உடையாத போளி... உதிராத பஜ்ஜி!சந்தேகங்களும்... தீர்வுகளும் தீபா பாலசந்தர் ஃபுட்ஸ்
##~## |
பாராட்டுக்கு மயங்காத, அதை எதிர்பார்க்காத மனித உள்ளம் என்பது அபூர்வம். அதுவும் சமையலறை உஷ்ணத்தை தாங்கிக் கொண்டு, நீண்டநேரம் உழைக்கும் இல்லத்தரசிகளுக்கு, 'சூப்பர்’ என்ற ஒரு வார்த்தை... எந்த களைப்பையும் நீக்கும் உற்சாக டானிக்! இந்த டானிக் தினந்தோறும் உங்களுக்கு கிடைக்கும் விதத்தில்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் சம்பந்தமான சந்தேகங்களுக்கு விடையளிக்கவும், அந்தக் கலையில் வித்தகர்களாக விளங்குபவர்கள் உதவிக்கு வரும் பகுதி இது. இந்த இதழில் உங்களுக்கு அளவற்ற அன்புடன் ஆலோசனை கூறுபவர்... சமையல் கலை நிபுணர் தீபா பாலசந்தர்.
வாழைப்பூ ஆயும்போது, கையில் பிசுக்கு ஒட்டுவதை எப்படித் தவிர்ப்பது?
வாழைப்பூ ஆயும்போது உப்பை கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசுக்கு ஒட்டாது.
வெங்காய பஜ்ஜி உதிராமல் வர என்ன செய்யலாம்?
வெங்காயத்தை மெதுவாக எண்ணெயில் வதக்கி, அதன்பிறகு பஜ்ஜி செய்தால், வட்ட வட்டமாக பிரியாமல் பஜ்ஜி செய்யலாம்.
சப்பாத்தியை எடுத்துச் செல்லும்போது அதிக நேரம் சூடாக இருக்க என்ன வழி..?
சப்பாத்தியை, ஃபாயில் பேப்பரில் (சில்வர் பேப்பர்) சுற்றி எடுத்துச் சென்றால்... அதிக நேரம் சூடாக இருக்கும்.
காய்ந்த மிளகாயை வறுக்கும்போது ஏற்படும் நெடியை எப்படித் தவிர்ப்பது?
மிளகாயை வறுக்கும்போது சிறிது உப்பு போட்டு வறுத்தால், இருமலை உண்டாக்கும் நெடி வராது.

திடீர் விருந்தாளிக்கு கொடுக்க மிகவும் ஈஸியான ஸ்வீட் ப்ளீஸ்...
பிரெட்டை நீளமாக வெட்டி நெய்யில் பொரித்து, பொடித்த சர்க்கரையில் புரட்டி எடுக்க... சுவையான திடீர் ஸ்வீட் ரெடி!
வெல்லத்தை எளிதாக பொடிப்பது எப்படி?
வெல்லத்தை கேரட் துருவியின் பெரிய துளைகள் உள்ள பக்கம் துருவினால், பூப்பூவாக உதிர்ந்து வரும்.
ரவா தோசை மொறுமொறுவென வருவதற்கு என்ன அளவு போட வேண்டும்?
ரவை 2 பங்கு, மைதா ஒரு பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு என்ற அளவில் சேர்த்து, மாவு தயாரித்து, தோசை வார்த்தால்... மொறுமொறுப்பாக வரும்.
அல்வா கிளறும்போது, இறுகி பாறை போல் ஆகிவிட்டால் எப்படி சரிசெய்வது?
முழு தேங்காயை துருவி அரைத்து பாலெடுத்து, அல்வாவில் ஊற்றி, மிதமான சூட்டில் அடுப்பை எரிய விட்டு கிளறினால், அல்வா நெகிழ்ந்து சுவை கூடுதலாகி வரும்.
ஃப்ரிட்ஜில் வைத்தாலும், கரன்ட் பிரச்னையால் மாவு புளிப்பதை எப்படி தவிர்ப்பது?
இட்லி, தோசை மாவுடன் சிறிது காய்ந்த மிளகாயைப் போட்டு வைத்தால் போதும்... மாவு சீக்கிரம் புளிக்காது.

ஏலக்காய் நமத்துப் போய்விட்டால் பொடிப்பது எவ்வாறு?
அடுப்பில் வெறும் வாணலியை வைத்து, நமத்துப் போய்விட்ட ஏலக்காய்களை அதில் போட்டு புரட்டி எடுத்து, பின்னர் பொடிக்க... நைஸாக பொடியும்.
போளியை வேகவிட்டு எடுக்கும்போது உடைந்து போகாமல் மிருதுவாக வர வழிமுறை சொல்லுங்களேன்...
போளிக்கு பிசைந்த மைதா மாவை நன்கு உலர்ந்த ஆட்டுக்கல்லில் போட்டு இடித்து, பிறகு வழக்கம்போல் தயாரித்தால்... போளி விரிசல் விடாமல் மிருதுவாக வரும்.
குக்கரின் உள்பாகம் 'பளிச்’சென இருக்க என்ன செய்யலாம்?
முதல் நாள் இரவே புளித்த மோரை குக்கரில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். மறுநாள் எடுத்து தேய்க்க... பளபளவென ஆகிவிடும்!