தலைமை ஆசிரியர் என்றொரு மிருகம்!நீதிபதி கே. சந்துருஅவேர்னஸ்இந்தத் தொடர் உங்கள் நம்பிக்கை சுடர்
##~## |
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவிடம், 'உங்கள் அரசு சாதித்த மிகப்பெரும் சாதனை எது?' என்று கேட்டபோது, 'பெண் கல்வி’ என்று கம்பீரமாக பதில் கூறினார். 'பெண்களுக்குக் கல்வி கற்பிப்பதன் மூலமே இந்தியா முன்னேற்றம் காண முடியும்' என்று நம்பிய தேசிய தலைவர்கள் சிலரில் அவரும் ஒருவர். அதன் பின் கல்விச் சாலைகளில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க ஆரம்பித்து, இன்று ஒவ்வொரு கல்வித் தேர்விலும் ஆண்களைவிட, பெண்களே முன்னணியில் நின்று சாதிக்கின்றனர்.
இத்தகைய மாபெரும் மாற்றம் ஒருபக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில்... 'எங்கள் பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என்று ஒரு கிராமத்தினர் கொடி பிடித்தால்..? மதுரைக்கு அருகிலுள்ள பொதும்பு கிராமத்தில், 2011-ம் ஆண்டில் இப்படிதான் நடந்தது. ஆனால், அதற்கான காரணம்... பெண்கள் படிக்கக் கூடாது என்பதல்ல, கல்விக்கூடத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதுதான்!
கிராமத்தின் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியராக இருந்த ஒரு மிருகம், நூற்றுக்கும் மேற்பட்ட அரும்புகளை தொடர்ந்து பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியபடியே இருந்திருக்கிறது. ஒருகட்டத்தில் சில சிறுமிகள் அழுது துடித்தபடி விஷயத்தை பெற்றோரிடம் கூறியபோது, கிராமமே அதிர்ந்தது. வெகுண்டெழுந்த ஊரார் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவி பிருந்தா காரத், நேரடியாக வந்து விசாரணை நடத்தினார். அப்போது கிடைத்த உண்மைகள்... அனைவரையும் உறைய வைத்தன. மதுரை மாவட்ட ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் பொன்னுத்தாய், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் ஒருவர் என காவல் நிலையம் சென்று புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவிகளை கொச்சைப்படுத்தி பேசுவதும் தொடர்ந்தது.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உ.நிர்மலாராணி தலைமையில் உண்மையறியும் குழு கிராமத்துக்குச் சென்றது. பல மாணவிகள் பள்ளியை முடித்துவிட்டிருந்தனர். சிலருக்கு திருமணமும் ஆகியிருந்தது. நேரில் வந்து சாட்சி சொன்னால் எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் என்று பயந்தவர்களும் உண்டு. என்றாலும் மிகுந்த சிரமத்துக்கிடையே, விசாரணை நடத்தி... அந்த மிருகத்தின் அசிங்கங்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது உண்மை அறியும் குழு. உடல் சுகவீனமற்ற மாணவியைக்கூட அந்த மிருகம் விட்டுவைக்கவில்லை என்பது அதிர்ச்சியின் உச்சம்!
காவல்துறையே கண்டுகொள்ளாத நிலையில், மாணவி ஒருவரின் அப்பா, மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் படிகளில் ஏறினார். கூடவே, தன்னையும் இணைத்துக் கொண்டது... ஜனநாயக மாதர் சங்கம். முதல் நடவடிக்கையாக, குழந்தைகள் நலக்குழுவை இதுபற்றி விசாரிக்கும்படி உத்தரவிட்டது நீதிமன்றம். குழுவின் விசாரணை அறிக்கை, ஏற்கெனவே உண்மை அறியும் குழு கொடுத்திருந்த அறிக்கையை உறுதிபடுத்தியது.
இதையடுத்து, காவல்துறை அதுவரை நடத்திய விசாரணை பதிவுகளைப் பரிசீலித்த நீதிமன்றம், தனது ஏமாற்றத்தைத் தெரிவித்தது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. அன்றைய காவல் துறை கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் நேரில் ஆஜரானார். இதற்கிடையே, குற்றம் புரிந்த தலைமையாசிரியரை சஸ்பெண்ட் செய்தது கல்வித்துறை. இதையடுத்து, அந்த மிருகம் கைது செய்யப் பட்டபோதும், எளிதாக ஜாமீனில் வந்துவிட்டது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் பலர், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள பெண் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்: அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும்; மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடக்கவேண்டும்; பாதிக்கப்பட்டவர்களிடம் வாக்குமூலம் வாங்குவது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் இருக்கக்கூடாது... என்றெல்லாம் கறாராக உத்தரவிட்டது நீதிமன்றம். மேலும், அந்த மாணவிகளுக்கு, தலா 1,20,000 ரூபாய் நஷ்டஈடாக மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. கூடவே... நாடு முழுவதும் குழந்தைகள் மீது பாலியல் கொடுமைகள் இன்றும் தொடர்வது பற்றி குறிப்பிட்ட நீதிமன்றம், அவற்றைக் களைய போதுமான நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது.
கிரிமினல் வழக்கு விசாரணை தொடரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் 24 பேருக்கு நஷ்டஈடாக இதுவரை 28 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளது அரசு. பல மாணவிகள், தங்களது அடையாளம் தெரிந்து, எதிர்காலத்தில் சிக்கல் ஏற்படும் என்ற அச்சத்தால் புகார் அளிக்க முன்வரவில்லை.
நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, அந்த அரசு உயர்நிலைப் பள்ளி மீண்டும் சகஜநிலைக்கு திரும்பியுள்ளது. மாணவி களும் கல்வி பயில பள்ளிக்குச் சென்று வருகிறார்கள்.
நேருவின் கனவு மெய்ப்பட வேண்டும்!
- தொடர்வோம்...
படம்: பா.காளிமுத்து
மனஉளைச்சலை தீர்த்து வைத்த தீர்ப்பு!
இந்திய மாதர் சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் பொன்னுத்தாய், இந்த விஷயம் தொடர்பாக நம்மிடம் பேசியபோது, ''போராட்டம், புகார்கள் என பலவாறாக முயற்சிகள் மேற்கொண்டும், காவல்துறை மற்றும் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. அந்தத் தலைமையாசிரியருக்கு ஆதரவான சிலர், பாதிக்கப்பட்ட மாணவிகளை கொச்சையாகப் பேசியதுடன், 'போலீஸில் புகார் கொடுத்தால், பத்திரிகையில் பெயர் வரும், டி.வி-யில் போட்டோ வரும். எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்’ என்றெல்லாம் பயமுறுத்தினர். போலீஸாரும், விசாரணை என்கிற பெயரில் குழந்தைகளைப் பயமுறுத்தினார்கள்.
இந்தச் சூழலில்தான் பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தை ஒருவர் மூலமாக வழக்குத் தொடர்ந்தோம். அதை விசாரித்த நீதியரசர் சந்துரு, பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தார். அவரது தீர்ப்பு, மிகச் சரியாக மகளிர் தினத்தன்று (மார்ச் 8) வெளியானது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகளுக்கு எதிரான சம்பவங்களில் எல்லாம் இந்த வழக்குதான் தற்போது வழிகாட்டியாக இருக்கிறது. இந்தியாவுக்கே இந்த வழக்கின் தீர்ப்பு முன்மாதிரியாக அமைந்துவிட்டது.
'பாதிக்கப்பட்ட குழந்தைகளை யூனிஃபார்ம் அணிந்த போலீஸார் விசாரிக்கக் கூடாது, குற்றவாளிகள் பொதும்பு கிராமத்துக்குள் நுழையக் கூடாது’ என்பது உள்பட பல முக்கிய அம்சங்கள் அந்தத் தீர்ப்பில் இருந்தன. குழந்தைகளை பிக்னிக் போல 'அதிசயம்’ பார்க்குக்கு அழைத்துச் சென்று, பெண் ஏ.டி.எஸ்.பி. ஒருவர் விசாரணை நடத்தினார். தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி உள்பட அப்பள்ளியில் பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களும் இடமாறுதல் செய்யப்பட்டனர்'' என்ற பொன்னுத்தாய்,
''ஒரு கட்டத்தில், 'பெண் பிள்ளைகளை படிக்க வைக்கவே வேண்டாம்' என்கிற அளவுக்கு மனஉளைச்சலுக்கு ஆளான கிராம மக்கள், இப்போது நிம்மதியாக இருக்கிறார்கள்'' என்று சொன்னார்.
- கே.கே.மகேஷ்