார் அனுப்பிய காளித்தாய், மாரிச்சாமியின் மரணத்துக்கு நஷ்டஈடு தரவேண்டும் என்று தனி ரிட் மனுவையும் தாக்கல் செய்தார்.

கோட்டாட்சியரின் அறிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, 'மாரிச்சாமி தற்கொலை செய்துகொண்டு இறந்து போனாலும், கைது செய்த காவல்துறையினர், கைது விவரத்தை பதிவு செய்யவில்லை. மாரிச்சாமி தற்கொலை    செய்துகொள்வதற்கு ஏதுவாக, கவனக் குறைவுடன் இருந்துள்ளனர்' என்று அறிக்கை வெளியிட்டது. கூடவே, காவல் ஆய்வாளர் விஜயராகவன், உதவி ஆய்வாளர் கோட்டைச்சாமி, தலைமைக் காவலர் சமுத்திரவேல், முதல்நிலைக் காவலர்கள் வெங்கடாசலம் மற்றும் காசிபாண்டியன், உதவி ரைட்டர் சோலைச்சாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்க உத்தரவிட்டது. ஊதிய வெட்டு போன்ற சிறு தண்டனைகளை விதித்து கோப்பை முடித்துக் கொண்டார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு பதிலளித்த தமிழக அரசு, 'காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது' என்று விஷயத்தையே முடக்கிப் போட்டது!

சட்டத்தால் யுத்தம் செய்! - 9

இதற்கிடையே... உயர் நீதிமன்றம் சுயமாகவே எடுத்துக் கொண்ட வழக்கில், காளித்தாய்க்கு உதவி செய்ய ஒரு வழக்கறிஞரை (Amicus curiae) நியமித்தது. வழக்கு பதிவு செய்து 7 ஆண்டுகள் கழித்து விசாரணைக்கு வந்தபோது, கோர்ட் நியமித்த வக்கீல் ஆஜராகாததால் இரு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. இது எதுவுமே அறியாத காளித்தாய், நீதிமன்றத்திலிருந்து நீதி கிடைக்கும் என்று நம்பி 10 வருடமாக காலத்தைக் கடத்தி வந்தார்.

நஷ்டஈடு கேட்டு அவர் தாக்கல் செய்த ரிட் மனு, ஒரு தனி நீதிபதியிடம் 2009-ல் விசாரணைக்கு வந்தபோது... 'காளித்தாய் பெயரில் ஏற்கெனவே பதிவான வழக்கு, இரண்டு நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்சால் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால் அவருக்கு நிவாரணம் ஏதும் அளிக்க முடியாது' என்று வாதிட்டனர் அரசுத் தரப்பில். பின்னர் பழைய ரெக்கார்டுகளைப் பார்த்த தனி நீதிபதி, காளித்தாய்க்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டு மீண்டும் அவரது வழக்கை ஒரு டிவிஷன் பெஞ்ச் விசாரிக்க உத்திரவிடும்படி தலைமை நீதிபதியைக் கேட்டுக் கொண்டார். அதன்படி அவரது வழக்கு வேறு ஒரு டிவிஷன் பெஞ்ச் விசாரணைக்கு அனுப்பப்பட்டது.

'மாரிச்சாமி தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார். அவருக்கு 98-ம் வருட அரசாணையின்படி நஷ்டஈடு கொடுக்க சட்டத்தில் வழியில்லை' என்று அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தது. ஆனால், நீதிபதி P.K..மிஸ்ரா தலைமை வகித்த வந்த டிவிஷன் பெஞ்ச், அரசு தரப்பை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், மாரிச்சாமியை கைது செய்ததை பதிவு செய்யாத காவல்துறையின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது. அவர், காவல்துறை கண்காணிப்பில் இருந்தபோது இறந்து போனதால், அதற்கு முழுப்பொறுப்பு அவர்களையே சார்ந்தது. மேலும், தமிழக அரசே காவலர்களின் கவனக்குறைவு பற்றி துறை விசாரணை நடத்தி, அவர்களுக்கு தண்டனை வழங்கி இருப்பதால், சம்பவத்துக்குப் பொறுப்பேற்று, காளித்தாய்க்கு நஷ்டஈடாக 2 லட்ச ரூபாயை இரு மாதங்களுக்குள் அரசு கொடுக்க வேண்டும்' என்று கறாராக உத்தரவிட்டது.

கணவனைப் பறிகொடுத்த காளித்தாய்க்கு, காவல்துறையுடன் போராடி, சட்டத்தின் பலனைப் பெற்றுக் கொடுத்தது நீதி!

- தொடர்வோம்...

படம்: எல்.ராஜேந்திரன்

''மனசுக்கு நிம்மதியா இருக்கு!''

தற்போதும் நெல்கட்டும்செவல் கிராமத்தில் வசித்து வரும் காளித்தாய், ''கல்யாணம் ஆன ஏழாவது நாள்ல எங்க வீட்டுக்காரரை போலீஸ் புடிச்சுட்டு போச்சுது. 'சந்தேக கேஸ் சம்பந்தமா விசாரிக்க வேண்டியிருக்கு. முடிச்சுட்டு விட்டுருவோம்’னு சங்கரன்கோவில் ஸ்டேஷனை சேர்ந்த போலீஸ்காரங்க சொல்லிட்டு கூட்டிட்டு போனாங்க. அன்னிக்குதான் அவரை கடைசியா பார்த்தது. மறுநாளே நெஞ்சுவலியால இறந்துட்டதா தகவல் வந்துருச்சு. உயிரை சுருட்டிட்டு ஓடினேன். ஆஸ்பத்திரியில அவரோட உடம்பெல்லாம் காயமா இருந்ததைப் பார்த்தேன். எங்க வீட்டுக்காரரை போலீஸ்காரங்க அடிச்சே கொன்னுட்டாங்கனு புரிஞ்சுக்கிட்டேன். எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. இருந்தாலும், தப்பு எதுவும் செய்யாத அவரோட உயிரைப் பறிச்ச போலீஸ்காரங்களை சும்மா விடக்கூடாதுங்கற வைராக்கியத்துல வழக்கு போட்டேன். கூலி வேலை செய்ற எனக்கு வழக்கை நடத்தக்கூட காசிருக்காது. கடன் வாங்கி கோர்ட்டுக்குப் போவேன்.

இந்த வழக்குல எனக்கு நியாயத்தை தீர்ப்பா நீதிபதி சந்துரு அய்யா கொடுத்தாரு. ரெண்டு லட்ச ரூபா பணத்தை விடவும், நிரபராதியான எங்க வீட்டுக்காரரை போலீஸார் கொன்னதுக்கு நல்ல நியாயம் கிடைச்சதுல திருப்தி எனக்கு. கல்யாணமாகி ஒருவாரத்துலயே கணவனைப் பறிகொடுத்தாலும், இப்பவும் எங்க வீட்டுக்காரர் நெனவாதான் வாழ்ந்துட்டு இருக்கேன்...'' என்கிறார் விழியோரம் வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி!

- பி.ஆண்டனிராஜ்