ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

ஆதலால் காதல் செய்யலாமா?

உணர்வுகளை உரசும் ஒரு விவாதம்கலந்துரையாடல்

##~##

 ர்மபுரி, இளவரசன் - திவ்யா காதல், இயக்குநர் சேரன் மகள் காதல்... என்று சில பல மாதங்களாகவே காதல் பிரச்னைகள்தான் தமிழகத்தின் தலைப்புச் செய்தி. இத்தகையதொரு சூழலில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் தற்போது வெளிவந்திருக்கும் 'ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படம், பெரும்பான்மையாக இருக்கும் இக்கால இளைஞர்களின் 'காதலை’, அதிர வைக்கும் திரைமொழியில் பேசுகிறது. முதல் பாதியில் காட்சிக்கு காட்சி 'காதல் டெம்போ'வைக் கூட்டும் படம்... இரண்டாம் பாதியில், காட்சிக்கு காட்சி அடிவயிற்றில் பயத்தீயைப் பற்ற வைக்கிறது.

கல்லூரி மாணவர்களான கார்த்திக் - ஸ்வேதா இடையே காதல் அரும்புகிறது. நண்பர்கள் உதவிக்கு வருகின்றனர். அந்தக் காதல் முடிவது... கர்ப்பத்தில். சாதி, அரசியல் லேசாக உள்ளே நுழைய... 'குடும்ப மரியாதை போய்விடும். கலைத்துவிட்டு வந்தால் கல்யாணம்’ என்கிறது கார்த்திக் குடும்பம். ஆனால், கருவைக் கலைத்தால்... உயிரே போய்விடும் என்று டாக்டர்கள் எச்சரிப்ப தாலும், அதுதான் துருப்புச் சீட்டு என்பதாலும் மறுக்கிறது ஸ்வேதா குடும்பம். கடைசியில், பிறக்கும் குழந்தை அனாதைகள் இல்லத்தில் விடப்பட... ஸ்வேதாவுக்கு வேறு பையனுடன் கல்யாணம் நிச்சயமாகிறது. கார்த்திக், இன்னொரு பெண்ணுடன் பழக ஆரம்பிக் கிறான்... என்று 'வணக்கம்' போடுகிறார்கள்!

திரைப்படம் பற்றியும், இன்று சிட்டி முதல் பட்டி வரை நீக்கமற இருக்கும் மாணவப் பருவ காதல் பற்றியும், அதனால் பதறி நிற்கும் பெற்றோர்களின் நிலை பற்றியும் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்தோம். பெற்றோர் தரப்பிலிருந்து பிரதீப் - தீபா தம்பதி; இளைஞர்கள் தரப்பிலிருந்து உதய், அருண் பிரசாத், நிவேதிதா, சுதா; சமூகப் பார்வையைச் சுட்டிக்காட்ட சமூக சேவகி மற்றும் கவிஞர் சுமித்ரா... தயாரானார்கள்.

ஆதலால் காதல் செய்யலாமா?

பிரதீப்: இதுபோன்ற சூழலில்தான் இன்றைக்கு பெரும்பாலான மாணவர்களும், பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்பது கசக்கும் உண்மை. விடலைப் பருவ காதல், அதன் பக்குவமில்லாத, பயமறியாத வேகம், அதற்குப் பலியாகும் வாழ்க்கை, பிள்ளைகளின், குறிப்பாக பெண்ணைப் பெற்றவர்களின் பரிதாப நிலை... என்று படத்தின் ஒவ்வொரு காட்சியும் உண்மைக்கு மிக நெருக்கம்.

நிவேதிதா, சுதா: படத்தில் ஏதோ பெற்றவர்கள் பரிதாபம், பிள்ளைகள்தான் குற்றவாளிகள் என்பதுபோல் காட்டியுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாதது. நான்கைந்து பேர் செய்யும் தவறுக்கு, ஒட்டுமொத்தமாக கொச்சைப்படுத்துவது சரியல்ல. பிள்ளைகளின் மேல் சந்தேகக் கண் படரவிட்டிருக்கும் பெற்றோர்தான் இங்கே அதிகம். உண்மையில், கண்டிப்பு, சந்தேகம், ஈகோவை எல்லாம் விட்டுவிட்டு... பெற்றோர்தான் பிள்ளைகளுடனான சுமுக உறவுக்கு இடம் கொடுக்கவும், எங்கள் பிரச்னைகள் காதுகொடுத்து கேட்கவும் தயாராக வேண்டும்.

ஆதலால் காதல் செய்யலாமா?

தீபா: நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். இருவரின் வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை. காத்திருந்தோம். இரு வீட்டாருக்கும் எங்கள் நிலைமையைப் பக்குவமாகப் புரிய வைத்தோம். இறுதியில் எங்கள் காதலின் உண்மையும் உறுதியும் அவர்களின் சம்மதத்தைப் பெற்றுக் கொடுத்தது. ஆனால், அந்தப் பொறுமை இக்காலப் பிள்ளைகளுக்கு இல்லை. பெற்றோர் சம்மதம் கிடைக்காததைவிட, தங்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்னையால் பிரியும் காதலர்களின் எண்ணிக்கைதான் இன்று அதிகம். எல்லாவற்றையும் உடனே பார்த்துவிட வேண்டும் என்கிற நினைப்பு... விரலுக்கு ஏத்த வீக்கம் என்று உணராமல், நினைத்தது கிடைப்பதற்காக எல்லை தாண்டும் செய்கை... இவைதான் இன்றைய இளைஞர்களின் வீக்னஸ்.

சுமித்ரா: காதலின் போலி முகங்கள் வெளுத்து ஒருவருக்கொருவர் தங்களின் சுயரூபத்தை வெளிகாட்ட ஆரம்பிக்க,  பிரச்னை வலுக்கிறது. உடனே, 'உனக்கும் எனக்கும் சரிப்பட்டுவராது’ என்று விவாகரத்து பெறுகிறார்கள். இத்தனையும் பெற்றோர்களுக்குத் தெரியாமலேயே நடந்து முடிந்துவிடுகிறது.

'உன் பொண்ணு படுத்ததுக்கு என்ன ரேட்?' என்று அந்தக் காதலனின் தரப்பு பேரம் பேசும்போது... பெண்ணின் அப்பா கூனிக் குறுகி நிற்கும் காட்சி... கண்களைக் கலங்க வைக்கின்றன. வயசுக் கோளாறில் தவறு செய்யத் துணியும் எந்தப் பெண்ணும், தன் அப்பாவை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்.  

அருண்பிரசாத், உதய்: நட்பு, புரிதல், காதல், நல்ல வேலை என்று வாழ்க்கையில் செட்டிலாகும் எத்தனையோ இளம் ஜோடிகள் இங்கு இருக்கிறார்கள். இந்தப் படத்திலும் கார்த்திக்-ஸ்வேதா இருவரும் புரிதலோடு பிரச்னையை அணுகிஇருந்தால், வாழ்க்கையை வசமாக்கியிருக்கலாம்.

சுமித்ரா: திரைக்கதையை மாற்றும் ஆலோசனையைவிட, உண்மையை உணரத் தொடங்குவதே காலத்தின் அவசியம். இன்று அதிகரித்து வரும் டீன் ஏஜ் கர்ப்பங்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கின்றன. இந்தப் படம், பெற்றோர்கள், மாணவர்கள் இரு தரப்பும் விழித்துக்கொள்ள... எச்சரிக்கை மணி.

காதல் என்றால், நம்பிக்கை ரொம்ப முக்கியம். இளவரசன் - திவ்யா காதல் என்னவாயிற்று? அதில் ஆயிரத்தெட்டு அரசியல், சாதி வந்தாலும் உறுதியோடு இருந்தால்... யார் என்ன செய்ய முடியும்? லேட்டஸ்ட் நியூஸ்... தந்தை சேரனுடன் மகள் தாமினி மீண்டும் சேர்ந்திருப்பது. ஆகமொத்தத்தில், காதல் மீதும், காதலிப்பவர் மீதும் உண்மையாகவே நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்கு, 'காதல் என்றால் என்ன’ என்று சரியாகப் புரிகின்ற வயதில் காதலிக்க வேண்டும். அதுதான் சரியான காதல். இல்லாவிட்டால், அது வெறும் இனக்கவர்ச்சியே!

(அனைவரும் தலையாட்டுகின்றனர்!)

ஆதலால், காதல் என்ற பெயரில் தவறுக்குத் துணியாதீர்கள், நம்மைப் பெற்று, வளர்த்து, ஆளாக்க தங்கள் வாழ்க்கை மொத்தத்தையும் கழித்து நிற்கும் அப்பா, அம்மாவை முதலில் காதலியுங்கள். இதுதானே மெஸேஜ்..?!

- சுதா கேட்க, அனைவரும் ஆமோதிக்க... நிறைவு!

- வே.கிருஷ்ணவேணி, பொன்.விமலா

படம்: அபிநயா சங்கர்

''காதல் தவறில்லை... வயதுதான்!''

''ஏன் இப்படியொரு படம்?'' என்று இயக்குநர் சுசீந்திரனிடம் கேட்டபோது, ''காதலை புனிதப்படுத்தி மட்டுமே இங்கே நிறைய படங்கள் எடுக்கப்படுகின்றன. அப்படியெல்லாம் எடுக்காமல், யதார்த்தத்தை பதிவு செய்யும் காதல் படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்... எடுத்தேன்.

ஆதலால் காதல் செய்யலாமா?

பருவம் வந்தும், பக்குவம் வராத மனநிலையில் இருக்கும் பெண்கள், தவறான நோக்கம் கொண்ட வாலிபர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாவதை செய்தித் தாள்களில் படிக்கிறோம்... கல்லூரி மாணவிகள் சிலரும் அறியாபருவத்தில் தவறு செய்துவிட்டு, வீட்டுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்வதையும் கேள்விப்படுகிறோம்... இத்தகைய நிஜத் தகவல்களை பல இடங்களில் இருந்தும் சேகரித்தேன். கடைசி வரை க்ளைமாக்ஸ் லைன் கிடைக்காமல் இருந்தது. இடையில், அனாதை ஆசிரமம் ஒன்றுக்கு சென்றபோது, இளம்வயதில் தவறு செய்த பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளை அங்கே பார்த்தபோது... என் மனம் பதைபதைத்தது. அப்படியே க்ளைமாக்ஸ் காட்சியாக்கிவிட்டேன்'' என்ற சுசீந்திரன்,

''படத்தில் பெற்றவர்கள் தரப்பை இருவேறுவிதமாக காட்டியிருப்பேன். எல்லா வகையிலும் சுதந்திரம் கொடுக்கக் கூடிய அம்மாவின் மகளும் தவறு செய்வாள். எப்போதுமே கண்டிப்பாக இருக்கும் அப்பாவின் மகனும் தவறு செய்வான். ஆக, சூழல்தான் எதையுமே தீர்மானிக்கிறது. காதல் என்பது தவறில்லை. காதலிக்கும் வயதை தீர்மானிப்பதில்தான் தவறு நடந்துவிடுகிறது'' என்று அழகாக புரிய வைத்தார்!