ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

வீட்டிலும் செய்யலாம் விவசாயம்!

ஹார்டிகல்ச்சர்

##~##

''வீட்டுல தோட்டம் போடுறதை இன்னிக்கு பெரிய விஷயமா பேசிட்டு இருக்கோம். ஆனா, நம்ம முன்னோருங்க, காலம் காலமா செஞ்சுட்டு வந்ததுதான் இது. இன்னிக்கு இதுக்காக நாம தனியா பயிற்சியே எடுத்துக்கிட்டு இருக்கோம்''

- இப்படி நெற்றிப் பொட்டில் அடிப்பது போல, சில வார்த்தைகளில் உண்மையை வின்சென்ட் உணர வைத்தது, ஒட்டுமொத்த கூட்டத்தையும் ஓரிரு நிமிடங்கள்... உலுக்கத்தான் செய்தது!

திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கம், திருப்பூர் தெற்கு இன்னர்வீல் சங்கம் மற்றும் பாரத ஸ்டேட் பாங்க் ஆகியவற்றுடன் இணைந்து, 'அவள் விகடன்’, 'பசுமை விகடன்’ இதழ்களின் சார்பில் 'வீட்டிலும் செய்யலாம் விவசாயம்’ என்கிற தலைப்பில், ஆகஸ்ட் 18\ம் தேதி ஒருநாள் பயிற்சி வகுப்பு திருப்பூரில் நடைபெற்றது. தெற்கு ரோட்டரி சங்க திருமண மண்டபத்தில் நடந்த இந்நிகழ்வுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ஜெயபாலன் தலைமை ஏற்க... ஆண்கள், பெண்கள் என சுமார் 500 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இங்கேதான்... வீட்டுத் தோட்டத்தில் ஆழ்ந்த அனுபவம் பெற்றிருப்பவரும்... சுற்றுச்சூழல் ஆர்வலருமான கோயம்புத்தூர் வின்சென்ட், தன்னுடைய பயிற்சி உரையின்போது அந்த உண்மையை உணர வைத்தார்!

''விவசாயம் செய்றதுக்கு நிலம் தேவைஇல்லீங்க... மனம் இருந்தாபோதும். நம்ம முன்னோருங்க, காலம் காலமா வீட்டுக்கு முன்ன நிழலுக்காக பந்தல் அமைச்சு, அதுல அவரை, பாகல், பீர்க்கன்... புறக்கடையில சுரை, அரசாணினு வளர்த்தாங்க. ஓட்டு வீடுகள்லகூட கொடிகளை ஏத்திவிட்டு காய்கறிகளை விளைய வெச்சாங்க. அடுப்பு சாம்பலை பூச்சிவிரட்டியா பயன்படுத்தினாங்க. ஆனா, நாம இன்னிக்கு இதுக்காக தனியா பயிற்சி எடுக்கற அளவுக்கு நிலைமை தலைகீழா மாறிக்கிடக்கு. வீட்டுத் தோட்டம் தொடர்பா பெங்களூருல ஒருநாள் பயிற்சி நடந்துச்சு. அதுக்கான கட்டணம் 3 ஆயிரம் ரூபாய். நான் அந்த பணத்தைக் கட்டித்தான் பயிற்சி எடுத்துக்கிட்டேன். இன்னிக்கு உங்களுக்கு இலவசமா அந்த பயிற்சியை இங்க கொடுத்துட்டு இருக்காங்க'' என்று சொன்ன வின்சென்ட்,

''வீட்டுத் தோட்டம் போடுறதால சமையலறை கழிவுகள் மறுசுழற்சி ஆகுது, கழிவு நீரும் பயன்பாட்டுக்கு வருது. மூலிகை செடிகளை வளர்க்குறதால வைத்திய செலவுல கொஞ்சம் மிச்சப்படுத்தலாம். பெரியவங்களுக்கு மனஅழுத்தம் குறையுது. வீட்டுலயே காய்கள் உற்பத்தியாகறதால அழுகுறது, வீணாகுறது இல்ல. இது எல்லாத்தையும்விட, குழந்தைகளுக்கு இயற்கையைப் புரிய வைக்க அருமையான வாய்ப்பு. இப்படி நன்மைகளை அடுக்கிட்டே போலாம்.

வீட்டிலும் செய்யலாம் விவசாயம்!

மொட்டைமாடியில தோட்டம் போட்டா, தண்ணி லீக் ஆகி, கட்டடம் சேதமாகிடும்னு சிலர் பயப்படுறாங்க. அது தேவையில்லாத பயம். தண்ணி லீக் ஆகாம இருக்க பல தொழில்நுட்பங்கள் வந்தாச்சு. வீட்டுத் தோட்டம் மூலமா காய்கறிகள் மட்டும் இல்லாம, அழகு தாவரங்களை வளர்த்து, அதை ஒரு வியாபாரமாவும் செய்யலாம். அதனாலயும் ஒரு வருமானம் கிடைக்கும்!

வீட்டிலும் செய்யலாம் விவசாயம்!

வீட்டுத் தோட்டம் அமைக்க அதிக செலவு செய்யத் தேவையில்லை. சாக்குப் பை, பெயின்ட் டப்பா, வாட்டர் கேன், தேங்காய் சிரட்டைனு சுலபமா கிடைக்குற, தூக்கிப் போடுற பொருட்களை வெச்சே வளர்த்துடலாம். கீரை, தக்காளி, முள்ளங்கி மாதிரியான குறுகியகாலப் பயிர்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். எல்லாவிதமான செடி, கொடிகளையும் வளர்க்க முடியும்னாலும்... நம்ம வீட்டுக்கு ஏத்த தோட்டத்தை முடிவு செஞ்சுட்டு, என்ன பயிர்களை வளர்க்கப் போறோம்னு முடிவு செய்யணும். பிறகு, எளிய, இயற்கை இடுபொருட்களைப் பயன்படுத்தி தோட்டம் அமைக்கணும். மீண்டும் சொல்றேன்... பொறுமை, ஆர்வம், கொஞ்சம் இடம், மண், நீர், விதைகள் இருந்தா... உங்களாலயும் வீட்டுல விவசாயம் செய்ய முடியும்!' என்றார் அழுத்தம் கொடுத்து!

வீட்டிலும் செய்யலாம் விவசாயம்!

தேனீ வளர்ப்பு தொடர்பாக பேசிய திருப்பூர், தேனீ பண்ணையாளர் திருஞானசம்பந்தம், இத்தாலிய தேனீக்களை வணிகரீதியாக வளர்க்கும் முறைகளைப் பற்றி பேசினார். இந்திய தேனீக்கள் பற்றிப் பேசிய சிவகிரி, தண்டாயுதபாணி, ''ஒரு தேன் பெட்டியோட விலை 1,500 ரூபாய்ல இருந்து 2,000 வரை இருக்கும். வீட்டுல ஒரு தேன் பெட்டியை வெச்சா வருஷத்துக்கு 10 கிலோ தேனை எடுக்க முடியும். தேன் மட்டுமில்லாம அது சேமிக்கற மெழுகு, மகரந்தம் இதெல்லாம் நல்ல விலை போகும். தேனீ வளர்க்க அதிகமா மெனக்கெடத் தேவையில்லை. ரெடிமேடா பெட்டி கிடைக்குது. அதை வாங்கி வீட்டுல வெச்சிட்டு, சில பராமரிப்புகளை மட்டும் செஞ்சா போதும்'' என்று தகவல்களைத் தந்தார்.

'காசு கொட்டும் காளான் வளர்ப்பு’ என்ற தலைப்பில் பேசிய திண்டுக்கல், காளான் பண்ணையாளர்களான கவிதா - மோகன்தாஸ் தம்பதி, ''காளான் வளர்ப்பு மிகவும் எளிமையானது. இதனை வீட்டிலிருந்தபடியே செய்து நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். 100 சதுர அடியில் ஒரு கூரைக் கொட்டகை இருந்தாலே போதும். சுழற்சி முறையில் தினமும் 10 காளான் படுகைகள் தயார் செய்தால், மாதம் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம்!'' என்று வழிகாட்டியதோடு... காளான் படுகை தயாரிக்கும் முறைகளை நேரடியாக செய்தும் காட்டினார்கள்.

வீட்டிலும் செய்யலாம் விவசாயம்!

பயிற்சியில் பங்கேற்ற ஒட்டுமொத்த வாசகிகள் சார்பாக பேசிய திருப்பூர் வழக்கறிஞர் துர்காதேவி, ''மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த பயிற்சியின் நோக்கம் முழுமையடையணும்னா... இங்க தெரிஞ்சுகிட்ட விஷயங்கள வீட்டுல நடைமுறைப்படுத்தி பார்க்கணும். ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறிகளை நாமளே உற்பத்தி செஞ்சு சாப்பிட ஆரம்பிச்சாலே... பல நோய்களை விரட்டிடலாம். இந்தப் பயிற்சியை கொடுத்த விகடன் குழுமத்துக்கு நன்றி!'' என்றார் நெகிழ்ச்சியாக.

- ஆர்.குமரேசன்

படங்கள்: கே.ரமேஷ்

வீட்டுக்கொரு முருங்கை!

''முருங்கைக் கீரையை, சத்துக்களின் களஞ்சியம்னே சொல்லலாம். அதுல, ஆரஞ்சுப் பழத்தைவிட ஏழு மடங்கு 'வைட்டமின் சி’ அதிகமா இருக்கு. கேரட்டைவிட நான்கு மடங்கு 'வைட்டமின் ஏ’ அதிகமா இருக்கு. பால்ல இருக்கறதவிட 4 மடங்கு கால்சியம் அதிகமா இருக்கு. வாழைப்பழத்தைவிட 3 மடங்கு பொட்டாஸியம் கூடுதலா இருக்கு. இவ்வளவு சத்துள்ள முருங்கை, ஒவ்வொருத்தர் வீட்டுலயும் இருக்க வேண்டாமா?'' என்று வின்சென்ட் எழுப்பிய கேள்வி... அனைவரையும் ஈர்ப்பதாக இருந்தது!