மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேபிள் கலாட்டா!

'ஸ்லிம்’ரன் ரிட்டர்ன்ஸ்! ரிமோட் ரீட்டா

##~##

 ஜீ தமிழ் சேனல்ல புதுசா ஒளிபரப்பாகிற 'Dance தமிழா Dance’ நடன நிகழ்ச்சியில் ஜட்ஜா பொறுப்பேற்றிருக்காங்க, சிம்ரன்! நடுவில் வஞ்சக மில்லாமல் வெயிட் போட்டிருந்த சிம்ரன், இப்போ மீண்டும் நம்ம 'ஸ்லிம்’ரன்!

ஏவி.எம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் பரபரப்பில் இருந்தவர்கிட்ட, 'எப்டி மேடம்?!’னு இந்த ரீட்டா ஆச்சர்யமாய் போய் நின்னேன்...

''கடந்த 6 வருஷங்களா, எங்க 'சிக்’ சிம்ரன் இவ்ளோ வெயிட் போட்டுட்டீங்களே..?னு பார்க்கறவங்க எல்லாம் கேட்கும்போது, வருத்தமாதான் இருக்கும். ஆனா, கர்ப்பிணி, தாய்னு ரெண்டு குழந்தைகளுக்கு அம்மாவா நான் கடக்க வேண்டிய கட்டங்கள் அது. இப்போ பசங்க ஸ்கூல் போக ஆரம்பிச்சாச்சு. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடுனு என்னை கவனிக்க நேரம் கிடைச்சுச்சு''னு கன்னத்துல குழி விழ சிரிச்சாங்க சிம்ரன்.

 கேபிள் கலாட்டா!

''ரொம்ப நாளாவே சேனல்ல ஒரு டான்ஸ் ஷோ பண்ண ஆசை. கான்செப்ட் தயார் பண்ணிட்டு, ஜீ தமிழ் புரொடக்ஷன் டிவிஷனுக்குப் போனேன். உடனே 'ஓ.கே’ சொல்லிட்டாங்க. தமிழ்நாடு, கர்நாடகா, மும்பைனு பல இடங்கள்ல இருந்து போட்டியாளர்கள் கலந்துக்கிறாங்க. என்கூட சின்னி பிரகாஷ் மாஸ்டரும் ஜட்ஜா வர்றாங்க. அதோட, செலிப்ரிட்டீஸ் கொண்டாட்டம், அவங்களோட அனுபவம் இந்த டான்ஸ் ஷோ கலகலப்பா போகும்'' என்றவர்,

''நாங்க புதுசா தொடங்கியிருக்கிற எங்களோட 'எரி ஜெம்' ((Ari Gem)  புரொடக்ஷன் கம்பெனிதான் நிகழ்ச்சியைத் தயாரிக்குது. கணவர் தீபக், முழு பொறுப்பையும் கவனிச்சுக்கிறார். டிராவல் டிராவல்னு சுத்திக்கிட்டே இருக்கிற மனிதர். அவ்ளோ பிஸியிலும், குடும்பம், குழந்தைகளுக்கு கவனமா நேரம் ஒதுக்குவார். அவரோட சப்போர்ட்தான் ரீட்டா என்னை முழு சுதந்திரத்தோட மீடியாவில் இடைவிடாம இயங்க வைக்குது''னு பரவசமானவங்ககிட்ட, குழந்தைகள் பத்தி கேட்டேன்.

''பெரியவன் ஆதிப் ஓடோ, தேர்டு ஸ்டாண்டர்டு படிக்கிறான். சின்னவன் அதிர் வீர், ப்ளே ஸ்கூல் போறான். வீக் எண்ட் ஷூட்டிங் இருந்தா, அவங்களையும் தூக்கிப் போட்டுட்டு வந்துடுவேன். குழந்தைங்களோட செலவழிக்கிற நேரம்தான், மற்ற எல்லா சந்தோஷத்தையும் விட எனக்குப் பெருசுனு தோணும்!''னு சென்டிமென்ட்டா முடிச்சாங்க ஸ்லிம் அம்மா!

சிம்ரன் டான்ஸ்.... சிம்ரன் டான்ஸ்!

அருப்புக்கோட்டை டு சென்னை!

'தென்றல்’ சீரியல்ல இப்போ பரபரப்பா ஓடிட்டு இருக்குறது 'ரேவதி’யோட பிரச்னைதான். அந்தப் பொண்ணைப் பார்த்தா, ஊர்க்காரப் பொண்ணு மாதிரி தெரியுதேனு தேடிப்போனா,

''நீ நெஜமாவே கிரேட் ரீட்டா. நான் அருப்புக்கோட்டைப் பொண்ணு!''னு சந்தோஷமா பேச ஆரம்பிச்சாங்க ஸ்வேதா.

''மதுரையில் நர்ஸிங் முடிச்ச கையோட கோயம்புத்தூருக்கு வேலைக்கு போனேன். ஆனாலும், நடிப்புதான் சின்ன வயதில் இருந்தே என் கனவு. கோயம்புத்தூர்ல லோக்கல் சேனல்ல தொகுப்பாளினி வாய்ப்பு கிடைச்சுது. பிறகு, 'தங்கம்’ சீரியல் ஆடிஷன்ல தேர்வானேன். ஆனா, சினிமா கனவு இருந்ததால அப்போ சீரியல்ல நடிக்க முடியாம போச்சு. ஆனாலும், ஈவன்ட் ஒருங்கிணைப்பாளர் நாராயணன் அங்கிள் உதவியால... இசையருவி சேனல் ஆங்கரிங் வாய்ப்பு கிடைச்சுது. தொடர்ந்து 'பார்த்த ஞாபகம் இல்லையோ’, 'தென்றல்’, 'ஆபீஸ்’ சீரியல் வரைக்கும் நகர்ந்து வந்துக்கிட்டிருக்கேன்!''

- மூச்சே விடாம மீடியா என்ட்ரி கதையை சொல்லி முடிச்சாங்க, ஸ்வேதா.

''மூணு வருஷத்துக்கும் மேலா சேனல் ஏரியாவில் வலம் வந்தாலும், 'தென்றல்’தான் தனி அடையாளத்தைக் கொடுத் திருக்கு. என் ரூம்மேட் நந்தினியும், பெஸ்ட் ஃப்ரெண்ட் பிரகாஷ§ம்தான் என்னோட நடிப்புக்கு சரியா மார்க் போட்டு நிறை, குறைகளை சொல்வாங்க. என்னோட பெரிய சப்போர்ட் 'நந்தினி’, அழகி சீரியல்ல நடிச்சிட்டு இருக்காங்க. நாராயணன் அங்கிள், நந்தினி, பிரகாஷ் இவங்க மூணு பேரும்தான் இன்னிக்கு நான் ரீட்டாகிட்ட பேட்டி கொடுக்கிற அளவுக்கு மீடியாவில் காலூன்றக் காரணம். மறக்காம தேங்ஸ் சொல்லிடு ரீட்டா!''னு சொல்லி அனுப்பினாங்க ஸ்வேதா!

சரிங்க நர்ஸம்மா!

 கேபிள் கலாட்டா!

குடும்பத் தொழிலை விட்டு... நடிப்பைத் தொட்டு..!  

இசையருவி சேனல்ல 'காதலுக்காக’, 'அக்கரைச் சீமை அழகினிலே’, 'குத்துப்பாட்டு’, 'துள்ளிசை’னு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிட்டிருக்கிற தணிகை, சிக்ஸ் பேக் எல்லாம் வெச்சுக்கிட்டு '555’ பரத் கணக்கா இருக்கார்.

''எல்லாம் ஒரு கவன ஈர்ப்புத் தீர்மானம் தான்!''னு சிரிக்கிற தணிகை,

''ஈரோட்டில் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி வெச்சிருக்கற குடும்பம் எங்களோடது. அதையெல்லாம் தம்பியை கவனிக்க சொல்லிட்டு, சினிமா ஆசையில சென்னைக்கு பஸ் பிடிச்சுட்டேன். கையில் இருந்த எம்.பி.ஏ டிகிரி, ஐ.டி கம்பெனியில ஒரு வேலை வாங்கிக் கொடுத்தது. சைடுல மீடியா தேடல். சின்னத்திரைக்கு வந்து 5 வருஷங்கள் ஓடிடுச்சு. பொதிகை தொடங்கி இமயம், மூன், மெகா டி.வி, கலைஞர் டி.வி, இசையருவி வரைக்கும்னு ஒரு பெரிய வட்டமே அடிச்சாச்சு.

மீடியா பக்கம் ஒதுங்கினதால லவ் கிவ்ல விழுந்துடுவேனோனு வீட்டுல விறுவிறுனு கல்யாணத்தை செய்து வெச்சுட்டாங்க. அத்தை பொண்ணு பிரேமலதா, மிஸஸ் தணிகை ஆனாங்க. அவங்கதான் இப்போ என் முதல் ரசிகை. ஃபேஷன் ஷோ ரேம்ப் வாக், விளம்பரப் படங்கள், ரெண்டு திரைப்படங்கள்னு அடுத்த ஸ்டெப் நோக்கி போக தொடங்கியிருக்கேன் ரீட்டா. புதுசா ஒரு விளம்பர ஈவன்ட் நிறுவனமும் தொடங்கியிருக்கோம். தொடர்ந்து நிறைய சாதிக்கணும். வெற்றிக்காக ரொம்ப டைம் எடுத்துக்கக் கூடாதுனு ஓடிட்டே இருக்கேன்!''னு சிரிக்கிறார் இந்த சிக்ஸ் பேக்.  

ஜமாய்ங்க!

படம்: எஸ்.பி.ஜெர்ரி ரினால்டு விமல்

வாசகிகள் விமர்சனம்                            ஒவ்வொன்றுக்கும் பரிசு:

 கேபிள் கலாட்டா!

150

தொடை தெரிய வேட்டிக்கட்டி!

''இசையருவி டி.வி-யில் ஞாயிறுதோறும் 'நெஞ்சு பொறுக்குதில்லையே’ எனும் விவாதமேடை ஒளிபரப்பாகிறது. சமீபத்தில் பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறைகளை ஒழிப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. 'பெண்கள் உடுத்தும் உடையும் இதற்கெல்லாம் ஒரு காரணம்' என்றொரு கருத்து, வழக்கம் போலவே முன்வைக்கப்பட்டது. உடனே, 'கிராமங்களில் ஆண்கள் பலரும் சட்டை பட்டன்களைக் கழற்றிவிட்டபடியும்... மேல் சட்டை அணியாமலும்... தொடை தெரிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டும்தான் திரிகிறார்கள். அவர்களை எந்த ஒரு பெண்ணும் பலாத்காரமோ... சீண்டலோ செய்ததாக புகார்கள் வருவதில்லையே...' என்று எதிர்தரப்பு நச்சென்று கேட்டது... அனைவரையும் சிந்திக்க வைத்தது. இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வ விவாதங்களே இன்றைய தேவை'' என்று வரவேற்கிறார் பெங்களூருவில் இருந்து ராதா நரசிம்மன்.

சரியான வாய்ப்பு தேவை!

''சன் டி.வி-யில் வரும் 'குட்டி சுட்டீஸ்’ நிகழ்ச்சி நன்றாகவே இருக்கிறது. ஆனால், எல்லா குழந்தைகளுக்கும் சமமான வாய்ப்புத் தராமல் இருப்பது உறுத்துகிறது. பெரும்பாலும் அம்மா - அப்பா சண்டை, பாய் ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் பற்றியே கேள்விகளைக் கேட்கிறார் அண்ணாச்சி. மூளைக்கு வேலை தரும் கேள்விகளாக தேர்வு செய்து, அதன் மூலமாக நகைச்சுவையை வெளிப்படுத்த வைக்கலாமே!'' என்று ஆதங்கப்படுகிறார் மதுரையில் இருந்து சீதாலஷ்மி.