ரசத்தின் வண்டலை வைத்து... கமகம வெங்காய சாம்பார்!சந்தேகங்களும்... தீர்வுகளும்கௌரி ஷர்மாஃபுட்ஸ்
##~## |
சாப்பிடுபவர்கள் முகம் மலர்ந்தால்தான், சமைப்பவர்களின் உள்ளம் நிறையும். இந்த நிறைவை உங்களுக்கு நிரந்தரமாக அளிக்கும் நோக்கத்துடன்... உங்கள் சமையல் சிறப்பாக அமையவும், சமையல் செய்யும்போது உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்க¬ளை நிவர்த்தி செய்யவும் சமையல் கலையில் கைதேர்ந்தவர்கள் ஆலோசனை தரும் பகுதி இது. இந்த இதழில் உதவிக்கரம் நீட்டுபவர், கௌரி ஷர்மா.
சாம்பார் தயாரிக்கும்போது பல சமயங்களில் நீர்த்துப்போய் மேலே தெளிவாகத் தங்கிவிடுகிறதே! ருசி மாறாமல் சாம்பார் கெட்டியாவதற்கு என்ன செய்யலாம்?
சாம்பாரின் மேலே தெளிவாக நிற்கும் நீரை ஒரு பாத்திரத்தில் வடித்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடியளவு பொட்டுக்கடலை, இரண்டு ஸ்பூன் துருவிய தேங்காய் இரண்டையும் மிக்ஸியின் சிறிய ஜாரில் போட்டு தண்ணீர் விடாமல் பொடியாக்குங்கள். வடித்து வைத்திருக்கும் தெளிவான சாம்பார் நீரில் இந்தப் பொடியைப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைத்து, பிறகு, இதை சாம்பாரில் சேர்த்து விடுங்கள். கவனிக்கவும்... மொத்த சாம்பாரையும் கொதிக்கவிட வேண்டாம்.

ஏற்கெனவே தேங்காய் அரைத்துவிட்ட சாம்பார் என்றால், தேங்காய் துருவலைக் குறைத்துக் கொள்ளலாம்.
ரசத்தின் தெளிவான பகுதியை சாப்பிட்ட பின் ரசத்தின் வண்டல் பாகம் மிஞ்சி விடுகிறது. அதை எப்படி உபயோகிக்கலாம்?
10 சின்ன வெங்காயம், அல்லது பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்துடன் சிறிது உப்பு சேர்த்து, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளுங்கள். இத்துடன் நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் சாம்பார் பொடி மற்றும் ஒரு ஸ்பூன் துருவிய தேங்காயையும் தூவி மேலும் ஒரு நிமிடம் வதக்கி ரச வண்டியில் சேர்த்துவிட்டால்... கமகம வெங்காய சாம்பார் ரெடி!
இஞ்சித் தேநீர் தயாரிக்கும்போது இஞ்சியை எப்போது சேர்ப்பது?
தேநீரில் இஞ்சியின் காரச்சுவை தூக்கலாக இருக்க வேண்டுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியை நசுக்கி, ஆரம்பத்திலேயே தண்ணீரில் போட்டுவிட வேண்டும். பிறகு, தேநீர் தூள், பால் என சேர்க்கலாம். ஜீரணக்கோளாறு, தொண்டை எரிச்சல் முதலியவற்றுக்கு இந்த டீ இதமாக இருக்கும். வெறும் இஞ்சியின் மணம் மட்டும் போதுமென்றால், தோல் நீக்கிய இஞ்சியைத் துண்டுகளாக்கி, தேநீர் கொதித்ததும் கடைசியில் சேர்க்கலாம்.

மெதுவடைக்கு மிக்ஸியில் மாவு அரைக்கும்போது, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தால், பிளேடு நகர மாட்டேன் என்கிறது. தண்ணீர் ஊற்றினால் மாவு இளகிவிடுகிறது.. மாவு சரியான பதத்தில் வர என்ன செய்யலாம்,?
உளுந்தை 2 முறை நன்கு கழுவுங்கள். பிறகு, அளவாகத் தண்ணீர் விட்டு 20 நிமிடங்கள் ஊற வையுங்கள்.. மிக்ஸியில் முதலில் பாதியளவு உளுந்தை மட்டும் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நைஸாக அரைக்கவும். மாவு தளர்வாகத்தான் இருக்கும். இப்போது மீதி உள்ள உளுந்தைப் போட்டு தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும். மாவு வடை பதத்துக்கு அரைபட்டுவிடும். இத்துடன் பொடியாக அரிந்த இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை கலந்து வடை சுடலாம்.
வேக வைத்த துவரம்பருப்பு சேர்க்காமலேயே ருசியான பருப்பு ரசம் தயாரிக்க முடியுமா?
ஓ... கால் மணி நேரத்திலேயே தயாரிக்கலாமே! மிக்ஸியின் சிறிய ஜாரில் ஒரு ஸ்பூன் துவரம்பருப்பு, தக்காளிப் பழத் துண்டுகள், கொஞ்சம் கறிவேப்பிலை, ஒரு ஸ்பூன் சீரகம், நான்கைந்து மிளகு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள், ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள்... இவற்றுடன் நெல்லிக்காய் அளவு புளியையும் உதிர்த்துப் போட்டு, கொஞ்சம் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து சில வினாடிகள் கிளறி, இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். ஏழெட்டு நிமிடங்கள் குறைந்த தீயில் கொதிக்க விட்டு, கொத்தமல்லி தூவி இறக்கினால்... சுவையான, கமகம பருப்பு ரசம் ரெடி.

ரயில் பயணங்களில் இட்லியில் மிளகாய்ப்பொடி தடவி எடுத்துப் போகும்போது, மிளகாய்ப்பொடியின் சுவை இட்லியின் உள் பாகத்தில் உறைக்க மாட்டேன் என்கிறதே..!
இட்லிகளை நான்கு துண்டுகளாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போடுங்கள். அவற்றின் மேல் மிளகாய்ப் பொடியைப் பரவலாகத் தூவுங்கள். பிறகு, எண்ணெயை வட்டமாக ஊற்றுங்கள் (நல்லெண்ணெய் பயன்படுத்துவது கூடுதல் ருசி தரும்). பாத்திரத்தை எடுத்து நன்கு குலுக்கிவிட்டால் மிளகாய்ப்பொடி சீராகப் பரவிவிடும்.
சமையலில் எந்தெந்த உணவு வகைகளில் எண்ணெயை அப்படியே பச்சையாகச் சேர்க்கலாம்?
அவியல், மோர்க்குழம்பு, தேங்காய் சாதம் முதலியவற்றில் தேங்காயைக் குறைத்துக் கொண்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெயைக் கடைசியில் மேலே ஊற்றலாம். புளிக்காய்ச்சல், வத்தல் குழம்பு, தொக்கு வகைகளில் சாதம் செய்தால்... கடைசியில் நல்லெண்ணெயைக் கொஞ்சம் சேர்க்கலாம். பாஸ்தா, புரூக்கோலி, லெட்யூஸ், பேபி கார்ன், ஸ்வீட் கார்ன் முதலியவற்றை சேர்த்து செய்யும் சாலட் வகைகளில் மேலே ஆலிவ் எண்ணெயை பச்சையாகச் சேர்த்துக் கிளறிவிடலாம் (விரும்பினால் வினிகரும் சேர்க்கலாம்). இதனால் சாலட்டிலுள்ள காய்களின் நிறமும் மாறாமல் இருக்கும்.