Published:Updated:

எம்ப்ராய்டரிக்கு இலவச பயிற்சி!

எம்ப்ராய்டரிக்கு இலவச பயிற்சி!

##~##

வாருங்கள்... வழிகாட்டுகிறோம்

ஹெல்ப் லைன்

பிஸினஸ் கேள்வி  பதில்

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி.ராமசாமி தேசாய் பதில் அளிக்கிறார்.

''நான் ஓர் இல்லத்தரசி. எனக்கு தையல் தொழில் தெரியும். லேட்டஸ்ட் எம்ப்ராய்டரி தையல் இயந்திரம் வாங்கியுள்ளேன். ஆனால், அதற்கான பயிற்சி கிடைக்குமிடம் தெரியவில்லை. முன்னேற வழிகாட்டுங்கள்.''

- என்.சுமதி, ஈரோடு

''சுமதி, உங்கள் ஊரின் பெருமையை முதலில் தெரிந்துகொண்டால், நீங்கள் எடுக்கவுள்ள ஜவுளித் தொழில் பற்றி முழு நம்பிக்கை கிடைக்கும். ஈரோடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பல ஊர்களிலும் பெரிய அளவில் ஜவுளி தொழில் நடைபெறுகிறது. திருப்பூர் பனியன், பவானி ஜமுக்காளம் பெரும் பெயர் பெற்றவை. இதேபோல கைக்குட்டைகள், ஜன்னல் திரைகள், தலையணை உறைகள், டி-ஷர்ட், பெட்டிகோட் மற்றும் காட்டன் துணி வகைகளுக்கு கரூர் புகழ்பெற்று இருக்கிறது. இவையெல்லாம் ஈரோட்டில் இருந்துதான் விற்பனை செய்யப்படுகின்றன. ஏற்றுமதியும் ஆகின்றன.

எம்ப்ராய்டரிக்கு இலவச பயிற்சி!

ஈரோட்டின் மத்திய பகுதியில் உள்ள மணிக்கூண்டு அருகே திங்கள் மாலை தொடங்கி, மறுநாள் காலை வரை ஒரு சந்தை நடக்கும். இதற்கு 'திங்கட்கிழமை இரவு சந்தை’ எனப் பெயர். இதன் சிறப்பு என்னவென்றால் ஈரோட்டைச் சுற்றி உள்ள திருப்பூர், கரூர், பவானி, குமாரபாளையம், பள்ளிபாளையம், எடப்பாடி, சேலம் மற்றும் மதுரை என பல ஊர்களிலிருந்தும் வரும் துணி உற்பத்தியாளர்கள் கடை போடுவார்கள். இப்படி நேரடியாக விற்பனை செய்யப்படுவதால், விலை குறைவாகவும் இடைத்தரகர்கள் இல்லாமலும் துணிகள் கிடைக்கும். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் பலர் வந்து, இந்த ஓர் இரவில் பல கோடிக்கு வியாபாரம் செய்கிறார்கள். பொருட்களை வாங்கும்போது மொத்த விலையில்... மொத்தமாகத்தான் வாங்க முடியும்!

இனி, உங்கள் கேள்விக்கு வருவோம்... ஈரோடு மாநகராட்சி சார்பில் நடக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சியில், மிகப்பெரிய அளவில் நவீன இயந்திரங்களுடன் இலவச எம்ப்ராய்டரி பயிற்சி அளிப்பார்கள். ஆர்டர் பெறுவதிலும் உதவுவார்கள். ஈரோடு டெக்ஸ்டைல் அண்டு கார்மென்ட் அசோஸியேஷன் (Textile & Garments Exporters Association, Erode) சென்னிமலை சாலையில், ஈரோடு ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கிறது. இங்கு நாற்பதுக்கும் மேற்பட்ட நவீன இயந்திரங்களை கொண்டு பயிற்சி அளிக்கின்றனர்.

எம்ப்ராய்டரிக்கு இலவச பயிற்சி!

சட்டை, ஜாக்கெட், சுடிதார் என அனைத்தும் கற்றுத் தருகிறார்கள். கை எம்ப்ராய்டரி, ஸ்டோன் வொர்க், பிரின்ட்டிங் என பல பயிற்சிகள் அளிக்கிறார்கள். இறக்குமதி செய்யப் பட்ட நவீன கம்ப்யூட்டர் டிசைன் இயந்திரங் களைக் கொண்டும் பயிற்சி தரப்படுகிறது. இவை அனைத்தும் உங்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, எஸ். சிவானந்தம், செயலாளர் (94421 88588) மற்றும் மகேஷ், நிர்வாக அதிகாரி (90959 90099) இவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

ஈரோட்டில் உள்ள கனரா வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவனத்தில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கே செல்லும்போது... பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் மூன்று, ரேஷன் கார்டு நகல் ஆகியவற்றை கையோடு கொண்டு செல்லுங்கள். முகவரி: இயக்குநர், கனரா வங்கி சுயதொழில் பயிற்சி மையம், அசோகபுரம், பவானிசாலை, ஈரோடு. தொலைபேசி எண் 0424-2290338.

ஆக, ஜவுளித்துறையில் நிறைய வேலை வாய்ப்புகள் ஈரோட்டில் உள்ளன. விரைவாக பயிற்சி பெற்று, ஆர்டர் எடுங்கள்!''