கண்களைக் கவரும் கண்ணாடி வேலைகள்!உஷா ரமேஷ் ஃபேஷன்
##~## |
''கண்ணாடி வைத்த டிசைனிங் பிளவுஸ் என்றால், பெண்களிடம் எப்போதுமே மவுஸ் இருக்கும். ராஜஸ்தான் மாநிலத்தின் சிறப்பு எம்ப்ராய்டரி டிசைன் இது. அங்கு குளிர், வெப்பம் இரண்டுமே அதிகம். பாலைவனப்பகுதி வேறு. அங்குள்ள மக்கள் தங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள, ஆடைகளில் அதிகமாக வேலைப்பாடு செய்துகொள்வது வழக்கம். அதேபோல ஆந்திர மாநிலத் தில் 'பஞ்சாரா மிரர்’ வேலைப்பாடும், குஜராத்தில் ரபேரி, பன்னி (bunny) மிரர் வேலைப்பாடும் பிரபலம். எல்லோ ராலும் சுலபமாக செய்துகொள்ளக் கூடிய கண்ணாடி பிளவுஸ் டிசைன் பற்றி இப்போது பார்ப்போம்...'' என்று தயாரானார், உஷா ரமேஷ். .

தேவையான பொருட்கள்: சிறிய கண்ணாடித் துண்டுகள் (ஃபேன்ஸி ஸ்டோர்களில் கிடைக்கும்), ஃபேப்ரிக் க்ளூ, வயலட், பிங்க், தங்க நிற சில்க் நூல்கள், ஊசி, எம்ப்ராய்டரி ஃப்ரேம், கத்தரிக்கோல், ஒரு ரூபாய் நாணயம் ஒன்று.
செய்முறை:
படம் 1: பிளவுஸ் துணியில், அளவு பிளவுஸை வைத்து, கழுத்து பாகத்தைக் குறித்துக் கொள்ளவும். மடித்துத் தைப்பதற்காக அரை இன்ச் அளவில் இன்னொரு லைனை ((Stitch Margin) அருகில் குறித்துக் கொள்ளவும்.
படம் 2: ஒரு ரூபாய் நாணயத்தை கழுத்துப் பகுதியில், ஏற்கெனவே வரைந்துள்ள பிளவுஸ் துணியின் அளவுப் பகுதிக்கு அருகில் வைத்து சிறு வட்டங்களை வரைந்து கொள்ளவும்.
படம் 3: நாணயம் கொண்டு குறிக்கப்பட்ட ஒவ்வொரு வட்டத்தின் நடுவிலும் கண்ணாடித் துண்டுகளை க்ளூ வைத்து ஒட்டிக்கொள்ளவும். இந்த க்ளூ, கண்ணாடித் துண்டுக்கு வெளியே வந்துவிடாதபடி, ஒரு சொட்டு மட்டும் வைத்தால் போதுமானது. அப்படி வெளியே வந்தால் அடுத்ததாக நூல் கொண்டு தைக்கும்போது இடையூறாக இருக்கும்.

படம் 4: புடவை மற்றும் பிளவுஸின் நிறங்களுக்கு ஏற்ப நூல்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளவும் (இங்குள்ள புடவை மற்றும் பிளவுஸுக்கு ஏற்ப வயலட், பிங்க், தங்க நிற சில்க் நூல்களை தேர்ந்தெடுத்துள்ளேன்). பிளவுஸில் போடப்போகும் தையல் நகர்ந்துவிடாமல் இருக்க, எம்ப்ராய்டரி ஃப்ரேமில் வட்டம் வரையப்பட்ட இடத்தை ஃபிக்ஸ் செய்துகொள்ளவும். படத்தில் காட்டியுள்ளதுபோல் முதலில் தங்க நிற சில்க் நூலைக் கொண்டு பிளவுஸில் ஒட்டப்பட்டிருக்கும் கண்ணாடித் துண்டைச் சுற்றிலும், சதுர வடிவில் நான்கு முனைகளிலும் ஊசியால் நான்கு ஜரிகை வரும்படி கோத்துக்கொள்ளவும்.
படம் 5: கண்ணாடி விழுந்துவிடாமல் இருக்க, மற்றொரு சுற்று போடவும்.
படம் 6: கண்ணாடியைச் சுற்றி தைத்த பிறகு, வட்டத்தின் கோட்டில் வயலட் கலர் நூலைக் கொண்டு படத்தில் காட்டியுள்ளதுபோல் சங்கிலித் தையல் போட்டுக் கொள்ளவும்.
படம் 7: ஏற்கெனவே ஒட்டப்பட்டு, தையல் போடப்பட்டுள்ள கண்ணாடியைச் சுற்றி ஒட்டினாற்போல் பிங்க் நிற நூலால் சங்கிலித் தையல் போட்டுக் கொள்ளவும்.

படம் 8: வெளி வட்டத்துக்கும், உள்ளே இருக்கும் கண்ணாடிக்கும் இடையில் இதழ் போன்ற டிசைனை படத்தில் உள்ளபடி வரையவும். அதிலும் தங்க நிற நூலால் சங்கிலித் தையல் போடவும்.
படம் 9: இதேபோல அடுத்தடுத்து போடப்பட்டுள்ள வட்டத்தைச் சுற்றி, முதல் வட்டத்தில் வயலட் நிற நூல், அடுத்த வட்டத்தில் பிங்க் நிற நூல் என மாற்றி மாற்றி சங்கிலித் தையல் போட்டுக் கொள்ளவும். கழுத்தை சுற்றி வரைந்த ஒவ்வொரு வட்டத்திலும் இதேமாதிரி செய்த பின், கை பாகத்திலும் இதேபோல மிரர் வேலைப்பாடுகளை கற்பனைத் திறனுக்கு ஏற்ப செய்யலாம்.
இனி, மிகவும் சுலபமாக, பள்ளி நாட்களில் நாம் கற்றுக்கொண்ட சங்கிலித் தையலை வைத்து மிரர் வொர்க் பிளவுஸ் செய்யலாம்தானே!
டிப்ஸ்: கண்ணாடிக்குப் பதில் கார்ட்டூன் கதாபாத்திர (tiki) டிசைன் களையும் உபயோகிக்கலாம்.
- தைப்போம்...
- வே.கிருஷ்ணவேணி
படங்கள்: எம்.உசேன்
மாடல்: பிரியங்கா