ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

பாதிக்குப் பாதி லாபம்... அள்ளித்தரும் ஊறுகாய் பிஸினஸ்!

ஸ்டெப்ஸ்

##~##

 ''எனக்கு ஒரு பையன், ஒரு பொண்ணு. ரெண்டுபேரும் தலைக்கு மேல வளர்ந்துட்டாங்க. அவங்களோட படிப்பு, எதிர்காலம் பத்தியெல்லாம் யோசிக்கும்போதுதான் வாழ்க்கை பத்தின லேசா ஒரு நடுக்கம் வந்துச்சு. பத்தாவதுதான் படிச்சுருக்கேன். கணவருக்கு துணையா வருமானத்துக்கு ஏதாச்சும் வழி பார்க்கலாமேனு தோணுச்சு. 'அம்மா, வீட்டுலயே போடுற ஊறுகாய் இருந்தா... ஒரு பிடி சாதம் அதிகமா உள்ள போகும்'னு என் பசங்க அடிக்கடி பாராட்டுறது ஞாபகம் வந்துச்சு. கணவரும், பிள்ளைகளும் கொடுத்த ஊக்கத்தால... ஊறுகாய் பிஸினஸ் ஆரம்பிச்சேன். இன்னிக்கு மாசம் கைநிறைய சம்பாதிக்கிறேன்கிறதை என்னாலேயே நம்ப முடியல!''

- விறுவிறு ஓபனிங் கொடுத்து, நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார்... சென்னை, முகப்பேர், விஜயலட்சுமி.

ஏழு ஆண்டுகளாக ஊறுகாய் பிஸினஸை சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பதன் மூலம், பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கும் விஜயலட்சுமியின் வெற்றி வார்த்தைகள் இதோ...

''ஊறுகாய் பிஸினஸ் ஆரம்பிக்கும்போது தனியாளாத்தான் இருந்தேன். அதனால, பெரிய அளவுல ரிஸ்க் எடுக்காம, 10 கிலோ அளவுக்கு மாங்காய் ஊறுகாய் போட ஆரம்பிச்சேன். தெரிஞ்சவங்க... பக்கத்துல இருக்குற கடைகள்னு கொடுக்க ஆரம்பிச்சேன். சுவையும் தரமும் நல்லா இருக்குனு சொல்லி, தொடர்ந்து ஆர்டர் கொடுத்தாங்க. பிறகு, 10 ஆயிரம் ரூபாயை முதலீடா போட்டு, தொழிலை விரிவு படுத்தினேன். ஒரு மாசத்துக்கு அப்புறம் அது 15 ஆயிரம் ரூபாயா வளர்ந்து நின்னுச்சு. அதுவே ஒரு உத்வேகம் கொடுக்க... மாங்காய், இஞ்சி, நார்த்தங்காய், எலுமிச்சை, மாந்தொக்கு, ஆவக்காய்னு வகை வகையா ஊறுகாய்கள் போட ஆரம்பிச்சேன். அதுக்காக என்னோடு ஐந்து பெண்களையும் சேர்த்துக்கிட்டேன். ஒரே மாசத்துல லாபம் பல மடங்கு உயர ஆரம்பிச்சுடுச்சு.

பாதிக்குப் பாதி லாபம்... அள்ளித்தரும் ஊறுகாய் பிஸினஸ்!

வாடிக்கையாளர்கள் நிறைய பேர், அவசர சமையலுக்கு தேவைப்படுற மாதிரி தொக்கு வகைகள் தயாரிச்சு கொடுக்கச் சொன்னாங்க. ஊறுகாய் செய்ய நான் யார்கிட்டயும் பயிற்சி எடுத்துக்கல. சொந்த அனுபவத்தை வெச்சேதான் செய்தேன். ஆனா, தொக்கு வகைகள் செய்யறதுக்கும், பதப்படுத்தறதுக்கும் எனக்கு தெரியாதுங்கறதால... முறையா பயிற்சி எடுத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன். வெற்றி மேல வெற்றி வந்து சேர ஆரம்பிச்சுது'' என்றவர், தான் தயாரிக்கும் ஊறுகாய் வகைகளைப் பட்டியலிட்டார்.

''பொதுவா... ஏப்ரல், மே கோடை முடிஞ்ச பிறகுதான் ஊறுகாய் பிஸினஸ் ஓகோனு இருக்கும். அதை மனசுல வெச்சே... பலவிதமான ஊறுகாய்கள், தக்காளி - வெங்காயம், பூண்டு - வெங்காயம், புளிச்சக்கீரை ஸ்பெஷல் ஊறுகாய், புளியோதரை பேஸ்ட், புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை பேஸ்ட்னு நிறைய தயாரிக்கிறோம்.

சுவை, தரம் இது ரெண்டும் இருந்தா போதும், வெற்றி நிச்சயம். குடிசைத் தொழிலா ஆரம்பிச்ச இந்த தொழில் இந்தளவுக்கு வளரும்னு நானே நினைச்சுப் பார்க்கல. ஆரம்பத்துல 10 ஆயிரம் முதல் போடவே யோசிச்ச நான்... இப்போ தைரியமா முதலீடு செய்றேன். இந்தத் தொழில்ல பாதிக்கு பாதி லாபம். உதாரணத்துக்கு நீங்க ஒரு லட்சம் முதலீடு போட்டா... 50 ஆயிரத்தை லாபமா அள்ளலாம்'

- வெற்றிப் புன்னகையுடன் பேசிய விஜயலட்சுமி, புளிச்சக்கீரை ஊறுகாய் ரெசிபியையும் கொடுத்து அசத்தினார்.

- பொன்.விமலா, படங்கள்: அபிநயா சங்கர்

நாவில் சுவையூறும் புளிச்சக்கீரை ஊறுகாய்!

தேவையான பொருட்கள்: புளிச்சக்கீரை - 1 கட்டு, கடுகு - 2 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - 1 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - 1 (நறுக்கிக் கொள்ளவும்), நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் 150 கிராம், தனியா 3 டேபிள்ஸ்பூன், சீரகம் 1 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - அரை டேபிள்ஸ்பூன்.

பதப்படுத்த / பாதுகாக்க: வினிகர் 5 - டேபிள்ஸ்பூன், சோடியம் பென்சாய்டு - கால் டேபிள்ஸ்பூன்.

செய்முறை: முதலில்... வறுக்கக் கொடுத்தவற்றை தனித்தனியே வறுத்து, பொடி செய்துகொள்ள வேண்டும். அடுத்து, புளிச்சக்கீரையைச் சுத்தமாக கழுவி, தண்ணீரை வடிக்க வேண்டும். கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி, கீரையை அதில் சேர்த்து நன்கு சுருள வதக்க வேண்டும். பிறகு, தயாராக இருக்கும் பொடி மற்றும் உப்பு ஆகியவற்றைக் கீரையுடன் சேர்த்துக் கிளற வேண்டும். வேறொரு கடாயில் எண்ணெய்விட்டு, கடுகு மற்றும் பெருங்காயம் தாளிக்க வேண்டும். நறுக்கிய வெங்காயத்தை அதில் சேர்த்து வதக்கி, பிறகு, கீரைக் கலவையையும் சேர்த்து, பத்து நிமிடம் அடுப்பை சிம்மில் வைக்க வேண்டும். எண்ணெய் தனியே பிரிந்து வரும்நிலையில், வினிகர் மற்றும் சோடியம் பென்சாய்டு பவுடர் சேர்த்தால்... புளிச்சக்கீரை ஊறுகாய் ரெடி. உலர்ந்த, சுத்தமான பாட்டிலில் சேமித்தால் 4 முதல் 5 மாதம் வரை கெடாமல் பாதுகாப்பாக இருக்கும்.