ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

உள்ளாட்சியில் நல்லாட்சி... உற்சாகத்தில் விருதுப் பெண்கள்!

சக்சஸ்

##~##

டிப்பு என்று எடுத்துக் கொண்டால்... தொடர்ந்து பல ஆண்டுகளாகவே பெண்களின் ஆதிக்கம்தான் அதில் அதிகமாக இருக்கிறது. முதலிடத்தைப் பிடிப்பது பெரும்பாலும் மாணவிகளாகவே இருக்கின்றனர். அந்த வரிசையில், தற்போது பெண் அரசியல்வாதிகளும் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற 67-ம் ஆண்டு சுதந்திர தின விழாவில், உள்ளாட்சி நிர்வாகத்தில் சாதனை புரிந்தவர்களுக்கு 'முதல்வர் விருது'கள் வழங்கப்பட்டன. இதில் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகிய மூன்று நிலைகளிலும் முதல் பரிசினை தட்டியிருக்கிறார்கள்... மூன்று பெண்கள்!

ஈரோடு மாநகராட்சி, உடுமலைப்பேட்டை நகராட்சி மற்றும் அவினாசி பேரூராட்சி ஆகியவற்றின் தலைவிகளான இந்த மூன்று பேருமே ஆளும் அ.இ.அ.தி.மு.கழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு தன் கையால் விருதுகளை வழங்கி பாராட்டியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா.

மக்களைத் தேடி மாநகராட்சி!

முகம் முழுக்க மலர்ச்சியோடு வரவேற்ற ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம், ''மக்களைத் தேடி மாநகராட்சி என்கிற திட்டம், எதிர்க்கட்சியினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களிடமும் பலத்த வரவேற்பைப் பெற்றதோடு, முதல்வர் கையால் 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் விருதினையும் வாங்க வைத்திருக்கிறது. வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் மேயர், கமிஷனர், சுகாதார ஆய்வாளர், பொதுப்பணித்துறை அலுவலர் மற்றும் குடிநீர் வழங்கல் அதிகாரிகளுடன்  வார்டுகளுக்கெல்லாம் நேரடியாகச் சென்று, குழுவாக மக்களைச் சந்தித்து, அவர்கள் சொல்லும் குறைகளைக் கேட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் பேசவைத்து, உடனடித் தீர்வை வழங்கும் திட்டம்தான் இது.

உள்ளாட்சியில் நல்லாட்சி... உற்சாகத்தில் விருதுப் பெண்கள்!

மேலும், குடிநீர் பிரச்னையை தீர்க்கும்விதமாக ஒவ்வொரு வார்டுக்கும் தனித்தனியாக போர்வெல் அமைத்து அதில் மின்மோட்டார்கள் பொருத்தி தடையில்லா தண்ணீர் வழங்கி வரும் ஒரே மாநகராட்சி என்கிற பெருமையும் இதில் அடக்கம். என்னுடைய செல்போன் எண்ணை, செய்தித்தாள்களில் விளம்பரப்படுத்தி, எந்த நேரத்திலும் மக்கள் குரலுக்கு பதில் சொல்லும் எளிமையும் விருது பெற கூடுதல் தகுதியாக அமைந்தது'' என்கிறார் மல்லிகா.

நம்பர் ஒன் நகராட்சி!

டுமலைப்பேட்டை நகரத்துக்கு தினமும் குடிநீர் வழங்கி வரும் திருமூர்த்தி நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு ஒரே ஒரு அடியாக குறைந்து, வரலாறு காணாத வறட்சி நிலவிய நேரத்திலும்கூட, மக்களுக்கு தினமும் இரண்டு மணி நேரம் வீடு தவறாமல் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கியது உள்ளிட்ட பல சாதனைகளை, கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதித்ததற்காக... விருது மற்றும் 15 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு பெற்றிருக்கும் பூரிப்பில் இருக்கிறார், 33 வயது இளம்தலைவி கே.ஜி.எஸ். ஷோபனா.

''அப்பா கே.ஜி.சண்முகம், எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அ.தி.மு.க. பிரமுகர். நான், எம்.சி.ஏ, எம்.பி.ஏ படிச்சுட்டு கார்ப்பரேட் வங்கியில வேலை பார்த்திட்டிருந்தேன். உள்ளாட்சித் தேர்தல்ல போட்டியிடறதுக்காக அந்தப் பதவியைத் துறந்தேன். நினைச்சபடியே நகராட்சி தலைவியும் ஆயிட்டேன்.

'நாம படிச்சுருக்கோம். அதைப் பயன்படுத்தி மக்களுக்கு பயனுள்ள வகையில உழைச்சு, நல்ல பேர் எடுக்கணும்’னு முடிவெடுத்தேன். முதல்ல, பல வருடங்களா பற்றாக்குறையா இருக்கற நகராட்சி பட்ஜெட்டை, பற்றாக்குறையில்லாத பட்ஜெட்டா மாத்த தீர்மானிச்சேன். 60 சதவிகிதம் மட்டுமே நடந்துட்டிருந்த வரிவசூலை, 100 சதவிகிதம்னு முழுமையடையச் செய்தேன். வாரச்சந்தையை வெளிப்படையான 'டெண்டர்’ மூலமா ஏலம் விட்டதில், 25 லட்சம் ரூபாயா இருந்த வருமானம்... 50 லட்சமா உயர்ந்துச்சு. தினசரி மார்க்கெட் வசூலையும் 45 லட்சமா அதிகரிச்சேன். இதன் மூலமா... பற்றாக்குறை பட்ஜெட், இல்லாமலே போயிடுச்சு'' என்று சொல்லி, புருவத்தை உயர வைக்கும் ஷோபனா,

''பொது சுகாதாரத் துறை மூலம் பேரணி, விழிப்பு உணர்வு கூட்டங்களை நடத்தி சுகாதாரம் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி, தொற்றுநோய் இல்லாத நகராட்சியா மாத்தியிருக்கேன். மின்விநியோக செலவுகளைக் குறைக்கறதுக்காக நகராட்சி அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள்ல சூரியசக்தி மின்சாரம் தயாரிக்கற ஏற்பாடுகளை செய்து, நூறு சதவிகித மின்சார தன்னிறைவு பெற்ற நகராட்சியா மாத்தியிருக்கேன். இதெல்லாம்தான்... சிறந்த நகராட்சி விருது, கிடைக்கக் காரணம்!'' என்று உற்சாகக் குரலில் சொன்னார்!

உள்ளாட்சியில் நல்லாட்சி... உற்சாகத்தில் விருதுப் பெண்கள்!

அசத்தும் பேரூராட்சி!

திருப்பூர் மாவட்டம், அவினாசி தேர்வுநிலை பேரூராட்சியின் தலைவி ஆர்.ஜெகதாம்பாள் ராஜசேகர், ''வீடு தேடிவரும் சுகாதாரம் என்கிற திட்டத்தின் மூலமாக இங்கே உள்ள 6,500 வீடுகளுக்கும் தினமும் சென்று குப்பைகளைச் சேகரித்து... மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிக்கிறார்கள். மக்கும் குப்பைகளைப் பயன்படுத்தி மண்புழு உரம் தயாரிப்பு, பஞ்ச கவ்யா உற்பத்தி என்று செய்து அருகிலுள்ள விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள். மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை அதற்கு என்று உள்ள இயந்திரத்தைக் கொண்டு காய்ச்சி, தாருடன் கலந்து பிளாஸ்டிக் சாலைகளை அமைக்கிறோம். இப்படி பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதற்காகத்தான் இந்த விருது!'' என்கிறார் உற்சாகத்துடன்!

உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்... உள்ளாட்சிப் பெண்களுக்கு!

- கோவிந்த் பழனிச்சாமி, மா.அ.மோகன் பிரபாகரன்

படங்கள்: கே.ரமேஷ், ரா.ராம்குமார்

''துணிச்சலையும் பலத்தையும் கொடுப்பது... குடும்பம்தான்!''

துணிவு மற்றும் சாகச செயலுக்காக 2012-ம் ஆண்டின் 'கல்பனா சாவ்லா’ விருதைப் பெற்றிருக்கும் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தாலுகா, வட்ட வழங்கல் அலுவலர் (டி.எஸ்.ஓ) சுகி பிரேமலா, தன்னுடைய பணி சாகசங்கள் மூலமாக அப்ளாஸ் அள்ளுகிறார்!

''உணவுப் பொருள் கடத்தலை தடுக்கறதுதான் இந்த வேலையில பெரிய சவால். இதுக்கான ரெய்டுக்கு சாயங்காலம் 7 மணிக்கு கிளம்பிப் போனா... மறுநாள் காலையில 8 மணிக்குதான் வீட்டுக்கு வரமுடியும். இப்படி நடத்தின ரெய்டு மூலமாவே... 110 டன் அரிசி, 20,000 லிட்டர் மண்ணெண்ணெய், 1,800 கிலோ அம்மோனியம் நைட்ரேட்னு நிறைய பொருட்களை பறிமுதல் பண்ணியிருக்கோம்.

உள்ளாட்சியில் நல்லாட்சி... உற்சாகத்தில் விருதுப் பெண்கள்!

ஒரு தடவை, நள்ளிரவு நேரத்துல கடத்தல் பத்தின தகவல் வந்துச்சு. கொஞ்சம்கூட யோசிக்காம... வருவாய் அதிகாரி ஜோதிஸ் குமார், கார் டிரைவர் ஜான் பிரைட் இவங்களை கூட்டிட்டு, கிளம்பிட்டேன். கடத்தல்கா£ரங்க ரொம்ப வேகமா வண்டியை ஓட்டிட்டு போகவே, நாங்களும் 120, 130 கி.மீ-னு வேகத்தை கூட்டிட்டே போய், கேரள எல்லையில் மடக்கிப் பிடிச்சிட்டோம்!

இப்படியெல்லாம் அதிரடியா செயல்படுறதால போன் மூலமா அப்பப்போ கொலை மிரட்டல்கள் வரும். ஆனா, அதையெல்லாம் நான் மதிக்கறதே இல்லை. ஒரு தடவை, என் வண்டியில நேருக்கு நேரா வண்டியை விட்டு மோதி கொலை செய்ய முயற்சி நடந்துச்சு. அந்த வண்டியோட ஓனர் மேல இப்ப வழக்கு நடந்திட்டிருக்கு. எதுக்கும்... எந்த சூழ்நிலையிலயும் பின்வாங்காம என் வேலையைப் பார்த்துட்டே இருக்கேன். இதுக்கான அங்கீகாரம்தான், இந்த விருது! இதுக்கான துணிச்சலையும் பலத்தையும் கொடுக்கிறது, என் குடும்பம்தான்!'' என்று புன்னகைக்கிறார் சுகி பிரேமலா!

இவருடைய கணவர் பாபுராஜ், கிராம தொழில்துறையில் இளநிலை உதவியாளர். மகள் ஆஸ்லின் ஸ்டெஃபி 11, மகன் ஆன்றோ ஃப்ரடி 6 ஆகிய வகுப்புகளில் படிக்கின்றனர்!

விருதுடன் 5 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் உண்டு. இதை, தன்னுடனேயே பணியாற்றும் வருவாய் அலுவலர் ஜோதிஸ் குமார் மற்றும் டிரைவர் ஜான் பிரைட் ஆகியோருடன் சுகி பகிர்ந்துகொண்டிருப்பது... சிறப்பு!

- தே.ஆக்னஸ் ஃப்ரீடா