அவேர்னஸ்
##~## |
'இந்த நிமிடத்தின் பாலியல் வன்முறை' என்று தொலைக்காட்சி சேனல்களில்... தனி பகுதியே ஆரம்பித்து, செய்திகளை ஒளிபரப்பும் அளவுக்கு... சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அவலங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. பிரச்னை நடந்த பிறகு நியாயம் கிடைக்கப் போராடுவது ஒருபுறமிருக்க... விழிப்பு உணர்வுடன் இருப்பதும் நல்லதுதானே!
அப்படி, இக்கட்டான சூழல்களிலிருந்து, பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, சென்னையில் உள்ள 'கிராவ் மகா’ என்கிற அமைப்பின் பயிற்சியாளர் ஸ்ரீராம்... பெண்களுக்கு பாதுகாப்பு டிப்ஸ் மற்றும் நூதன தற்காப்பு உத்திகளைக் கற்றுத் தருகிறார்.
சூழ்நிலையை கிரகித்துக் கொள்ளுங்கள்!
அறிமுகமான இடத்தைத் தவிர, புது இடங்களில் இருக்கும் நிலை ஏற்பட்டால்... உங்களைச் சுற்றி இருப்பவர்களின் மீது கவனத்தை செலுத்துங்கள். யாராவது உங்களை தவறான கண்ணோட்டத்துடன் நோட்டம் விடுவது தெரிந்தால், உடனடியாக அந்த இடத்தைவிட்டு அகலுங்கள். அதையும் மீறி அந்த நபர் தொந்தரவு கொடுத்தால், காவல்துறையின் மகளிர் உதவி தொலைபேசி எண்ணுக்கு (1091) அழைத்து புகார் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் 'அவசரத்துக்குத்தானே...’ என நினைத்து, போதை ஆசாமிகளிடம் மட்டும் உதவி கேட்டுவிடாதீர். அது பிரச்னையை இரட்டிப்பாக்கிவிடும்.
பயத்தை வெளிக்காட்டாதீர்கள்!
எந்த சூழ்நிலையிலும் எதிராளியின் முன், உங்கள் பயத்தை வெளிக்காட்டாதீர்கள். மனதில் பயம் இருந்தாலும், பேச்சில் காட்டாமல்... கண்களை நேரே பார்த்து கருத்தைத் தெரிவியுங்கள். எவரையும் எளிதில் நம்பிவிடாதீர்கள். புரிதலுக்குப் பின் வரும் நம்பிக்கையும்... அதீத நம்பிக்கையாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

தவறானவர்கள் உங்களை அணுகாமலிருக்க..!
வீட்டில் தனியாக வாழ்பவரா நீங்கள்? அப்படியானால்... இன்ட்ர டியூஸர் அலாரம் (Introducer alarm system) போன்ற எச்சரிக்கை கருவிகளைப் பொருத்திக் கொள்ளலாம். பாதுகாப்புக்காக காவல் நாய்களை வளர்க்கலாம். கதவுகளுக்கு முன்னதாக கிரில் போடுவது நல்லது. ஜன்னல்களையும் கூடுதலாக பலப்படுத்துவது அவசியம்.
தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள்!
எப்போதும் விழிப்பு உணர்வுடன் இருங்கள். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். தவறாக ஏதோ நடக்கப் போகிறது என்று அது சொன்னால்... உடனடியாக உஷாராகுங்கள், தயங்காமல் அந்த இடத்தை விட்டு அகலுங்கள். குற்றவாளிகள் என்றாலே கொடூரமாகத்தான் இருப்பார்கள் என்கிற தவறான மதிப்பீடுகளை மனதில் திணித்துக் கொள்ளாதீர்கள். கண்ணுக்கு அழகாக அப்பிராணியாக தெரிபவன்கூட கொலை செய்வான். எனவே, தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள்.
சமூக வலைதளம்... ஜாக்கிரதை!
உங்களைப் பற்றிய எந்தச் செய்தியையும்... அதாவது, உங்கள் தொலைபேசி எண், வீட்டு முகவரி, புகைப்படங்கள் போன்ற விவரங்கள் சமூக வலைத்தளங்களிலோ அல்லது புதிதாக அறிமுகமானவர்களிடமோ வெளியிடாமல் இருப்பது நல்லது. நினைவில் கொள்ளுங்கள்... குற்ற குணத்தோடு இத்தகைய வலைதளங்களில் உலவும் பேர்வழிகள்... அவர்களுடைய உண்மையான அடையாளங்களை வெளியிடுவது இல்லை. எனவே, அவர்கள் வீசும் வலையில் விழாமல் உஷாராக இருங்கள்.
அலர்ட் ப்ளீஸ்!
சாலைகளில் நடக்கும்போதும் செல்போனில் பேசியபடி நடப்பது.... அல்லது பாட்டுக் கேட்டபடி இருப்பது என்று ஒரேயடியாக மூழ்கிவிடாதீர்கள். இது, எதிரிகள் எளிதில் தாக்குவதற்கு நீங்களே ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது போலத்தான் ஆகிவிடும். அதனால், சுற்றி என்ன நடக்கிறது என்பதை எச்சரிக்கையோடு கவனித்தபடியே இருங்கள். அதற்காக, பயப்படவோ... பதறவோ தேவையில்லை!

இயலாமையிலிருந்து விடுபடுங்கள், இப்படி..!
ஓர் இக்கட்டான சூழலில் மாட்டிக் கொண்டால்... அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பலரால் யோசிக்கக்கூட முடியாது. அந்த இயலாமையைதான், தாக்க வரும் எதிராளியின் இலக்கு. அதனால் எந்தச் சூழ்நிலையில் மாட்டிக்கொண்டாலும்... உங்களை தாக்க வருபவர் பின் தொடரா வண்ணம், வேகமாக முழுத்திறனுடன் ஓடுங்கள். முக்கியமாக மக்கள் கூட்டமாக உள்ள இடத்துக்குச் சென்றுவிட்டால்... ஆபத்திலிருந்து தப்பிக்கலாம். கையில் கிடைக்கும் பொருட்களை வீசியோ... அடித்தோ உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அல்லது மண், மிளகாய்த்தூள் போன்றவற்றை தூவியும் தப்பிக்கலாம்.
நிலைகுலைய வையுங்கள்... எதிரியை!
உங்களை நீங்கள் காப்பாற்றிக் கொள்ள, முதலில் சத்தமாக கூச்சல் போடவேண்டும். உங்களை தாக்குபவர் பலசாலியாக இருந்தாலும், அவர் உடலின் பகுதியில் தாக் கினால், உதாரணத்துக்கு கண், மூக்கு மற்றும் அந்தரங்க பகுதிகளில் தாக்குவது அவர்களை நிலைகுலைய வைக்கும். கடிப்பது, கீறுவது போன்ற எளிய செயல்களை செய்தும் தப்பிக்க முயற்சிக்கலாம்.
என்ன தோழிகளே... ஸ்ரீராம் சொல்லும் இந்த வழிமுறைகளை மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டால், கூடவே ஒரு பாதுகாப்பு கவசம் நிச்சயம்தானே!
- அ.பார்வதி
படங்கள்: ஆ.முத்துக்குமார்