ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

கல்யாணம் முடிந்துவிட்டதா... நாமினியை மாற்றுங்கள்!

இன்ஷூரன்ஸ்

##~##

''அண்மையில் என்னிடம் ஆலோசனை கேட்டு வந்த ஒரு பெண், 'என் தோழியோட கணவர் திடீர்னு சாலை விபத்துல இறந்துட்டார். மாப்பிள்ளை 40 லட்ச ரூபாய்க்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருக்கார். ஆனா, அந்தப் பணம் அவளுக்குக் கிடைக் காது போலிருக்கு. மாப்பிள்ளை கல்யாணத்துக்கு முன்னால இந்த பாலிஸியை எடுத்தப்ப, தன் அம் மாவை நாமினியா போட்டிருக்கார். மாமியாருக்கும் மருமகளுக்கும் ஆரம் பத்திலிருந்தே சின்ன விஷயத்திலகூட ஆகாம இருந்திருக்கு. இப்ப இன்ஷூரன்ஸ் பணத்தைக் கேட்டா, 'என் மகன் என் பாதுகாப்புக்காகத்தான் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கான். அதனால அந்தப் பணத்தை தர முடியாது’னு மாமியார் முரண்டு பிடிக்கறாங்க. என்ன செய்றதுனு தெரியல’ என்று கவலையோடு சொன்னார்.

இறந்து போன கணவரும், அவருடைய மனைவியும் நன்கு படித்தவர்கள், விவரம் தெரிந்தவர்கள்தான். ஆனாலும் கல்யாணத்துக்குப் பிறகு இன்ஷூரன்ஸ் பாலிஸியில் நாமினியாக (வாரிசு) மனைவியின் பெயரை மாற்றாமல் விட்டதால் ஏற்பட்ட சிக்கலைப் பார்த்தீர்களா? இப்படி ஏகப்பட்ட குடும்பங்களில் பிரச்னை வெடித்துக் கொண்டிருக்கிறது''

- 'நாணயம் விகடன்' கட்டுரை தொடர்பாக சந்தித்தபோது, சென்னையின் முன்னணி நிதி ஆலோசகர்களில் ஒருவரான த.ராஜன், சொன்ன விஷயம்தான் இது.

கல்யாணம் முடிந்துவிட்டதா... நாமினியை மாற்றுங்கள்!

இன்றைய அவசர உலகில் பல முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளை எடுத்துவிடுகிறோம். அப்போது யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அல்லது யார் நம்மை நம்பி இருக்கிறார்களோ அவர்களை நாமினியாக கொடுத்துவிடுகிறோம். ஆனால், சூழ்நிலை மாறும்போது மற்றும் திருமணமாகும்போது நாமினியை மாற்ற மறந்துவிடுகிறோம். இதனால், நம்மையே நம்பி இருக்கும் குடும்பத்தினருக்கு இன்ஷூரன்ஸ் இழப்பீடு தொகை கிடைக்காமல் பரிதவிக்கும் சூழ்நிலையை நாம் உருவாக்கிக் கொடுத்துவிடுகிறோம் என்பதை யோசித்தபோது, கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இதைப் பற்றிய எச்சரிக்கையை 'அவள் விகடன்' வாசகி களிடம் கொண்டு சேர்க்கலாமே என்று சில தகவல்களை சொல்லச் சொல்லி ராஜனிடம் கேட்டோம்!

''முக்கியமாக இன்ஷூரன்ஸ் பாலிஸிகளை திருமணத்துக்கு முன் எடுத்திருக்கும்போது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் தங்களின் அம்மா அல்லது அப்பாவை நாமினியாக விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டிருப்பார்கள். இது கல்யாணத்துக்குப் பிறகும் தொடரும். இந்நிலையில், ஏதாவது அசம்பாவிதம் நடக்கும்போது, நாமினியாக நியமிக்கப்பட்டவர் வசம்தான் இழப்பீடு தொகை சென்று சேரும். இந்நிலையைத் தவிர்க்க, கல்யாணத்துக்கு பிறகு இன்ஷூரன்ஸ் பாலிஸியில் நாமினியை மாற்றிவிடுவது ஒன்றுதான் சிறந்த வழி. இதேபோல... வங்கிக் கணக்கு, டெபாசிட், பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, பிராவிடென்ட் ஃபண்ட், பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் போன்றவற்றிலும் திருமணத்துக்குப் பின் நாமினியை மாற்றிக்கொள்வது அவசியம்.

நாமினி மாற்ற நடைமுறை மிக எளிதானது. எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எந்த ஆவணமும் கொடுக்கத் தேவையில்லை. இதற்கான விண்ணப்பப் படிவத்தில் நாமினியாக நியமனம் செய்யப்படுபவர், கையெழுத்து போட்டுக் கொடுப்பது நல்லது. பிற்காலத்தில் வேறு யாராவது பணத்தை பெற்றுக்கொள்வது இதன் மூலம் தடுக்கப்படும். மாற்றிக் கொடுக்கப்பட்ட நாமினி விவரம் தொடர்புடைய அலுவலகத்தின் ஆவணங்களிலும் மாற்றப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்வதும் அவசியம்'' என்ற ராஜன், நாமினியாக துணைவரை மாற்றவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் விளக்கினார்.    

''முதலீடுகள் மற்றும் இன்ஷூரன்ஸ் பாலிஸிகளின் நாமினியாக உங்களின் துணைவர் இல்லாதபட்சத்தில், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், உங்களின் வாரிசு என்கிற தகுதி பெறும் அப்பா, அம்மா, சகோதரர் - சகோதரி போன்றவர்களுக்குத்தான் சட்டப்படி அந்தத் தொகை போய்ச் சேரும். அவர்களுக்கும், உங்களின் துணைக்கும் பிரச்னைகள் இல்லாதிருந்தால், அவர்களே முன் வந்து துணைக்கு அந்தப் பணம் சேரும் வகையில் உதவுவார்கள். மாறாக பிரச்னைகள் ஏதும் இருந்தால்... பணம் உங்கள் துணைக்கு போய் சேர்வதில் சிக்கல் ஏற்படும். அந்தத் தொகையைக் கேட்டு கோர்ட் படியேற வேண்டியதாகிவிடும்'' என்றவர், கணவன்மார்கள், மனைவிகளிடம் சொல்லி வைக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் சொன்னார்.

''பல பெண்களுக்கு பங்கு முதலீடு, மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ஆர்வம் இருக்காது. இதுபோன்ற நிலையில் முதலீட்டு விவரங்களை மனைவியிடம் சொல்லி வைப்பது மற்றும் அது தொடர்பான விவரங்களை எழுதிக் கொடுப்பது நல்லது. அப்போதுதான் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், குடும்பத்துக்காக செய்த முதலீடு சரியாக போய் சேரும். மேலும், குடும்பத் தலைவிகள், கணவன்மார்கள் முதலீட்டு விவரங்களை அவர்களாக தெரிவிக்கவில்லை என்றாலும் கேட்டு தெரிந்துகொள்வது நல்லது. அப்போதுதான் கணவர்களுக்கு சரியான நேரத்தில் இன்ஷூரன்ஸ் பிரீமியம், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுக்கான எஸ்.ஐ.பி. தேதியை நினைவுபடுத்த வசதியாக இருக்கும்'' என்று அருமையான ஆலோசனைகளையும் தந்தார் ராஜன்.

- சி.சரவணன்

கல்யாணம் முடிந்துவிட்டதா... நாமினியை மாற்றுங்கள்!

சைல்டு இன்ஷூரன்ஸ் பாலிஸி எடுத்திருப்பவர்கள் கவனத்துக்கு..!

லர் பிள்ளைகளின் படிப்பு மற்றும் கல்யாணத்துக்காக 'சில்ட்ரன்’ஸ் சைல்டு இன்ஷூரன்ஸ் பிளான்’களை எடுத்திருப்பார்கள். இதில், குழந்தையின் அம்மா அல்லது அப்பாவை நாமினியாக காட்டி இருப்பார்கள். இந்நிலையில், பாலிஸி எடுத்த பிறகு அம்மா அல்லது அப்பா யாராவது இறக்க நேரிட்டால், உயிருடன் இருக்கும் மற்றவரை நாமினியாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது.

இதேபோல் கணவன், மனைவி இடையே கருத்து ஏற்பட்டு பிரிந்து செல்லும்போது குழந்தைகள் பெயரில் இன்ஷூரன்ஸ் பாலிஸியை எடுத்திருந்தால், தேவைப்பட்டால் நாமினியை மாற்றிக்கொள்வது அவசியம்.