அனிதா இசைத்த ‘ஆனந்த ராகம்’!ரிமோட் ரீட்டாஸ்க்ரீன்ஸ்
##~## |
''விஜய் டி.வி., 'தாயுமானவன்’ சீரியல்ல நடிக்கிற 5 பொண்ணுங்கள்ல 'மகா’வா வர்ற மூத்த பொண்ணை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேடிம்மா!''னு வீட்ல புது சீரியல பார்த்துக்கிட்டிருந்த ஆன்டி, என் பக்கம் திரும்ப...
''சன் டி.வி, சன் மியூசிக், இசையருவினு தொகுப்பாளினியா கலக்கிட்டிருந்த மகேஸ்வரிதான்''னு சொன்னேன்.
''அட ஆமாண்டி கண்ணு! அப்போ எப்படியும் நீ அவளை பேட்டி எடுக்கக் கிளம்பிடுவே!''னு ஆன்டி சொல்ல, மறுநாளே அப்பாயின்மென்ட் ஃபிக்ஸ்டு!

''ஹாய் ரீட்டா! ஏதோ வெளிநாட்டுக்கு போயிட்டு, மறுபடியும் சொந்த ஊருக்குத் திரும்பின மாதிரி இருக்கு இந்த சேனல் ரீ-என்ட்ரி!''னு உற்சாகமானவங்ககிட்ட,
''சரி சரி... நடுவுல கொஞ்சம் எங்க போனீங்க?''னு கேட்டேன்.
''இந்த மூணு வருஷத்துல காதல் திருமணம், குடும்ப பொறுப்புகள், ப்ளே ஸ்கூல் போகிற பையனை கவனிச்சுக்கற வேலைனு படுபிஸியா இருந்தேன். இவ்ளோ வேலைகளுக்கு மத்தியிலும் என்னோட ஆசை முழுக்க முழுக்க மீடியா பக்கமே இருந்துச்சு. 11-வது படிக்கும்போதே ஆங்கரிங் செய்றேன்னு வந்தவ நான். எப்படி மீடியாவை விட்டு விலகி இருக்க முடியும்? பையன் கேஷவ் பிறந்து ஒரு வருஷத்துக்கு பிறகு ரொம்ப வெயிட் போட்டிருந்தேன். டயட், உடற்பயிற்சினு எடையைக் குறைச்சு, வெரி சிம்பிளா ஒரு போட்டோ ஷூட் எடுத்தேன். வாய்ப்புக்காக காத்திருந்தப்போதான், விஜய் டி.வி-யில் சீரியல் வாய்ப்புகள். இதோ... 'தாயுமானவன்’ வந்தாச்சு... விரைவில் 'புதுக்கவிதை’யும் வரவிருக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் மனசுக்கு திருப்தியான நாட்கள் திரும்பக் கிடைச்சுருக்கு ரீட்டா!''னு உற்சாகமானாங்க மகேஸ்வரி.
காம்பயர் அவுட்... ஆக்ட்ரஸ் இன்!
''நல்ல அண்ணி, நலம் விரும்பும் அக்கா... இந்த ரெண்டு அம்சமும் உள்ள சீரியல்கள்ல என்னை நிச்சயம் பார்ப்பே ரீட்டா!''
- சன் டி.வி, 'தெய்வமகள்’, 'வள்ளி’, 'உதிரிப்பூக்கள்’, 'சிவசங்கரி’னு, மாசத்துல 30 நாட்களும் பத்தாம, ஓடி ஓடி சீரியல்கள்ல கலக்கறாங்க அனிதா.
''பாசிட்டிவ் கேரக்டர்தான் எனக்கு பொருந்தும். ஒருவேளை நான் வளர்ந்த விதம் அதுக்குக் காரணமா இருக்கலாம். அதுமட்டுமில்லாம, நெகட்டிவ் ரோல் செய்ய ஒரு தனி தைரியம் வேணும். அந்த துணிச்சலை இப்போ கொஞ்சம் கொஞ்சமா கத்துட்டு இருக்கேன். சீக்கிரமே ஹெவி மேக்கப் போட்டுட்டு, விரலை நீட்டி, 'ஏய்...’னு வில்லி டயலாக் பேசினா... நல்லாதானே இருக்கும்?''னு சிரிக்கிற அனிதா, ஒரு பாடகியும்கூட!
''சூப்பர் குடும்பம் சீசன் 2-ல 'வள்ளி’ சீரியல் டீம் சார்பா நீங்க மேடை ஏறி பாடின 'ஆனந்த ராகம்...’ செம ஹிட்டு போல..?''னு சொன்னதும், அழகான குரல்ல சந்தோஷம் ஏறுது அனிதாவுக்கு.

''12 வயசுல பாட ஆரம்பிச்ச பொண்ணு நான். இப்பகூட லஷ்மன் ஸ்ருதி மியூசிக் ட்ரூப் மெயின் சிங்கர்ல நானும் ஒருத்தி. சூப்பர் குடும்பம் ஷோ-ல என் பாட்டுக்கு பாராட்டு கிடைக்கும்னு தெரியும். ஆனா, எல்லோரும் என்னை இவ்வளவு கொண்டாடுவாங்கனு எதிர்பார்க்கல. அதிலும் டி.ஆர். சார் அவரோட அடுத்த படத்துல எனக்குப் பாடறதுக்கு வாய்ப்புக் கொடுக்கறதா சொன்னது, காதுக்குள்ள ஒலிச்சுட்டே இருக்கு!''னு பரவசமான அனிதா... சீரியலுக்கு நடிக்க வந்த கதையைச் சொன்னாங்க.
''நான்... 'இருவர்’, 'படையப்பா’, 'ஆஹா’, 'தில்லு முல்லு’னு சில படங்களிலும், சின்ன சின்ன விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன். இருந்தாலும், இசைதான் என் விருப்பம். ஒருமுறை 'செல்லமே’ சீரியல் சாங் ரெக்கார்டிங்காக ராடன் டி.வி ஆபீஸுக்குப் போனப்போ... ஸ்டூடியோ மேனேஜ்மென்ட்ல இருந்தவர், 'போட்டோ அனுப்பி வைங்க’னு சொன்னார். அப்படித்தான் 'சிவசங்கரி’ சீரியல் வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து வாய்ப்புகளும் வருது''னு வரலாறு சொல்லும் அனிதாவுக்கு, ரெண்டு வயதில் பெண் குழந்தை.
''டி.வி-யில் என்னைப் பார்த்ததும் ஸ்கிரீன்ல கை வெச்சு 'அம்மா!’னு குஷியாவா என் பொண்ணு!''னு சொல்லும்போது தானும் குஷியானாங்க அனிதா.
இது அனிதாவின் தாலாட்டு!
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் சன் டி.வி-யில் ஒளிபரப்பாகிற 'தெய்வ மகள்’ சீரியல்ல லீட் ரோல் பண்றார் கிருஷ்ணா, நண்பர்களோட சேர்ந்து அடிக்கற லூட்டியைப் பார்த்துட்டு... சேட்டைக்காரப் பையன்னு நினைச்சுப் போனா, நேர்ல அவ்ளோ அமைதி. 10 வரி கேள்வி கேட்டாலும், பதில் 2 வார்த்தைகள்லதான்!
''சின்ன வயசுல இருந்தே இப்படித்தான் ரீட்டா. 'சிதம்பர ரகசியம்’ சீரியலுக்கு பின் நான்கு வருஷ இடைவெளி. இப்போ, 'தெய்வ மகள்'ல வெயிட்டான ரோல் கொடுத்திருக்கார் டைரக்டர் குமரன் சார்'' என்று சொன்னவர்,

''ஸ்கூல் நாட்கள்ல அப்பாகிட்ட என் நடிப்பு ஆசையை சொன்னப்போ, 'ஒரு டிகிரி முடிச்சுட்டு உனக்கு என்ன தோணுதோ அதை செய்’னு சொன்னார். டெல்லியில் காலேஜ் படிப்பை முடிச்ச கையோட இங்கே ஓடி வந்துட்டேன். அப்போதான் பாலசந்தர் சாரோட 'சஹானா’ சீரியல் வாய்ப்பு. அவர் ஒரு சினிமா பல்கலைக்கழகம்ங்கிறதை அருகில் இருந்து அணு அணுவா உணர்ந்தேன்!''னு பரவசமானவரோட காதல் மனைவி... நம்ம 'திருடா திருடி’ ஹீரோயின் சாயா சிங். அவங்களைப் பத்திக் கேட்டவொடன, பையன் முகத்தில் வெளிச்சம்.
''திருமணம் முடிஞ்சு ஒண்ணரை வருஷம் ஆகுது. எப்படி நாட்கள் ஓடுதுனே தெரியல. சாயாகூட வாழ்க்கை அவ்வளவு சுவாரசியமா போயிட்டிருக்கு. என்னோட காஸ்ட்யூம்ஸ்ல இருந்து... ஹேர் ஸ்டைல் வரைக்கும் அவங்களோட தேர்வுதான். என் நடிப்போட பிளஸ், மைனஸை சுட்டிக் காட்டுற முதல் ரசிகை, விமர்சகர் அவங்கதான். சினிமாவைத் தொடர்ந்து 'நாகம்மா’ சீரியல்ல நடிச்சவங்க, இப்போ உதயநிதி சாரோட 'இது கதிர்வேலன் காதல்’ படத்துல நல்ல கேரக்டர்ல நடிச்சுக்கிட்டிருக் காங்க. நிச்சயமா நீ கேட்டதா சொல்றேன்!''னு பை சொல்லி அனுப்பினார் கிருஷ்ணா.
மிஸ்டர் மன்மத ராசா!
படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்
வாசகிகள் விமர்சனம் ஒவ்வொன்றுக்கும் பரிசு:

150
இப்படியும் மனிதர்களா?
''ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் சமீபத்தில் ஒரு கொடுமையைப் பற்றி ஒளிபரப்பினார்கள். அது எனக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கி, 'இப்படியும் மனிதர்களா?' என்று கொதிக்க வைத்துவிட்டது. பெற்ற தாயின் உதவியோடு, தந்தையே மகளை பாலியல் தொந்தரவு செய்து, கருச்சிதைவு செய்த கொடுமையை என்னவென்பது? உலகமே பார்க்கும் ஊடகம் முன்பாக வந்தமர்ந்து, இதையெல்லாம் சொல்வதற்கு இப்போது அந்தப் பெண்ணுக்கு வந்திருக்கும் தைரியம், ஆரம்பத்திலேயே இல்லாமல் போனது துரதிர்ஷ்டமே. அந்த காமுகனுக்கு மரண தண்டனையே தரலாம்'' என்று பொங்கி எழுகிறார் காயக்காட்டில் இருந்து ப.பூங்கோதை.
எங்கே போனது தமிழ்?
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சி பார்த்தேன். அதில், 'வேடன் அம்பு எய்ததால், மான் வீழ்ந்து இறந்தது' எனக்கூறி அதற்கு அபிநயம் பிடிக்குமாறு நடிகை 'வெண்ணிற ஆடை' நிர்மலா சொன்னார். ஆனால், நடனம் ஆடிய சிறுமியோ எதுவும் புரியாமல் 'திருதிரு’ வென விழித்தார். உடன் இருந்த தொகுப்பாளர் 'deer, bow, hunter, died’ என்று அழகு (?) ஆங்கிலத்தில் சொன்னதும்தான், அந்த சிறுமிக்கு விஷயம் புரிந்து... அபிநயம் பிடித்தாள். எங்கே போனது தமிழ்? அதுவும் தங்க தமிழ்நாட்டுக்குள்ளேயே இப்படியொரு அவலமா?'' என்று மனம் குமுறுகிறார் திருவாரூரில் இருந்து மு.கவிதா.