வீருமல்லம்மா... குலம் காக்கும் குழந்தை!ஆன்மிகம் - 9ஜி.பிரபு
##~## |
கள்ளம் கபடம் இல்லாத அன்பையும், எல்லோரையும் நம்பிவிடும் குணத்தையும் கொண்டிருப்பதால்தான்... 'குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்றார்கள். அப்படி ஒரு குழந்தை, தன் அறியாத வயதிலேயே... பெரியவர், சிறியவர் என்று ஒரு கூட்டத்தையே கட்டிக்காக்க... இன்றளவும், அவள் தெய்வமாகி நிற்கிறாள்... வழித்தோன்றல்களுக்கு!
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு... இந்தியாவின் பல பகுதிகளையும் முகலாயர்கள் சுற்றி வளைத்த நேரம். இன்றைய கர்நாடக மாநிலத்தின் பகுதிகளில் படையெடுத்த முகலாயர்கள், அங்குள்ள வளங்களைச் சொந்தமாக்கிக் கொண்டதோடு, கன்னட பெண்களையும் சொந்தமாக்க ஆரம்பித்தனர். 'அவர்களுக்கு இரையாகி விடக்கூடாது’ என்று பல பெண்கள், கிணற்றிலும், தீயிலும் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டனர். சிலரோ, தூக்க முடிந்த அளவு துணிமணிகள், மேய்க்க முடிந்த அளவு ஆட்டுக் குட்டிகள் என எடுத்துக்கொண்டு, கால் போன போக்கில் நடந்தனர். அப்படி குடும்பம் குடும்பமாக தமிழகப் பகுதிக்கும் வந்தவர்களின் குல தெய்வமாகத்தான் நிற்கிறாள்... அந்தக் குழந்தை!
பரவசப்படுத்தும் அந்தப் பழங்கதையைச் சொன்னார்... திண்டுக்கல் மாவட்டம், தூங்கனம்பட்டி, பழனிச்சாமி.
''தமிழ்நாட்டுல திண்டுக்கல், தேனி பகுதிகள்ல பரவிக்கிடக்கற ஒக்கலிகர் (காப்பு) சமூகம்தான், இப்படி அடைக்கலம் தேடி வந்த சமூகம். இதுல தனித்தனி குலமா பலரும் பிரிஞ்சு இருக்காங்க. எங்க குலத்துக்கு பேரு 'மாரங்களவார்’. எங்க மூதாதையரை தலைமை தாங்கி அழைச்சுட்டு வந்தவர், 'மாரங்களவார்’ங்கிற பெரியவர். அதனால, அவரோட குலம் நாங்க. எங்க மூதாதையருக்கு விவசாயம், ஆடு மேய்க்கறதுதான் முக்கியமான தொழில். செம்மறியாடுகளைத்தான் ஊருக்குள்ள மேய்ப்பாங்க. பயிர், பச்சையைக் கடிச்சு காலி பண்ணிடும்கிறதால, வெள்ளாடுகளை மலைக்கரடு, காடுகளுக்குள்ளதான் மேய்ப்பாங்க. பழநிக்குப் போற வழியில இருக்குற ரெட்டியார் சத்திரம், கதிரி நரசிங்கப்பெருமாள் கோயில் பக்கத்துலதான் முதல்ல வந்து குடியேறியிருக்காங்க. கோயிலுக்கு வடக்கால இருக்கற 'தேவர் மலை’ங்கற மலைக்கரடுலதான் ஆடுகளை மேய்ச்சுருக்காங்க.

ஒரு நாள்... ஆம்பளை, பொம்பளையெல்லாம் கிளம்பி காட்டுக்குள்ளாற போக, அங்க பயங்கர மழை. காட்டாத்து வெள்ளத்தைக் கடந்து யாருமே வெளியில வர முடியல. இருட்டிப் போகவே... அங்கேயே தங்கிட்டாங்க. ஊருல மழை இல்லாததால, குடிசையில இருந்த குழந்தைகளுக்கும் வயசானவங்களுக்கும் ஒண்ணுமே புரியல. ராத்திரியானதும் பிள்ளைங்க பசியில அழுக ஆரம்பிச்சுடுச்சுக. வயசானவங்களால எதையும் செய்ய முடியல. பிள்ளைங்களோட அழுகை கூடிட்டே போக... அதுல மூத்தவளா இருந்த ஏழு வயசு வீருமல்லம்மா, ஒரு குவளையை எடுத்துட்டுப் போயி, குட்டிபோட்டதால வீட்டுலயே கட்டிக்கிடந்த வெள்ளாடுகள்கிட்ட பாலைக் கறந்துட்டு வந்து... ஆளுக்குக் கொஞ்சம் வாயில ஊத்தி விட்டுருக்கு. வயசானவங்களுக்கும் பால் கிடைக்கவே, எல்லாரும் தெம்பாயிட்டாங்க. அப்பப்ப இப்படி பாலைக் கறந்து கொடுத்து... ரெண்டு நாள் முழுக்க சமாளிச்சுருக்கா... வீருமல்லம்மா. அதுக்கப்பறம்தான் காட்டுக்குள்ள மழை ஓய்ஞ்சி... ஆம்பள, பொம்பளையெல்லாம் ஓட்டமும் நடையுமா வந்து சேர்றாங்க.
வந்ததும் விஷயத்தைக் கேள்விப்பட்டு... வீருமல்லம்மாளைக் கையெடுத்துக் கும்பிட்டிருக்காங்க. குழந்தைங்க செத்தா... வம்சமே அழிஞ்சு போயிருக்கும்ல. அப்படி ஆயிடாம, வம்சத்தைக் காத்த அவளை சாமி மாதிரி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்குப் பிறகு, எதைச் செய்தாலும், அவளைக் கேட்டு செய்ய ஆரம்பிச்சுருக்காங்க. அவ சொன்னபடியே அங்க இருந்த காடு, கரைகளை சுத்தப்படுத்தி விதைக்க ஆரம்பிச்சுருக்காங்க. அவ்வளவும் நல்லா விளைஞ்சு நின்னுருக்கு. எல்லாரும் வேலைக்காக வெளிய போனாலும், இவ ஒருத்தியே அத்தனை பேரையும் பார்த்துக்க ஆரம்பிச்சா. அவகிட்ட ஏதோ தெய்வ சக்தி இருக்கறதா நம்பினாங்க.

இந்தச் சூழல்ல... திடீர்னு ஊருக்குள்ள, கொள்ளை நோய் பரவவே... 'இந்த நோயை நான் ஏத்துக்கிட்டு செத்துட றேன். உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. நான் செத்தாலும், உங்க யாரையும் கைவிட மாட்டேன்’னு சொல்லிட்டு, அதன்படியே செத்துப் போயிட்டா. அன்னியில இருந்து அவள குலதெய்வமா கும்பிடறோம். வீருமல்லம்மா, வெள்ளாட்டை வெச்சு எங்க வம்சத்தைக் காப்பாத்துனதால, இன்னிக்கு வரைக்கும் வெள்ளாட்டுக்கறியை நாங்க சாப்பிடறதில்லை'' என்று சொல்லி, நெகிழ வைத்தார்.
வானம் பார்த்த மானாவாரி பூமிக்கு நடுவே, சிறியதாகக் காட்சி தருகிறது, அவர்களின் மாலைக் கோயில். இப்படித்தான் கோயிலை அவர்கள் அழைக்கிறார்கள். பரம்பரை பூசாரி குடும்பத்தைச் சேர்ந்த ஒண்ணம்மாள், ''என் மகன் மல்லுவுக்கு மூணு வயசு இருக்கறப்போ, கோயில் பூசாரியான என் வீட்டுக்காரர் இறந்துட்டார். அவரை எரிக்கறதுக்குள்ள அடுத்த பூசாரிக்கு பட்டம் கட்டணும்னு சொல்லி, 3 வயசு மகனுக்கு பட்டம் கட்டினாங்க. 16 வயசுல அவனை ஒரு லாரி அடிச்சுப் போட்டுட்டுப் போயிட, சாக கிடந்தவனை மதுரை பெரியாஸ்பத்திரியில சேர்த்தோம். மண்டையில அடிபட்டதால சித்தம் கலங்கி உளற ஆரம்பிச்சுட்டான். 'பொழைக்கிறது கஷ்டம்’னு பெரிய டாக்டரும் சொல்லிட்டாரு.

'அவன் உனக்கு பூசை பண்ணணும்னு இருந்தா... அவனை காப்பாத்து. இல்லாட்டி உன்கூடவே கூப்பிட்டுக்கோ. இப்படி வெச்சுருந்து பெத்த வயிறை கலங்க வைக்காதே’னு வீருமல்லம்மாகிட்ட வேண்டிக் கிட்டேன். மறுநாள்ல இருந்தே கொஞ்சம் கொஞ்சமா தேற ஆரம்பிச்சுட்டான். அவன் எந்திருச்சு வந்தது, வீருமல்லம்மாவோட அருளாலதான். அதுக்கப்பறம் அவனுக்கு கல்யாணம் பண்ணி பேரன், பேத்தி எடுத்தாச்சு. இப்பவும் அவன்தான் இங்க பூசாரி'' என்று தன் வாழ்வில் நிகழ்ந்த அற்புதம் சொன்னவர்,
''இன்னிவரைக்கும் எங்க குலம் காக்குற தெய்வமா இருந்து காத்துட்டு இருக்கா... வீருமல்லம்மா. எங்க குலம் மட்டுமில்லை... இங்க வந்து வேண்டிக்கும் எல்லாருக்குமே நல்லதுதான் செய்வா!' என்று அருள்வாக்கு தந்தார்!
உண்மைதான்... எந்தக் கடவுளும் குலம் கோத்திரம் பார்த்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதில்லையே!
- தெய்வங்கள் பேசும்...
படங்கள்: ஆர்.குமரேசன், வீ.சிவக்குமார்
வழிகாட்டி
திண்டுக்கல் - மதுரை சாலையில் உள்ளது அம்பாத்துரை. இங்கிருந்து செம்பட்டி செல்லும் சாலையில், ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது, நடுப்பட்டி. இங்கிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் வீருமல்லம்மாள் கோயில் அமைந்திருக்கும் கதிரிபட்டி. மாலை உள்ளிட்ட பூஜை சாமான்களை நாம் கையோடு கொண்டு சென்றுவிட வேண்டும்.