ஸ்பெஷல் 1
ரெகுலர்
Published:Updated:

வலியை விரட்ட இதோ ஒரு வழி!

வந்துவிட்டது புதிய சிகிச்சை முறைமெடிக்கல்

##~##

 ''மருத்துவத்தில் 'வலி நிர்வாகம்' என்று சொல்லப்படுகிற 'இன்டர்வென்ஷனல் பெயின் மேனேஜ்மென்ட்’ (Interventional pain management) என்கிற முறையின் மூலம், தலைவலி தொடங்கி புற்றுநோயால் ஏற்படக்கூடிய கடின வலிகள் வரை அனைத்து வலிகளுக்கும் குறைந்த செலவில், எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல், ஒரேயரு ஊசியின் மூலமே உரிய நிவாரணம் அளித்துவிட முடியும்!''

- இப்படி, சென்னையைச் சேர்ந்த 'வலி நிர்வாக’ சிகிச்சை சிறப்பு மருத்துவர் பிரபு நல்லதொரு மருத்துவத் தகவல் சொல்ல... தொடர்ந்து அவரிடம் விரிவாகப் பேசச் சொல்லிக் கேட்டோம்!

''அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு என்று சொல்லக்கூடிய உடல் நலப் பிரச்னைகள் பல இங்கே இருக்கின்றன. குறிப்பாக, 50 வயதை கடந்த 90% பேருக்கு வருகிற முழங்கால் வலியைச் சொல்லலாம். இதனால் கடுமையான வலிக்கு ஆட்படுபவர்களுக்கு... அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு என்பது, நேற்று வரையிலான நிலை. பொருளாதாரம், சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக அவர்கள் அனைவராலும் அறுவை சிகிச்சை செய்துகொள்வதும் சாத்தியமாக இருப்பதில்லை. அப்படியே செய்து கொண்டாலும், பிரச்னை முழுமையாக தீர்ந்துவிடுவதும் இல்லை. கூடவே, பக்கவிளைவுகளும் சேர்ந்துகொள்கின்றன. அத்தனை சிக்கல்களுக்கும் தீர்வுதான் 'வலி நிர்வாகம்’ எனும் மருத்துவ முறை!

வலியை விரட்ட இதோ ஒரு வழி!

வெளிநாடுகளில் கடந்த 30 ஆண்டுகளாக இது பின்பற்றப்பட்டு வந்தாலும், இந்தியாவில் கடந்த நான்கு, ஐந்து ஆண்டுகளாகத்தான் இது பரவலாக வளர்ச்சியடைந்து வருகிறது. இது, மருத்துவ உலகுக்கும்... நோயாளிகளுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாத முறை. முழங்கால் வலி உள்ளிட்ட உடலில் ஏற்படும் அனைத்து வலிகளுக்கும் ஒரே ஒரு ஊசியின் மூலம் நிவாரணம் அளிக்கும். இந்த சிகிச்சைக்கு, ஓரிரு நாட்களே போதுமானது'' என்ற டாக்டர், இதனால் கிடைக்கக் கூடிய பயன்களைப் பட்டியலிட்டார்.

''இன்றைக்கு இளைஞர்கள் உட்பட அதிகமானோருக்கு முதுகுத் தண்டுவடத்தில் ஜவ்வு பிதுங்கி, பலத்த வலிகள் உண்டாகிறது. இந்த வலியிலிருந்து விடுபட அறுவை சிகிச்சை மேற்கொள்வதைவிட 'வலி நிர்வாக’ முறைப்படி 'ஹைட்ரோசிஷன்’ என்கிற ஒரு ஊசி கொண்டு, சுலபமாக நிவாரணம் பெறமுடியும். பொதுவாக, தண்டுவடத்தில் செய்யப்படும் அறுவை சிகிச்சை, நிரந்தர தீர்வளிக்காததுடன், பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால், இந்த சிகிச்சையில் அந்தப் பிரச்னை இல்லை.

வலியை விரட்ட இதோ ஒரு வழி!

புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட பலருக்கும் ஒரு கட்டத்துக்கு மேல் அதிலிருந்து விடுபட எந்தவித சிகிச்சையும், தீர்வும் இல்லாமல் போகிறது. வாழும் காலம் வரையிலாவது, குறைந்தபட்சம் வலி இல்லாமல் வாழ்வதற்கு மாத்திரை, அறுவை சிகிச்சை போன்றவற்றாலும் தீர்வு அளிக்க முடிவதில்லை. இத்தகைய நிலையில், ஒரே ஒரு ஊசி மூலம், வலியில்லாமல் வாழ வழி கிடைக்கிறது.

பெரும்பாலான பெண்களை பாதிக்கக் கூடிய பிரச்னை, மெனோபாஸ். இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு மாற்றங்கள் உண்டாகும். குறிப்பாக, உடலில் சுண்ணாம்புச் சத்து குறைய ஆரம்பிக்கும். கர்ப்பப்பை நீக்கிய பெண்களுக்கும் இதே பிரச்னை வரும். இதனால், பல்வேறு பாதிப்புகளுக்கு அவர்கள் ஆளாவார்கள். புதிய சிகிச்சை முறை மூலம், சுண்ணாம்புச் சத்தின் அளவை குறைய விடாமல் தடுத்து, இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிலருக்கு உடல் முழுக்கவே தாங்கிக்கொள்ள முடியாத வலி இருக்கும். எக்ஸ்ரே பரிசோதனை முதற்கொண்டு பல பரிசோதனைகள் மேற்கொண்டும், 'எந்தப் பிரச்னையும் இல்லை’ என்று ரிசல்ட் வரும். ஆனாலும், வலி தொடரும். இப்படித் தவிப்பவர்கள், காலம் கடத்தாமல் இந்த புதிய சிகிச்சை மூலமாக தீர்வு காண்பது முக்கியம்'' என்ற டாக்டர்,

''இதற்கு ஆகும் செலவு என்பது, அறுவை சிகிச்சைக்கான செலவுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவே. உதாரணமாக, முழங்கால் வலிக்கான அறுவை சிகிச்சைக்கு ஒரு காலுக்கு 2 லட்ச ரூபாய் என்றால், 'வலி நிர்வாக’ சிகிச்சைக்கு வெறும் 10 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரத்துக்குள்தான் செலவாகும்'' என்று செலவுத் தொகையையும் தொட்டுக் காட்டினார்!

- சா.வடிவரசு

படங்கள்: ச.இரா.ஸ்ரீதர்

வலியை விரட்ட இதோ ஒரு வழி!

'கிடைத்தது நிரந்தர விடுதலை!’

இந்த 'வலி நிர்வாகத் துறை’ சிகிச்சை மூலமாக பலனடைந்த தஞ்சாவூர் ஹேமலதா, ''மூணு வருஷத்துக்கு முன்ன, ஒரு விபத்துல சிக்கினேன். அதுக்குப் பிறகு ரெண்டு வருஷம் கழிச்சு... திடீர்னு இடுப்புல கொஞ்சமா வலி ஏற்பட்டு, நாளடைவில் கடுமையான வலியாவும் மாறிடுச்சு. நடக்க முடியாம அவதிப்பட்டேன். பலவிதமான வலி நிவாரணிகளை சாப்பிட்டும் விடுதலையே கிடைக்கல. ரெண்டு மாசத்துக்கு முன்ன இந்த சிகிச்சை முறை பத்தி கேள்விப்பட்டு, டாக்டர் பிரபுகிட்ட என்னை கூட்டிட்டு போனார் எங்கப்பா. உடனடி சிகிச்சையில... அந்த வலி கொஞ்சம்கூட இல்லாமல் குணமடைஞ்சுட்டேன். இப்ப என்னால வழக்கம்போல நடக்க முடியுது'' என்றார் புன்னகை யுடன்!